வாழ்க்கையில் சந்திக்கும் தேவையற்ற நபர்களை கவனமாக கடக்க வேண்டும்!‘‘ஒரு நாட்டின் வருமானத்தில் மிக முக்கிய பங்கு சுற்றுலா துறைக்கு உள்ளது. இந்தியாவில் குறிப்பாக கேரளாவிற்கு பல வெளிநாட்டினர் வர முக்கிய காரணம் அவர்களின் ஆயுர்வேத சிகிச்சை முறைகள். அப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் தமிழ்நாட்டிலும் உள்ளது. அதில் மிகவும் முக்கியமானது நம் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட சித்த மருத்துவம்’’ என்கிறார் கல்பனா சிவராஜ்.
சேலத்தில் சிவராஜ் சித்த மருத்துவம் என்றால் பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். ஆறாவது தலைமுறையாக இந்த சிகிச்சை முறையினை தொடர்ந்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறையினருக்கும் இதனை கொண்டு சென்று வருகிறார்கள். தாத்தா, அப்பா, தம்பியை தொடர்ந்து இந்த சித்த சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வருகிறார் கல்பனா சிவராஜ்.

‘‘பெரும்பாலானவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை தாண்டி ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புகிறார்கள். அதில் முக்கியமானது உடல் எடை குறைப்பு, ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, மன அழுத்தம்.... கண்களுக்கு தெரியாத இந்த பிரச்னைகளை முதலில் நீக்கினாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது தான் ரிஷி ஹெல்த் கேர். இது ஒரு முழுமையான ஆரோக்கிய கூடம். இங்கு எடை  குறைப்பு, கழுத்துவலி, மூட்டு வலி, டீடாக்சிபிகேஷன், யோகா, ஃபுட் ரிப்லெக்சாலஜி என பல சிகிச்சை முறைகள் உள்ளது.

ஒருவரின் பிரச்னைக்கு ஏற்ப இரண்டு முதல் 15 நாள் வரை இங்கு தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதனை முதலில் நாங்க ஏற்காட்டில்தான் துவங்கினோம். ஆனால் அது சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை என்பதால், சேலத்திலும் ஒன்றை துவங்கினோம்.
என் தாத்தா இந்த சிகிச்சை அனைத்து மக்களுக்கும் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதன் அடிப்படையில்தான் சேலத்தில் எங்களின் சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல ஏழை எளியவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

இது எல்லோருக்கும் ஏற்ற சிகிச்சை. காரணம், ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப தான் சிகிச்சை அளிக்கிறோம். உதாரணத்திற்கு ஒருவர் எடை குறைக்க வேண்டும் என்றால், அவர்கள் முதலில் செய்வது டயட் என்ற பெயரில் உணவுகளை தவிர்ப்பது. உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம்.

அதற்காக உணவுகளை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆரோக்கியமான முறையில் சுவையான உணவுகளை சாப்பிடலாம். சைவம், அசைவம் ஏன் இனிப்பு வகைகள் கூட எடுத்துக் கொள்ளலாம். அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம்.

மேலும் அவர்கள் அதை வீட்டில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதையும் சொல்லித் தருகிறோம். இவை தவிர உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி, யோகா, அக்குபங்சர்... அனைத்தும் அடங்கும். இதனை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்தால் எடை குறைவது மட்டுமில்லாமல் ஆரோக்கிய வாழ்க்கையினை வாழ முடியும். மேலும் ஸ்பா போன்ற சிகிச்சை முறைகளும் உள்ளது. இதன் மூலம் ஒருவர் முழுமையான புத்துணர்ச்சி பெற முடியும்’’ என்றவர், தன் தந்தை மற்றும் தம்பிக்கு பிறகு இதன் நிர்வாகத்தினை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் பற்றி
விவரித்தார்.

‘‘எங்களுடையது ரொம்ப பழமைவாதியான குடும்பம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாங்க. சத்தமா சிரிச்சு பேசக்கூடாது. ரொம்ப அடக்கம் ஒடுக்கமா இருக்கணும். பள்ளிப் படிப்பை முடிச்ச கையோடு எனக்கு கல்யாணம். ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே என் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டது. ஒரு மகன் பிறந்தும் நிலைமை மாறல. அதனால் எங்க வீட்டிற்கே வந்துட்டேன்.

