அப்பாவின் கனவுக்காக சினிமாவுக்கு வந்த மகன்!முதல் படத்திலேயே சர்வதேசத் தரம் கைகூடியிருக்கிறது இயக்குநர் லெனின்பாரதிக்கு. அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, இதுவரை பரவலாக அறியப்படாத மலையும், மலையைச் சார்ந்த மக்களுடைய வாழ்க்கையையும் பேசு பொருளாக்கி இருக்கிறது.
இயக்குநர் ஆகிவிட்டாலும், இன்னும் தன்னுடைய ஏழ்மையை விரட்ட முடியாத எளிமையான வாழ்க்கைதான். மக்கள் இயக்குநர் லெனின் பாரதியை வடபழனியில் ஒரு டீக்கடையில் சந்தித்தோம்.

“படத்துலே வர்ற லொகேஷனெல்லாம் எங்க ஊருதான். தேனியிலதான் அஞ்சாவது வரை படிச்சேன். அப்பா ரங்கசாமிக்கு சினிமா என்பது கனவு. அவரோட பேரைத்தான் என் முதல் படத்தோட ஹீரோவின் கதாபாத்திரத்துக்கு வெச்சேன். இசைஞானி இளையராஜாவும் அவரும் வகுப்புத் தோழர்கள். சினிமாவில் சாதிக்க அப்பா சென்னைக்கு குடும்பத்தோட வந்தாரு.

பள்ளிப் படிப்பை இங்கேதான் தொடர்ந்தேன். வேளச்சேரி குருநானக் காலேஜில் பி.ஏ. படிச்சேன். குடும்பச்சூழல் காரணமாக அப்பாவால் சினிமாவில் தொடர்ந்து டிராவல் பண்ண முடியலை.

உண்மையைச் சொல்ல ணும்னா, எனக்கு சினிமா மீது பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ஆனாலும், அப்பாவோட கனவை மகனா நானாவது நனவாக்கணுமேன்னுதான் டிகிரி முடிச்சதுமே சினிமாவுக்கு வந்தேன். அதுவுமில்லாமே நம்மோட கருத்துகளை சொல்லுறதுக்கு வலிமையான ஊடகம் இது என்பதும் இன்னொரு காரணம்” என்று தன்னுடைய அறிமுகத்தை எளிமையான வார்த்தைகளில் வெளிப்படுத்தினார் லெனின் பாரதி.

“அப்பாவுக்கு கிட்டாத வாய்ப்பு மகனுக்கு எப்படி கிடைத்தது?”

“வந்ததுமே வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுடுமா என்ன? உதவி இயக்குநரா டிஸ்கஷன், ஷூட்டிங் வேலைகள்னு கிடைச்சதையெல்லாம் செஞ்சிக்கிட்டிருந்தேன். நண்பர் ஞானா மூலமாக இயக்குநர் அமுதேஷ்வரிடம் ‘சத்யமூர்த்தி’ என்கிற படத்தில்தான் முதலில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். மம்மூட்டி, ரம்யாகிருஷ்ணன்னு நட்சத்திரங்கள் நிறைஞ்ச படம். துரதிருஷ்டவசமா அந்தப் படம் வெளிவரலை. அமுதேஷ்வர்தான் சமீபத்தில் வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தை பின்னர் இயக்கினார்.

‘சத்யமூர்த்தி’ நின்னதுக்கு அப்புறம் இயக்குநர் எஸ்.டி.சபாவிடம் தொழில் கத்துக்கிட்டேன். அப்புறம் சுசீந்திரனிடம் ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமி குதிரை’ ஆகிய படங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் மூலக்கதை என்னுடையதுதான். தனியாக படம் பண்ணலாம்னு தன்னம்பிக்கை வந்தப்புறம்தான் என் மக்களோட வரலாற்றை சொல்லுற ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எழுதினேன்.”

“உங்களுக்காக விஜய் சேதுபதியே படம் தயாரிச்சிருக்காரே?”

“நானும் அவரும் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்திலேயே நண்பர்கள். அவர் ஹீரோவாகுறதுக்கு முன்னாடி அந்தப் படத்திலே சின்ன ரோல் பண்ணியிருந்தாரு. அப்புறம் ‘பீட்ஸா’, ‘நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்’னு அவர் முன்னணி ஹீரோ ஆயிட்டாரு. என்னையும் மறக்காமே நினைவில் வெச்சிருந்து, ‘ஏதோ மலை சம்பந்தமா கதை வெச்சிருக்கீங்களாமே, எனக்கு சொல்ல முடியுமா?’ன்னு கேட்டாரு.

கதையை சொல்லிட்டு, ‘எனக்கு இந்தப் படத்துக்கு ஹீரோ வேண்டாம், தயாரிப்பாளர்தான் வேணும்’னு சொன்னேன். அவருக்கு கிடைச்சிருந்த ஸ்டார் இமேஜ், என்னோட கேரக்டருக்கு தேவையில்லாத சுமை என்பது என் ஃபீலிங்.

