பியார் பிரேமா காதல்



இது நியூ ஜென ரேஷன் லவ்வு!

மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஹரீஷ் கல்யாணுக்கு தன்னுடன் வேலை செய்யும் ஹைகிளாஸ் பருவச் சிட்டு ரைசா மீது மையல். எதிர்பாராவிதமாக ரைசாவே ஹரீஷுடன் கை குலுக்குகிறார். இருவருக்குமான நெருக்கம் படுக்கை வரை நீள்கிறது.

திடீர் அதிர்ச்சியாக ரைசா, தனக்கு காதல் கல்யாணம் மீதெல்லாம் பெரிதாக உடன்பாடு கிடையாது என்கிறார். ஒரு கட்டத்தில் லிவிங் டுகெதராக வாழலாம் என்று சாய்ஸ் கொடுக்கிறார். ரைசாவின் இந்த டீலுக்கு முதலில் தலையாட்டினாலும் குடும்பத்துக்காக முரண்டு பிடிக்கிறார் ஹரீஷ். முப்பொழுதும் கட்டிப்பிடித்து காதல் வளர்க்கும் இந்த ஜோடி வாழ்க்கையில் இணைந்ததா பிரிந்ததா  என்பதே மீதிக் கதை.

வீட்டுக்கு அடங்கி படிப்பு, வேலை என்று இருக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஹரீஷ். பக்கத்து கட்டிடத்தில் வேலை செய்யும் ரைசாவைப் பார்ப்பதற்காக அலைகிற காட்சிகளிலும், அவரே பக்கத்து இருக்கைக்கு வந்ததும் தடுமாறும் காட்சிகளிலும் வெரைட்டி காண்பித்துள்ளார். காதலுக்கும் தாய்ப்பாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.

ரைசா படத்தின் ஆகச் சிறந்த பலம். சரக்கு அடிப்பது சப்பை மேட்டர் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நாகரீகப் பெண்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார். உடலழகை மட்டும் காட்டி ரசிகர்களை மகிழ்விப்பதோடு நடிக்கவும் செய்திருக்கிறார்.முனீஸ்காந்த், ஆனந்த்பாபு, ரேகா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவில் இளமைத் துள்ளல். காதல் கதை என்றால் யுவனுக்குச் சொல்ல வேண்டுமா? நல்ல மெட்டுகளால் மெச்சிக்கொள்ளுமளவுக்கு இன்னிசை விருந்து படைக்கிறார். பாடல்கள் மூலம் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும் யுவன் பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார்.

இளமை துள்ளும் காதலோடு இன்றைய இளம்பெண்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் இளன். கட்டில் காட்சிகளைக் காட்டி ரசிகர்களைக் கட்டிப்போடுவதால் இளைஞர்கள் படை தியேட்டருக்கு நடையைக் கட்டுவது உறுதி.