சொல்ல சொல்ல இனிக்கும் மீரா கிருஷ்ணா



டைட்டில்ஸ் டாக் -118

குடும்பமும் கலையும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அந்த இரண்டுமே இனிமையானவை. எந்த ஒரு செயலாக இருந்தாலும் மனதுக்கு பிடித்தவைகளாக இருந்தால் அவை இனிமை தரும். என்னுடைய வெற்றிக்குக் காரணம் குடும்பம். அதைப் பற்றி சொல்வதாக இருந்தால் சொல்ல சொல்ல இனிக்கும். என் கணவர் கிருஷ்ணா கொடுக்கும் ஊக்கத்தால்தான் இந்தளவுக்கு புகழின் உச்சத்தை தொட முடிந்தது.

இப்போது விளம்பரப் படங்கள், சினிமா, வீணை கச்சேரி என்று பல தளங்களில் என்னால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது என்றால் அந்த பெருமை முழுக்க முழுக்க என் கணவரையே சேரும். நான் ஒன்றும் தெரியாதவள். என் வாழ்க்கையில் எல்லாமே என் கணவர்தான். எந்த ஒரு பெண்ணுக்கும் கணவருடைய ஒத்துழைப்பும் குடும்பத்தின் ஆதரவும் இருந்தால் சாதிக்க முடியும். இறைவன் எனக்கு அந்த பாக்கியத்தைக் கொடுத்துள்ளான்.

என் கணவரைப் பற்றி சொல்வதற்கு இனிக்கும் விஷயங்கள் பல உள்ளன. பொதுவாக சக மனிதனை பாராட்டும்போது பொறாமை வெளிப்படும். அப்படி என்னைப் பற்றி யாராவது பாராட்டினால் என்னைவிட என் கணவர்தான் அதிகம் சந்தோஷப்படுவார். ஒரு மனைவிக்கு இதைவிட இனிமை வேறு என்ன இருக்க முடியும். என் கணவர் பரந்த மனப்பான்மை உள்ளவர். நான் என்ன செய்ய நினைத்தாலும் ஊக்கம் கொடுத்து உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பார்.

என்னுடைய வாசிப்புகளில் நிறை, குறைகளையும் துல்லியமா கணித்து விமர்சனம் பண்ணுவார். கடந்த சில மாதங்களாக ‘வீணா மீரா கிருஷ்ணா யு டியூப் சேனல்’ மூலம் என்னுடைய வீணை இசையை அப்லோட் பண்ணிக் கொண்டு வருகிறேன். குறுகிய காலத்தில் 50,000 பேர் சந்தாதாரர்களாக மாறியுள்ளார்கள். தினமும் 10000 பேர் என்னுடைய இசையை ரசிக்கிறார்கள் என்ற செய்தியை கேட்கும் போதும் சொல்லும் போதும் இனிக்கிறது.

இப்போது நடிப்பை தாண்டி நான் வீணை கலைஞராக பார்க்கப்படுகிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய அம்மா ஜெயலக்ஷ்மி. அவர்தான் என்னுடைய சங்கீத குரு. இசையை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். நான் இசைத்துறையிலும் ஆளுமை செலுத்த முடிகிறது என்றால் அம்மாவுக்கும் அதில் பங்கு உண்டு.  

இப்போது என் கணவர் என்னை எப்படி என்கரேஜ் பண்ணுகிறாரோ அதே மாதிரி, அப்போது என் அம்மாவுக்கு என் அப்பா என்கரேஜ் பண்ணியதால் தான் அம்மாவும் இசைக் கலைஞராக வலம் வர முடிந்தது. அதே மாதிரி அப்பாவும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அன்று என்னுடைய பெற்றோர் எனக்கு வீணையை பயிற்றுவித்தது இப்போது எனக்கு பிரயோஜனமாக உள்ளது.

வீணையை முறைப்படி கற்றுக் கொண்டாலும் முறைப்படி அரங்கேற்றம் பண்ணவில்லை. ஆனால் மிகப் பெரிய ஜாம்பவான்களிடம் வீணை வாசித்துள்ளேன். என்னுடைய மாமனார் கே.வீரமணி. அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்க கேட்க இனிக்கும். அவர் பாடிய ஆல்பங்களுக்கு வீணை வாசித்துள்ளேன். அவருடைய குரலை இதுவரை யாரிடத்திலும் கேட்டதில்லை. ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ என்ற அந்தக் குரலை கேட்டதும் எவரும் ஐயப்பனை வழிபடாமல் இருக்க முடியாது. அப்படியொரு இனிமையும் பரவசமும் கலந்த தெய்வீகக் குரல்.  அந்தப் பாடலை வீணையிலும் வாசித்துள்ளேன். அதுவும் வெற்றி.

