இந்த ஜானி வேறமாதிரி ஜானி!



‘சாகசம்’ படத்துக்குப் பிறகு மிகப்பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டு ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கிறார் டாப் ஸ்டார் பிரசாந்த்.“இதுவரை நான் பண்ணாத ஜானர்ல அடுத்த படம் பண்ணணும், எந்த மாதிரி கதை பண்ணலாம்னு யோசிச்சபோது அமைஞ்ச கதைதான் ‘ஜானி’. இது திரில்லர் ஜானர். படம் படு விறுவிறுப்பா வந்திருக்கு” என பேச ஆரம்பிக்கிறார்.

“இந்த ‘ஜானி’யோட கதை?”

“வாழ்க்கையிலே சாதிக்கத் துடிக்கிற இளைஞன். அதுக்காக அவன் எந்த வழியிலே போறான். அப்போ அவன் சந்திக்கிற மனிதர்கள், அவர்களாலே ஏற்படுகிற பிரச்சினைகள், முரண்கள், இதுலே இருந்தெல்லாம் அந்த இளைஞன் மீண்டு வந்தானா, இல்லையாங்கிறதுதான் படத்தோட கரு. என்னை மீண்டும் நிரூபிக்கிற படமா இதைப் பார்க்குறேன்.”

“படத்தோட டிரெய்லர்லே பணக்குவியல் நடுவே நீங்க, பிரபுன்னு பல கேரக்டர்கள் வர்றமாதிரி இருக்கு. அது கள்ளநோட்டா? நிஜ சம்பவத்தோட பின்னணியில கதை இருக்கா?”“இதே கேள்வியைத்தான் டிரெய்லர் பார்த்த பலரும் கேட்கிறாங்க. அந்தக் கேள்வியை ரசிகர்கள் மனசுலே எழுப்பி, இது என்னவாக இருக்கும்கிற எதிர்பார்ப்பை உண்டாக்குறதுதான் இந்தப் படத்தோட முக்கிய நோக்கம்.

அந்த விதத்துல ரிலீசுக்கு முன்னாடி டிரெயிலர்லேயே எங்க நோக்கத்துல பெருசா ஜெயிச்சிருக்கோம்கிறது சந்தோஷம். படத்துலே முக்கிய பார்ட்தான் அந்தப் பணக்குவியல் காட்சி.

அதைச் சுற்றித்தான் கதை நகருமான்னா அப்படிக் கிடையாது. அதையும் தாண்டி நிறைய சம்பவங்கள் இருக்கு. அந்தக் காட்சியில வர்றது என்ன பணம், கறுப்புப்பணமா, கள்ளநோட்டா, பேங்க்ல கொள்ளையடிச்சதாங்கிறதெல்லாம் அவரவர் பார்வைக்கே விட்டாச்சு. படம் பார்க்கும்போதுதான் அந்த சஸ்பென்ஸ் விலகும்.”

“ஐம்பது படம் பண்ணிட்டீங்க. நீங்க பண்ணாத கேரக்டரே இல்லை எனலாம். ‘ஜானி’யிலே உங்க கேரக்டர் எப்படி இருக்கும்?”

“இதுவரைக்கும் பார்த்த பிரசாந்த்லேருந்து வேறுபட்ட பிரசாந்த்தை இந்தப் படத்துலே பார்ப்பீங்க. நான் இப்படி சொல்றது வெறும் வார்த்தைக்காக கிடையாது. ‘ஆணழகன்’, ‘மன்னவா’, ‘திருடா திருடா’, ‘வின்னர்’ மாதிரி படங்களில் காமெடியான பிரசாந்தை ரசிகர்கள் பார்த்திருக்காங்க.

‘செம்பருத்தி’யில் தொடங்கி ரொமான்ஸ் கேரக்டர்லேயும் என்னை ஏகப்பட்ட படங்களில் பார்த்திருக்காங்க. ஆரம்பத்துல இருந்தே ஆக்‌ஷன் ரோலும் பண்ணியிருக்கேன். இந்த வேடங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு ‘ஷாக்’ படத்துலே நடிச்சிருந்தேன். ரொம்ப நாளைக்குப் பிறகு திரும்ப அதுபோல வழக்கமா நான் பண்ணின ரோல்கள்லேயிருந்து வித்தியாசப்பட்டு இந்தக் கேரக்டர் பண்ணியிருக்கேன். ரொம்ப கான்ஃபிடென்ட்டா ஃபீல் பண்றேன்.”

“படத்துல நிறையபேர் நடிச்சிருக்காங்க. அவங்க கேரக்டர்களைப் பற்றி....?”
“பிரபு சார் வெர்சடைல் ஆக்டருங்கிறது எல்லோருக்குமே தெரியும். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவங்களுக்கான தீனி கிடைக்கணும். இந்தப் படத்துல அவருக்கு தரப்பட்டிருக்கிற கேரக்டர், அவரோட திறமைக்கான தீனியா நிச்சயமா இருக்கும். ஒவ்வொரு காட்சியிலேயும் அவரோட அனுபவ நடிப்பைப் பார்க்க முடிஞ்சது.

