120 நாட்களில் ரூ.700 கோடி மேஜிக்!



இது கேரள சினிமாவின் மார்க்கெட் ஸ்ட்ராட்டர்ஜி

‘பிரம்மயுகம்’, ‘ஆபிரகாம் ஓஸ்லர்’, ‘அன்வேசிப்பின் கண்டேதும்’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘ஆடு ஜீவிதம்’, ‘வர்ஷங்களுக்கு சேஷம்’, ‘ஆவேஷம்’... இப்படி இந்தாண்டு ஜனவரி ஒன்று முதல் ஏப்ரல் இறுதி வரை நான்கே மாதங்களில் மலையாள சினிமா உலகம் எவ்வித பிரம்மாண்ட விளம்பரங்களோ அல்லது பான் இந்தியா அடையாளங்களோ எதுவும் இல்லாமல் ரூ.700 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது.  

‘‘பார்வையாளனின் உணர்வுகளைத் தூண்டும் எப்படிப்பட்ட கதையும் எந்த மொழியானாலும் ஜெயிக்கும்...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் சுரேஷ்குமார். 1978ல் ‘திறனோட்டம்’ என்னும் படம் மூலம் துணை இயக்குநராக தனது பயணத்தை துவக்கிய இவர் தனது ‘சூர்யோதயா கிரியேஷன்ஸ்’ மூலம் 30க்கும் மேலான மலையாள திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

நடிகர், கேரள மாநில கலாசார நல வாரியத்  தலைவர் (2011 - 2016), கேரள திரைப்பட வர்த்தக சபை தலைவர் (2021 - 2023), இந்திய திரைப்படக் கூட்டமைப்பு துணைத் தலைவர் (2022 முதல்), கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் (2008 - 2010 மற்றும் 2014 - 2019), கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொதுச் செயலாளர் (2010 - 2012), திருவனந்தபுரம் திரைப்படம் & TV கூட்டுறவு சங்கத் தலைவர், திருவனந்தபுரம் திரைப்பட சகோதரத்துவம் தலைவர்... என பல பொறுப்புகளில் இருந்தவர்; இருப்பவர்.

‘‘உணர்வுபூர்வமாக கதை சொல்லல்தான் இதற்குக் காரணம். அதற்காக கண்களை மூடிக்கொண்டு இந்த நான்கு மாதங்களில் நடந்த மேஜிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. சென்ற வருடம் மட்டும் சுமார் 200க்கும் மேலான திரைப்படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. இந்த நான்கு மாதங்களில் நடந்த சம்பவங்கள், சென்ற வருடம் மலையாள உலகில் நடந்த தோல்விகளும் பல நஷ்டங்களும் சேர்ந்து புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்னும் மனநிலையின் வெளிப்பாடுதான்.  

சினிமாவைப் பொறுத்தவரை கதைதான் முதல் ஹீரோ. இதைப் புரிந்து கொண்டதாலேயே மம்முட்டி, மோகன்லால் போன்ற மிகப்பெரும் நடிகர்கள் கூட கதைகளை நம்பி தங்களை ஒப்படைக்கிறார்கள். அதேபோல் கேரள சினிமாவின் மார்க்கெட்டை பொருத்தவரை மற்ற மொழிகளைப் போல மிகப் பெரிய மார்க்கெட் இல்லை என்பதாலேயே இங்கே இருக்கும் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய பொருட்செலவையும் பணச் செலவையும் கொடுத்து ரிஸ்க் எடுப்பதில்லை.

அதாவது முதல் தளத்திலிருந்து கீழே விழும் பொழுது சேதாரம் குறைவு. அதே சமயம் 30வது தளத்திலிருந்து கீழே விழும் பொழுது சேதாரம் அதிகம். இதனாலேயே எங்களுடைய அதிகபட்ச பட்ஜெட் ரூ.30 கோடிக்கு மேல் தாண்டாது. ‘ஆடு ஜீவிதம்’ போல் அவ்வப்போது ரிஸ்க் எடுப்பதுண்டு. அதிலும் கூட கதையைத்தான் முதலில் இங்கே இருக்கும் தயாரிப்பாளர்கள் நம்புவார்கள்.
 
