இது முழுக்க முழுக்க GEN-Zக்கானது!
எந்த உணவகத்திற்கு சென்றாலும் நம்முடைய முதல் ஆப்ஷனாக பிரியாணியை ஆர்டர் செய்வோம். அதற்கடுத்து ஃபிரைட் ரைஸ் என சைனீஸ் உணவுகளை தேர்வு செய்வது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சைனீஸ் உணவு மேல் ஒரு தனிப்பட்ட பிரியம் இருப்பது உண்மைதான். எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த உணவினை தரமான பொருட்கள் கொண்டு அனைவரும் சாப்பிடக்கூடிய விலையில் தரவேண்டும் என்ற விருப்பத்தில் கொடுக்க விரும்பி சென்னையில் ‘மாபோ’ என்ற பெயரில் சைனீஸ் உணவகத்தை ஆரம்பித்துள்ளார் ஸ்ரீராம்.  முழுக்க டேக் அவே கான்செப்ட்டில் துவங்கப்பட்டிருக்கும் உணவகம். ஆரம்பித்த ஒரு வருடத்தில் ஐந்து கிளைகளை சக்சஸாக நிர்வகித்து வரும் ஸ்ரீராம், வரும் ஆண்டு இறுதிக்குள் மேலும் பல கிளைகளை துவங்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்தார். ‘‘அடிப்படையில் நான் செஃப். வெளிநாட்டில் மட்டுமில்லாமல் சென்னையில் பல நட்சத்திர ஓட்டல்களில் வேலை பார்த்து இருக்கிறேன்.
 சைனீஸ் உணவுகள் பொறுத்தவரை மக்கள் மத்தியில் ஒரு சின்ன இடைவேளை உள்ளது. இன்று சென்னையில் பல இடங்களில் சைனீஸ் உணவுகள் உள்ளன. அதில் பெரும்பாலான உணவகத்தில் குறைந்த தரத்தில் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதனால் விலையும் குறைவாக வழங்குகிறார்கள்.
அதேசமயம் தரமான பொருட்கள் பயன்படுத்தும் உணவகத்தில் விலை அதிகமாக இருக்கிறது. தரமான மற்றும் நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய சைனீஸ் உணவிற்கு ஒரு இடைவேளை இருப்பது தெரிந்தது. அதை நிரப்ப முடிவு செய்தேன். தரமான பொருட்களை பயன்படுத்தி, நியாயமான விலையில் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் மாபோ.
உதாரணமாக சைனீஸ் உணவில் சோயா சாஸ் முக்கியம். 80% சைனீஸ் உணவகங்கள் ரசாயனம் மற்றும் சோயாவின் மணம் சேர்க்கப்பட்ட சாஸினைதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாங்க ஒரிஜினல் சோயா சாஸினை மட்டும்தான் உபயோகிக்கிறோம். நாங்க இதனை ஜப்பானில் இருந்து வரவழைக்கிறோம். அதேபோல்தான் இங்கு உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு உணவின் தரம் மாறாமல் பார்த்துக் கொள்கிறோம்.
எங்களுடையது டேக் அவே கான்செப்ட் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடமான ஃபுட் கோர்ட் போன்ற இடங்களில்தான் உணவகங்களை அமைத்திருக்கிறோம். இதில் சில இடங்களில் பிரான்சைசி முறையிலும் செயல்பட்டு வருகிறது’’ என்றவர் சென்னையில் கிண்டி, போரூர், வானகரம், ஆழ்வார்பேட்டை, ஓ.எம்.ஆர் மற்றும் கோவிலம்பாக்கத்தில் கிளைகளை அமைத்துள்ளார்.
‘‘நான் பத்து வருஷம் முன்பு ‘டேபிள்’ என்ற பெயரில் டெசர்ட் மற்றும் ஐஸ்கிரீம் அவுட்லெட் ஒன்றை துவங்கினேன். அதனைத் தொடர்ந்துதான் ‘மாபோ’ ஆரம்பித்தேன். பொதுவாக மக்களின் முதல் சாய்ஸ், அவர்கள் ஊரின் உணவாக இருக்கும். அடுத்து உலகளவில் எல்லோரும் விரும்புவது சைனீஸ் உணவாக இருக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல் தரமான சைனீஸ் உணவிற்கு மக்களிடம் டிமாண்ட் இருந்தது. மேலும் டயர் 2 மற்றும் டயர் 3 நகரத்திலும் சைனீஸ் உணவுகள் எல்லோருக்கும் தெரியும். மக்களுக்கு இந்த உணவு குறித்து விளக்கம் கொடுக்க வேண்டாம். மேலும், சென்னையில் ஃபுட் கோர்ட்டில் நல்ல தரமான சைனீஸ் உணவுகள் கிடையாது.