அதை உணர்ந்தவர், ‘இப்போ லட்சங்களில்தான் சம்பளம் வாங்குறேன். கோடியைத் தொட்டதுமே உங்க படத்தை நானே தயாரிக்கிறேன். அதுக்குள்ளே நல்ல தயாரிப்பாளர் கிடைச்சா நீங்க ஆரம்பிச்சிடுங்க’ன்னு சொன்னாரு.

இவ்வளவு பெருந்தன்மையான மனசுக்கு சொந்தக்காரர்தான் தயாரிக்கணும்னு எனக்குள்ளே தோணுச்சி. அவர் படம் தயாரிக்கிற நிலைக்கு உயருகிற வரைக்கும் வெயிட் பண்ணினேன். அந்தக் காலகட்டத்துலே சுமார் 30 மாசமா இந்தக் கதையை மெருகேத்திக்கிட்டே இருந்தேன்.”

“பொதுவாக தமிழ் சினிமான்னாலே வேகமா படமெடுப்பாங்க. நீங்க ரொம்ப ஸ்லோவா எடுத்ததா சொல்றாங்களே?”

“இந்தப் படத்துக்கு அவ்வளவு அவகாசம் தேவைப்பட்டது. தேனி மாவட்டத்துக்காரன்தான் என்றாலும், அங்குள்ள மலையடிவார வாழ்க்கையை மேலும் நுணுக்கமாகத் தெரிஞ்சுக்க வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அங்குள்ள கிராமங்களில் தங்கி ஒட்டுமொத்த சூழலையும் உள்வாங்கினேன்.

என் படத்தோட ஹீரோ ஆண்டனியை அங்கிருக்கும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக மூட்டை தூக்குற வேலையைச் செய்ய வெச்சேன். அவர் கடுமையாக உழைச்சதாலேதான் படத்துலே ரொம்ப துல்லியமான உடல்மொழியை வெளிப்படுத்தினாரு. படத்தோட காஸ்ட்யூம்களுக்காக வீடு வீடா போய் துணிகளை சேகரித்தேன்.

கேமராமேன், ஆர்ட் டைரக்டர்னு எங்க டீம் மொத்தமுமே மேற்குத் தொடர்ச்சி மலையில் ரொம்ப காலம் வாழ்ந்து அனுபவம் பெற்றபிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம். இந்தப் படத்துக்கு அப்படியான உழைப்பு எங்க எல்லாருக்குமே தேவைப்பட்டுச்சி. ஒரு கதை இருக்கு, படமெடுத்து ரிலீஸ் பண்ணிடுவோம்னு நினைச்சிருந்தா இன்னைக்கு சர்வதேச அளவிலே எங்க படத்துக்கு இவ்வளவு பாராட்டுகள் கிடைச்சிருக்காது.”

“ரிலீஸுக்கு ரொம்ப சிரமப்பட்டீங்களோ?”

“படம் ரெடியானதுமே தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுவதைத் தவிர்த்து எல்லா ஃபிலிம் ஃபெஸ்டிவல்களுக்கும் அனுப்பினோம். இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் விஜய் சேதுபதின்னு இது ஹை ப்ரொஃபைல் படம்தான்.

இருந்தாலும், ஆர்ட் ஃபிலிம் மாதிரி நினைச்சுக்கிட்டு மக்கள் வரத் தயங்குவாங்களோன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே இருந்தது. கலை என்பது மக்களுக்காகத்தான். அப்படியிருந்தும் கலைஞன்னாலே மக்கள் அச்சப்படுற சூழல் இருக்கு. (சிரிக்கிறார்) சினிமாங்கிறதே கலைதான். அதை கமர்ஷியல், ஆர்ட்டுன்னு பிரிச்சி பேசுறதெல்லாம் அபத்தம்.

ரிலீஸுக்கு முன்னாடியே ஊடகத்துறை நண்பர்களுக்காக படத்தை சில காட்சிகள் திரையிட்டோம். சமூகவலைத்தளங்களில் நல்ல விமர்சனங்கள் வந்தது. அதுக்கப்புறம்தான் தியேட்டரில் ரிலீஸ் செய்தோம்.

மக்களும் அரங்குக்கு வந்து ரசித்து பாராட்டத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு ஷோ, ரெண்டு ஷோன்னு தான் தியேட்டர்கள் ஒதுக்கினார்கள். இப்போ மக்கள் ஆதரிக்கத் தொடங்கியபிறகு இப்படத்தை திரையிட திரையரங்கங்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.”

“தயாரிப்பாளர் திருப்தியா?”