இங்கு அப்பாவுடன் சேர்ந்து நானும் மெடிக்கல் கேம்பிற்கு போவேன். சிகிச்சை மையத்தின் அட்மினிஸ்ட்ரேஷன் வேலையை பார்த்துக் கொள்வேன். என்னுடைய குடும்ப வாழ்க்கையில் பெரிய பிரிவு ஏற்பட்ட போது என் தம்பி சித்தா மருத்துவக் கல்லூரியை துவங்கினான். அவன்தான், ‘எவ்வளவு காலம் இப்படியே இருப்ப.

அதைவிட்டு வெளியே வரணும்னா நீ முதலில் வெளி உலகத்தினை எதிர்கொள்ளணும்’னு சொல்லி அந்த கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பினை பார்த்துக்க சொன்னான். 2015ல் கல்லூரிக்கு வந்தேன். எனக்கு கல்லூரி எப்படி இயங்கும்னு தெரியாது. சுத்தி சுத்தி பார்ப்பேன். எதுவுமே புரியாது. பேராசிரியர் பால் அவர்கள்தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

கெடாவர் என்றால் பிணம் என்று எனக்கு அவர் சொல்லித்தான் தெரியும். அதன் பிறகு படிப்படியாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். செல்லப்போனால் கல்லூரி ஆசிரியர்கள் எப்போது எந்த வகுப்பிற்கு போக வேண்டும் என்ற டைம்டேபிளை நான்தான் போடுவேன். அதன் பிறகு கல்லூரியின் முழு பொறுப்பையும் என்னிடம் என் தம்பி கொடுத்துவிட்டு அவன் ஓட்டல் மற்றும் வைத்தியசாலையை பார்த்துக்கிட்டான்.

என்னைப் பொறுத்தவரை டிசிப்ளின் ரொம்ப முக்கியம். மேலும் இங்கு படிக்கும் ஐந்தரை வருஷத்தில் பாடங்களை விட செயல்முறைகள் தான் அதிகம். மேலும் எங்களின் மருத்துவமனையில் நாங்க சிகிச்சை அளிக்கும் மருந்துகள் மட்டுமில்லாமல் பாரம்பரிய அரிய மருந்துகளையும் மாணவர்களுக்கு சொல்லித் தருகிறோம்’’ என்றவர் கம்ப்யூட்டர், ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.பி.ஏ என அனைத்தும் படித்துள்ளார்.

‘‘எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் எங்க குடும்பத்தில் அடுத்தடுத்த பெரிய இடியினை நாங்க சந்திக்க நேர்ந்தது. முதல் வருடம் என் தந்தையை இழந்தேன். அதில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த வருடம் அதே தினம் என் உயிருக்கு உயிரான தம்பியை இழந்தேன். என்ன செய்வதுன்னு தெரியல. எல்லாமே இருண்டு போனது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற போது பயமாக இருந்தது.

காரணம், ஒரு பெண்ணால் அதை நிர்வகிக்க முடியவில்லை என்ற பெயர் வந்திடக்கூடாதுன்னு பயந்தேன். அம்மாவுக்கும் அது பெரிய இழப்பு என்பதால், அவர்களிடமும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் என் ஊழியர்கள் மற்றும் என் மென்டார்தான் ரொம்ப சப்போர்டிவ்வா இருந்தாங்க. எல்லா வேலைகளையும் சென்ட்ரலைஸ் செய்து அதற்கு ஏற்ப ஆட்களை நியமித்து, அனைத்தும் என் பார்வையில் செயல்படுமாறு மாற்றி அமைத்தேன்.