அதே சமயம் சைனீசில் நானா எதுவும் புதுமையை அறிமுகப்படுத்தவில்லை. அதே உணவினை தரமாகவும், அனைவரும் சாப்பிடக்கூடிய விலையில் கொடுக்க விரும்பினேன். அவ்வளவுதான்’’ என்றவர் சைனீஸ் உணவு இந்தியாவிற்கு வந்தது குறித்து விவரித்தார்.‘‘மாபோ என்றால் சீன மொழியில் பாட்டி என்று அர்த்தம்.
அதனால்தான் எங்க லோகோவில் பாட்டியின் உருவத்தை அமைத்திருக்கிறோம். எங்களுடைய ஹக்கா சைனீஸ். அதாவது, இந்திய முறையில் சமைக்கப்படும் சைனீஸ் உணவு. கொல்கத்தாவில் டாங்கரா என்ற இடத்தில்தான் இந்திய முறையில் சைனீஸ் உணவுகள் முதலில் வழங்கப்பட்டது. அந்த முறையைதான் நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம். டாங்கரா பகுதியில் சீனாவில் இருந்து சைனீஸ் செஃப்கள் இங்கு வந்து குடிப்பெயர்ந்தார்கள். அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள். என்னுடைய ஹெட் செஃப் அந்தப் பகுதியை சேர்ந்தவர். இவங்க 200 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து செட்டிலாகி இந்திய சுவையின் சைனீஸ் உணவினை தயாரிக்க ஆரம்பித்தனர். அதைத்தான் நாம் தற்போது விரும்பி சாப்பிடுகிறோம். எங்களின் மெனு முழுக்க முழுக்க டாங்கரா முறைப்படி சமைக்கப்படுகிறது. எங்களின் செஃப் இந்த துறையில் 40 வருட அனுபவம் பெற்றவர்.
சிங்கப்பூர் சிக்கன் நம்முடைய சிக்னேச்சர் டிஷ். கேரட் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் சிங்கப்பூர் சாஸ் இதில் சேர்ப்போம். டிராகன் ஸ்பிரிங் ரோல், தாய்பேசில் சில்லி சிக்கன், எக்ட்ரா ஸ்பைசி சில்லி சிக்கன். இதில் ஸ்பைசி சிக்கனில் உலகில் மிகவும் காரமான பூர்ஜ் ஜுலோகியா என்ற மிளகாயினை இதில் பயன்படுத்துகிறோம்.
சொல்ல முடியாத அளவிற்கு காரம் இருக்கும். அந்தக் காரத்தை பலரும் விரும்பி சாப்பிடுறாங்க. மதிய உணவுவேளையில் மீல்பாக்ஸ் காம்போ பிரபலம். காம்போவில் ஒரு ரைஸ் அல்லது நூடுல்ஸ், கிரேவி இருக்கும். மீல்பாக்சில், ஒரு ஸ்டார்டர், ரைஸ் அல்லது நூடுல்ஸ், மோமோ இருக்கும். நிறைய பேர் கிரேவி சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு மீல் பார்க்ஸ். ஒரு வருடம் நாங்க நிறைய டிரையல் பார்த்தோம். முன்பு காம்போவிற்கு மட்டுமே தனி மெனு இருந்தது. அதில் எதை மக்கள் அதிகம் விரும்புகிறார்களோஅதை மட்டுமே தற்போது உணவு அட்டையில் சேர்த்திருக்கிறோம்’’ என்றவர் தன் ஐஸ்கிரீம் பிராண்டான ‘ஸ்கூப் டாக்’ பற்றி பேசினார்.
‘‘ஸ்கூப் டாக், புரோசன் பார்வேர்ட் மொமன்ட்ன்னுதான் சொல்லணும். அதாவது, எதை எல்லாம் நாங்க பிரீஸ் செய்கிறோமோ அதை எல்லாம் அங்கு கொடுக்கிறோம். ஐஸ்கிரீம் கொண்டு சாக்கோபார் செய்யலாம். அதேபோல் ஜெலாட்டோ, பாப்சிகல்ஸ் மற்றும் சார்பேவும் செய்ய முடியும். உறைந்த நிலையில் கொடுக்கக்கூடிய உணவுகள் எல்லாம் இங்கு கிடைக்கும். ஐஸ்கிரீமினை ஃபுல் கிரீம், பால் மற்றும் வெண்ணை கொண்டு தயாரிக்கிறோம்.
