இமைக்கா நொடிகள்கொலைவெறியனை துரத்தும் சிபிஐ ஆபீஸர்!

பெங்களூர் நகரில் தொடர்கொலைகளைச் செய்த கொடூரமான கொலைகாரன் ருத்ரா. இவனை சிபிஐ அதிகாரி நயன்தாரா என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ருத்ரா பாணியிலேயே தொடர்கொலைகள் நடக்கின்றன. சிபிஐக்கு முன்னறிவிப்பு கொடுத்துவிட்டே ‘ருத்ரா’ என்ற பெயரில் நடக்கும் கொலைகளைத் தடுக்க முடியாமல் சிபிஐ திணறுகிறது.

ருத்ராவின் பெயரால் நடக்கும் கொலைகளைச் செய்வது யார், சிபிஐ அதிகாரி நயன்தாராவால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே ‘திடுக்’ திருப்பங்களோடு கூடிய ‘இமைக்கா நொடிகள்’.

சி.பி.ஐ அதிகாரி அஞ்சலியாக மிடுக்கு நடை போடுகிறார் நயன்தாரா. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் காட்டும் விறைப்பு, அதிகாரிகளிடம் முறைப்பு, தம்பியிடம் கனிவு, கணவரிடம் பணிவு, குழந்தையிடம் பாசம் என சகட்டுமேனிக்கு புகுந்து விளையாடுகிறார். ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் அழகோ அழகு!

அஞ்சலியின் தம்பி அர்ஜு னாக நடித்திருக்கும் அதர்வா சாக்லெட் பாய் தோற்றத்தில் இருந்தபடி சவாலான கதாபாத்திரத்தில் சாமர்த்தியமாக உழைத்திருக்கிறார். காதலியிடம் உருகுவது, அவரிடமே சவால் விடுவது, மாமாவைக் கலாய்ப்பது, அக்கா நயன்தாராவின் மீது சந்தேகப்படுவது, உண்மை நிலையறிந்து பழிவாங்கப்  புறப்படுவது என இளம் புயலாகச் சீறுகிறார்.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அசத்தல் வில்லனாக மிரட்டுகிறார். முகம் நிறைத்த சிரிப்பாலேயே கொடூரத்தை வெளிப்படுத்துகிறார். அவர் சொல்லும் சிங்கம், கழுதைப்புலி கதை ரசிக்கவைக்கிறது. அவருக்கு குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனியின் குரலும் கச்சிதம். சிறப்புக்  கதாபாத்திரத்தில் நயன்தாராவின் கணவராக வந்து அசத்துகிறார் மீசையில்லா விஜய் சேதுபதி.

‘‘ஆர் யூ ஓகே பேபி’’ என்று அவர் பேசும் வசனத்துக்கு கைதட்டல் கிடைக்கிறது. இறுதியில் பரிதாபத்தை அள்ளுகிறார்.  ராக்‌ஷி கண்ணா அழகிய தேவதையாக வலம்வந்து போதை ஏற்றுகிறார். ரமேஷ் திலக், அபிஷேக் ராஜா என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் படத்துக்கான ஒளிப்பதிவை அக்கறையோடு வழங்கியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். மெட்ரோ ரயில் காட்சி, தண்ணீர்த் தொட்டி காட்சிகளில் கேமரா கோணங்கள் அசத்தல். பாடல்கள் தேவையில்லாத கதையாக இருந்தாலும் ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்களும் பின்னணியும் ரசிக்கவைக்கின்றன.பாசத்துடன் அதிரடியான சைக்கோ திரில்லர் படத்தை அழகாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.