ஆடு விற்பனையில் மூன்று மடங்கு லாபம் பார்க்கலாம்!
பொதுவாக கிராமத்தில் உள்ள வீடுகளில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது வழக்கம். ஆனால், நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதற்கான விருப்பம் இருந்தாலும், அவற்றை வளர்க்க முடியாத சூழல். காரணம், இங்கு பெரும்பாலான வீடுகளில் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கவே தடை விதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காகவே ‘கிரீன் கேட்டல்’ என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தங்களின் விருப்பமான ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவற்றை வளர்க்கவும், அதன் வழியாக ஒரு வருவாயும் ஏற்படுத்தி தருகிறார் இமானுவேல்.  ‘‘என்னுடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. எங்க வீட்டில் ஆடு, மாடு, கோழி எல்லாம் இருக்கும். அதனால் சின்ன வயசில் இருந்தே கிடைக்கக்கூடிய வருமானம் பற்றி எனக்கு தெரியும். கல்லூரிப் படிப்பு முடிச்ச பிறகு நான் சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் எட்டு வருடம் வேலை பார்த்தேன். அதன் பிறகு ஊருக்கே சென்று வேளாண்மை சார்ந்த நிறுவனம் அமைக்க திட்டமிட்டேன்.
 பொதுவாக ஊரில் ஒருவரிடம் நாலு, ஐந்து ஆடுகள் இருந்தால், அதை பக்கத்தில் உள்ளவர்களிடம் வளர்க்க கொடுத்து பராமரிக்க சொல்வாங்க. அது குட்டி போட்டாலோ அதனை விற்பனை செய்தாலோ அந்த வருமானத்தில் 50% இருவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். அதையே நாங்க கார்ப்பரேட் முறையில் செய்து வருகிறோம்.
சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பலருக்கு ஆடு அல்லது கோழிப் பண்ணை வைக்க விரும்புவார்கள். ஆனால், அதற்கான சூழல் இருக்காது. அதாவது, ஒரு சிலரிடம் இடம் இருக்கும்.
அவர்களுக்கு பண்ணை அமைத்து எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று பயிற்சி அளிப்போம். இடம் இல்லாதவர்கள், ஆடுகளை வாங்கி எங்களிடம் கொடுத்திடலாம். அதனை நாங்க பராமரிப்போம். பிறகு அதனை விற்பனை செய்யும் போது, அதற்கான ஒரு ெதாகையினை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திடுவோம்.
நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு, வேறு தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். முதலீடு மட்டும் செய்தால் போதும், கணிசமான வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். எங்களிடம் இறைச்சி கடையும் இருப்பதால், அதன் மூலமாகவும் ஒரு வருமானம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்’’ என்றவர், ஆட்டினை எவ்வாறு எங்கு வாங்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கினார்.
‘‘பெரும்பாலும் ஆடுகளை ராஜஸ்தானில் இருந்துதான் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆனால், அங்கிருந்து 100 ஆடுகளை வாங்கும் போது, அவற்றை கொண்டு வருவதற்குள், 30 முதல் 40 ஆடுகள் சீதோஷ்ணநிலை காரணமாக இறந்துவிடும். நாங்க வெள்ளாட்டு வகையில் கொடியாட்டினை தான் வாங்குவோம்.
3000 ரூபாய்க்கு குட்டி ஆட்டினை வாங்கினால், அடுத்த ஆறு மாசத்தில் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடியும். பொதுவாக சந்தையில் விற்பனைக்கு இருக்கும் ஆடுகளை நாங்க வாங்குவதில்லை. காரணம், சந்தையில் உள்ள ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்து அதன் எடையை அதிகரித்து காட்டுவார்கள். ஆடு இரண்டு நாட்களில் இறந்துவிடும்.
மேலும், ஆடுகள் பொறுத்தவரை அதனை போட்டு அடைக்கக்கூடாது. சிலர் ‘ஆட்டினை அதிகம் நடக்க விடக்கூடாது.... அப்பதான் அதன் எடை ஏறும்’னு சொல்வாங்க. அதனை கட்டிப்போட்டு வைத்தால், ஆரோக்கியமாக இருக்காது. என்னுடைய பண்ணையில் உள்ள ஆடுகள் நம்முடைய உயரத்திற்கு இருக்கும். தீவினம் கொடுத்தால் நம் மேல் கால் வைத்து ஏறி சாப்பிடும். அதுதான் கொடி ஆடு.