தேவா, கீரவாணி, ஹெச்.எம்.வி.ரகு, தெலுங்கு படங்களுக்கான பின்னணி இசையில் வீணை வாசித்த  அனுபவம் என்று அந்த நாட்கள் எல்லாமே சொல்ல சொல்ல இனிக்கும்.எனக்கு வீணை தெரிந்திருந்தாலும் 25 வருடமாக ‘டச்’லே இல்லை. நடிப்புல பிஸியாக இருந்ததால் வீணை வாசிக்க முடியவில்லை. அதில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

ராஜேஷ் வைத்தியா என் மானசீக குரு. அவருடைய கச்சேரியைப் பார்த்த பிறகுதான் எனக்குள் இருந்த வீணை மீரா எட்டிப் பார்க்க ஆரம்பித்தார். எவ்வளவு பெரிய கலையை அப்படியே பூட்டி வைத்துள்ளோம் என்று தோன்றியது. நான் வாசிக்க ஆரம்பித்த நேரமா என்னன்னு தெரியவில்லை... வீணா மீரா கிருஷ்ணா யு டியூப் சேனல் ‘க்ளிக்’ காகிவிட்டது. இப்போது இரண்டு வருடமாக கல்யாண கச்சேரி உட்பட பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறேன். தமிழ்நாடு முழுதும் சென்று கச்சேரி வாசிப்பது இனிமை.

சினிமாவைப் பொறுத்தவரை நான் நடித்த படங்கள் எல்லாமே இனிமை. சினிமா பெண்களுக்கான நல்ல ஃபீல்ட். என்னுடைய இளமைக்காலத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவுக்கு நான் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதால் சினிமாக்காரர்களை வீட்டுப் பக்கம் சேர்க்கவில்லை.

ரொம்ப லேட்டாகத் தான் நடிப்புலகத்துக்கு வந்தேன். இருபத்தைந்து வயதில் சீரியலில் அம்மாவாக நடிக்க ஆரம்பித்தேன். முப்பது வயதுக்குப் பிறகுதான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். இரண்டு திரைகளிலும் அம்மா வேடங்களில்தான் நடித்தேன். அன்று ஆரம்பித்த சினிமா பயணம் இப்போதும் பிஸியாக உள்ளது.

என்னுடய வாழ்வில் அடுத்த இனிமை ஆரோக்யம். நானும் என் கணவரும் உடற்பயிற்சி விஷயத்தில் கவனமாக இருப்போம். என் கணவரிடம் சோம்பேறித்தனம் துளியும் இருக்காது. உடம்பை கட்டுக்கோப்பாக வைக்கும் விஷயத்தில் அவரைப் பற்றி பேச ஆரம்பித்தால் என்னைப் பற்றி பேச மறந்துவிடுவேன். அவர் என்னைவிட இளமை தோற்றத்தில் இருப்பதால் பல இடங்களில் உங்கள் மகனா என்று கூட சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் எங்கள் இளமை ரகசியம் ஆரோக்யம் மட்டுமே. எங்களுக்கு ஒரு நாளின் துவக்கம் காலை 4.30 மணிக்கே தொடங்கிவிடும். அரை மணி நேரம் யோகா. வாக்கிங். ஜிம். மற்ற வேலைகள் என்று இயங்க ஆரம்பித்துவிடுவோம்.

கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லை என்றாலே உடம்பு நம்முடைய பேச்சை கேட்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் ஒரு மனிதனுக்கு முக்கியம். அதை மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.  நாங்கள் எதற்கும் டென்ஷன் ஆகமாட்டோம். இதுவும் கடந்து போகும் எங்கள் வாழ்க்கையின் தாரக மந்திரம். என் குழந்தைகள்-எங்கள் இனிமை.

