குரல்கள் - மதங்கள் பெண்களை ஒடுக்குகின்றனவா ?



இச்சமூகத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை பல விதங்களில் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஒடுக்குமுறைக்குக்   காரணமாக இருப்பது ஆண் மேலாதிக்க சிந்தனைதான். பிறப்பிலேயே ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான் பெண் என்பதை   மத அமைப்புகள் முன் மொழிகின்றன. மதத்தின் பெயரால் எந்தெந்த விதங்களிலெல்லாம்பெண்   அடிமைப்படுத்தப்படுகிறாள் என்று  பெண்களிடம் கேட்ட போது...

ரீனா ஷாலினி, எழுத்தாளர்


உலகம் முழுவதும் ஆதி சமூக வழிபாட்டு முறைகளில் பெண்ணுக்கு சமபங்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பெண்ணே முதன்மையானவள். பின்னர் மதங்கள் இயக்கங்களாக உருவான காலகட்டத்தில்தான் பெண்ணை   அடிமையாக்குவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இந்து மதத்தில் பெண் தெய்வ வழிபாடு முக்கியத்துவம்   வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் பெண் உடலின் இயல்பான நிகழ்வான மாதவிடாய் தொடர்பான அளவில்லாத   மூடநம்பிக்கைகள் மத வழிபாட்டில் மிகப்பெரிய முரண். மாதமுறைச் சுழற்சிக் காலம் முழுவதும் சபரிமலை,   வெள்ளியங்கிரி போன்ற மலைகளில் பெண்களுக்கு அனுமதி இல்லை.

பெண் தெய்வங்களின் கருவறையில்கூடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண் வாரிசு இல்லாத குடும்பங்களில்கூடப் பெண் கொள்ளி வைக்க முடியாது. கணவனை இழந்த பெண்கள் சுபநிகழ்வுச் சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.சபரிமலைக்குப் பெண்கள் நுழைவுக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சட்டப்   போராட்டத்தை எல்லாவற்றுக்குமான உதாரணமாகச் சொல்லலாம். 1991-ல் இது தொடர்பாக விசாரித்த கேரள உயர்   நீதிமன்றம், தேவசம் போர்டுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பெண் வழிபாட்டு   உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் வழிபாட்டு உரிமையைக் கொண்டு பெண்   சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமா என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்தது. இங்கு பிரச்னை மத நம்பிக்கை அல்ல,   உரிமைதான்.

விஷ்ணு ப்ரியா, கட்டட வடிவமைப்பாளர்


இந்து மதத்தில் ‘மாதவிடாய்’ நாட்களில் பெண் தீண்டத்தகாதவளாக ஒதுக்கி வைக்கப்படுவது இன்றைக்கும் நிகழ்கிறது. அந்நாட்களில் பூஜை அறைக்கோ, கோயிலுக்கோ செல்லக்கூடாது என்கின்றனர். வெளியே சென்ற இடத்தில்   மாதவிடாய் ஆகி விட்டால் வீட்டுக்குள்ளே வராமல் வீட்டுக்கு வெளியில் உள்ள குளியலறையில் குளித்து விட்டுத்தான்   வர வேண்டும் என்கிறார்கள். இன்றைக்கும் பல பெண்களை தனியாக படுக்க வைக்கிறார்கள். பெங்களூரில் ஐடி   நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் தோழிக்கு இதெல்லாம் நடக்கிறது. அவள் குடும்பத்தினர் அனைவருமே   கல்வியறிவு பெற்றிருந்தும் இதில் மாற்றம் ஏற்படவில்லை.