“திருப்தியாதான் இருக்காருன்னு நெனைக்கிறேன். அவர் இல்லைன்னா ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா அவருக்கு முழுக்கதையை நான் சொல்லவே இல்லை. கதையோட அவுட்லைனை ஒரு அஞ்சு நிமிஷம் சொல்லியிருப்பேன். என் மீதான நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில்தான் தயாரிப்பாளரா ஆனார். ஒருநாள் கூட அவர் படப்பிடிப்புக்கு வந்ததில்லை.

‘என்னதான் பண்றீங்க?’ன்னு போன் போட்டு கேட்டதே இல்லை. நான் என்ன கேட்டேனோ, அதையெல்லாம் தயங்காம செஞ்சி கொடுத்தாரு. படத்தை ரெடி பண்ணிட்டு போட்டுக் காட்ட கேட்டப்போ, ‘நீங்க டைரக்டர் ஆவணும்னுதான் இந்தப் படத்தை தயாரிச்சேன். நான் தியேட்டரில் போய் பார்க்குறதுதான் டைரக்டருக்கு மரியாதை’ன்னு சொன்னாரு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால், தமிழில் நிறைய தரமான படங்கள் உருவாகும்.”

“தரமான ஒரு படத்தை நீங்க கொடுத்திருக்கீங்க. தயாரிப்பாளர் தவிர்த்து வேற யாரெல்லாம் காரணம்?”

“இதோட படப்பிடிப்பு ரொம்பவே சிரமமா இருந்தது. ஹீரோ ஆண்டனி, ஹீரோயின் காயத்ரி, டெக்னீஷியன்கள் அத்தனை பேருமே சிரமத்தை பொருட்படுத்தாம பண்ணிக் கொடுத்தாங்க. படத்துலே ஹீரோ மலை ஏறுறாரு இல்லையா. அதேமாதிரி மொத்தப் படக்குழுவும் தினமும் ஷூட்டிங்குக்கு மூணு கிலோமீட்டர் மலைப்பாதையில் சிரமப்பட்டு நடக்கணும்.

அவங்கவங்களுக்கான சுமையை அவங்கவங்களே சுமந்து வந்தாங்க. குறிப்பாக கேமரா யூனிட்டோட உழைப்பை தனிச்சி பாராட்டணும். அப்புறம் இசைஞானி. கதையை எழுதினதுமே அவரிடம்தான் ஓடினேன். அப்போ விஜய்சேதுபதிகூட தயாரிப்பாளரா கமிட் ஆகலை.

‘நீங்க மேற்குத் தொடர்ச்சி மலையின் மைந்தன். நீங்கதான் மியூசிக் பண்ணணும்’னு உரிமையாகக் கேட்டேன். உடனே சந்தோஷமா ஒத்துக்கிட்டாரு. ‘பட்ஜெட் கொஞ்சம் கம்மி’ன்னு சொன்னப்போ, ‘அதெல்லாம் ஒரு விஷயமா?’ன்னு கேட்டு இன்டர்நேஷனல் லெவல் இசையமைப்பைக் கொடுத்திருக்காரு. நான் எடுத்துக் கொடுத்த விஷுவல்ஸ் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”

“தேசிய விருதுக்கு ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ தேர்ந்தெடுக்கப்படவில்லையே?”

“இந்தப் படம் ஏழு வருட உழைப்பு. தேசிய விருதுக்காக தமிழ், மலையாளம் அடங்கிய ‘தென்னிந்திய மண்டலம்-1’ பிரிவில் விண்ணப்பித்தோம். முதல் சுற்றிலேயே நிராகரிச்சிட்டாங்க.

காரணம் எதுவும் தெரியலை. தமிழ்நாட்டுக்குள்ளேயே முடக்கிட்டாங்க. மத்திய தேர்வுக் கமிட்டிக்கு போகவே இல்லை. பாரதிராஜா சாரிடம் இதை சொன்னேன். அவரு ரெண்டு, மூணு முறை இந்தப் படத்தைப் பார்த்தவரு. விருது கமிட்டியிடம் போய் சண்டையே போட்டாரு.

நான் இனிமேல் படம் எடுப்பேனான்னு எனக்கே தெரியாது. அப்படி எடுக்கறதா இருந்தா எந்தப் படத்தையும் தேசிய விருதுக்கு அனுப்பவே மாட்டேன். மக்களோட வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவங்க இருக்குற இடத்துலே மக்களோட கலையை அங்கீகரிக்கச் சொல்லிக் கேட்குறதுலே எந்த அர்த்தமும் இல்லை. ஓர் இயக்குநராக இது என் கருத்து. ஒருவேளை என்னோட படத்தை தயாரிக்கிறவங்க அந்த விருதுக்கு அனுப்பினா, அது அவங்க உரிமை, விருப்பம்”

- சுரேஷ்ராஜா