மகப்பேறு எனும் தடைக்கல்



ஐடி துறை மட்டும் அல்லாமல் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் குடும்பச்சூழல் காரணமாக தொடர்ந்து வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. மகப்பேறு காலத்தில் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும்  பணிக்கு திரும்பும் போது அவர்களுக்கான பணி மீண்டும் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாகவும் பெண்கள் பலர்  திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தங்களது பணியில் நீடிக்க முடியாத சூழல் உள்ளது.
 
இன்றைய காலச்சூழலில் ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி என இருவரும் வேலைக்கு சென்றால்தான் பொருளாதார  சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில், அனைவரும் தனக்கான பணியை தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக  இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அனுபவத்திற்கும், திறமைக்குமான வேலையும் சமமான ஊதியமும்  வழங்கப்படுகிறதா? ஆண்- பெண் இருவருக்கும் ஒரே திறமை இருந்தும், அனுபவம் இருந்தும் பெண் என்பதனாலேயே  அவருக்கு சமமான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் தமிழகத்தில் வலுவாக இருக்கிறது. இது  தொடர்பாக சிலரிடம் பேசினேன்.

தனியார் நிறுவன ஊழியர் இலக்கியா பேசுகையில்…
“திருமணத்திற்கு முன்பு, பின்பு என எல்லா காலகட்டத்திலும் பெண்கள் வேலைக்கு போவது என்பது கடினமான  காரியமாகவே இருக்கிறது. பட்டப்படிப்பு படிக்க வைக்கும் பெற்றோர் பெண்களை வேலைக்கு அனுப்புவதில் தயக்கம்  காட்டுகிறார்கள். அவர்களின் அச்சத்திற்கு இந்த சமூகத்தில் நடக்கும் பல்வேறு குற்றச் சம்பவங்களும் காரணமாக  இருக்கின்றன‌. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சென்றால் நைட் ஷிஃப்ட்தான் இருக்கிறது என்கிறார்கள். ஆனால்  வீட்டில் நைட் ஷிஃப்ட் வேலை என்றால் “நீ வேலைக்கே போகவேண்டாம்” என்கிறார்கள். வேறு நிறுவனங்களில்  வேலைக்கு சென்றால் படித்த படிப்பு ஒன்றாக இருக்கிறது.

கிடைக்கும் வேலை ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது  இன்றைய சூழலில் கேள்விக்குறிதான். இத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு உள்ள  பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள். அந்த வேலையாவது நிரந்தரமாக இருக்கிறதா  என்றால் கிடையாது. எந்த ஒரு வேலையும் ஒருவருக்கு நிரந்தரம் இல்லை என்றாலும் அவர்கள் படித்த படிப்பு  அவர்களுக்கு நிரந்தரம் தானே? ஆனால் அதற்கான வேலை அவர்களுக்கு கிடைப்பதில்லை. திருமணம் முடிந்த ஒரு  வருடத்தில் பிரசவகாலம் வந்து விடுகிறது.

இதற்காக பெண்களுக்கென்று மகப்பேறு விடுமுறையை அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும், விடுமுறை  முடிந்து அதே சம்பளத்தில் பணியை தொடர வேண்டும் என்று சட்டம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால்  அதெல்லாம் முறையாக நடப்பது மாதிரி தெரியவில்லை. மகப்பேறு காலம் முடிந்து வருகிறவர்களுக்கு அந்நிறுவனம்  பல்வேறு காரணங்களை சொல்லி வேலைக்கு சேர்ப்பதில்லை அல்லது புதிதாக வருகிறவர்களுக்கு என்ன சம்பளமோ  அதே சம்பளத்திற்கு பணி அமர்த்துகிறது. வேறு நிறுவனத்திற்கு சென்றால் அங்கும் முன்பு வேலை பார்த்ததை விட  குறைவான சம்பளத்திற்கே பணி வழங்கப்படுகிறது.

