OH MY கடவுளே



செகண்ட் இன்னிங்ஸ்!

பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக இருக்கும் நண்பர்கள் அசோக் செல்வன், ரித்திகா சிங். ஆண், பெண் பேதமின்றிப் பழகும் அவர்கள் சேர்ந்து மதுகுடிக்கும் அளவு நெருக்கம். ஒருநாள் ரித்திகாசிங், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா என்று அசோக் செல்வனிடம் கேட்கிறார். அவர் மீது காதல் இல்லை என்றாலும், சரி ஃப்ரெண்டுதானே என ஓக்கே சொல்கிறார் அசோக்.

திருமணத்துக்கு ஒப்புக்கொண்டபோது என்னவெல்லாம் நடக்கிறது என்பதை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல், ஒப்புக்கொள்ளாவிட்டால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பதையும் சேர்த்து சுவாரசியமாகச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

அசோக் செல்வன் படம் என்றால் நன்றாக இருக்கும் என்ற ரசிகர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இந்தப் படமும் அமைந்திருக்கிறது. நண்பன், காதலன், கணவன் என பல பொறுப்புகளை ஏற்றிருந்தாலும் எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ரித்திகா சிங்கிடம் நெருங்கமுடியாமல் தவிக்கும்போதும், வாணிபோஜனை நெருங்கத் தவிக்கும்போதும் நடிப்பில் வித்தியாசம் காண்பிக்கிறார். பல இடங்களில் எதுவும் பேசாமலே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

ரித்திகா சிங்குக்குப் பொறுப்பான வேடம். அதற்குப் பொருத்தமாக இருக்கிறார். எவ்வளவுதான் நாகரிகமாக வளர்ந்தாலும் மனைவி என்றாகிவிட்டால் மாற்றம் வந்துவிடும் என்பதை வெளிப்படுத்தும்போது நடிப்பில் முழுத் திறமையை வெளிப்படுத்துகிறார். சின்னத்திரையில் கலக்கிய வாணி போஜன் இதில் அறிமுகம். முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதோடு வாணி போஜனுக்கு பொருத்தமான வேடமாகவும் இருக்கிறது.

விஜய்சேதுபதி, ரமேஷ்திலக் ஆகியோரின் வேடங்கள் நன்று. ஷாரா படத்திற்கு தேவையான காமெடியைக் கொடுத்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், கஜராஜ், சந்தோஷ் ஆகியோர் கொடுத்த வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு சிறப்பு. காதலை கலர்ஃபுல்லாக காண்பித்திருக்கிறார். லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. ‘கதைப்போமா’ பாடல் ஒன்ஸ் மோர் ரகம்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இரண்டாவது சான்ஸ் கிடைத்தால் என்ன ஆகும் என்ற கற்பனையை, நேர்த்தியான திரைக்கதையோடும், சுவாரஸ்யமான காட்சிகளோடும் படமாக்கியிருக்கும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, காதல் கதையை காமம் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.மொத்தத்தில்... காதலர்கள் மட்டுமன்றி, ஆல் கிளாஸ் ஆடியன்ஸும் கொண்டாடும் படமாக வெளிவந்துள்ளது இந்த ‘ஓ மை கடவுளே’.