எலுமிச்சை மனிதன்!



உலகளவில் அதிகமான எலுமிச்சையை உற்பத்தி செய்யும் நாடே, இந்தியாதான். 2022ம் வருடம் உலகம் முழுவதும் 22 மில்லியன் டன் எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 3.8 மில்லியன் டன் எலுமிச்சையை உற்பத்தி செய்திருக்கிறது இந்தியா. ஒரு காலத்தில் அலங்காரச் செடியாகவும், மருத்துவப் பயன்பாட்டுக்காகவும் எலுமிச்சை வளர்க்கப்பட்டது. 
இப்படியான எலுமிச்சை மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு வந்தது தனிக்கதை. இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான எலுமிச்சை விவசாயியாக மிளிர்கிறார், ஆனந்த் மிஸ்ரா. எலுமிச்சை விவசாயம் பற்றி அறியாத ஒரு மாவட்டத்தில் எலுமிச்சை விவசாயம் செய்து, அந்த மாவட்டத்துக்கே ரோல்மாடலாகத் திகழ்கிறார் இந்த விவசாயி.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி எனும் மாவட்டத்தில் அமைந்துள்ள கச்னவான் என்கிற கிராமத்தில் பிறந்தவர் ஆனந்த் மிஸ்ரா. பிபிஏ வரைக்கும் படித்த ஆனந்த, நொய்டா, பஞ்சாப், பீகாரில் உள்ள சர்வதேச நிறுவனங்களில் 13 வருடங்கள் வேலை செய்திருக்கிறார். பல நகரங்களில் வேலை செய்தாலும், சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் அவரை வாட்டியது.
‘‘இந்த நகரங்களில் மேலோட்டமான, பாவனையான ஒரு வாழ்க்கையைத்தான் பார்த்தேன். எல்லோரும் தங்களின் உண்மையான பக்கங்களை மறைத்து, வெளியே நல்லபடியாக காட்டிக் கொள்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். வெளியில் அம்சமான தோற்றத்துடன் இருப்பார்கள். ஆனால், உள்ளுக்குள் எதுவுமே இருக்காது.

கிராமத்தில் அப்படியில்லை. அங்கே வெளியிலும், உள்ளேயும் ஒரே மாதிரிதான். முக்கியமாக தூய்மையான காற்று, நல்ல உணவு அங்கேதான் கிடைக்கும்...’’ என்கிற ஆனந்துக்கு கச்னவானில் சொந்தமாக நிலம் இருந்தது. ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது அந்த  நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பது அவரது ஏக்கம். ஆனால், நகரத்தில் பார்த்துக் கொண்டிருந்த வேலையால் விவசாயத்தில் ஈடுபட முடியவில்லை. இந்த ஏக்கம் சில வருடங்களுக்குத் தொடர்ந்தது.

ஒரு கட்டத்துக்கு மேல் நகர வாழ்க்கையை ஆனந்தால் தொடர முடியவில்லை. 2016ம் வருடம் கைநிறைய சம்பளம் தரும் வேலையைத் துறந்துவிட்டு, விவசாயம் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஆனந்தின் முடிவுக்கு அம்மாவைத் தவிர, குடும்பத்தில் இருந்த மற்ற எல்லோரும் ஆதரவு தந்தனர். நல்ல வேலையை மகன் விடப்போறானே என்ற ஆதங்கத்தில் அம்மா ஆதரவு தரவில்லை. இருந்தாலும் அம்மாவை சமாதானம் செய்துவிட்டு, விவசாயத்தில் இறங்கினார் ஆனந்த்.

