நான் சிரித்தால்...!



சிரித்து... சிரித்து...

இரண்டு பெரிய ரவுடிகளுக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் தவறுதலாக சிக்கிக்கொள்ளும் ஒரு ஜோக்கரின் கதைதான் ‘நான் சிரித்தால்’.
இந்த உலகத்தில் எத்தனையோ விநோத மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவராக வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அப்படி இவரிடம் என்ன விநோதம் என்றால், சோகம், துக்கம், பயம் ஆகியன வந்தால் அடக்கமுடியாமல் சிரிக்கும் மனநலப் பிரச்சினை கொண்டவர். இதனால் வாழ்க்கையில் இன்பத்தையும் இழக்கிறார். காதலி முதல் வேலை வரை பல இழப்புகளைச் சந்திக்கிறார்.

ஒரு கட்டத்தில் காணாமல்போன நண்பனைத் தேடிச் செல்கிறார். அப்போது  அவர் சந்திக்கும் பிரச்சனை என்ன? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது மீதிக் கதை.ஹிப்ஹாப் தமிழா ஆதி வழக்கம்போலவே துறுதுறுப்புடன் ஓடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார். இந்தப்படத்தில் ரஜினி போல் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார். வில்லன்களிடம் அடிவாங்கி வாயெல்லாம் இரத்தம் வழிய அவர் சிரிக்கும்போது ‘பாட்ஷா’ படத்தின் சின்ன ரீரெக்கார்டிங்கை போட்டு மாஸ் கிளப்புகிறார்கள். சில இடங்களில் ஓவர் வாசிப்பு உள்ளது. அதை குறைத்திருக்கலாம்.

நாயகி ஐஸ்வர்யா மேனன் வழக்கமான காதலி வேடத்தில் வருகிறார். நடிப்பைக் காட்டிலும் அவருடைய இடையழகை நம்பி படம் எடுத்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, முனீஸ்காந்த், சாரா, படவா கோபி ஆகியோரின் கேரக்டர்ஸ் ரசிகர்கள் சிரிப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களும் தங்கள் திறமையால் சில  இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். மிகையில்லாத ஒளிப்பதிவால் கண்களுக்கு இதமளித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் நன்று. பிரேக் அப் பாட்டு, பர்த்டே பார்ட்டி பாட்டு, நான் சிரிச்சா வேற லெவல் ஆகிய பாடல்கள் இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான். பின்னணி இசையையும் பாராட்டலாம்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. ஆனால் க்ளைமாக்ஸில் சரி செய்துள்ளார்கள். ‘கெக்க பிக்கே’ என்கிற குறும்படத்தை இயக்கிய ராணா அதையே ஆதியை நம்பி முழுநீளப்படமாக மாற்றியிருக்கிறார். அதனால் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதை அப்படியே மெயின்டெயின் பண்ணியிருக்கிறார்.