சிங் எனக்கு சிஸ்டர்! வாணி போஜன் உருக்கம்



சின்னத்திரை மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். சினிமாவுக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். ‘ஓ மை கடவுளே’ படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வாணி போஜனிடம் பேசினோம்.

‘‘ஏற்கனவே சின்னத்திரையில் நான் பிரபலம். சினிமாவுக்கு வந்ததுமே அஞ்சு படங்கள் நடிக்கிறேன். இருந்தாலும் ‘ஓ மை கடவுளே’ என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான  படமாக இருக்கும். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்குப் பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக, எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக  ‘ஓ மை கடவுளே’ படம் அமைந்தது.

காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும். ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேன்டஸியைப் புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார். படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நிஜத்தில் நான் கலகல பொண்ணு. ஆனால் படத்தில் என்னுடைய கேரக்டரை மிகவும் ஸட்டிலாக பண்ணவேண்டிய கட்டாயம் இருந்தது.  படத்தில் எனக்கு மேக்கப் இல்லை.  

இந்தப் படம் பேசும் தார்மீக தத்துவ நியாயங்கள் என்னை இந்தப் படம் நோக்கி வெகுவாக ஈர்த்தது. புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை இந்தப் படம் மாற்றித்தரும்.அசோக் செல்வன் மிகச்சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க நடிகர். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்யக் கூடிய நடிகர். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார்.

ரித்திகா சிங்குடன் நடித்தது நல்ல அனுபவம். ரித்திகா தங்கமான பொண்ணு. ஒரு பாக்ஸர் என்பதைக் கடந்து சிறந்த நடிகை. சினிமாவை புரஃபஷனலாக அணுகுபவர். நேர நிர்வாகம், டெடிகேஷன் என்று அனைத்திலும் நேர்த்தியாக இருப்பவர். ரித்திகாவிடம் நான் அடிக்கடி சொல்லும் விஷயம்... ‘உடனிருக்கும் பெண்களைத் தட்டிக் கொடுத்து பாராட்டும் பெண்கள் இவ்வுலகில் மிகவும் குறைவு. ஆனால் நீ எல்லாரும் நல்லா வரணும் என்று நினைப்பது என்னை சிலிர்க்க வைக்கிறது’ என்றேன். பொதுவாக நான் ஒர்க் பண்ணும் படங்களாகட்டும், சந்திக்கும் நண்பர்களாகட்டும், நான் நல்லா வருவேன் என்று சொல்ல வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவேன். அப்படித்தான் எனக்கு ரித்திகா கிடைத்தார்.

நாம் ஃப்ரெண்ட்லியாக இருந்தாலும் நம்முடன் பழகுபவர்களும் ஃப்ரெண்ட்லியாக இருந்தால்தான் ஃப்ரெண்ட்ஷிப் டெவலப்பாகும். அவர்கள் முகம் கொடுத்து பேசவில்லை என்றால் நாமும் பேசுவதை நிறுத்திவிடுவோம். அந்த வகையில் ரித்திகா ரியல் கோல்ட். டவுன் டூ எர்த் எனுமளவுக்கு அவருடைய பழகும்விதம் இருக்கும். தேசிய விருது வாங்கியவர் என்ற பந்தா துளியும் இல்லாதவர்.

நான் அவரைப் பார்த்துக்கொண்டதாக பேட்டிகள் சிலவற்றில் சொல்லியிருந்தார். ஆனால் அவர்தான் என்னைப் பார்த்துக்கொண்டார். எனக்கு உடன்பிறந்த சகோதரிகள் கிடையாது. ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் எனக்கு ரித்திகா சிங் என்ற சகோதரி கிடைத்திருக்கிறார். அவரும் ஏராளமான பேட்டிகளில் என்னை சிஸ்டர் என்று சொல்லி கண் கலங்கி நெகிழ வைத்திருக்கிறார்.

அடுத்து வைபவ்வுடன் ‘லாக்கப்’, விதார்த் படம் வெளியாகவுள்ளது. சினிமாவில் எனக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. ஏராளமான பட வாய்ப்பு வருகிறது. அதில் சில பயோபிக் கதைகள் கூட வந்தது. பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். அதனால் அவசரம் காண்பிக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறேன்.

காதலர் தினம் கொண்டாட்டத்தைப் பற்றி கேட்கிறார்கள். சின்ன வயசில் ‘லவ் யூ’ சொன்ன பசங்க நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை என்பதால் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. காதலர் தினமும் கொண்டாடியதில்லை.  ஆனால் இந்த காதலர் தினம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், நான் நடித்த ‘ஓ மை கடவுளே’ ரிலீஸாகியுள்ளது. இந்த வருடம்தான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளேன். அதனால் 2020 காதலர் தினத்தை வாழ்க்கையில் மறக்கமாட்டேன்.

எனது சினிமா பயணத்தில் என் பெற்றோர் குறுக்கீடு செய்வதில்லை. நாம் சரியான முடிவுகளை எடுத்தால், அவங்க நிச்சயம் சந்தோஷப்படுவாங்க. அவங்களை பெருமைப்படுத்தும் விதமாகவே நான் நடந்து கொள்வேன்’’ என்கிற வாணி போஜன் முகத்தில் நம்பிகை மிளிர்கிறது!

- எஸ்