பூப்பு நீராட்டு விழா ஏற்புடையதல்ல. இன்றைக்கு பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.   குழந்தைப் பருவத்தில் இருக்கும் அவர்களுக்கு ஊரைக்கூட்டி மஞ்சள் தண்ணீர் ஊற்றி விழா எடுப்பது எந்த விதத்தில்   சரி? தனக்கு என்ன நடக்கிறது என்றே அவர்கள் அறியும் பக்குவத்தில் வந்திருக்காதபோது இது அவர்களுக்கு   பிரச்னையையே தரும். பருவமெய்தியதும் செய்யும் சடங்கு மற்றும் மாதவிடாய் நாட்களில் பெண்ணை நடத்திய விதம்   இவையெல்லாம் முந்தைய காலத்திலிருந்து தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அறிவியல் வளர்ச்சி   கண்டிருக்காத அக்காலத்தில் பின்பற்றிய நடைமுறையை இக்காலத்திலும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.   மாதவிடாய் நாட்களில் எவ்வாறு சுகாதாரமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதுதான் தேவையே   தவிர தனியாக படுக்க வைப்பது இன்றைக்கான தீர்வல்ல. ஒரு பெண் அடிப்படையான அறத்துடன், தான் விரும்பும்படி   இருக்க அனுமதிக்க வேண்டும். அதை மதத்தைக் காரணம் காட்டி மறுத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஃபிர்தோஸ் டீனா, திரைத்துறை


எனது பள்ளிக் காலத்திலிருந்தே சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதனால் படிப்பில்   பெருசா கவனம் செலுத்தலை. சினிமா மட்டும்தான் என் குறிக்கோளா இருந்துச்சு. நான் 9ம் வகுப்பு படிக்கிறப்பவே வட   சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘அட்டு’ திரைப்படத்தில் உதவி இயக்குனரா சேர்ந்தேன். குடும்பத்தாருடைய   எதிர்ப்பை மீறித்தான் படப்பிடிப்புக்குப் போனேன். அவங்க ஃபர்தா போட்டுட்டு போகனும்னு நிர்ப்பந்திச்சாங்க. மத   அடையாளத்தை மாற்றக் கூடாதுன்னு சொன்னாங்க. நானும் மூன்று மாதங்கள் ஃபர்தா போட்டுட்டுதான் ஷூட்டிங்குக்குப்   போனேன். ஆனால் ஃபர்தாவோட என்னால் வேலை செய்ய முடியலை.

அது எனக்கு உவப்பானதா இல்லை. இஸ்லாமியர்களின் வேத நூலாகக் கருதப்படும் குர்ரானில் எந்த இடத்திலும் ஒரு   பெண் ஃபர்தா அணிய வேண்டும்னு குறிப்பிடப்படலை. நாகரிகமான முறையில் என்னை வெளிப்படுத்திக்க எனக்குத்   தெரியும். அதுக்கு ஃபர்தா போட்டுத்தான் உடலை மூடனும்னு அவசியம் இல்லைன்னு சொன்னேன். அன்னையிலிருந்து   நான் ஃபர்தா போடுறதை விட்டுட்டேன். அது என் சொந்த பந்தங்களுக்குள் பெரும் சர்ச்சையை உண்டாக்குச்சு. என்   பெற்றோரை என் உறவினர்கள் திட்டினாங்க. ஒழுங்கா படிக்க வெச்சிருக்கலாம். சினிமாவுக்கே அனுப்பியிருக்கக் கூடாது.   அதனாலதான் அவ ஃபர்தா போட மாட்டேங்குறா என்று குற்றம் சாட்டினார்கள்.

அதனால் என்னுடைய உரிமையை மதிக்காத இந்த மத அமைப்பிலிருந்து வெளியேறனும்னு நினைச்சேன். எதிர்ப்பைக்   காட்டுறதுக்காக பச்சை குத்திக்கிட்டேன். இது தெரிஞ்சதும் அம்மா தற்கொலை பண்ணிக்கப் போயிட்டாங்க. ‘‘இனி   உன்னை இஸ்லாமியப் பெண்ணாக யாரும் நினைக்க மாட்டாங்க. உனக்கு கபுருஸ்தானில் (இஸ்லாமியர்களின்   மயானம்) இடம் தார மாட்டாங்க’’ன்னு சொன்னாங்க.