ஆனந்தராஜ் சார் சமீபகாலமாக நடிக்கிற படங்கள் அவரோட வித்தியாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கு. ஏதாவது விழாவுக்கு அவர் வந்தாலே, அவர் என்ன பேசுவாருங்கிறதைத்தான் பலரும் எதிர்பார்க்கிறாங்க.

அந்த அளவுக்கு காமெடி டைமிங்ல கலக்குறார். அவருக்கும் இப்போ பண்ணிட்டிருக்கிற வேடங்கள்லேருந்து வேறுபட்டதா இந்தப் படம் இருக்கும். கலகலப்பாகவும் அவரோட ரோல் இருக்கும். ஆனா அதையும் தாண்டிய நடிப்பும் இதுல அவர்கிட்டேயிருந்து எதிர்பார்க்கலாம்.

பாலிவுட்லேருந்து அஷுதோஷ் ராணா வந்திருக்கார். தமிழ்ல இதுக்கு முன்னாடி ஓரிரு படங்கள் அவர் பண்ணியிருக்கார். இதுல பிரபு சார், ஆனந்தராஜ் சார் எப்படி முக்கியமான கேரக்டர்கள்ல வர்றாங்களோ, இன்னொரு முனையில அஷுதோஷ் இருப்பார். ஒரு படத்துக்குள்ள பிரகாஷ்ராஜ் சார் இருந்தா எப்படி இருக்குமோ அந்த ஃபீலை அவர் கொடுத்திருக்கார்.

சாயாஜி ஷிண்டேவுக்கு அமர்க்களமான கேரக்டர் இருக்கு. அந்தக் கேரக்டருக்கு அவரே டப்பிங் பேசினாத்தான் சரியாக இருக்கும்னு டைரக்டர், நாங்க எல்லோருமே முடிவு பண்ணினோம். காரணம், அந்தக் கேரக்டரோட வெயிட் அப்படி.

அதேபோல அவரே டப்பிங் பேசினதும் அவரோட ரோலோட கெத்து இன்னும் கூடிருச்சி.தேவதர்ஷினி படத்துல இருக்கார். வழக்கமாக அவங்களை காமெடி கேரக்டர்களுக்குதான் பயன்படுத்துவாங்க. ஆனா அவங்க சிறப்பான குணச்சித்திர நடிகைங்கிறது இந்தப் படத்துக்குப் பிறகு நிரூபணமாகும். கலைராணியும் முக்கிய வேடத்துல வர்றாங்க.”

“ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டியைப் பத்தி சொல்ல மறந்துட்டீங்களே?”

“மறக்கலை. படம் பார்த்துட்டு அவங்க கேரக்டரை மத்தவங்களும் மறக்க மாட்டாங்க. கிளாமரான ரோல். போல்டான பொண்ணா அவங்க நடிச்சிருக்காங்க. அவங்க ரோல் ஆண்களுக்கு ரொம்பவே பிடிக்கிற மாதிரி இருக்கும்.

அப்புறம் டைரக்டர் பத்தியும் சொல்லணும்.  என்னோட கேரியர்லே பல புதுமுக டைரக்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கேன். இப்போ இந்தப் படத்துக்குப் பிறகு வெற்றிச்செல்வன். பெரிய ஆளா வருவாரு.”

“படத்துல கிராஃபிக்ஸ் நீங்களே பண்ணியிருக்கீங்களே?”

“90கள்லேயே கிராபிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அது என்னோட சீக்ரெட் ஹாபி. தொடர்ந்து என்னோட படங்களுக்கு நானே கிராஃபிக்ஸ் பண்ணிட்டு வர்றேன். மம்பட்டியான் படத்துலேயே டைட்டிலில் கிராஃபிக்ஸ் என்கிற இடத்தில் என்னோட பெயரை யாருக்கும் தெரியாதபடி போட்டிருப்பேன்.

அதனால அந்தச் சமயம் யாருக்கும் தெரியல. இந்தப் படத்துல விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறைய இருக்கும். ஆனா, அது எந்த இடத்துல இருக்குன்னு தெரியாதபடி படத்துல இருக்கும். நம் நாட்டுல தொழில்நுட்பம் பெரிசா வளர்ந்து நிக்குது.

இதைத் தாண்டி நாம வெளிநாடுகளுக்கு போகணும்னு அவசியம் கிடையாது. இங்கே இருக்கிற தொழில்நுட்பக் கலைஞர்களையே பயன்படுத்தியும் நிறைய விஷுவல் எஃபெக்ட்ஸ் பண்ணியிருக்கோம். அது எல்லாமே படக் காட்சிகளோடு கலந்து வரும். திணிப்பாக இருக்காது.”

- ஜியா