பிரகாச வாழ்விற்கு வழிகாட்டும் பேச்சாளர்!பெண்கள் படித்து பல துறைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு என தனிப்பட்ட அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்கள் இன்றும் முன்னேறுவதற்கான வாய்ப்பினை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு, முன்னேற்ற வழியினை கடந்த 20 வருடமாக தனது S2S பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற பயிற்சி மையத்தின் மூலம் ஏற்படுத்தி வருகிறார், கோவையை சேர்ந்த பிரியா செந்தில்.

இவர் பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த பலவித பயிற்சிகள் மற்றும் நம்பிக்கை எண்ணத்தினை அவர்கள் மனதில் பதிவு செய்து வருகிறார். இவரின் அனுபவமிக்க பயிற்சிகளால் பலரின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் சிறந்த பலனை அடைந்து வருகிறார்கள். தன்னுடைய பயிற்சி மையத்தினை தொடர்ந்து ‘RP ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் பல சமூக சேவைகளையும் செய்து வரும் இவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய ஆங்கில வகுப்பு ஆசிரியர்தான் பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் எங்களிடம் ஒரு நாள் ‘எதிர்காலத்தில் எதுவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்’ என்ற கேள்வியினை முன்வைத்தார். மாணவிகள் பலரும் டாக்டர், என்ஜினியர் என்றுதான் பதிலளித்தார்கள். நான் மட்டும்தான் பேச்சாளராக வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அதில் மிகவும் உறுதியாகவும் இருந்தேன்.

அதன் பிறகு அதே ஆசிரியர், உணவு இடைவேளையின்போது என்னை அழைத்து ‘நீ சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது. நீ மட்டும்தான் யாரும் சொல்லாத பதிலை கூறினாய். நீ நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய பேச்சாளராக வருவாய். சிறந்த பேச்சாளராக ஆகவேண்டும் என்றால், அதற்கு சரளமாக பேச மட்டும் தெரிந்தால் போதாது, நிறைய நூல்களை படிக்க வேண்டும். அப்போதுதான் உன் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

எந்த ஒரு தலைப்பு சொல்லி பேசச் சொன்னாலும் அது குறித்து அப்போது தான் பேச முடியும். பேசும் திறன் என்பது தமிழ்மொழி நூல்களை மட்டுமே படித்தால் மட்டும் வராது. ஆங்கில மொழி நூல்களையும் படிக்க வேண்டும். உனக்கு பிற மொழி தெரிந்தால் அந்த நூல்களையும் படிக்கலாம். அல்லது மற்ற மொழி நூல்கள் ஆங்கிலம் அல்லது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் என்று எனக்கு ஆலோசனை கூறினார்.

அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னுடைய ஆழ் மனதில் அப்படியே பதிந்து போனது. என் பெற்றோரும் எனக்கு ஊக்கம் அளித்தார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் என் கணவரும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் என்னால் இப்போது ஒரு பேச்சாளராகவும் அதன் மூலம் மற்ற பெண்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகள், ஆண்கள் என அனைவருக்கும் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறேன்’’ என்றவர் இந்த துறையினை தேர்வு செய்ய முக்கிய காரணம் அவருடைய தாத்தா என்கிறார்.

‘‘என் தாத்தா சிறந்த நிர்வாகி. சொல்வன்மை மிக்கவர். அழகாக உரையாடுவார், அனுபவசாலி, ‘எண்ணம்போல் வாழ்’ என்று எனக்கு சொல்லித் தந்தவர். நான் சின்னப் பெண்ணாக இருக்கும் போது பல கதைகள், சுவையான சம்பவங்களை சொல்வார். இன்று நான் பல ஊர்களுக்கு தைரியமாக செல்லவும், துணிச்சலான பெண்மணியாக திகழ மூலகாரணமே அவர்தான்.

அவரைத் தொடர்ந்து என் பெற்றோரும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் கோபம் வராத பொறுமைசாலியாக நான் இப்போது திகழ இவர்கள் மூவரும் முக்கிய காரணம். அப்பா பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து இன்று பல பெரிய பதவிகளில் இருக்கும் திறமைசாலிகளை உருவாக்கிய பெருமைக் கொண்டவர்.

