மன்மதராசாவை நினைவிருக்கா?



ஒளிப்பதிவாளராக இருந்து ‘இருவர் உள்ளம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரமேஷ்.ஜி. வனப் பாதுகாப்பை வலியுறுத்தி இவர் இயக்கிய ‘அடவி’ படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ரமேஷ்.ஜியை சந்தித்தோம்.

“ஒளிப்பதிவு மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் பிறந்தது?”

“எனக்கு சொந்த ஊர் மதுரை பக்கத்திலுள்ள சின்னாளப்பட்டி. படிச்சது காமர்ஸ், கம்ப்யூட்டர் என்று சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவை. சினிமாவில் சேரவேண்டும் என்பது நானே எடுத்த முடிவு. வீட்டில் பெரிய எதிர்ப்பு தெரிவிக்காததால் சினிமாவில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற சவாலுடன் சென்னைக்குக் கிளம்பி வந்தேன்.

அப்போது வீடியோ லைப்ரரி என்ற ஒரு விஷயம் புழக்கத்தில் இருந்தது. அங்கு ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அவர் கே.எஸ்.ரவிக்குமார் சாரின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரிடம் உதவி ஒளிப்பதிவாளராக ‘புருஷ லட்சணம்’ படத்தில் சேர்ந்தேன். தொடர்ந்து ‘சக்திவேல்’, ‘நாட்டாமை’, ‘முத்து’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் வேலை செய்துள்ளேன். பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான கண்ணன் சாரிடமும் வேலை செய்துள்ளேன்.

ஒளிப்பதிவாளராக ‘என்னுயிர் நீதானே’ படத்தில் என்னுடைய பயணம் ஆரம்பமானது. தனுஷ் சார் நடித்த ‘திருடா திருடி’ என்னுடைய நான்காவது படம். அந்தவகையில் சுமார் பதினைந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன்.”

“திடீர்னு டைரக்டராகிவிட்டீர்கள் போல் தெரிகிறதே?”

“அப்படியில்லை. நல்ல ஒளிப்பதிவாளருக்குள் எடிட்டிங் நாலெட்ஜ், டைரக்‌ஷன் நாலெட்ஜ் இருக்கும். ஒளிப்பதிவாளராக இருக்கும்போது இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே எடுத்துக்கொடுக்க வேண்டும் என்ற கடமை இருக்கும். ஏனெனில் ஒரு படத்துக்கு டைரக்டர்தான் கேப்டன். அவருடைய எண்ணமும் எழுத்தும்தான் படமாகிறது.

ஆனால் ஒளிப்பதிவாளரே இயக்குநராக இருக்கும்போது நிறைய சுதந்திரம் கிடைக்கும். எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் நினைத்ததை எடுக்கலாம். எனக்குள் டைரக்‌ஷன் பண்ணுவதற்கான திறமை இருப்பதாக நினைத்ததால்தான் டைரக்‌ஷன் பண்ண வந்தேன். அதன்படி வினய் நடித்த ‘இருவர் உள்ளம்’தான் நான் டைரக்‌ஷன் பண்ணிய முதல் படம். அந்தப் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. அடுத்து நந்தா, ரிச்சர்ட் நடித்த ‘கல்லாட்டம்’ என்ற படத்தை இயக்கினேன். இப்போ ‘அடவி’ செய்திருக்கிறேன்.”

“உங்க ‘அடவி’யில் முழுக்க புதுமுகம்தான் போலிருக்கே?”

“இல்லையே.ஏற்கனவே அவர்கள் அறிந்த முகங்கள்தான். வினோத் கிஷன், அம்மு அபிராமி போன்றவர்கள் பிரமாதமான ஆர்ட்டிஸ்ட்கள். இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருந்தால் படத்துக்கான வரவேற்பு பெரியளவில் கிடைத்திருக்கும். ஏனெனில், சமரசங்களுக்கிடையேதான் இந்தப் படத்தை இயக்கினேன். நடிகர்களைப் பொறுத்தவரை நம்ப முடியாத நடிப்பைக் கொடுத்தார்கள். வினோத், பாண்டியன் இவர்களோடு இன்னொரு படம் பண்ணுமளவுக்கு என்னை இம்ப்ரஸ் செய்தார்கள்.”

