அமெரிக்கர்களைக் கவர்ந்த சப்ஜா விதைகள்!



சம்மர் ஸ்பெஷல்

சப்ஜா விதை பெயரைப் படித்ததுமே, ஏதோ மேற்கத்திய நாட்டு உணவு என்று நினைத்துவிட வேண்டாம். நம்முடைய முன்னோர்கள் காலம் காலமாக உபயோகித்து வந்த திருநீற்றுப் பச்சில மூலிகைச்செடியின் விதைதான் இந்த சப்ஜா. மருத்துவ குணம் நிறைந்த இந்த சப்ஜாவின் பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்...

நமது முன்னோர்கள் மருத்துவ குணம் உள்ள ஏராளமான மூலிகைகளைப் பயன்படுத்தி வந்தனர். அவற்றில், திருநீற்றுப்பச்சிலை என்கிற மூலிகையும் இடம்பெறும். அதனுடைய விதைகள்தான் சப்ஜா விதை என்ற பெயரால் ஊட்டச்சத்து நிபுணர்களாலும், மருத்துவ வல்லுனர்களாலும் குறிக்கப்படுகிறது. தமிழகம்தான் இந்த விதையினுடைய தாயகம்.

ஆனாலும், இதனுடைய மருத்துவ குணங்கள் நமது நாட்டில் பரவலாக அறியப்படவில்லை. எனவே, இங்கு சப்ஜா விதை குறைவான அளவில்தான் பயிரிடப்பட்டு வருகிறது. அதேவேளையில் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சப்ஜா விதையினுடைய பயன்பாடுகளைத் தெரிந்து கொண்டு, அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். பரவலாகப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட சப்ஜா விதையில் நமது உடலில் காணப்படுகிற மாசு, நச்சுத்தன்மை உடைய பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவும் ஆன்டி ஆக்சிடென்ட் ஏராளமாகக் காணப்படுகிறது. மலச்சிக்கலைக் குணப்படுத்த உதவும் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளது. இவை தவிர, நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிற வைட்டமின், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம்  ஆகிய ஊட்டசத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

முக்கியமாக வைட்டமின்-டி, ஏ, இ, பி-காம்ப்ளக்ஸ் போன்றவையும் இதில் காணப்படுகின்றன. உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும். இந்த விதைக்கு பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. 100 கிராம் சப்ஜா விதையில், 80 கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ளதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

சிறு வயதினர், முதுமைப் பருவத்தினர் என எந்த வயதினரும் சப்ஜா விதையை, மற்ற விதைகளைப்போல், தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, எந்த நேரமும் சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் சர்பத், ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். கேரளாவில் இன்றும் தேநீர், ஜூஸ் ஆகியவற்றில் இவ்விதையைக் கலந்து சாப்பிடும் வழக்கம் உள்ளது.

பொதுவாக, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் சப்ஜா விதைகள், இந்தியாவில் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில்தான் காணப்படுகிறது. கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து விடாமலும் பார்த்து கொள்கிறது.

இந்த விதையின் மருத்துவப் பயன்பாடுகள் தொடர்பாக இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக, நம்முடைய பாரம்பரியமிக்க இதுபோன்ற பல உணவு வகைகள் மற்றும் உணவுப்பொருட்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இவை பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்படும்.

- விஜயகுமார்