விளையாட்டாக சினிமாவுக்கு வந்த கஜினி முருகன்!“விளையாட்டாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். முதல் படம் ‘என்ன தவம் செய்தேனோ’ சமீபத்தில்தான் வெளிவந்தது. இந்தத் துறையிலே என்னோட அனுபவத்துக்கு இப்போ அஞ்சு வயசு” என்று மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் கஜினிமுருகன்.“பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். எம்.சி.ஏ படிச்சிருக்கேன். குடும்பம், குழந்தை, குட்டின்னு குடும்பஸ்தனாக வாழுறதுதான் என்னோட ஆசை.

என்னோட வீட்டுக்கு இன்டீரியர் செய்யுறதுக்காக நண்பர் செந்தில்குமாரை அழைச்சுப் பேசிக்கிட்டிருந்தேன். அப்போ சினிமா பத்தி பேச்சு வந்தது. சும்மா பேசிக்கிட்டிருந்தோம். திடீர்னு செந்தில் சொன்னாரு, ‘நானே படம் தயாரிக்கிற ஐடியாவில் இருக்கேன். என்னோட நண்பர் முரபாசெலன் இயக்கப் போறாரு’ன்னாரு.

நான் சும்மா ஜாலியா, ‘அப்படின்னா அந்தப் படத்துலே எனக்கு ஏதாவது சான்ஸ் கொடுங்க’ன்னு பிட்டை போட்டேன்.‘படத்துலே செகண்ட் ஹீரோ கேரக்டருக்கு இன்னும் யாரையும் ஃபிக்ஸ் பண்ணலை. நீங்களே நடிங்க’ன்னு சொல்லிட்டாங்க. நிஜமாவே நான் இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.

அப்போ ஒரு பிரைவேட் கம்பெனியில் மேனேஜரா நல்ல சம்பளத்தில் இருந்தேன். இருந்தாலும் சினிமா ஆசை யாரை விட்டது. தயங்கித் தயங்கி வீட்டுலே சொன்னப்போ, ‘சினிமா சான்ஸ் கிடைக்குதுன்னா, வேலையை விடலாம்’னு உற்சாகப்படுத்தினாங்க.

அந்த தைரியத்துலே வேலையை விட்டுட்டேன். அவங்க ஏதாவது தடை சொல்லியிருந்தா, நிச்சயமாக சினிமாவுக்கு வந்திருக்கமாட்டேன்.அடுத்து ஒரு திருப்பம்.

படப்பிடிப்பு துவங்குகிற சமயத்திலே ஹீரோவா நடிக்க இருந்தவரால் நடிக்க முடியாத சூழல். எனவே, எனக்கு லக் அடிச்சது. என்னை ஹீரோ ஆக்கிட்டாங்க. ஆரம்பத்தில் தயங்கி மறுத்தேன். ஆனா, எனக்கு அவங்க மூணு மாசம் ஒர்க் ‌ஷாப் நடத்தி தன்னம்பிக்கை ஏற்படுத்தினாங்க. அந்தப் படம்தான் ‘என்ன தவம் செய்தேனோ’.

படம் ரிலீஸ் ஆனபிறகு நிறைய பாராட்டுகள். என்னோட நடிப்பு யதார்த்தமா இருந்ததாகச் சொன்னாங்க. ஹீரோயினும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் ரொமான்ஸ் காட்சிகளில் சிரமமில்லாமே நடிச்சிருக்கேன்.

அடுத்து நண்பரோட சேர்ந்து நானே படம் தயாரிக்கிறேன். விக்ரம் பிரபுவிடம் கால்ஷீட் கேட்டிருக்கோம். இதுலே நான் ஆன்ட்டி ஹீரோ கேரக்டர் செய்யப் போறேன். இது தவிர வேற ரெண்டு படம் பேச்சுவார்த்தை போயிக்கிட்டிருக்கு.

எனக்கு சினிமாவில் ரோல் மாடல் விஜய் சேதுபதிதான். எந்தப் பின்புலமும் இல்லாமல் வென்றவர். அவரோட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன். முதல் படமே ஹீரோவாகப் பண்ணிட்டு, அடுத்து கேரக்டர் ரோல் பண்ணுறதுக்கு எல்லாரும் தயங்குவாங்க. என்னைப் பொறுத்தவரை நடிப்புக்கு ஸ்கோப் இருக்கிற எந்த கேரக்டராக இருந்தாலும் நான் பண்ணுவேன்.

வேலையை விட்டுட்டு சினிமாதான் வாழ்க்கைன்னு வந்துட்டேன். தினமும் தீவிர உடற்பயிற்சி, டயட்டு, நடிப்புப் பயிற்சின்னு ஒரு நடிகனுக்குத் தேவையான உழைப்பை செலுத்திக்கிட்டு இருக்கேன்.

எத்தனையோ பேரை வாழவைச்ச சினிமா என்னையும் வாழவைக்கும்னு நம்பிக்கை இருக்கு. என் மீதான நம்பிக்கையில் குடும்பமும், நண்பர்களும் இருக்காங்க. நிச்சயமாக ஜெயிப்பேன் சார்” என்று கண்களில் உறுதி மின்ன சொன்னார் கஜினி முருகன்.பேருலேயே கஜினி இருக்கு. விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி. நீங்க ஜெயிப்பீங்க முருகன்!

- எஸ்ரா