குஷ்பூவின் தாலி!



இசைஞானி பவள விழா கொண்டாட்டம்

‘சின்னதம்பி’ படத்தில் குடும்பத்தினருக்கு தெரியாமல் பிரபுவை கல்யாணம் செய்துகொள்வார் குஷ்பூ. தன்னுடைய தாலியை மறைத்து வைத்திருப்பார். இது தெரியாத குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, குஷ்பூ மறுப்பார். இந்நிலையில் பிரபு சிச்சுவேஷன் சாங்காக ‘குயிலைப் புடிச்சி கூண்டிலடைச்சு’ பாடுவார். பாட்டு முடிந்ததுமே குஷ்பூ ஓடிவந்து, பிரபுவை கட்டிப் பிடிக்க தாலி வெளியே வந்துவிழும். மொத்தக் குடும்பமும் அதிர்ச்சி அடையும்.

தாலி வெளியே விழும் காட்சியை இசையின்றி மவுனமாக விட்டுவிட்டார் இளையராஜா. படத்தின் முக்கியமான காட்சியில் இசையில்லையே என்று இயக்குநர் பி.வாசுவுக்கு வருத்தம். இதுபற்றி ராஜாவிடம் கேட்டபோது, “அந்தக் காட்சிக்கு மவுனம்தான் இசை. தியேட்டரில் போய் ஆடியன்ஸ் ரியாக்‌ஷனைப் பார்த்துட்டு வா” என்றார்.

படம் வெளியான பின்பு தியேட்டரில் இந்தக் காட்சிக்கு பெண் ரசிகர்களிடமிருந்து ‘உச்’ கொட்டும் சப்தம் பலமாக எழுந்தது. ‘படம் பெரிய ஹிட்’ என்கிற நம்பிக்கையே வாசுவுக்கு அப்போதுதான் ஏற்பட்டது. உடனே ஓடிப்போய் இளையராஜா முன்பாக நின்றார். “என்னப்பா... தாலி வெளியே விழுகிற காட்சியிலேயே தாய்க்குலங்கள் ‘உச்’ கொட்டியிருப்பாங்களே?” என்று ராஜா கேட்க, கண்கலங்க அப்படியே ராஜாவை கட்டி அணைத்துக் கொண்டாராம் வாசு.

- கீனா