பாலினம் கடந்து சேவை செய்ய வேண்டும்!‘‘நாம் செய்யும் வேலைக்கு அங்கீகாரம் அல்லது ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ தொடர்ந்து சமூகம் சார்ந்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்’’ என்று பல சவால்களை தாண்டி வந்து அனுபவங்களோடு பேசுகிறார் திருநங்கை ஸ்வேதா.
தனியாளாக நின்று இந்த சமூகத்திற்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்து வேலை செய்து வருகிறார் ஸ்வேதா. ‘Born2Win’ என்ற பெயரில்  தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் தன் சமூக மக்களுக்கு பல சேவைகளை செய்கிறார். குறிப்பாக அரசாங்கம் திருநங்கை சமூகத்திற்காக செய்ய தவறிய எல்லாவற்றையும் இந்த தன்னார்வ நிறுவனம் மூலம் செய்கிறார்.

‘‘எனக்கு சின்ன வயசுலேயே சமூகம் சார்ந்த வேலைகளில் ஈடுபட ரொம்ப பிடிக்கும். நான் படிச்சதெல்லாம் ஆண்கள் பள்ளியில். பள்ளி படிப்பு முடிந்ததும் என்னுடைய 17 வயசுல தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்தேன். அந்த நிறுவனம் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் சம்பந்தமா விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வந்தாங்க.
எச்.ஐ.வி நோயினால்தான் பல திருநங்கைகள் பாதிக்கப்படுறதா பலர் சொல்றாங்க. ஆனால் நான் நேரடியாக அது குறித்து வேலை செய்த போதுதான் எனக்கு திருநங்கை சமூகம் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறாங்க என்று புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட 10 வருடம் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் மற்றும் அத சார்ந்து பேசுவது என பல வகைகளில் வேலை செய்து வந்தேன்.

சமூகம் சார்ந்து வேலைகளை செய்ய ஒரு திருநங்கை சென்றால் இந்த சமூகம் எப்படியெல்லாம் அவர்களை நடத்தும் என்பதற்கு நானே ஒரு உதாரணம் என சொல்லலாம். பல பேர் என்னை பாகுபாட்டோடு பார்ப்பதும், சில நேரங்களில் பாலியல் தொந்தரவுகள் கொடுப்பது என பல விஷயங்களை கடந்து தான் வந்தேன்.

ஆனால் இதை எதையுமே நான் பொருட்படுத்தவில்லை. அந்த சமயங்களில் என்னை போன்ற பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆதரவுக் கரம்  கொடுத்து உதவ வேண்டும் என்றுதான் எனக்கு தோன்றும். ஐ.ஏ.எஸ் ஆகணும்னு எனக்கு ஆசை. அதற்காக இரண்டு முறை தேர்வுகளையும் எழுதி இருக்கிறேன். தேர்ச்சி பெறவில்லை என்றாலும் துவளாமல் எம்.ஏ. சோசியாலஜி படிப்பினை தொலை தூர கல்வி மூலம் படித்தேன்.

படித்து முடித்ததும் சில வருடங்கள் கழித்து எல்லா மக்களுக்கும் அதாவது திருநங்கை சமூகம் மட்டும் இல்லாம ஒடுக்கப்படுகிற எந்த ஒரு பாலினத்துக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகவோ உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு 2013ல் Born2Win என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தேன்’’ என்றவர் அமைப்பின் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.

‘‘2009ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதியை அரசாங்கம் தேசிய திருநங்கை தினமாக அறிவிச்சாங்க. இதே நாளில் 2013 கால கட்டத்தில் இந்தியாவிலேயே முதல்முறையா சிகரம் தொட்ட திருநங்கைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். பல துறைகளில் தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கினேன். கிட்டதட்ட 10 வருடம் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டு வருகிறேன்.

எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள், கல்வியாளர்கள், திருநங்கைகள் வாழ்வதற்காக வேலை செய்பவர்கள் என இதுவரை 174 பேரை இதன் மூலமாக அடையாளம் கண்டு விருது வழங்கியிருக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வரும் திருநங்கைகளுக்கு கல்வி கிடைத்தாலே அவர்களுக்கான தேவைகளை அவர்களே செய்து கொள்வார்கள். இதற்காக 100 பேரை படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ‘மிஸ் தமிழ்நாடு திருநங்கை ராணி’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறேன். இதில் பங்கு பெறும் திருநங்கைகளுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ அந்த துறையில் அவர்களுக்கு பயிற்சியை கொடுத்து வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறேன்.

திருநங்கைகள் பலவிதமான வேலைகளில் ஈடுபடுவதற்காக ஓட்டுநர் பயிற்சிகளையும் கொடுத்தேன். தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக சில திருநங்கைகளுக்கு லோன் வாங்கிக் கொடுத்து தொழில் முனைவோர்களாகவும் அவர்களை மாற்றி இருக்கிறேன். அதே போல சாலையோர உணவகங்களையும் சில திருநங்கைகளுக்கு அமைத்து கொடுத்து சுயசார்பாக வாழுமாறு ஊக்கப்படுத்தியிருக்கிறேன். திருநங்கைகள் பலர் சர்க்கரை நோய்கள், உயர் ரத்த அழுத்தம் பொன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் இந்த நோய் தனக்கு இருக்கிறது என தெரியாமலே பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக வருடத்திற்கு 100 திருநங்கைகளுக்கு முழு உடல் பரிசோதனைகளையும் நடத்துகிறேன். பாலினம் சார்ந்து மக்களை பிரித்து பார்க்காமல் படிக்க விருப்பமிருந்தும் வீட்டுச் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளில் 25 பேரை தேர்ந்தெடுத்து படிக்க வைக்கிறேன். எனக்கு எழுத்து பிடித்தமான ஒன்று. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சில கவிதைகளை எழுதி இருக்கிறேன். எழுதிய கவிதைகளை எல்லாம்  மூன்று கவிதை தொகுப்புகளாக வெளியிட்டேன்.

இதே போல் பல திருநங்கை சாதனையாளர்களை மக்களிடையே அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக காலண்டர் ஒன்றையும் கொண்டு வந்தேன். அதில் பல திருநங்கைகளின் விவரங்களும் தகவல்களும் இடம் பெற்றிருக்கும். திருநங்கை சமூகத்திற்கென இலவச தையல் வகுப்புகள், தங்கும் விடுதிகள், 45 வயதை கடந்த திருநங்கைகளுக்கு என்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் மாதம் 1,500 ரூபாய் ஊக்கத் தொகையையும் வழங்கி வருகிறேன். இந்த வேலைகள் எல்லாமே என்னுடைய மன திருப்திக்காக மட்டும்தான். இதை விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை.

எங்களின் சமூகம் சிறியது என்பதால், என்னைப் பற்றித் தெரிந்து கொண்டு பலர் என்னை தேடி வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். திருநங்கைகள் மட்டுமல்லாது ஒடுக்கப்படுகிற எந்த பாலினமானாலும் அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் போதும். அவர்களுக்கு ஊன்றுகோலாக நான் இருக்க தயார். எல்லா பாலினமும் இங்கு ஏதாவதொரு வகையில் ஒடுக்கப்பட்டுதான் இருக்கின்றனர். இதில் நாம் அவர்களுக்காக என்ன செய்தோம் என்று ஒவ்வொருவரும் யோசிக்க
வேண்டும்’’ என்கிறார் ஸ்வேதா.

மா.வினோத்குமார்