நேற்று யூடியூப் பிரபலம்... இன்று நடிகை!



‘‘யூ டியூப் வீடியோக்களில் அதிரடியாக நடித்துவிட்டு தற்போது வெளியான ‘டியர்’ படத்தில் அடக்கி வாசிச்சது வித்தியாசமா இருக்கு. கேரக்டருக்கு ஏத்த மாதிரி அழுத்தமா நடிப்பது பிடிச்சிருக்கு...’’ என்று உற்சாக சிரிப்புடன் பேசுகிறார் யூ டியூப் பிரபலமாக இருந்த நந்தினி.‘டியர்’ படத்தில் அப்பாவிப் பெண்ணாய் ஈர்த்தவர், தற்போது நயன்தாரா நடிக்கும் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ஆச்சயர்ப்படுத்த உள்ளாராம்.

யார் இந்த நந்தினி?

நல்ல கேள்வி! நானே என்னை யார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். நம்ம சென்னைதான் எனக்கு சொந்த ஊர். சினிமாவைப்  பார்த்துதான் சினிமாவுக்கு வரணும்னு  தோணுச்சு. கே.பாலசந்தர் சாரின் ‘எதிர்நீச்சல்’ என்னை வெகுவா பாதிச்ச படம். அதுலயிருந்து சினிமா டைரக்டராகணும்னு என்னுடைய கனவுகளை வளத்துக்க ஆரம்பிச்சேன். பக்குவப்படாத அந்த வயசுல சிறுகதைகள், கவிதைகளை ஆர்வத்தோட எழுத ஆரம்பிச்சேன்.ஒரு கட்டத்துல ஃபியூச்சர் சினிமாதான்னு முடிவு பண்ணி சினிமா ரிலேட்டடா படிக்கலாம்னு பி.எஸ்ஸி எலக்ட்ரானிக்ஸ் மீடியா முடிச்சேன்.

கல்லூரியில சேர்ந்த முதல் வருஷத்திலேயே பிரபல யூ டியூப் சேனலோட வெப் ரேடியோவுல வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. அவங்களோட யூ-டியூப் சேனலோட வீடியோ, வெப் சீரீஸ் என தொடர்ந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். வீடியோஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால் காலேஜ் முடிச்சதும் ஃபுல் டைம் ஜாப்பா மீடியா பக்கம் வந்துட்டேன்.சினிமாவுல ‘மீசைய முறுக்கு’ல  குறிப்பிடத்தக்க வாய்ப்பு கிடைச்சது.

தொடர்ந்து ‘பட்டாசு’, ‘மாரி 2’ என்று சில படங்களில் நடிக்க கூப்பிட்டாங்க. ப்ரொஃபஷனல் ஆக்டரா சினிமாவுல என்னுடைய டிராவலை ஆரம்பிச்சு வெச்சது  ‘மத்தகம்’ வெப் சீரீஸ். ‘கிடாரி’ பிரசாந்த் சார் அதுல அழுத்தமான வேடம் கொடுத்தார். அதுக்கு நல்ல ரீச் கிடைச்சது. ‘மத்தகம்‘ வெப் சீரீஸ், யூ டியூப் வீடியோஸ்னு என்னை பல தளத்துல பார்த்திருக்கலாம். மக்கள் மத்தியில நடிகையா கொண்டு போய் சேர்த்தது ‘டியர்’ படம்.

‘டியர்’ல நடிச்ச அனுபவத்தை சொல்லுங்க?

‘பென்குயின்’ என்ற வெப் சீரீஸ் பார்த்துட்டுதான் புரொடக்‌ஷன் ஹவுஸிலிருந்து கூப்பிட்டாங்க. இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் சார் கதை சொல்லும்போதே கேரக்டர் பிடிச்சிருந்துச்சு. அவங்க தரப்பிலிருந்தும் என்னுடைய வீடியோஸ் பார்த்திருந்ததால் என்னால் அண்ணி கேரக்டர் பண்ண முடியும்னு நம்பிக்கை வெச்சிருந்தாங்க.

லைவ் ரிக்கார்டிங் என்பதால் கதை, காட்சியை புரிஞ்சுட்டு நடிக்கிற ஆர்டிஸ்ட்டை தேடிட்டு இருந்ததா கேள்விப்பட்டேன். என்னுடைய கேரக்டர் பிடிச்சிருந்ததால இன்வால்வ்மெண்ட்டோட பண்ண முடிஞ்சது.

படத்துல என்னைத் தவிர ரோகிணி மேடம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி,பிரகாஷ், காளிவெங்கட் என எல்லோருமே அனுபவசாலிகள். ஆனா, எந்தவித ஒர்க் டென்ஷனோ, பிரஷ்ஷரோ எந்த இடத்திலும் வந்ததில்ல. என்னுடைய கவனமெல்லாம் கூட நடிக்கிறவங்க அனைவரும் அனுபவ நடிகர்கள், லைவ் ரிக்கார்டிங்ல எடுக்கிறாங்க... என்பதால எந்தவித சொதப்பலும் நடக்காம இருக்கணும்னு கவனமா இருந்தேன்.

கேரக்டரோட மூட் ஸ்பாயிலாயிடாம இருக்கணும் என்பதற்காக செட்ல யாரிடமும் அதிகமா பேசமாட்டேன். ரோகிணி மேடம், ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் என சக ஆர்டிஸ்ட்டுகளுடன் நடிச்சதுல சினிமாவை டீப்பா கத்துக்க முடிஞ்சது.ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் சந்தர்ப்பம் இருக்கும்போது சக ஆர்டிஸ்ட்டுகளுக்கான ஸ்பேஸை உருவாக்கித் தருவார். ஒரு காட்சியில் நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் மேடமும் இருப்போம். அந்தக் காட்சியில் நான் அதிகமா பெர்ஃபாமன்ஸ் பண்ற மாதிரி இருக்கும்.