அவருக்கு நான் ப்ரெண்ட். எனக்கு அவர் ப்ரெண்ட். வீட்ல ஷேர் பண்ண ஆள் இல்லாத போதுதான் வெளியே ஆளை தேடுவோம். கணவரே தோழராக இருப்பதால் எங்களுக்குள் நட்பு தேவைப்படவில்லை. கருத்து வேறுபாடு வந்ததில்லை.
இப்போது ஏராளமான கச்சேரி பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

அந்த நிகழ்வுகளில் ரசிகர்கள் மனம் விட்டு பேசியதையும் பாராட்டியதையும்  குறித்து பேசுவது இனிக்கும். ஒரு கச்சேரி யில் ஒரு அம்மா ‘நீங்கள் நிஜமா வாசிக்கிறீர்களா அல்லது வாசிக்கிற மாதிரி நடிக்கிறீர்களா’ என்று கேட்டார். இன்னொரு கச்சேரி காரைக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. ‘மேரா சப்னே’ இந்திப் பாடலை வீணையில் வாசிக்கச் சொன்னார். அந்தப் பாடலுக்கு யு டியூபில் 2  மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.

பாண்டிச்சேரியில் ஆட்டிசத்தால் பாதிக்கபட்ட குழந்தைகள் ஆசிரமத்திலிருந்து ஒரு நாள் போன் கால் வந்தது. அந்த குழந்தைகள் வீணையில் நான் வாசித்த பாடலைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார்கள். ஹார்ட் பேஷன்ட், வேலைக்கு செல்பவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் என்னுடைய வீணை இசையை பாராட்டும் போதும் அதை பிறரிடம் சொல்லும் போதும் இனிக்கிறது. இந்த உலகில் இன பேதமின்றி இசை மட்டுமே மற்றவர்களையும் மகிழ்விக்க முடியும்.

சமீபத்துல நான் வாசித்த ‘உன்னை காணாத கண்ணும்’ பாடலைக் கேட்டுவிட்டு பி.சுசீலா அம்மா  பாராட்டினார். ஒரு நாள் இரவு 9 மணிக்கு நான் பி.சுசீலா பேசுறேன் என்று அறிமுகம் செய்துகொண்டு பேச ஆரம்பித்தார். ‘உன் மண்டைக்குள்ள பாட்டு ஓடுதும்மா அதான் கை பேசுது’  என்றார். சுசீலா அம்மாவின் பாராட்டை எனக்கான பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

சுசீலா அம்மா என்னுடைய ஆதர்ஷ பாடகி. ஒரு விருது விழாவில் நான் நிகழ்ச்சி தொகுத்துவழங்கும் போது, ‘அடுத்த ஜென்மம் என்று இருந்தால் சுசீலா அம்மாவுக்கு நான் மகளாக பிறக்கணும் அல்லது சுசீலா அம்மாவாக பிறக்கணும்’ என்று சொன்னேன். அந்தளவுக்கு என்னுள் ஆழமாகப் பதிந்து விட்ட சுசீலா அம்மா என்னை பாராட்டியது பெரும் நெகிழ்ச்சி. அவரை நான் சரஸ்வதியின்  அவதாரமாக பார்க்கிறேன்.

எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். அதுவும் இனிமை. சமீபத்தில் வெளிவந்த ‘தடம்’ நல்ல பேர் கொடுத்தது. வித்தியாசமான கேரக்டர். அதுவும் இனிமை. இயக்குநர் மகிழ் திருமேனிக்கு என் நன்றி. வாழ்க்கையில் தேவையில்லாத பதட்டம் தான் தோல்விக்கு காரணமாக அமைகிறது. கடவுள் பக்தி உண்டு என்கிறார்கள். ஆனால் பாரத்தை கடவுள் மேல் போடுவதில்லை. எல்லாத்தையும் நான் தான் சுமக்க வேண்டும் என்கிறார்கள்.

அதனால்தான் பிரச்ச்னைகள், கவலைகள் வருகிறது. எல்லாராலும் எல்லாம் முடியும். அதற்கு முதலில் உங்கள் பாரத்தை கடவுள் மீது போட வேண்டும். நாம் சுமக்க முடியாத பாரத்தை கடவுள் அனுமதிப்பதில்லை. நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் எழுதப்பட்டவைகள். கடவுள் வழி நடத்துதல் நல்லபடியாக இருக்கும் என்று நமக்கு நம்பிக்கை இருந்தால் கவலைப்பட மாட்டோம். என்றும் இனிமையாக இருப்போம். இங்கு எல்லாமே விதிக்கப்பட்டது.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)