தானா சேர்ந்த கூட்டம்



சுத்தி வளைச்சி ரெய்டு அடிக்கிறாங்க!

சிபிஐ குழு ஒன்று ஆங்காங்கே ரெய்டு அடித்து ஏராளமான கருப்புப் பணத்தை பறிமுதல் செய்கிறது. பின்னர்தான் உண்மை தெரிகிறது. அந்தக் குழுவே ஒரு போலி. இந்தப் போலி சிபிஐ கும்பலைக் கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. போலியாக ரெய்டு அடித்தவர்கள் யார், அவர்களது நோக்கம் என்ன என்பதுதான் பரபரப்பான திரைக்கதை. இந்த விறுவிறு கதையை ரகளையான காட்சிகளால் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

போலி சிபிஐ ஆக இருந்தாலும் நிஜம்போல கெத்து காட்டுகிறார் சூர்யா. நடை, உடை, பாவனைகளில் கூடுதல் அக்கறை செலுத்தியிருக்கிறார். இண்டர்வியூ செய்து அவமானப்படுத்தும் உயரதிகாரியிடம் “எளியோரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் வந்து அடிக்குதோ இல்லையோ, எவனாவது வந்து செம சாத்து சாத்துவான்’’ என்று பேசி கைதட்டல்களை அள்ளுகிறார். “நாம எல்லாரும் சேந்து புடுங்குனா, எதையாவது புடுங்கலாம் சார்’’ வசனமும் அதே ரகம்.

சில சீன்களில் மட்டுமே வந்து போகும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். கண்டிப்பான, நேர்மையான அதிகாரியாக வந்து கலக்குகிறார் கார்த்திக். “ஏங்கிட்டயே நவரச நடிப்பா?” என்று கேட்கும்போது கைதட்டல் பெறுகிறார். போலி சிபிஐ கும்பலை கண்டறியும் நிஜ சிபிஐயாக கார்த்திக்கின் நடிப்பு மிடுக்கு.

ஐந்து குழந்தைகளுக்கு அம்மாவாக, நடுத்தர குடும்பப் பெண்ணாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் பின்னுகிறார். நிஜ அதிகாரியிடம், “ஜான்சி ராணி சிபிஐ’’ என்று சொல்லும்போது கிளாப்ஸ் பெறுகிறார்.

செந்தில் செய்யும் பெட்ரோமாக்ஸ் காமெடி ரசிக்கவைக்கிறது. கலையரசன், நந்தா, சத்யன், ஆனந்த்ராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் நிறைவைத் தருகின்றன. கொஞ்ச நேரம் வரும் யோகி பாபு  சிரிக்க வைக்கிறார். தம்பி ராமையா, சுரேஷ் மேனன், பிரம்மானந்தம் ஆகியோர் தங்களது முத்திரை நடிப்பால் மனம் கவர்கிறார்கள்.

அனிருத் இசையில் ‘சொடக்கு மேல...’ ஒன்ஸ்மோர் ஆர்ப்பாட்டம். ‘தானா சேர்ந்த கூட்டம்’ பாடலில் வேட்டி சட்டை அணிந்து ரம்யா கிருஷ்ணன் ஆடுவது அழகு. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் ஒளிப்பதிவு சிறப்பான பணியைச் செய்திருக்கிறது.

“படிக்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறது தற்கொலை இல்லை, கொலை’’, “எவ்வளவு உயரங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு உயர்கிறோம் என்பதுதான் முக்கியம்’’ என அங்கங்கே அழுத்தமான வசனங்களுடன்  சமூகச் சாடல்களுடன் கலகலப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.