குளு குளு கோடை வேண்டுமா?




“பங்குனி வெயிலே இப்படி வாட்டி எடுக்குதே, மே மாசமெல்லாம் என்ன ஆகப் போறோமோ?” என்கிற  கேள்வியைத்தான் தற்போது அனைவரும் முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சிகளில் தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது என்ற செய்திகளை கேட்கும் போது, பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள  மக்கள் நம்முடைய பகுதியில் இந்த மழை பெய்யக் கூடாதா என்கிற ஏக்கத்தோடு பேசிக்கொள்கின்றனர். எது எப்படி  ஆனாலும் சூரியன் தன் வேலையை காட்டத்தொடங்கிவிட்டது. இந்த வெயில் காலங்களில் ஏற்படும் உடல்  உபாதைகளை சமாளிக்க உடல் சூட்டை தணிப்பதே சிறந்தது. இது போன்ற வெயில் காலங்களுக்கு ஏற்றவாறு இயற்கை  கொடுத்திருக்கும் தானிய உணவுகளை குறித்து கூறுகிறார் சித்த மருத்துவர் சதீஷ்.

“வெயில் காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க சில தானிய வகைகளை உணவாக  எடுத்துக்கொள்ளலாம். இந்த காலங்களில் கேழ்வரகு, கம்பு போன்றவை அதிக அளவில் கிடைக்கக்கூடியவை. அவற்றை  அரைத்து கம்பங்கூழ் செய்து குடிக்கலாம். அதனுடன் முருங்கை இலை சாம்பார் சேர்த்து குடிப்பது உடலுக்கு மிகவும்  நல்லது. வெந்தயக் களியுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். உளுந்து பாயசம், வெள்ளரி விதை போன்றவை  வெயிலுக்கு சிறந்த உணவு. மேலும் பழைய சாதத்துடன் மோர் கலந்து சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். வரகு,சாமை, தினை என்று புன்செய்  நில பயிர்கள் அனைத்தையும் நீர்ப்பதமாக சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இவற்றை அன்றாட உணவில்  சேர்த்துக்கொண்டால் உடலை குளுமைப்படுத்தி உடல் சூட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்" என்கிறார்.       
      

- ஜெ.சதீஷ்