கிச்சன் டிப்ஸ்



* கேரட்டை தோல் நீக்கி ஆவியில் வேகவைத்து மிக்சியில் அரைத்து நெய்யில் வதக்கி அல்வா செய்தால் சுவையாக இருக்கும். சீக்கிரம் செய்து விடலாம்.
* சோயா பீன்ஸை லேசாக வறுத்துப் பொடி ெசய்து வைத்துக் கொண்டு பொரியல் செய்யும்போது அதில் தூவலாம். தோசை மாவில் கலந்து செய்யலாம். சப்பாத்தி மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்தால் மிகச் சுவையாக இருக்கும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது வெறும் கடாயில் ஜவ்வரிசியை பொரித்துக் கொண்டு பிறகு அந்த பொரித்த ஜவ்வரிசியில் பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்து விடும். கொழகொழப்பு இருக்காது.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

* ஆப்பிள் தோல், வெள்ளரித் தோல் இவற்றைச் சேர்த்து அரைத்த சட்னியை தயிரில் கலந்தால் சுவையான ரய்தா கிடைக்கும்.
* கொதிக்கும் நீரில் ஊறப்போட்டு எடுத்த ரொட்டித் துண்டுகளுடன் வாழைப்பழம்,
சர்க்கரை, தேங்காய்த்துருவல், வெண்ணெய் இவற்றை கலந்து அல்வாவுக்கு கிளறுவது போல் கிளறி இறக்கினால் சுவையான ரொட்டி அல்வா தயார்.
- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.

* காரக்கொழுக்கட்டை செய்யும்போது மாவில் புதினா, பச்சைமிளகாய், கொத்தமல்லி தழையை மைய அரைத்து கலந்து கொழுக்கட்டை பிடித்தால் பச்சை கலரில் கொழுக்கட்டை ரெடி.
* பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றை ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டு, 2 டீஸ்பூன் வறுத்த கசகசா, 2 டீஸ்பூன் தேன் கலந்து பிசறி, பூரணமாக வைத்து வித்தியாசமான சுவையில் கொழுக்கட்டை செய்யலாம்.
- ஜே.சி. ஜெரினாகாந்த், துரைப்பாக்கம்.

* நன்றாக உலர்ந்த வேப்பம்பூவை ஒரு பிடி எடுத்துக் கடாயில் சிறிது நெய்விட்டு வறுத்து இறக்கி, அதன் மீது கொஞ்சம் உப்பு தூவி சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது.
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

* பட்சணங்கள் செய்யும்போது மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிப் பிசைந்து 1/2 மணி நேரம் கழித்து தயாரிக்க வேண்டும். மாவு நன்றாக பதமாக அச்சில் போட்டு பிழிய சுலபமாக இருக்கும். தட்டை தட்ட எளிதாக இருக்கும். பட்சணமும் நன்கு கரகரப்பாக வரும்.
* அடை செய்யப் போகிறீர்களா? வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கி சிறிது மோரும், உப்பும் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து அடை மாவில் கலந்து அடை செய்தால் ருசியே தனிதான்.
* வெண்டைக்காயை நறுக்கும்போது கொழகொழப்பு வராமல் இருக்க புளித் தண்ணீரில் முக்கி எடுக்க வேண்டும்.
* வாழைக்காய் பொடி செய்யும்போது ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை  தாளிக்கும்போது சேர்த்து வறுத்து வாழைக்காய் பொடி செய்தால் மணமாக இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* இளசான குருத்து எலுமிச்சை இலைகளை சுத்தம் செய்து வதக்கிக் கொள்ள வேண்டும். தயிரில் கடுகு தாளித்து கலந்து வைத்தால் பச்சடி
சுவையாக இருக்கும்.
* மாங்காயை தோல் சீவி கொப்பரைத் துருவியில் துருவி எந்தப் பொரித்த குழம்பானாலும் கடைசியில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் குழம்பு சூப்பராக இருக்கும்.
*காய் எதுவும் சேர்க்காமல் தக்காளி புளி குழம்பு செய்யும்போது சிறிது இஞ்சி, கசகசா, மராட்டிமொக்கு, மாசிக்காய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால்
சுவையான மருந்து குழம்பு தயார்.
* சாம்பாருக்கு வேகவைத்த பருப்பில் 2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு சிறிது தேங்காயை மை போல் அரைத்து சேர்த்து ரசம் வைத்தால் பிரமாதமாக இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.