அப்பாவை பார்த்துதான் என் திறமையை நான் வளர்த்துக் கொண்டேன். அம்மா சிறுவயதிலேயே மகாகவி பாரதியார் பாடல்களை எனக்கு சொல்லிக்கொடுத்து என்னை புதுமை பெண்ணாக எதற்கும் அஞ்சாத, சோர்ந்து போகாத தைரியமான பெண்ணாக வளர்த்தார். நான் கோவையில்தான் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்தேன்.

திருமணமான பிறகு என் கணவரின் பணி காரணமாக அமெரிக்கா சென்றேன். அங்கு இருக்கும் போது நேர்மறையான அணுகுமுறை மற்றும் தன்னம்பிக்கை குறித்து கட்டுரைகள் மற்றும் குட்டிக் குட்டி கதைகள் எழுதினேன். என்னுடைய பேச்சாளர் திறமைக்கு அடிக்கல் நாட்டியவர் என் கணவர். அவர்தான் அமெரிக்காவில் நான் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதன் மூலம் லீடர்ஷிப் மற்றும் பர்சனாலிட்டி பயிற்சி குறித்து நன்கு அறிந்து கொண்டேன். அதன் பிறகு இந்தியா வந்த பிறகு என் கணவர் ஐ.டி துறை என்பதால், இங்குள்ள பள்ளியில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அப்போது நானும் அவருடன் பேச ஆரம்பித்தேன். அதன் பிறகு என்னுடைய பேச்சுத் திறமையை அறிந்து என்னை மாணவர்களுக்கு லைஃப் ஸ்கில் குறித்த பயிற்சியினை கொடுக்க  சொன்னார்கள். இதனைத் தனியாக செய்யாமல் ஒரு நிறுவனமாக செயல்படுத்த திட்டமிட்டேன். அப்படித்தான் எங்களின் S2S பர்சனாலிட்டி
டெவலப்மென்ட் பயிற்சி மையம் உருவானது’’ என்றவர் அங்கு அளிக்கும் பயிற்சி திட்டங்கள் பற்றி விவரித்தார்.

‘‘இங்கு நாங்க கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயிற்சிகள் அளித்து வருகிறோம். ‘லைஃப் ஸ்கில்’ குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறேன். மேலும் அவர்களுக்கு பாரம்பரிய பெருமையை உணர வைக்கிறேன். நேர்மை எண்ணங்கள் வளர்ப்பது, திறமையை மேம்படுத்துவது, தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது பற்றிய பயிற்சி வகுப்புகளை பல மாநிலங்களிலும் நடத்தி வருகிறேன். முக்கியமாக இளம்பெண்கள், இளைஞர்களுக்கு கம்யூனிகேஷன் ஸ்கில் பயிற்சியினை அளிக்கிறேன்.

இவை தவிர கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘பிளேஸ்மென்ட்’ குறித்து மூன்று மாத பயிற்சி அளித்து அதற்கான சான்றிதழ்கள் வழங்குகிறேன். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தி வருகிறேன். சாஃப்ட்வேர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லீடர்ஷிப் மற்றும் மேனேஜ்மென்ட் சார்ந்த பயிற்சியும் உண்டு.

இது ஒரு பக்கமிருக்க, மறுபக்கம் சமூக சேவையிலும் நான் ஈடுபட்டு வருகிறேன். தொண்டு நிறுவனம் ஒன்றை இரண்டு வருடங்களுக்கு முன் நிறுவி அதன் மூலம் பெண் குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி வழங்குகிறேன்’’ என்றவர், தன் வாழ்வில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்தார்.

‘‘ஒரு முறை பெண்கள் கல்லூரி ஒன்றில் மூன்று மணி நேரம் பெற்ற தாயின் பெருமை பற்றி சொற்பொழிவு ஆற்றினேன். கைபேசியில் பல மணிநேரம் செலவு செய்வதை தவிர்த்து ஒரு பத்து நிமிடம் நம் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பேசினேன். என் பேச்சை கேட்டு அந்த கல்லூரி மாணவிகள் கைப்பேசியால் தாங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருப்பதாகவும், இனிமேல் அதை தவிர்ப்போம் என்று உறுதிமொழி அளித்தார்கள்.

என்னுடைய பேச்சு மற்றவர்களின் மனதில் ஒரு சின்ன மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதை நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதற்கு காரணம் என் குடும்பத்தினர் அனைவரும் என்று நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்’’ என்றவரின் எதிர்கால லட்சியம் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தன்னுடைய பயிற்சி வகுப்புகள் மூலம் பலன் அளிக்க வேண்டும் என்பதாம்.

விஜயா கண்ணன்