அதுக்குப் பிறகு நான் என் குடும்பத்தை விட்டே வெளியேறி, உதவி இயக்குனராக வேலை செஞ்சேன். பாதுகாப்புக்காக   திருமணம் செஞ்சுக்கிட்டேன். எங்களுக்கு ஒரு குழந்தை. ஆனா கருத்து வேறுபாடு காரணமா நாங்க விவாகரத்து   பண்ணிக்கிட்டோம். இன்னைக்கு நானும் என் குழந்தையும் மட்டும் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். என் குடும்பத்தைத் தேடிப்   போனப்போ ‘‘நீ எங்களை மீறிப் போனதால் உன்னைக் கண்டுக்க மாட்டோம்’’னு சொல்லி மேலும் இழிவாகப்   பேசினாங்க. இரவு நேரப் படப்பிடிப்புக்குப் போக வேண்டியிருந்தப்ப என் குழந்தையை என் சித்திகிட்ட பார்த்துக்க   கொடுக்கலாம்னு போனேன். ‘‘எப்படி ஒரு பெண் இரவில் வேலைக்குப் போகலாம்? சாயந்திரத்துக்குள்ள வீட்டுக்கு   வர்றவதானே பெண். இது மாதிரி போறீன்னா இனிமேல் என் வீட்டுக்கு வராதே’’ன்னு சொன்னாங்க. வேத நூல்   எனக்கருதப்படும் குர்ரானில் சொல்லாததைக் கூட இங்குள்ளவர்கள் பின்பற்றக் கூறுகின்றனர். அது பெண்களுக்கு   எதிரானதாக இருக்கு.

சித்திகா, ஐடி ஊழியர்


இஸ்லாமிய மதத்தில் முன்பைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் நிறைய விசயங்கள்   மாறாமல்தான் இருக்கின்றன. எனது உடை எனது உரிமை என்கிற இக்காலத்திலும் இஸ்லாமியப் பெண்கள் ஃபர்தா   அணிய வற்புறுத்தப்படுகிறார்கள். நிக்காஹ்-க்கு அதிக அளவிலான வரதட்சணை கேட்கிறார்கள். பெண் என்பவள்   ஆணின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்திலிருந்து யாரும் விடுபடவில்லை. பெண்கள்   வேலைக்குச் செல்வதை பெரும்பாலானவர்கள் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி வேலைக்குச் செல்வது மிகவும்   கடினமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

ஷாலின் மரிய லாரன்ஸ், சமூக செயற்பாட்டாளர்நான் எந்த மதத்தையும் பின் தொடர்வதில்லை என்றாலும் கிறித்துவக்   குடும்பப் பின்னணியைக் கொண்டவள் என்பதால் கிறித்துவ மதத்திலிருக்கும் பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி பேச   விரும்புகிறேன். இயேசு பெண்ணடிமைத்தனத்தை பற்றி எதுவும் கூறியதில்லை. ஆனால் பைபிள் முழுக்க பெண்ணை   அடிமைப்படுத்தும் விதமான கருத்துகள் விரவிக்கிடக்கின்றன. மதக்கோட்பாடுகளை வகுத்தவர்கள் ஆண்கள் என்பதால்   அது முழுவதும் ஆணின் மேலாதிக்கப் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் பெண்கள் தலையைப்   போர்த்தி மூடிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். தலைமுடி என்பது வெளியில் காண்பிக்கக் கூடாத அருவெறுப்பான   ஒன்றா? கடவுள் ஓர் ஆண் என்பதால் பெண் ஆணுக்கு அடிபணிந்து போக வேண்டும் என்கிற கருத்தையே கிறித்துவர்கள்   முன் மொழிகிறார்கள். பெண் ஆணுக்கு அடி பணிந்து போக வேண்டும் என பவுல் என்பவர் பைபிளில்  எழுதியிருக்கிறார்.  அவரே தலையை மூடாதவர்கள் ஒழுக்கமான பெண்கள் அல்ல என்பது போல சித்தரிக்கிறார்.

கிறித்துவ மதத்தின் பொறுப்புகளுக்குள் பாலின சமத்துவம் இருப்பதில்லை. பாதிரியார், பிஷப், போப் என அதிகாரத்தில்   இருப்பவர்கள் அனைவருமே ஆண்கள்தான். இதுவரையிலும் ஒரு பெண் கூட போப் ஆனதில்லை. பெண்களால்   அதிகபட்சமாக கன்னியாஸ்திரிதான் ஆக முடியும். அதுவும் அவர்கள் பாதிரியாரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுதான்   நடக்க வேண்டும் என்கிற நிலைதான் இருக்கிறது. ஆணாதிக்கம் தழைத்தோங்கும் தளமாக இருக்கிறது கிறித்துவ மதம்.இயேசுவைக் கடவுளாகப் பார்ப்பவர்கள் இயேசுவைப் பெற்ற மாதாவைக் கடவுளாகப் பார்ப்பதில்லை. ஆணே கடவுளாக   இருக்க முடியும் என்கிற ஆண் மேலாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. பைபிளே ஆதாம் - ஏவாள் என்கிற   பொய்ப்புரட்டுக் கதையிலிருந்துதான் தொடங்குகிறது.