மற்ற மொழி நடிகர்களையும் சினிமா துறையையும் அவ்வளவு சுலபமாக குறை சொல்லி விடவும் முடியாது. இந்த வருடம் முதல் காலாண்டு மலையாள சினிமாவின் பொற்காலமாக இருந்திருக்கலாம் அடுத்து வரும் மூன்று மாதங்களோ அல்லது இந்த வருட இறுதி வரையிலோ எந்த மொழி என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது.

அதை அப்பட்டமாக கணிக்கத் தெரிந்து விட்டால் ஏன் இத்தனை தோல்வி படங்கள் வரப் போகின்றன..?

எங்களைப் பொருத்தவரை இந்த ரூ.700 கோடி என்பது முதல் முறை என பெருமைப்பட்டுக் கொண்டாலும் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்னும் கேள்விகளும் முன்பைக் காட்டிலும் அதிகமாகி இருக்கிறது. 

இனி அதை நோக்கி எங்களுடைய அடுத்த அடிகளையும் கூட பெரிதாக எடுத்து வைக்க வேண்டி இருக்கும் அல்லது எங்களுடைய ரிஸ்க்குகளும் டபுள் மடங்காக மாறும் என்பதில் சந்தேகமில்லை...’’ என சுரேஷ்குமார் முடிக்க, தொடர்ந்தார் சசி அயன்சிரா. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வெளியிட்டும் இருக்கிறார் இவர்.

‘‘இதை என்றோ தமிழ் சினிமா செய்து விட்டது. சசிகுமாரின் ‘சுப்பிரமணியபுரம்’, கார்த்தியின் முதல் படமான ‘பருத்தி வீரன்’ இந்த படங்களுக்கெல்லாம் மலையாளத்தில் மிகப்பெரும் ஓபனிங் இருந்தது. அதே மாதிரியான ஓர் எழுச்சிதான் இதுவும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சினிமா உலகம் ஒரு பாதையை கண்டுபிடித்து செல்லத் துவங்கும். எங்களை கேட்டால் இதில் மலையாள சினிமாதான் கடைசி என்று சொல்ல வேண்டும்.

ஏனெனில் மற்ற மொழியில் இந்த மல்டி லாங்குவேஜ், பான் இந்தியா இப்படியான கமர்ஷியல் யுக்திகளை பயன்படுத்தி இந்தியப் படங்களை வெளியிடத் துவங்கிவிட்டனர். மலையாள சினிமா உலகம் இப்போதுதான் இந்த வெற்றிப்பாதையை கண்டுபிடித்து பயணிக்கத் துவங்கியிருக்கிறது. 

என்ன... மற்ற மொழிக்கும் மலையாள சினிமாவுக்கும் இருக்கும் வித்தியாசம் இங்கே மற்ற மொழிக்கான கதை மாற்றங்கள் எதுவும் நடக்காது. அதேபோல் மற்ற மொழி நடிகர்களை கமர்ஷியலுக்காக பயன்படுத்துவதும் கிடையாது. இங்கே கதை சொல்பவர்கள் மலையாள சினிமா ரசிகர்களுக்காகவும் பார்வையாளர்களுக்காகவும் மட்டுமே கதையை உருவாக்குகிறார்கள்.

அதாவது இப்போதும் கூட மலையாள சினிமா உலகம் அகலக் கால் வைப்பதில்லை. வித்தியாசமான கதைக்களங்கள், குறிப்பாக அந்தந்த மொழிக்குரிய கலாசாரத்தைக் கொண்டு கதை உருவாக்கும் பொழுது மற்ற மொழி பார்வையாளர்களுக்கு அது புதிதாக இருக்கும். அப்படித்தான் ‘பிரேமலு’ மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது.

இங்கே இருக்கும் தயாரிப்பாளர்களின் சமீபத்திய மாற்றம் புதிய கலைஞர்களுக்கும், புது படைப்பாளிகளுக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் தான் இந்த வெற்றி.