இது முழுக்க முழுக்க ஜென்ஜீ பிராண்ட். அவர்களை டார்கெட் செய்து தான் இங்குள்ள ஃபிளேவர்களை தயாரித்து இருக்கிறோம். இன்றைய டீனேஜ் வாடிக்கையாளர்களும் அவங்கதான். மூணு ஸ்கூப் ஐஸ்கிரீமினை தயக்கமில்லாமல் சாப்பிடுவாங்க. அவங்களுக்கு பிடிச்ச ஃபிளேவர்களை பார்த்து பார்த்து வடிவமைத்து இருக்கிறோம்.
அதில் ஒவ்வொரு மாசம் இரண்டு ஃபிளேவர் ஐஸ்கிரீம்களை அறிமுகம் செய்கிறோம். தற்போது 20 ஃபிளேவர்கள் இருந்தாலும் இவர்கள் விரும்புவது டாரோ, பபில் டீ ஃபிளேவர். டாரோ என்பது ஒரு வேர். அது பவுடராக்கப்பட்டு வருகிறது. அதை நாங்க ஐஸ்கிரீமாக கொடுக்கிறோம்.
அடுத்து மாட்சாவினை அறிமுகம் செய்ய இருக்கிறோம். சாக்கோபாருக்கு துபாய் சாக்லெட்டினை பயன்படுத்தி இருக்கிறோம். இதில் ஐஸ்கிரீம்களுக்கு குனாஃபாவினை ஸ்டப் செய்து அதன் மேல் சாக்லெட் கொண்டு கோட் செய்திருக்கிறோம். சாப்பிடும் போது வித்தியாச சுவை கிடைக்கும்.
ஏ.பிசியில் பாப்சிகல், லோட்டஸ் பிஸ்காப் சாக்கோபாரும் உண்டு. சாதாரண வெனிலா ஐஸ்கிரீமுக்கு பதில் பர்ன்ட் பட்டர் ஹனி வெனிலா, அதாவது, வெண்ணையும் தேனையும் சுட்டு அதில் வெனிலா ஃபிளேவர் சேர்த்து ஐஸ்கிரீம் செய்திருக்கிறோம். அதே போல் பர்ன்ட் சாக்லெட் ஐஸ்கிரீமும் உள்ளது. இது ஸ்மோகி ஃபிளேவரில் இருக்கும். குக்கீஸை உடைச்சி போட்டு அதில் ஒரு ஐஸ்கிரீம் செய்திருக்கிறோம். ஃபுரோசன் யோகர்ட், சார்பேவும் இருக்கு. அதனை மாம்பழம், தர்பூசணி என அந்த நேரத்தில் கிடைக்கும் பழங்களைக் கொண்டு தயாரிக்கிறோம். அதேபோல் பானிப்பூரி சார்பே இங்கு பிரபலம். பானிப்பூரியுடன் வரும் புதினா தண்ணீரை உறைய வைத்து சார்பே ஐஸ்கிரீம் வடிவில் தருகிறோம்.
நான் ஆரம்பத்தில் குசைன் செஃப்பாக தான் லண்டனில் வேலை பார்த்தேன். சென்னைக்கு வந்த பிறகு என்னுடைய கேரியரை பேக்கரி, ஐஸ்கிரீம் பக்கம் மாற்றினேன். ஸ்கூப் டாக் ஆரம்பிச்சு 2 மாசமாகிறது.
ஆறு மாசம் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று பார்த்து மெனுவினை மாற்றி அமைத்து அதன்பிறகு அதில் வேறு என்ன கொடுக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக ஒவ்வாரு பொருளையும் ஒவ்வொரு இடத்தில் இருந்து வரவழைக்கிறோம்.
வலர்ஹரோனா சாக்லெட் உலகின் பெஸ்ட் சாக்லெட். பிரான்சில் கிடைக்கும். அதற்கான டீலர் மும்பையில் உள்ளார். அவரிடம் இருந்து அந்த சாக்லெட்டினை வாங்குகிறோம். வெனிலா பொள்ளாச்சியில் இருந்து வரும். ஸ்டாபெர்ரி மகாபலேஷ்வர், டாரோ ஐதராபாத், ராஸ்பெர்ரி சுவிட்சர்லாந்து, ப்ளூபெர்ரிக்கு நாங்க எந்த எசென்சும் பயன்படுத்துவதில்லை.
மாம்பழம் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செய்வோம். கலிபோர்னியா பிஸ்தா என ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கிதான் அதில் ஐஸ்கிரீமினை தயாரிக்கிறோம்’’ என்றார் ஸ்ரீ ராம்.
செய்தி:நிஷா
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|