பழங்குடியின ராப் இசை பாடகர்!



சமூகத்தால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் வலிகளை கடந்து விழிப்புணர்வடைந்து சமூகத்தில் மேலோங்கி வரும்போது அவர்களை யாராலும் தடுக்க முடியாது. அடக்குமுறை செய்யப்படுவதை ஆதங்கத்துடன் எதிர்த்து சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற போராடுவார்கள். 

அத்தகைய போராட்டத்தை கையில் எடுத்திருக்கும் மஹி, சமூக பிரச்னைகள் குறித்து ஆழமான வரிகளை எளிமையான வெளிப்பாட்டுடன் எழுதி, ராப் இசையாக பாடி கவனம் பெற்று, சமூகத்தில் மாற்றங்களை எதிர்நோக்குகிறார். 
தன்னை ஆதிவாசி என பெருமையுடன் குறிப்பிடும் மதுரா யஷ்வந்த் கானே, மஹாராஷ்டிரா மாநிலம் வாரங்குஷி எனும் சிறிய கிராமத்தில் வசித்தவர். எல்லோராலும் மஹி ஜி என அறியப்படுகிறார். இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் ஒன்றான மஹாதேவ் கோலி பங்குடியினத்தை சார்ந்தவர். 

கொரோனா தொற்று காலத்தின் போது தன் முன்னோர்களின் கிராமத்திற்கு சென்று பழங்குடிகளின் வாழ்க்கை முறையையும் சில சமூக பிரச்னைகளையும் உற்று கவனித்த போது அவற்றை பாடல்களாக எழுதி இவ்வுலகிற்கு வெளிப்படுத்த முனைந்துள்ளார்.

இவர் எழுதி, ராப் இசையாக பாடியுள்ள ‘ஜங்கிள் சா ராஜா’ என்கிற பாடல் இணையத்தில் ஆதிவாசியின் குரலாக ஒலிக்கிறது. இந்தப் பாடலின் மூலம் ஆதிவாசி சமூகங்களுக்கும் அவர்களின் இயற்கை சூழலுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்துகிறார் கவிஞர் மஹி. 

“நீர், காடு, நிலம் ஆகியவை எங்களுக்கு கிடைத்த வளங்கள் மட்டுமல்ல அவைதான் எங்களின் புகழுக்கு சான்றாகவும், வாழ்தலுக்கான காரணியாகவும் அமைந்துள்ளன. பழங்குடியினர் காட்டிற்கு உண்மையான பாதுகாவலராக இருந்து காட்டை ஆள்கின்றனர். 

பழங்குடியினர் கால் பங்கு ரொட்டியை காலை உணவாக உண்டு அரிவாளும் கம்பளி போர்வையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்கிறான். கூடவே ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் கூட்டம் மலைகளுக்கு செல்கின்றன. 

பாறைகளின் கீழ் ஓய்வெடுக்கிறான். மழைக்காலம் வந்தால் விவசாயம் செய்து கேழ்வரகு, சாமை, ஆளி, நாட்டு காய்கறிகள் போன்றவற்றை அறுவடை செய்கிறான். தேன்கூட்டில் இருந்த தேனை சேகரித்து சந்தைக்கு செல்கிறான். மருத்துவ குணமுள்ள தாவரங்களை சேகரிக்கிறான். மீனையும் நண்டையும் பிடிக்கிறான்” என அவர்களின் வாழ்க்கைமுறையை பாடலில் விவரிக்கிறார். 

“எங்க சமூகம் வளர்ச்சியில் அக்கறை இல்லாத, மோசமான சமூகமாக கருதப்படுகிறது. ஆனால், எங்களுக்கு நகரமயமாக்குதலில் ஈர்ப்பு இல்லை. கிராமத்தின் வலிமையை பெருமைப்படுத்த விரும்புகிறோம். 

சிந்தனைகளில் முற்போக்காக இருக்கிறோம். அதே சமயம் கலாச்சார உணர்திறன் இல்லாதவர் அல்ல. ஆண்கள், பெண்கள், சாதி, உடைகள், தோலின் நிறம் என எந்த வேறுபாடுமின்றி கைகளை பிடித்துக்கொண்டு எங்க சமூகம் நடனமாடுகிறது. 

நீங்க முன்னேற்றத்தின் கொடியை உயர்த்துகிறீர்கள், நான் பெருமை கொடியை உயர்த்துகிறேன்” என்ற பொருள்படும் வரிகளை பசுமையான காடுகள், மலைகள், வார்லி கலைகள் வரையப்பட்ட மண் குடிசைகள் மற்றும் தன் சமூக மக்களுக்கு நடுவே நின்றபடி பாடுகிறார். 

பாடல் வரிகளின் இடையில் ‘புலிக்கூட பயப்படும், காட்டின் உண்மையான ராஜா நாங்க’ என பொருள்பட மராத்தி மொழியில் பாடுகிறார். இவரின் மற்ற பாடல்களும் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. 

இவரின் ‘ஹீட்வேவ்’ பாடல் தினசரி கூலித்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை காலநிலை நெருக்கடியால் ஏற்படும் வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முதன்மையான பாதுகாப்பை கோரும் ஒரு வேண்டுகோளாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி மட்டுமின்றி, திருநர் சமூகம் குறித்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கான எதிர்ப்புகள் குறித்தும் மஹி பாடியுள்ளார். 

சுற்றுச்சூழல் நீதி சமூக நீதியுடன் பிணைந்துள்ளது என்பதை தன் ராப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். காலநிலை மாற்றம் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் தற்போதையை யதார்த்த நிலையை மாற்றும் சக்தி இவர் எழுதும் பாடல் வரிகளுக்கு உள்ளது. மக்களை மகிழ்விக்க மட்டுமே ராப் இசையை தேர்ந்தெடுக்காமல், சமூக 
பிரச்னைகளை பிரதிநிதித்துவப்படுத்த இதனை தேர்ந்தெடுத்துள்ளார். 

பல்கலைக்கழகம், கல்லூரி, மற்ற சில நிகழ்ச்சிகளில் தான் எழுதிய வரிகளை உணர்ச்சிப்பொங்க பாடி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். பழங்குடி பின்னணியை சேர்ந்த பெண்ணாக இருப்பதால் சில புறக்கணிப்புகளை சந்தித்த மஹி, தன் சமூகத்தின் ஆதிவாசி மக்களை பற்றி பாடல்களை எழுதி பாடி வருகிறார்.

ரம்யா ரங்கநாதன்