கவியூர் மகாதேவர் கோயில்
ராஜகோபுர தரிசனம்!
கேரளாவில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கவியூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருக்கவியூர் மகாதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. கவியூரில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த குடைவரைக் கோயிலும் அதன் அருகிலே பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த அனுமர் கோயிலும் உள்ளது.
 ‘சிவலிங்கத்தில்’ சித்தரிக்கப்பட்டுள்ள மகாதேவர் இந்தக் கோயிலின் முக்கிய தெய்வம். சுமார் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் ஒரு சதுர குகையில் பதிக்கப்பட்ட ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஹனுமான் கோயிலுக்கும் இந்தக் கோயில் பிரபலமானது. மேலும், இது பாரம்பரியமாக தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஹனுமான் கோயிலாக அறியப்படுகிறது.  கவியூர் மகாதேவர் கோயிலின் கட்டிடக்கலை பல்லவர் பாணி கட்டிடக்கலையை ஒத்திருக்கிறது. இந்தக் கோயிலின் வேலைப்பாடுகள் கேரளாவில் உள்ள ஆரம்பகால கல் சிற்பங்களைக் கொண்டுள்ளன. கோயில் வளாகத்தில் கணபதி, மகரிஷி மற்றும் துவார பாலகர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கவியூரில் உள்ள மகாதேவர் கோயில் பல்லவ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது, மேலும், இது முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் 17ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை சிறந்த இந்திய இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் கதைகளை சித்தரிக்கின்றன.
இந்தக் கோயிலில் ஒரு சதுர வடிவ குகை உள்ளது. அங்கு சிவபெருமான் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கணபதி, அனுமன், ஸ்ரீமூல ராஜேஸ்வரி மற்றும் மகரிஷி ஆகியோர் இந்தக் கோயிலின் துணை தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள். கணபதியுடன் சிவபெருமானின் சிலையான தட்சிணாமூர்த்தி இந்தக் கோயிலின் மற்றொரு தெய்வம். இந்தக் கோயிலில் கிருஷ்ணருக்கும் தனிச் சன்னதி உள்ளது.
இந்தக் கோயில் உள்ளூர் மொழியில் தாரு சிற்பங்கள் என்று அழைக்கப்படும் மரச் சிற்பங்களுக்கும் பெயர் பெற்றது. இந்த சிற்பங்கள் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை கேரள கட்டிடக்கலையை சித்தரிக்கின்றன. கோயிலின் வெளிப்புறச் சுவர், உள் கூரை மற்றும் மண்டபம் ஆகியவை இந்த மரச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலின் ஸ்ரீகோவில் வட்ட வடிவில் உள்ளது, கோயிலின் கருவறை கூரை செம்பினால் ஆனது. கோயிலில் தங்கக் கொடி உள்ளது, மேலும் சன்னதிக்குள் 18 படிகளை கடந்து நுழைய வேண்டும்.
சிவராத்திரி, இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. எட்டு தேசங்களிலிருந்து 8000 எண்ணெய் விளக்குகள் பக்தர்களால் ஏற்றப்பட்டு, பக்தர்கள் ஒருநாள் முழுவதும் விரதம் இருந்து சிவனை வழிபடுகிறார்கள்.
சஹஸ்ர கலசம் என்பது 10 நாள் திருவிழா. பக்தர்களால் 100 பானைகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதில் ஒன்று தங்கப்பானை, 10 வெள்ளிப் பானைகள், மீதமுள்ளவை செப்புப் பானைகள்.இக்கோயிலின் கிழக்குப் பிரகார நுழைவாயிலில் உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
16ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர்களால் மரக்கலைப்பணிகளும், பளிங்கு வடிவ சிற்பங்களும் கொண்ட கோபுரம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோபுரத்தில் ஹனுமான், ராமர், சீதை, அனுமந்தர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் தர்ப்பண சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
மரம், laterite கல், களிமண் பானைகள், வெள்ளைக்கல் ஆகியவற்றின் கலவையால் கட்டப்பட்டதால், இது கேரளக் கோயில்களின் தனிச்சிறப்பான வடிவமைப்பை பிரதிபலிக்கிறது.
திராவிட மற்றும் கேரளக் கட்டிடக்கலை பாணி இணைந்திருப்பதால், இது தமிழக கோபுரங்களைக் காட்டிலும் குறுகிய உயரத்துடன் கூடிய சிமிழ் வடிவம் கொண்டது.காலப்போக்கில் பல புதுப்பிப்புகள் செய்யப்பட்டாலும், மரத்தாலான சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இன்று வரை பழமைத் தன்மையை காக்கின்றன. திலகவதி
வாசகர் பகுதி
குறைந்த விலை, அதிக சத்து!
உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரவல்லது கீரை வகைகள். சாதாரணமாக தோன்றினாலும் கீரைகள் பல சத்துக்கள் கொண்டவை. குறிப்பாக சில கீரைகள் உடலுக்கு பலவித சத்துக்களை வழங்கி, உடல் நலத்தை காக்க வல்லதாகும்.
முளைக்கீரை: வைட்டமின் ஏ, பி யுடன் இரும்பு, சுண்ணாம்பு, புரதம் ேபான்ற சத்துக்கள் நிறைந்தது. கண் பார்வையும், நரை முடி ஏற்படாமலும் உதவும். பலம் பொருந்திய எலும்புகளைப் பெறவும், சரும நோயிலிருந்து காத்துக் கொள்ளவும் உதவக் கூடியது.
அகத்திக்கீரை: புத்தி மந்தம், நினைவாற்றல் குறைவு, சோம்பல், அறிவு தடுமாற்றம் போன்றவைகளை மாற்றக் கூடியது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. கால்சியம் சத்தை தந்து எலும்புகளை பலம் பொருந்தியதாக்கும்.
அரைக்கீரை: உணவில் சேர்ப்பதால் உடலில் உயிரணுக்கள் கூடும். நரம்பு தளர்ச்சியைப் போக்கி உடல் பலம் பெறச் செய்யும். வாயுத் தொல்லையை நீக்கும்.
புளிச்ச கீரை: உடலில் உஷ்ணம் இயற்கையான அளவில் இருக்க உதவக் கூடியது. சொறி, சிரங்குகளை நீக்கி சருமத்தை காக்கக் கூடியது.
பொன்னாங்கண்ணி: உடல் உஷ்ணத்தைக் குறைத்து, கண் சம்பந்தமான நோய்களை அகற்றக் கூடியது. உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட்டச் செய்யும். புரத சத்து அதிகம் கொண்டதால், ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தக் கூடியது.
முருங்கைக்கீரை: அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ சத்தும், சுண்ணாம்பு சத்தும் நிறைந்தது. ஆதலால் நோய் எதிர்ப்பு சக்தி தருவதுடன், ரத்தத்தை சுத்திகரித்து, இதயத்துடிப்பை சீராக வைப்பதுடன் நரம்புகளுக்கும், பற்களுக்கும் பலம் தரக்கூடியது.
புதினா: வாந்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. குறிப்பாக கருவுற்ற பெண்களின் வாந்தியை கட்டுப்படுத்தும். சமையலில் மணத்தையும், ருசியையும் அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.தினசரி உணவில் தவறாமல் ஒரு கீரையை சேர்த்து உண்போம். நலமுடன் வாழ்வோம்.
- எஸ்.ஆஷாதேவி, சென்னை.
|