கமலையே சிரிக்க வெச்சிட்டோம்! ஜிப்ரான் சொல்கிறார்



விருதுகளும், பாராட்டுகளுமாக 2011ல் ‘வாகை சூட வா’ படத்தில் அறிமுகமானபோதே சிகப்புக்கம்பள விரிப்பு வரவேற்போடு வந்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். இதுவரை கிட்டத்தட்ட பதினைந்து படங்களுக்கு இசையமைத்திருப்பவர், கைநிறைய கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் படங்கள் வைத்திருக்கிறார்.

‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என்று கமல்ஹாசன் படங்களில் ஹாட்ரிக் அடித்திருப்பவர், அடுத்து ‘விஸ்வரூபம்-2’ படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் ஹீரோ ஆகும் காலம் இது. ஜிப்ரானோ ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார்.ஜிப்ரானை அவரது ரெக்கார்டிங் தியேட்டரில் பிடித்தோம்.

“ஏன் திடீருன்னு தயாரிப்பு ஆசை?”
“ஆக்சுவலா இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் முதலில் மியூசிக் டைரக்டர்தான். கே.ஆனந்தன் என்பவர்தான் அதிகாரபூர்வமான தயாரிப்பாளர். இந்தப் படத்தோட டைரக்டர் அப்பாஸ் அக்பர் என்னோட நீண்டகால நண்பர். சிங்கப்பூரில் படிக்கிறப்போ எனக்கு பரிச்சயமானவர். அவரோட நட்புக்காகத்தான் இந்தப் படத்துலே நான் கமிட் ஆனதே.

ஒரு கட்டத்தில் சூழல் காரணமா நானும் இந்தப் படத்தோட தயாரிப்பாளரா ஆக வேண்டியதாயிடிச்சி. கிட்டத்தட்ட ஆறு வருஷம் இந்தக் கதையை சுமந்துக்கிட்டு அலைஞ்சாரு எங்க இயக்குநர் அப்பாஸ். அவரு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை அவரை பேட்டியெடுத்து தெரிஞ்சுக்கங்க.”
“படத்தோட கதை?”

“சென்னையிலிருந்து வேலை தேடி சிங்கப்பூர் செல்லும் இளைஞன் அங்கு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்பதுதான் படத்தோட ஒரு வரிக்கதை. அதை சீரியஸாக சொல்லாமல் ஜாலியாக சொல்லியிருக்கிறோம். பாண்டியராஜன் சார் நடித்த ‘கதாநாயகன்’ படம் போல் விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் கதை நகரும். முக்கால்வாசி படப்பிடிப்பை சிங்கப்பூரில் நடத்தினோம்.”
“நட்சத்திரங்கள்?”

“கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலசந்திரன், சிவகேஷவ், ‘கவிதை குண்டர்’ எம்.சி.ஜாஸ் உள்பட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் ஆறு மாதங்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம்.”
“படத்தை வித்தியாசமாக புரமோஷன் செய்திருக்கீங்களாமே?”

“குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியாக படம் வந்துள்ளது. இந்தப் படத்தை இன்டர்நேஷனல் லெவலில் விளம்பரப் படுத்தியிருக்கிறோம். சென்னையில் இருந்து மியான்மர், தாய்லாந்து, மலேஷியா வழியாக காரிலேயே சிங்கப்பூருக்கு சென்றோம். கிட்டத்தட்ட காரிலேயே இரண்டு மாதம் டிராவல் பண்ணினோம். விசா போன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் காருக்குள்ளேயே பல மணி நேரம் டிராவல் பண்ணியதால் கால்கள் வீக்கம் அடைந்தது. ஜீரணக் கோளாறு உள்பட பல உடல் உபாதைகள் ஏற்பட்டது. பல பிரச்சினைகளை கடந்துதான் இந்தப் படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது.”

“தொடர்ந்து தயாரிப்பீர்களா?”
“என்னுடைய முழு ஆர்வமும் இசையில்தான் இருக்கிறது. நடிப்பதைப் பற்றியும், படம் தயாரிப்பதைப் பற்றியும் யோசித்ததில்லை. ஏற்கனவே சொன்னமாதிரி சூழ்நிலை காரணமாகத்தான் நானும் இந்தப் படத்தின் தயாரிப்பாளராக மாறினேன்.”
“பாட்டெல்லாம் எப்படி?

“ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் வந்துள்ளது. ஒரு பாடலை வேகமாகப் பாட வேண்டும். யாரை பாட வைக்கலாம் என்று யோசித்தபோது ஆர்.ஜே.பாலாஜி நினைவுக்கு வந்தார். அவரும் ஏதோ டூயட் பாடலாக இருக்கும் என்ற ஆர்வத்தில் உடனே ஸ்டூடியோ வந்தார். பாடல் வரியை பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க்காகி, அப்புறம் பாடிக் கொடுத்தார்.”
“கமல் என்ன சொன்னார்?”

“சமீபத்தில் படத்தின் டிரைலரை கமல் சாருக்கு காண்பித்த போது அடக்கமுடியாமல் சிரித்தார். அவர் ஏன் அப்படி சிரித்தார் என்பது சஸ்பென்ஸ். ஏன்னா, கதை அப்படி. நீங்களும் படம் பார்த்துவிட்டு சிரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.’’

- சுரேஷ்ராஜா