“திரைத்துறையிலிருந்து பாராட்டு கிடைத்ததா?”

“இயக்குநர் பாரதிராஜா படத்தை வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியை சிலாகித்தார். ஏனெனில், க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகி வில்லனை கட்டையால் அடிப்பது போன்ற காட்சி வரும். அந்தக் காட்சியைக் குறிப்பிட்டு ‘நானே வில்லனை அடிப்பதைப் போன்று உணர்ந்தேன்’ என்றார். அரசியல் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டினார். இவர்களோடு சினிமா துறையில் உள்ள நிறைய நண்பர்கள் பாராட்டினார்கள்.”

“அடுத்து யாரை வைத்து படம் பண்ணுகிறீர்கள்?”

“நிறைய ஸ்கிரிப்ட் முடித்து வைத்துள்ளேன். ஐடி பின்னணியில் ஒரு காமெடி கதை ரெடியாக இருக்கிறது. இன்னொரு படம் ஓவியர் ஏ.பி.தர் நடிப்பதற்காக ரெடி பண்ணி வைத்துள்ளேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.”

“தனுஷுடன் தொடர்பில் உள்ளீர்களா?”

“தனுஷுடன் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘திருடா திருடி’என்று இரண்டு படங்களில் வேலை செய்துள்ளேன். தனுஷ் திறமையான நடிகர் என்றும் பிற்காலத்தில் பெரிய உயரத்தைத் தொடுவார் என்றும் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் தனுஷிடம் சொன்னேன். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் தனுஷின் பாஸ்போர்ட் எரிக்கப்பட்டுவிடும்.

அப்போது எதிர்காலத்தைக் குறித்த கவலையில் தனுஷ் இருக்க வேண்டும் என்பதுதான் சீன். அந்தக் காட்சியில் தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பு… சான்ஸே இல்லை, அதைப் பார்த்துவிட்டுத்தான் தனுஷ் பெரிய நடிகராக வருவார் என்று சொன்னேன். இப்போது அவருடைய வளர்ச்சி அசுரத்தனமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சியே.”

“நீங்க ஒளிப்பதிவு செய்த ‘மன்மத ராசா’ பாடல் ஞாபகமிருக்கிறதா?”

“எப்படி மறக்க முடியும். அந்தப் பாடலை கோலார் தங்க வயலில் எடுத்தோம். மொத்தமே இரண்டரை நாளில் முழுப் பாடலை எடுத்து முடித்துவிட்டோம். அந்தப் பாடல் எடுக்கும்போது தனுஷ் வெறுங்காலில் நடனமாடினார்.

இத்தனைக்கும் அந்தப் பாடலை லாங் ஷாட், ஜூம் ஷாட்டில்தான் எடுத்தேன். ஆனால் சாயா சிங்தான் வெயில், கரடுமுரடான இடத்தில் நடனமாட சிரமப்பட்டார். அவருக்காகவே படப்பிடிப்புக்கு வந்த அம்பாசிடர் காரில் இருந்த ரப்பர் மேட்டை எடுத்து அதன் மீது நின்று ஆடும்படி செய்தோம்.

ரொம்ப ரொம்ப சிக்கனமாக எடுக்கப்பட்ட பாடல் அது.   பேக் கி ரவுண்டில் தீ கொழுந்துவிட்டு எரியவேண்டும். சி.ஜி.பண்ண பட்ஜெட் இல்லாததால் எல்லாத்தையும் சிரமங்களுக்கு மத்தியில் ரியலாக எடுத்தோம். பாடலைப் பார்த்துவிட்டு கே.வி.ஆனந்த், தோட்டாதரணி போன்ற ஜாம்பவான்கள் பாராட்டினார்கள்.

‘திருடா திருடி’ இரண்டாவது பாகம் வருமா என்று கேட்கிறார்கள். இயக்குநர் சுப்ரமணிய சிவா, தனுஷ் என்று எல்லோருடனும் தொடர்பில் இருக்கிறேன். அப்படியொரு வாய்ப்பு வந்தால் இரண்டாவது பாகத்திலும் ஒர்க் பண்ண ஆர்வமாக இருக்கிறேன்.”

- ராஜா