புற்றுநோய் தாக்கினாலும் கருத்தரிக்கலாம்!புற்றுநோய் என்று சொன்னாலே நம்முடைய மனதில் ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் பெரிய அளவில் பரவி வருகிறது. இதில் பல வகை உள்ளன. எந்த ஒரு புற்றுநோயாக இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம். சில புற்றுநோய் முழுமையாக குணமடையக்கூடியதாக இருக்கும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அது நாள் கடந்து திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம்.

குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோயின் தாக்கம் ஏற்பட்டால், அவர்களால் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலை தற்போதுள்ள மருத்துவ வளர்ச்சியால் மாறிவருகிறது’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் டெல்ஃபின் சுப்ரியா.ஒரு பெண் கருத்தரிப்பது என்பது அவள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது.
ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, அவர்களின் மனநிலை வேறாக இருக்கும். ஆனால் அந்த நிலையிலும் அவர்களால் கருத்தரிக்க முடியும் என்று சொல்லும் போது, அவர்கள் தங்களின் பெண்மையினை முழுமையாக அடைந்துவிட்டதாக உணர்வார்கள். அவ்வாறு நோயின் தாக்கம் இருக்கும் பெண்களுக்கு முதலில் என்ன வகையான கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.

அடுத்து கேன்சர் எந்த நிலையில் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிகிச்சை எடுத்து முழுமையாக குணமடைந்துவிட்டார்களா என்று பார்க்க வேண்டும். அடுத்து அந்த பெண் மற்றும் அவளின் கணவரின் வயதினை மனதில் கொண்டு அதன் பிறகு தான் அவர்களால் கருத்தரிக்க முடியுமா இல்லையா என்று முடிவு செய்வோம். அவர்களால் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றால், அதற்கு ஏற்ப அவர்களை தயார் செய்வோம்.

பெண்களில் பெரும்பாலானோர் மார் பகம் மற்றும் மகப்பேறு சம்பந்தமான புற்றுநோயால்தான் பாதிப்படைகிறார்கள். அவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் எல்லா சிகிச்சைகளையும் மேற்கொண்டு குணமான பிறகு ஒரு வருடம் கழித்து கருத்தரிப்பு குறித்து திட்டமிடலாம். அவ்வாறு கருத்தரிக்கும் போது இயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யலாம்.

காரணம், ஒரு சிலருக்கு ஹார்மோன் ரிசெப்டார் பாசிடிவாக இருக்கும். அவர்களால் செயற்கை முறையில் கருத்தரிக்க முடியாது. அவ்வாறு செய்யும் போது கருத்தரிக்க ஹார்மேன்களை
தூண்டும் மாத்திரைகளை பரிந்துரைப்போம். இவை அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதனால் அதற்கு  ஏற்ப பாதுகாப்பான முறையில் டாக்டரின் ஆலோசனையோடு கருத்தரிப்பு மேற்கொள்ளலாம்.

யுட்ரைன் கேன்சர் பொறுத்தவரை அனைத்து பெண்களாலும் கருத்தரிக்க முடியாது. நோய் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்பதை பார்த்த பிறகு தான் அவர்களால் கருத்தரிக்க முடியுமா என்று திட்டமிட முடியும். இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் கர்ப்பப்பையில் ஒரு மாத்திரையினை செலுத்துவோம். அதன் பிறகு ஒரு வருடம் காத்திருப்போம்.

மாத்திரையின் தாக்கத்தால் புற்றுநோயின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்று பயாப்சி மூலம் அறிந்து கொண்டதன் பிறகு, செயற்கை முறையில் கருத்தரிக்க பரிந்துரைப்போம். காரணம், இந்த மாத்திரை மட்டும் அவர்களின் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கிடாது. கருப்பையினை நீக்கினால்தான் இதற்கான சிகிச்சை முழுமை அடையும். அதனால் அவர்களின் கருத்தரிப்பு மற்றும் குழந்தை பிறந்த பிறகு முற்றிலும் கர்ப்பப்பையினை நீக்கிடலாம்.

சர்வைக்கல் கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோய். அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை மட்டும் வெட்டி எடுத்திடுவோம். அதன் பிறகு அவர்கள் கருத்தரிப்பு திட்டத்தில் ஈடுபடலாம். சிலருக்கு கருப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். பெண்களுக்கு கருப்பை மற்றும் ஃபெலோப்பியன் டியூப்கள் இரண்டு இருக்கும். அதில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதை மட்டும் நீக்கிடலாம். அதன் பிறகு கருமுட்டையினை எடுத்து அதை கருத்தரிப்பதற்காக பதப்படுத்தலாம்.

கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு அவங்க கருத்தரிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு, புற்றுநோய் பாதிக்கப்படாத உறுப்புகளில் பரவுவதற்கு முன் அதை மொத்தமாக நீக்கிடலாம். அதனால் மற்ற கருப்பையில் தாக்குதல் ஏற்படுவதற்குள் சீக்கிரம் திட்டமிட்டு குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஐ.வி.எப் முறையில் குழந்தை பெற நினைத்தால், இரண்டு முறைக்கு மேல் அந்த சிகிச்சையினை செய்யக்கூடாது.

கரு வளர ஹார்மோன் தேவை. அதனை மீண்டும் மீண்டும் கருத்தரிக்க பயன்படுத்தும் போது புற்றுநோயின் பாதிப்பு மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அது குணமாகி கருத்தரிப்பவர்கள் உணவு முறையினை ஸ்ட்ரிக்டாக பின்பற்ற வேண்டும்.

மேலும் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவினை சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள், நட்ஸ் வகைகள் என ஆரோக்கியமான உணவினை சாப்பிட வேண்டும். வெளி ஓட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் அவர்களின் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு புரத உணவுகளை சாப்பிடலாம். தொற்று ஏற்படாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் குழந்தை பிறக்கும் வரை முறையான செக்கப்பிற்கு செல்ல வேண்டும். காரணம், மீண்டும் புற்றுநோயின் தாக்கம் உள்ளதா என்று இவர்கள் அவ்வப்போது கவனிப்பில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிகிச்சை முறையினை கைவிட்டு விடக்கூடாது. மற்றபடி சாதாரண கர்ப்பிணிகள் பின்பற்றுவதை இவர்கள் பின்பற்றலாம்’’ என்றார் மகப்பேறு மருத்துவர் டெல்ஃபின் சுப்ரியா.

நிஷா