இதுதான் நம்மூர் சீதோஷ்ணநிலைக்கு சரியாக இருக்கும். நாம் வாங்கும் ஆடுகளை விற்பனை செய்யும் போது மூன்று மடங்காக அதன் விலை உயரும். அதனாலேயே பலரும் இதனை பிசினஸாக செய்ய விரும்புகிறார்கள்’’ என்றவர், இதனை ஒரு பிசினஸாக செய்த காரணம் பற்றி விவரித்தார்.
‘‘அப்ப நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தேன். அப்பா சின்ன கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வந்தார். கல்லூரியில் ேசரும் போது, அந்த மாடு கன்று போடும் நிலையில் இருந்தது. அதனை 70 ஆயிரம் ரூபாய்க்கு அப்பா விற்றார்.
வேளாண்மை துறை நஷ்டமாகக்கூடிய தொழில் கிடையாது என்பதால்தான் தைரியமாக இந்த துறையை தேர்வு செய்தேன். அதற்கு முக்கிய காரணம் மயிலாடுதுறை போன்ற பகுதியில் வீட்டிற்கு பத்து ஆடுகள் இருக்கும். ஆடுகளை வாங்குவது, வளர்ப்பது, விற்பனை செய்வார்கள். எங்க வீட்டிலும் ஆடு, மாடுகளை வாங்கி வளர்த்து, விற்பனை செய்திருப்பதால், இந்தத் தொழில் பற்றி எனக்கு நல்ல அறிவு இருந்தது.
எங்களிடம் ஆடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் உறுப்பினர் எண் கொடுப்போம். அந்த எண் ஆட்டின் காதில் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் யாருடைய ஆடு விற்பனையானது என்று எளிதாக கண்டறிய முடியும்.
எங்களிடம் வாங்கும் ஆடுகளை பெரும்பாலும் ஒரு வருடத்தில் விற்பனை செய்திடுவோம். அதில் ஆண் ஆடுகளை மட்டும்தான் இறைச்சிக்கு பயன்படுத்துகிறோம். பெண் ஆடுகளை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்துகிறோம்.
வாடிக்கையாளர்கள் பண்ணை அமைக்க விரும்பினால், அவர்களுக்கும் நாங்க என்ன பிரீட் ஆடுகளை வாங்கலாம், எவ்வாறு பராமரிக்கலாம் என்று பயிற்சி அளித்து அவர்களிடம் இருந்தும் நாங்க ஆடுகளையும் வாங்கிக் கொள்வோம். தேனி, திருவள்ளூர் என இரண்டு இடங்களில் பண்ணை அமைத்து கொடுத்திருக்கிறோம்.
நான் இந்த துறையை தேர்வு செய்ய முக்கிய காரணம், எங்களுக்கு 15 ஏக்கர் மேய்ச்சல் நிலம் உள்ளது. மேலும், நான் வேலையில் இருக்கும் போது இது குறித்து முழுமையான ஆய்வில் ஈடுபட்டேன். இதன் பராமரிப்புக்கு தேவையான பொருட்களை எங்கு வாங்கலாம் என்று என் தோழர் அரவிந்த் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த பிசினஸ் குறித்து சர்வேயும் எடுத்தோம்.
லாபம் இருப்பது தெரிந்துதான் இதனை பிசினஸாக கையில் எடுத்தோம். எங்க நிறுவனத்தில் ஆடு மட்டுமில்லை, பசு மாடுகளில் இருந்து பாலினை விற்பனை செய்கிறோம். மேலும், பாலின் விற்பனையும் அதிகரிக்க விரும்புகிறோம்.
ஆடு மற்றும் மாட்டுச் சாணம் பயன்படுத்தி உரங்கள், மாட்டுப் பாலில் இருந்து நெய், வெண்ணெய் போன்ற மதிப்புக்கூட்டும் பொருட்களை தயாரிக்கும் எண்ணமும் உள்ளது.
மீன் பண்ணையும் உள்ளது. இதனைத் தொடர்ந்து கோழிப் பண்ணையும் தொடங்கி ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்ற இருக்கிறோம். மேலும், வார இறுதி நாட்களில் மக்கள் பண்ணையினை சுற்றிப் பார்த்து தங்கி, அந்தக் கிராமத்து அனுபவங்களை பெறவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
தற்போது எங்களின் பண்ணையில் 850 ஆடுகள் மற்றும் 300 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது’’ என்று தன் எதிர்கால திட்டங்கள் குறித்து பகிர்ந்தார் இமானுவேல்.
ஷன்மதி
|