ஆணை பாவம் செய்யத் தூண்டியவள் பெண், பெண்கள் மனிதக் குலத்தை அழித்தவர்கள், பெண்தான் பாவத்தின்   தொடக்கம் என்றெல்லாம் பைபிள் கூறுகிறது. ஆனால் உலக அளவில் கிறித்தவர்கள் அந்தக் கருத்துகளிலிருந்து மாற்றம்   கண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள கிறித்தவர்கள் மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள். இந்து   மதத்திலிருந்து கிறித்துவர்களாக மாறியவர்கள் இந்து மதத்தில் பின்பற்றப்படும் அடிமைத்தனத்தை இதிலும் பின்   தொடர்கிறார்கள். இன்னமும் வரதட்சணை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடிமைத் தனத்தில்   ஊறிப்போயிருப்பது இந்தியக் கிறித்தவர்கள்தான்.

டாலி, ஐடி ஊழியர்


எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் கிறித்துவ மதத்தில் பெண்ணடிமைத்தனம் பெருசா இல்லை. எல்லோருக்கும் எல்லா   விசயத்திலும் முன்னுரிமை இருக்கு. ஆனாலும் சில விசயங்கள் இன்னும் மாறாம இருக்கு. கிறித்துவ மதத்தில்   மட்டுமல்ல எல்லா மதத்திலும்தான். வரதட்சணை முறை இன்னும் ஒழியவே இல்லை. பாதிரியார்களே பெண்
வீட்டில் வரதட்சணை வாங்க ஊக்குவிக்கிறார்கள். கொடுக்கலைன்னா அவங்களே கல்யாணத்தை நிறுத்தவும்   செய்யுறாங்க. இது இப்போ அதிகமாகியிருக்கு.
    
ஹேமாவதி, செயற்பாட்டாளர்


மதம் என்பதே ஒரு ஏமாற்றுவேலை. பெண்ணை அடிமைப்
படுத்தி வைத்திருக்கிறது.  இந்து மதத்தில் இருக்கும் தாலி கட்டும் பழக்கம் என்பதே நம்மை அடிமையாக்கும்   குறியீடுதான். அதனால்தான் மூன்று முடிச்சு போட்டுவிட்டாலே அந்தப் பெண், கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்   அவனோடு வாழவேண்டுமென நிர்பந்திக்கப்படுகிறாள். தெய்வங்களில் கூட இந்து மதத்தில் ஆண் தெய்வங்களுக்கும்   பெண் தெய்வங்களுக்கும் வேறுபாடு இல்லை.  இந்து மதத்தின் பெரும்பாலான பெண் சிறுதெய்வங்கள் எல்லாம் சாதி   ஆணவக் கொலைகளுக்கு ஆளாகிய பெண்கள்தான். வேற்று சாதியில் பிறந்த ஆணை காதலித்ததற்காகவோ   மணந்ததற்காகவோ கொல்லப்பட்ட பெண்களை இந்து மதம் சிறுதெய்வங்களாக்கி வழிபடுகிறது. 3 மாதங்கள் மட்டுமே   பயன்படுத்தக்கூடிய உடையாக இருந்தால்கூட நம் சௌகரியத்துக்கு வாங்குவதுதான் முறை. அடுத்தவர் சொல்வதற்காக   வாங்க முடியாது. அப்படியிருக்கையில் வாழ்க்கை முழுதும் கூட வரப்போகும் கணவனைத் தேர்ந்தெடுக்கும்  உரிமையை இந்து மதம் சாதி என்கிற பெயரில் தடுக்கிறது.                            =
                   

- கி.ச.திலீபன்