ராகதேவ புராணம்!



இசைஞானி பவள விழா கொண்டாட்டம்

இணையத்தில் இன்று இளையராஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தமிழர்கள் பரந்துவாழும் உலகெங்கும் நம் பண்ணைப்புரத்து இசை ஆளுகிறது. சமூக வலைத்தளங்களில் அவர் குறித்த செய்திகளை நூற்றுக்கணக்கானோர் தினம் தோறும் எழுத, பல்லாயிரக் கணக்கானோர் வாசித்து பரவசப்படுகிறார்கள்.

மதுரையைச் சேர்ந்த சார்லஸ் என்கிற இசைஞானி ரசிகர், இளையராஜா பற்றி ஊடகங்களில் வந்த அரிய தகவல்களை மிகவும் அழகாகத் தொகுத்து ‘புதிய காற்று’ என்கிற வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். அவற்றில் சில :

* இன்றளவும் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நாசரின் ‘அவதாரம்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை உருவாக்க இளையராஜா எடுத்துக் கொண்டது வெறும் அரைமணி நேரம்தான்.

* மணிவண்ணன் இயக்கிய ‘நூறாவது நாள்’ படத்தில் பாடல்களே இல்லை. திரில்லர் படமான இதில் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்தின் மொத்த ரீ-ரெக்கார்டிங்கையும் அரை நாளிலேயே செய்து முடித்தார் இளையராஜா.

* பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் - தேவி நடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’, நாற்பது ஆண்டுகள் கழித்தும் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் திரைப்படம். பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் ஜீவநாடியாக அமைந்தது. இந்தப் படத்தின் ரீ-ரெக்கார்டிங்குக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் செலவானது. மூன்றே நாளில் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை வைத்துக்கொண்டு இந்த சாதனையை செய்து முடித்தார் ராஜா.

*  எல்லோரும் பாடலுக்கான இசையை ஒரு கருவி மூலம் வாசித்துத்தான் காட்டுவார்கள்.  ஆனால் ராஜா மட்டும்தான் பாடலுக்கான இசையை நோட்ஸ் எடுத்து இசைக்கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

* அமிர்தவர்ஷிணி என்ற மழையை வரவழைக்கும் ராகத்தை ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாட்டுக்காக பயன்படுத்தினார் இளையராஜா. பாட்டு ரெக்கார்டிங் ஆனதுமே, கோடையிலும் மழை பெய்தது என்பது வியப்புக்குரிய செய்தி.

* சர்வதேச இசை நுட்பமான counterpoint  யுக்தியை  முதன் முதலில் இந்தியாவில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்  இளையராஜாதான். உதாரணத்திற்கு பல பாடல்கள் இருந்தாலும் ‘சிட்டுக்குருவி’ படத்தில் இடம்பெற்ற ‘என் கண்மணி’ என்கிற பாடலைச் சொல்லலாம். வேறு இந்திய இசையமைப்பாளர்கள் யாரும் அதற்கு முன்னர் இந்த நுட்பத்தை பயன்படுத்தியதில்லை.

*  உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் செய்து பார்த்திராத பரிசோதனையை ‘ஹேராம்’ படத்துக்காக செய்து பார்த்தார் இளையராஜா. வேறு இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து படமாக்கப்பட்ட பாடலின் சவுண்ட் ட்ராக்கை நீக்கிவிட்டு பாடல் காட்சியில் இடம்பெற்ற பாத்திரங்களின் உதட்டசைவு, உடலசைவு , காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமான புதிய இசையை உருவாக்கி அதை வெற்றிக்கனியாக்கி, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

* ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் ரெக்கார்டிங்கின்போது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு குரல் சரியில்லை. எனவே, பாடல் வரிகளை விசிலாலேயே டியூன் செய்து பதிவு செய்து வைத்துக் கொண்டார் ராஜா. பின்னர், எஸ்.பி.பி.யை தனியாக டிராக் பாடவைத்து பாடலில் சேர்த்து அமர்க்களப்படுத்தினார்.

* ‘கரகாட்டக்காரன்’ படத்தின் கதையைக் கேட்காமல் வெறும் சூழல்களை வைத்தே அருமையான சூப்பர்ஹிட் பாடல்களை வழங்கினார் இசைஞானி.

* ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாட்டில் மோகனும், சுகாசினியும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பாடல் முழுக்க ஒலிக்கும் அவர்களது ‘ஷூ’ சப்தத்தை தொடையில் கைகளைத் தட்டியே உருவாக்கினார் இளையராஜா.

* இந்தியாவில் முதன்முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வாங்கியவர் இளையராஜாதான். மலையாளப்படமான ‘பழசிராஜா’வுக்காக அவர் பெற்ற விருது இது.

* தமிழில் முதன்முறையாக படத்தின் பாடல்களை ஸ்டீரியோ ஒலிப்பதிவு முறையில் ‘ப்ரியா’ படத்துக்காக இளையராஜா செய்தார். அப்போது திரையரங்குகளிலேயேகூட ஸ்டீரியோ அமைக்கப்படவில்லை. ரெக்கார்டுகளில் அந்த ஒலித்துல்லியத்தில் பாடல்களைக் கேட்டு ரசிகர்கள் வியப்படைந்தனர்.

*  இசைஞானி இசையமைத்த பாடல்களை வாங்கி, அதன் பிறகு அந்த பாடல்களுக்கு ஏற்ப கதை எழுதி ஹிட்டடித்த இரு படங்கள், ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அரண்மனைக் கிளி’.

* ‘புன்னகை மன்னன்’ படத்துக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி இசையமைத்தார் ராஜா. அதற்கு முன்பாக இந்தியாவில் யாரும் இப்படிச் செய்ததில்லை.

* ‘பஞ்சமுகி’ என்றொரு புதிய ராகம் கண்டறிந்து கொடுத்தவர் ராகதேவன். ஆனால், அந்த ராகத்தில் அவர் சினிமா பாடல் இசைத்ததில்லை, ரகசியமாக வைத்துள்ளார்.

* ஆரம்பத்தில் கிடார், தபேலா கலைஞர்களுடன்  ஆர்மோனியம் கொண்டு  பாடலுக்கு  டியூன் போட்டவர் காலப்போக்கில்  கண்களை மூடி சிந்தனை செய்து  கற்பனையில் இசை வடிவங்களை செதுக்க ஆரம்பித்துவிட்டார். கற்பனை சக்தியிலேயே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டார். ஹார்மோனியம் கூட இல்லாமல் இசைக் குறிப்பு எழுதும் இந்த இசை ஆற்றல் இளையராஜாவைத் தவிர இந்திய இசையமைப்பாளர்கள் யாரிடமும் இல்லை.

*  இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்ல. நல்ல கவிஞரும் கூட. திரைப்படங்களில் அவ்வப்போது ஹிட் பாடல்களை எழுதி வியக்க வைப்பார். காவியக் கவிஞர் வாலி அவர்களுக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர் இளையராஜா. ‘வெண்பா எழுதுவதில் ராஜாதான் எனக்கு குரு’ என்று வாலி அடிக்கடி சொல்வார்.