ஐஸு மேடம் நினைச் சிருந்தா அந்தக் காட்சியில் அவங்க பெர்ஃபாம் பண்ணியிருக்க முடியும். அவங்க நினைச்சிருந்தா ‘நானே நடிக்கிறேன், எனக்கு டயலாக் இல்லையே’ என கேட்டிருக்கலாம். ஆனா, அந்த இடத்துல எனக்கு ஸ்பேஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க.

அதே மாதிரிதான் ரோகிணி மேடம், காளி வெங்கட் என சக ஆர்டிஸ்ட் அனைவரும் என்னிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வர சப்போர்ட் பண்ணாங்க. அது எனக்கு நல்ல அனுபவமா இருந்ததோடு எந்த செட்டுக்குப் போனாலும் பெரிய நடிகர்களோடு நடிக்கிறோம் என்ற மைண்ட் செட்டுக்குள் போகாம நாமும் ஆர்டிஸ்ட் என்ற எண்ணத்துடன் நடிச்சாலே பெஸ்ட்டா பெர்ஃபாம் பண்ண முடியும் என்ற எண்ணத்தைக் கொடுத்துச்சு.

மற்றபடி, ஆர்டிஸ்ட் அனைவரும் குடும்பமா பழகினோம். காட்சி எடுக்கும்போது ‘கட்’ சொல்ற வரைக்கும் அமைதியா இருக்கணும். ஷாட் முடிஞ்ச பிறகு கேரவன் போகாம எல்லோரும் குரூப்பா உட்கார்ந்து அவரவர் அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிட்டது மறக்க முடியாத அனுபவம்.

எந்த மாதிரி கேரக்டர்ல நடிக்க ஆர்வமா இருக்கீங்க?

சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ, என்னால் அந்தக் கேரக்டரை பண்ண முடியும்னு இயக்குநர் நம்பிக் கொடுக்கிற எந்தக் கேரக்டரும் ஓகே.ஆர்ட்டிஸ்ட்டா சில கேரக்டர்களில் நடிக்கணும் என்ற விஷ் லிஸ்ட் இருக்கு. மற்றபடி எனக்கு அசெளகரியமா ஃபீல் பண்ற கேரக்டர்ல நடிக்கமாட்டேன்.

படம் பார்த்துட்டு வீட்ல என்ன சொன்னாங்க?

‘நல்லா பண்ணியிருக்க’னு பாஸ் மார்க் கொடுத்தாங்க. சினிமாவுக்கு வரும்போது எல்லா வீட்டிலும் என்ன... என்ன... எதிர்ப்பு வருமோ அதுதான் எனக்கும் நடந்துச்சு. நானே என்னுடைய ஐடியாலஜியிலிருந்து மாறிடுவேன்னு எதிர்பார்த்தாங்க. சமூக வலைத்தளத்திலும், சினிமாவிலும் எனக்கு கிடைச்ச வரவேற்ப்பைப் பார்த்துட்டு ‘ஏதோ பண்றா’ னு அவங்களை கொஞ்சம் சமாதானப்படுத்துச்சு. பேரண்ட்ஸ் என்மேல வெச்ச நம்பிக்கையை உடைக்காம காப்பாத்தணும்னு மெதுவா பயணம் போகுது.

ஹீரோயின் வாய்ப்பு வருதா?

சான்ஸே இல்லை. கேரக்டர் ஆர்டிஸ்ட்டா பேர் வாங்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஹீரோயின் ஆகணும்னு எந்த இடத்திலும் நினைச்சதில்ல. அப்படியொரு வாய்ப்பு வருமா என்றும் தெரியல. 

கேரக்டர் ஆர்டிஸ்ட்டா முத்திரை பதிச்சா போதும்னு நினைக்கிறேன்.எனக்கு மனோரமா ஆச்சியோட நடிப்பு பிடிக்கும். கேரக்டர் ஆர்டிஸ்ட்டா அவங்க பண்ணாத ரோல் கிடையாது. அவங்களைப் பார்க்கும்போது நம்முடைய சொந்தக்காரர் மாதிரியே ஃபீல் வரும். அவங்க அழுதா நமக்கும் அழுகை வரும். அவங்க சிரிச்சா நமக்கும் சிரிப்பு வரும். நம்மையே அவங்க பிரதிபலிப்பதா தெரியும்.

சமூகவலைத்தள புகழ் சினிமாவுக்கு யூஸ் ஆச்சா?

சினிமாவைப் பொறுத்தவரை பூஜ்ஜியத்துல இருந்துதான் என்னுடைய பயணத்தை ஆரம்பிச்சேன். ஆனா, யூ டியூப் வீடியோ, சினிமா என இரண்டுக்கும் ஒரே உழைப்புதான். சினிமா என்று வரும்போது அதன் ரீச் அதிகம்.சமூக வலைத்தளங்களில் புகழுக்காக மட்டுமே பலர் ரீல்ஸ், வீடியோ போடுவதைப் பற்றி கேட்கிறார்கள். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். எதை புரோமோட் பண்ணணும், எதை டிரெண்டாக்கணும் என்பது பார்வையாளர்களின் கையில்தான் இருக்கிறது. எந்த வீடியோ போடணும், போடக்கூடாது என்ற ரைட்ஸ் நமக்கு இல்லை.

எஸ்.ராஜா