கொலையும் செய்வாள் பத்தினி!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 30

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தக் காட்சியை நம்முடைய சினிமாக்களில் காண முடிவதில்லை. ஆனால், அதற்கு முன்பாக ஒரு முப்பது வருட தமிழ் சினிமாவில் கோலோச்சிய சிச்சுவேஷன் இது.கொடுமைக்காரன் வில்லன். கிளைமேக்ஸில் ஹீரோவோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பான். கடுமையான சண்டைக்குப் பிறகு வில்லனைக் கொல்ல ஹீரோ கத்தியைத் தூக்குவான்.

ஹீரோ வெட்டுவதற்கு முன்பாகவே வில்லன் வாயில் இரத்தம் வழிய அப்படியே மரம் மாதிரி வீழ்வான். அவனை யார் கொன்றது என்பதை சஸ்பென்ஸாக அப்படியே ஷாட்டை ஃப்ரீஸ் செய்து காட்டுவார்கள்.

அடுத்த நொடியிலேயே இரத்தம் வழியும் கத்தியோடு அவனுடைய மனைவியோ அல்லது காதலித்து கைவிடப்பட்ட காதலியோ நிற்பாள். “இந்தப் பாவியைக் கொன்னு உன்னோட வாழ்க்கையை நீ ஏன் கெடுத்துக்கணும்?” என்று ஹீரோவிடம் சொல்லிவிட்டு கைகளில் விலங்கோடு போலீஸ் ஜீப்பில் ஏறுவாள்.

கதறக் கதற இந்தக் காட்சியை நம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் ரொப்பித் தள்ளிவிட்டார்கள் என்றாலும், இன்றும் ஹாலிவுட்டில் ஒர்க்அவுட் ஆகும் கதை இது.கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ பிளான் போட்டுத் தூக்கும் கதைக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு.ஐஸ்வர்யா ராய் நடித்த ‘Provoked’ என்கிற ஆங்கிலப்படம் நல்ல உதாரணம்.

கொடுமைக்கார கணவனை அப்பாவி மனைவி, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் போட்டுத் தள்ளி விடுகிறாள். சட்டத்திடம் தன்னுடைய நிலைமையை அவள் எடுத்துச் சொல்லி அந்த குற்றத்தில் இருந்து மீள்வது என்கிற கதை. நிஜமாகவே லண்டனில் நடந்த ஒரு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் பாராட்டுகளை அள்ளியது.

தினந்தோறும் செய்தித்தாள்களில் குறைந்தபட்சம் ஒரு கள்ளக் காதல் கொலையையாவது வாசித்துத் தொலைக்கிறோம். கல்லை மண்டையில் போட்டு சாகடிப்பது, விஷம் வைத்து தூக்குவது, கள்ளக் காதலனின் நண்பர்களை வைத்து அப்படியே புருஷனை எரிப்பது என்று கற்பனைக்கே எட்டாத டிசைன் டிசைனான கொலைகள் நடக்கின்றன. ஆனால், இவை எதுவுமே நம் சினிமாக்களில் கதை ஆவது அபூர்வமாகத்தான் நடக்கிறது.

ஒரு கணவன் தன் மனைவியையோ, ஒரு மனைவி தன் கணவனையோ கொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு காரணமும் சினிமாவுக்கு கதை எழுத விரும்புபவனுக்கு ஒவ்வொரு கதை. ஃபேமிலி த்ரில்லர் ஜானரில் கதை எழுத விரும்புகிறவர்கள் தவறவிடக்கூடாத சிச்சுவேஷன் இது.

(கதை விடுவோம்)