ஐடி நிறுவனங்களை விட மற்ற பிற நிறுவனங்களில் ஆண் - பெண் பாகுபாடு பார்த்துதான் சம்பளம் வழங்கப்படுகிறது.  பணி உயர்வு கிடைக்கும் நேரத்தில் சில காரணங்களால் விடுமுறை எடுத்துவிட்டால் பணி உயர்வு பெண்களுக்கு  நிறுத்தப்படுகிறது. பணி அனுபவம், படிப்பு எல்லாம் இருந்தும் உழைப்பிறக்கான ஊதியம் பெண்களுக்கு கிடைப்பதில்லை.  சிலர் சொல்லலாம் ‘எங்கள் நிறுவனம் எனக்கு இவ்வளவு செய்தது அவ்வளவு செய்தது' என்று. ஆனால் அப்படி  சொல்கிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். படித்த படிப்பிற்கு வேலை இல்லாதவர்களும், பணி நீக்கம்  செய்யப்பட்டு வேலை தேடுகிறவர்களின் எண்ணிக்கையும் இன்றைய சூழலில் ஒரே அளவாகத்தான் இருக்கும் என்று  நினைக்கிறேன்” என்கிறார் இலக்கியா.

ஹெச்.சி. எல்-ன் செயலாக்கத் துணைத்தலைவர் ஸ்ரீமதி சிவசங்கரிடம் இது குறித்துப் பேசியபோது, “நீண்ட  நாட்களாகவே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் திறமையான பெண்கள் வீட்டிலே முடக்கப்பட்டுக்  கிடக்கிறார்கள். அவர்களுக்காகவே நாங்கள் எடுத்திருக்கும் புதிய முயற்சிதான் ‘ஐ பிலீவ்'. இந்தத் திட்டத்தின் மூலம்  ஐ.டி மட்டும் இல்லாமல் வெவ்வேறு துறையில் பணியாற்றி குடும்பச் சூழல் காரணமாக வேலையை தொடரமுடியாத  பெண்கள், தங்களது தகவல் தொழில்நுட்பத் துறையில் மீண்டும் தொடர ஒரு புதுமையான வாய்ப்பாக 2-வது கெரியரை'  ஐ பிலீவ்' அறிமுகம் செய்கிறது.

பணிக்கு மீண்டும் திரும்ப வருவது குறித்தும் தங்களது திறன் மீது முதலீடு செய்ய தீவிரமாக இருக்கிற பெண்களை  இலக்காகக்கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களோடு இணைகின்ற பெண்களுக்கு, இன்றைய பணிச்  சூழலுக்கு அவசியப்படுகிற தொழில்நுட்ப மற்றும் பிசினஸ் திறன்கள் பயிற்சியளிக்கப்பட்டு அவர்களது தரமேம்பாடு  உறுதி செய்யப்படும். இவ்வாறு இத்திட்டத்தில் இணைகின்ற பெண்களின் தனிப்பட்ட பின்புலத்தைச் சார்ந்து பயிற்சியின்  கால அளவு மற்றும் வகையும் இருக்கும். இந்த முனைப்புத்திட்டத்திற்கு இதுவரை மிக நேர்த்தியான வரவேற்பு  கிடைத்திருக்கிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு அனுபவத்திற்கு ஏற்றவாறு தகுதியான சம்பளம் வழங்கப்படும்.
ஐடி துறையில் பணியாற்றுகிறவர் ஒவ்வொரு நாளும் தங்களுடைய திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய  தேவை  இருக்கிறது.

அதற்காக ‘ஐபிலீவ்' முன்பே கற்றுக்கொண்டதிறன்களை புதுப்பித்து நிகழ்நிலைப் படுத்திக் கொள்வதற்காக 1-லிருந்து 3  மாதங்கள் வரை பயிற்சித்திட்டம் வகுத்துள்ளது. எதிர்காலத்தேவையை எதிர்கொள்ள திறன் கொண்டவர்களாக  ஆக்குவதற்கு நவீன தொழில்நுட்ப கருத்தாக்கங்கள் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி செயல்திட்டத்திற்காக கட்டணம்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் எல்லா  ஹெச்.சி. எல் நிறுவனங்களிலும் கொண்டு செல்லும் முயற்சியை எடுத்து வருகிறோம். தன்னுடைய பணி எத்தகைய  சவாலாக இருந்தாலும் அதை திறம்பட செய்துமுடிக்கும் திறமை எல்லா பெண்களுக்கும் இருக்கிறது என்பதில் எனக்கு  நம்பிக்கை இருக்கிறது. பயிற்சி பெறும் அனைவருக்கும் ஹெச்.சி எல் நிறுவனம் தகுந்த சம்பளத்தோடு பணியை  வழங்கும்” என்கிறார் ஸ்ரீமதி சிவசங்கர்.

- ஜெ.சதீஷ்