சிவகாசி பேரரசு



டைட்டில்ஸ் டாக் 7

அல்வாவுக்கு நெல்லை. நெசவுக்கு காஞ்சி புரம். கோயிலுக்கு மதுரை. பட்டாசுக்கு சிவகாசி. பேரரசுன்னு சொன்னாலே ஊர் பேரைத்தான் டைட்டிலா வெப்பாருன்னு தமிழ்நாட்டுலே சின்னக் குழந்தைக்கு கூடத் தெரியும்.‘திருப்பாச்சி’,  ‘திருப்பதி’,  ‘திருவண்ணாமலை’, ‘திருத்தணி’, ‘தர்மபுரி’, ‘பழநி’ன்னு ஊர் பெயர்களையே  வரிசையா என்னோட படங்களுக்கு டைட்டில் வெக்கிறேன். என் படங்களிலேயே எனக்குப்  புடிச்ச டைட்டில் ‘சிவகாசி’தான்.

‘திருப்பாச்சி’ வெற்றியடைந்த பிறகு  மறுபடியும் விஜய் சாரை வெச்சி படம் எடுக்க வாய்ப்பு கிடைச்சது. வழக்கமா ஒரு  ஹீரோகிட்டே கதை சொன்னதுமே, படத்துக்கு என்ன டைட்டில்னு கேட்பாங்க. விஜய் சாரிடம் கதை சொல்லப் போனதுமே, எடுத்ததுமே அவர் கேட்ட கேள்வி ‘என்ன ஊர்?’ங்கிறதுதான். ‘சிவகாசி’ன்னு சொன்னதுமே, ‘ரொம்ப பவர்ஃபுல்லான ஊரு  சார்’னு சந்தோஷப்பட்டாரு.

நான் பிறந்தது நாட்டரசன் கோட்டை. இருந்தாலும் சிவகாசி மேலே எனக்கு எப்பவுமே ஸ்பெஷலான அட்டாச்மென்ட். எனக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டு மக்கள் பெரும்பாலானோருக்கு குட்டி ஜப்பான் சிவகாசியை ரொம்பவே பிடிக்கும். உழைப்பாளிகள் நிறைஞ்ச ஊரு. நாம கொளுத்தற ஒவ்வொரு தீக்குச்சியும் அங்கேதான் தயாராகுது.

காசி, இந்தியாவோட புண்ணியத் தலம். தீபாவளி அன்னிக்கு காசி தீர்த்தத்தை நாம குளிக்கிற தண்ணியிலே சேர்த்து ‘கங்காஸ்நானம்’ பண்ணுற வழக்கம் நமக்கு இருக்கு. அதே தீபாவளிக்கு சிவகாசி பட்டாசுகளில்தான் குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை குதூகலம் அடையுறாங்க. நம்மோட ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக ஒரு வருஷம் முழுக்க இரவும் பகலுமா உழைக்கிற சிவகாசி மக்களோட தியாகத்தை என்னன்னு மெச்சுறது? தீபாவளி சீஸனில் பட்டாசு சத்தத்தையோ, ஒளிவெள்ளத்தையோ காணும்போது மானசீகமா சிவகாசி தொழிலாளர்களுக்கு நன்றி சொல்ல நான் மறப்பதில்லை.

உயிரைத் துச்சமா மதிச்சி ஒரு நாடே ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியில் திளைக்குறதுக்கு ஒரு வருஷம் முழுக்க ஒரு ஊர் உழைக்குதுன்னா, அதென்ன சாதாரண தியாகமா? ஆபத்தான வேலையில் ஈடுபட்டிருக்கும் என்னோட சிவகாசி சகோதரர்கள் எப்போதாவது விபத்துகளில் மாட்டிக்கிறப்போ என் மனசு கிடந்து அல்லாடுது. நாட்டுலே எவ்வளவோ கண்டுப்பிடிப்புகள் நடைமுறைக்கு வந்திருக்கு. பட்டாசுத் தொழிலாளர்கள் பாதுகாப்பா வேலை செய்யுறதுக்கு நம்மாலே எதையும் செய்ய முடியலையேன்னு வருத்தமா இருக்கு.