கல்லூரி மற்றும் ஓட்டல் ஒருபக்கம் செயல்பட மறுபக்கம் வைத்தியசாலையில் உள்ள வேலைகளையும் கற்றுக் கொண்டேன். எங்க வீட்டில் பெண்களை வைத்தியசாலைக்குள் அனுப்பமாட்டாங்க. அவங்க புகுந்த வீட்டிற்கு மருத்துவ ரகசியத்தை எடுத்துக் கொண்டு போயிடுவாங்கன்னு சொல்லித் தரமாட்டாங்க. நான் கற்றுக்கொண்டேன். அப்போதுதான் அதன் செயல்பாட்டினை என்னால் தெரிந்து கொள்ள முடியும். என் மகன் மற்றும் என் தம்பியின் மகன் இருவரும் படித்துவிட்டு நிர்வாகத்தில் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

எனக்கு நிறைய எதிர்கால திட்டம் இருக்கு. எங்க கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எங்களின் மருத்துவமனை மற்றும் வெல்னெஸ் மையத்தில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர இருக்கிறேன். இதற்காக அனைத்து மாவட்டத்திலும் எங்களின் சிகிச்சை மையங்களை துவங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.

அப்பாவின் மறைவிற்கு பின் வைத்தியசாலை என்னாகும் என்ற கேள்விக்கு அதை விரிவுபடுத்துவது தான் என்னுடைய பதிலாக இருக்கும். வைத்தியசாலையை தொடர்ந்து கேட்டரிங் கல்லூரி ஆரம்பிக்க இருப்பதால், எங்களின் உணவகத்தின் கிளைகளையும் திறக்க திட்டமிட்டிருக்கிறேன். அடுத்து எங்க மருத்துவமனைக்கான மருந்தகம். அது சிலகாலம் இயங்காமல் இருந்தது. இப்போது அதுவும் முழு மூச்சுடன் செயல்படும்.

சித்த மருந்துகள் அதற்கான மருந்தகத்தில்தான் கிடைக்கும். அப்படி இல்லாமல் எங்களின் மருந்து எல்லா கடைகளிலும் கிடைக்கும் படி செய்ய இருக்கிறேன். அடுத்து ஸ்வீட் ஸ்டால். டயபெட்டிக் முதல் அனைவருக்குமான மிட்டாய் கடை. ரிஷி வெல்னெஸ் மையம் அனைத்து நாடுகளிலும் செயல்பட வேண்டும் என்பது என் கனவு. இப்படி என்னுடைய ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.

பெண்கள் தனிநபரா பிசினசில் ஈடுபடும் ேபாது நிறைய தேவையற்ற நபர்கள் வருவாங்க. அவர்களை எல்லாம் மிகவும் கவனமாக கடந்து வரவேண்டும். என் வாழ்க்கையில் நான் சந்தித்த விஷயங்களை பார்த்தால் ஒரு  ஓரத்தில் உட்கார்ந்து அழுதபடியே இருக்கலாம். ஆனால் அதெல்லாம் தாண்டி எல்லாவற்றையும் உடைத்து வருகிறேன். அதற்கு காரணம் ‘தைரியமா இரு... உடைஞ்சிடாதே’ன்னு சொன்ன அம்மாவின் வார்த்தைகள்தான்’’ என்கிறார் கல்பனா.

ஷம்ரிதி

மண்பானையின் அறிவியல் ரகசியம்!

ஏழைகளின் ஃப்ரிட்ஜ் என்று அழைக்கப்படும் மண்பானையினை வெயில் காலத்தில் அனைவரும் வாங்க ஆரம்பித்துள்ளனர். குளு குளு தண்ணீரை தரும் இந்த மண்பானையினை வெயில் காலம் மட்டுமில்லாமல் அனைத்து காலங்களிலும் பயன்படுத்தலாம்.

*மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெயில் பட்டையைக் கிளப்பினால், இதில் உள்ள தண்ணீர் ஜில்லென்று இருக்கும். அதே சமயம் வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.

* மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருக்க இதுதான் காரணம்.

* மண்பானையில் உள்ள சிறிய நுண்துளைகள் வழியே கசியும் நீர் தொடர்ந்து ஆவியாகிக்கொண்டே இருக்கும். பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும்.

*வெளிப்புறக்காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றி வெளிப்புற வெப்பம் அதிகமானால், நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறும். ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.

* இதற்காக மண்பானையில் நீண்டநேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ்கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நவீன கால ஃப்ரிட்ஜ்கள் போல
பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது.

* ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும் 5 டிகிரி செல்சியல் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.