ஆனந்தின் முன்னோர்கள் காலம் காலமாக நெல், கோதுமை, கடலை, பட்டாணியை விவசாயம் செய்து வந்தனர். முன்னோர்களைப் போல் இல்லாமல் புதிதாக ஒரு பயிரை விவசாயம் செய்யலாம் என்று திட்டமிட்டார். இத்தனைக்கும் விவசாயம் செய்த அனுபவமே இல்லாதவர் ஆனந்த். ஒரு வருடத்துக்கும் மேலான பயணங்கள் மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகு எலுமிச்சையை விவசாயம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்குச் சென்று பார்த்தபோது, அங்கே நெல், கோதுமை, உருளைக்கிழங்கு, புதினா போன்றவற்றை மட்டுமே மக்கள் விவசாயம் செய்து வந்தனர். ஒருவர் கூட எலுமிச்சை விவசாயத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தப் பயணத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் பார்த்த விவசாயிகள் எல்லோரும் குறுகிய காலத்தில் வருமானம் தரும் பயிர்களை மட்டுமே விவசாயம் செய்து வந்தனர். அந்த வருமானத்தை நம்பித்தான் அவர்களின் குடும்பமும் இருந்தது. அதனால் நீண்ட காலம் கழித்து வருமானம் தரும் எலுமிச்சை விவசாயத்தில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால், எலுமிச்சைக்கு நல்ல தேவை இருந்ததைக் கவனித்தேன்.

ஆந்திரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகமாக எலுமிச்சை விவசாயம் நடப்பதைப் பார்த்தேன். எங்கள் மாவட்டத்தில் ஒரு எலுமிச்சை விவசாயியைக்கூட நான் பார்க்கவில்லை. நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று துணிச்சலுடன் எலுமிச்சை விவசாயத்தில் இறங்கினேன்...’’ என்கிற ஆனந்த், முதலில் 900 எலுமிச்சை செடிகளை நடவு செய்தார்.

அவரது ஊரில்  காற்று பலமாக வீசும் என்பதால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இருக்குமாறு செடிகளை வைத்தார். அத்துடன் ஒரு செடிக்கும், இன்னொரு செடிக்கும் இடையில் 10 அடி இடைவெளி விட்டார். செடியின் வேர்ப்பகுதி ஒரு அடி ஆழத்துக்குள் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இவற்றையெல்லாம் தனது பயணத்தின்போது சந்தித்த எலுமிச்சை விவசாயிகளிடமிருந்து கற்றுக்கொண்டார்.

இதற்காக சுமார் இரண்டு லட்ச ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார். ஆம்; ஒரு எலுமிச்சை செடியின் விலை 200 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமான எலுமிச்சையைவிட, பெரிய அளவிலான எலுமிச்சைகளைக் கொடுக்கும் செடி இது. அதாவது வழக்கமான எலுமிச்சை 30 முதல் 50 கிராம் வரை எடை இருக்கும். ஆனால், ஆனந்த் நடவு செய்த செடிகள் 100 கிராம் எடை கொண்ட எலுமிச்சையைக் கொடுக்கும். இந்தச் செடிகளை வாரணாசியில் உள்ள ஒரு பிரபலமான நர்சரியில் வாங்கினார் ஆனந்த்.

மழைக்காலத்துக்கு முன்பு ஒவ்வொரு எலுமிச்சை மரத்துக்கும் 15 கிலோ உரமிட்டார். இயற்கை முறையிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே பயன்படுத்தினார். செடி மரமாகி எலுமிச்சையைக் கொடுக்க நான்கு வருடங்கள் ஆனது. கடந்த வருடம் சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எலுமிச்சையை அறுவடை செய்திருக்கிறார் ஆனந்த். 

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 40 முதல் 70 ரூபாய் வரை விலை போயிருக்கிறது. இன்று இரண்டு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை விவசாயம் செய்கிறார். எலுமிச்சை மரங்களுக்கு நடுவில் 50 சாத்துக்குடி மரங்களையும் வைத்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் நெல், கோதுமை போன்ற பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகளைவிட, ஐந்து மடங்கு அதிகமான வருமானத்தை ஈட்டுகிறார் ஆனந்த்.
ஆம்; அவரது வருட வருமானம் 7 லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது. ‘ரேபரேலியின் எலுமிச்சை மனிதன்’ என்று ஆனந்தை புகழ்கின்றனர்.

த.சக்திவேல்