திருட்டு டிவிடியாலே சினிமாக்காரங்க எப்படி கஷ்டப்படுறோம்னு எனக்குத் தெரியும். அதே மாதிரிதான் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி நம்மோட சிவகாசி தமிழன் தரமான பட்டாசுகளை தயாரிச்சு தர்றான். ஆனா, விலை மலிவுன்னு சொல்லிட்டு முறையா வரி கூட கட்டாத பாதுகாப்பாற்ற சீனத்துப் பட்டாசு ரகங்கள் சில காலமா நம்ம நாட்டுக்குள்ளே நுழைஞ்சிக்கிட்டிருக்கு.

அதையும் நாலு பேர் வாங்கி வெடிக்கிறான் என்பது கொஞ்சமும் நன்றியற்ற தன்மை. நம்ம நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை நாமே அவமரியாதை செய்யக்கூடிய நடவடிக்கை. அடுத்த தீபாவளியின் போது தயவு செய்து சீனப்பட்டாசை ஏறெடுத்தும் பார்க்காதீங்கன்னு தனிப்பட்ட முறையில் கேட்டுக்கறேன்.

பட்டாசுக்கு மட்டும்தான் சிவகாசி பேர்போனதுன்னு நெனைக்காதீங்க. பிரிண்டிங் தொழிலில் அவங்க கில்லாடி. நான் சின்ன வயசுலே எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு ஒட்டப்பட்ட பிரும்மாண்டமான போஸ்டர்களை ஆச்சரியமா பார்ப்பேன். ஓரத்துலே சின்னதா அதை பிரிண்ட் பண்ண பிரெஸ்ஸோட பேரை போட்டிருப்பாங்க. பெரும்பாலும் சிவகாசியில்தான் அதெல்லாம் பிரிண்டிங் ஆகியிருக்கும். அச்சுத் தொழில் துல்லியத்தில் அடிச்சுக்க சிவகாசியை விட்டா ஊரில்லை.

உழைப்பு.... உழைப்பு..... உழைப்பை விட்டா அங்கிருக்கிற மக்களுக்கு வேற எதுவுமே தெரியாது.சிவகாசி மேலே இவ்வளவு மரியாதை வெச்சிருக்கிற நான் முதன்முதலா அந்த ஊருக்கு போனது ‘சிவகாசி’ படம் ரிலீஸ் ஆனபோதுதான். தியேட்டர் ரவுண்ட்ஸுக்காக போன நானும், என்னோட நண்பர்களும் ஊரைச் சுத்திப் பார்த்தப்போ, ஏற்கனவே அந்த ஊர் மீதிருந்த மதிப்பு பன்மடங்கானது.

தங்களோட ஊர் பேரை சினிமாவுக்கு டைட்டிலா வெச்சி எடுத்தவன்னு சொல்லி என்னை அவ்வளவு பாசமா கொண்டாடினாங்க. தியேட்டர் வாசல்களில் எல்லாம் எனக்காக ஸ்பெஷலா வாண வேடிக்கை நடத்தி, சிகப்புக் கம்பளம் விரிச்சி வரவேற்றாங்க.

எப்பவும் வேலை வேலைன்னு இருக்கிற அவங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். அந்த உழைப்பாளிகள் உழைத்த களைப்பு தீருவதற்குத்தான் நான் சினிமா எடுக்கணுமே தவிர, என்னோட கலைத்தாகத்தை தீர்த்துக்கவும் அவார்டு வாங்குறதுக்கு ஆசைப்பட்டும் சுயநலமா படம் எடுக்கக்கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணினேன். எப்பவுமே நான் ஜனரஞ்சகமா படமெடுக்குறதுக்கு காரணம், இந்த பாட்டாளிகள்தான்.

எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா
(தொடரும்)