எனினும் இதை முழுமையான வெற்றியாக கொண்டாட முடியாது. நான்கைந்து படங்கள் மாநிலம் தாண்டி வெற்றி அடைந்து கொண்டிருக்கும் அதே கால் வருட வேளையில்தான் இங்கே சுமார் 50க்கும் மேலான படங்கள் வெளியாகி தோல்வியை சந்தித்திருக்கின்றன. இந்த நிலை இங்கே மட்டுமல்ல, எல்லா மொழியிலும் இருக்கத்தான் செய்கின்றது. ஒரு படம் வெற்றி அடைகிறது என கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே தருவாயில் பின்புலத்தில் சுமார் 10 படங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

சென்ற வருடம் மாஸ் படைப்புகளை தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது. என்னைக் கேட்டால் இதை மொழிதாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் வெற்றியாக பார்ப்பதே நல்லது என்பேன்...’’ என அழுத்தமாக சசி அயன்சிரா சொல்ல, அதை ஆமோதித்தபடியே தொடர்ந்தார் ராகுல் ரிஜி நாயர். 

2017ம் ஆண்டு வெளியான ‘ஒட்டமுறி வெளிச்சம்’ என்னும் தனது முதல் படத்திலேயே நான்கு கேரள மாநில விருதுகளை வென்ற இயக்குநர், கதையாசிரியர் இவர். மட்டுமல்ல 2019ம் ஆண்டு வெளியான ‘கள்ள நோட்டம்’ படத்திற்காக சிறந்த மலையாளப் படத்திற்கான தேசிய விருது பெற்ற இயக்குநர்.

‘‘எங்களுக்கு முன்னால் வந்த தலைமுறையினர்தான் இந்த மாற்றத்திற்கான முதல் காரணம். கடந்த 40 வருடங்களாக கேரள சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மம்முட்டி சார், மோகன்லால் சார் உள்ளிட்டோர் இதுவரையிலும் தாங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்... இப்படியான கதைகளில் நடிக்க மாட்டோம்... இந்தக் கதை எங்களுக்கு செட்டாகாது... என்றெல்லாம் கதை மீதான ஆதிக்கத்தை இதுவரையில் செலுத்தியதே கிடையாது.

எதையும் ஒரு முறை என ரிஸ்க் எடுப்பதில் இப்போதைய தலைமுறைக்கு முதல் எடுத்துக்காட்டு இந்த சூப்பர் ஸ்டார்கள்தான். உதாரணமாக மம்முட்டி சார் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘காதல் த கோர்’, ‘பிரம்மயுகம்’ போன்ற படங்களில் தனது இமேஜை பார்க்காமல் நடித்திருக்கிறாரே!

இதைத்தான் அடுத்தடுத்து வந்த தலைமுறை மிகப்பெரிய உதாரணமாக எடுத்துக்கொண்டு இமேஜ் பார்க்காமல் கதைக்காக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது எப்பேர்ப்பட்ட நடிகர் என்றாலும் கதைதான் ஒரு சினிமாவின் வெற்றியை தீர்மானிக்கும்.

அதேபோல் அந்தந்த மொழிக்குரிய பண்பாட்டையும், கலாசாரத்தையும் பின்னிப் பிணைந்து கதை சொல்லும்பொழுதுதான் அது எளிய சினிமாவாகவும் யதார்த்த கதையாகவும் மக்களிடம் ஒரு நெருக்கத்தை உண்டாக்கும். அதற்காக மற்ற மொழி படங்களையும் குறைத்து எடை போட முடியாது. மலையாளப் படங்களுக்கே கிடைக்காத மிகப்பெரிய ஓபனிங் ‘லியோ’, ‘ஜெய்லர்’ போன்ற படங்களுக்கு இங்கே கிடைத்திருப்பது இன்றும் ஆச்சரியமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

அத்தனைக்கும் இறுதியாக எல்லா மொழி சினிமா உலகமும் போராடிக் கொண்டிருப்பது ஒரு விஷயத்திற்காகத்தான். அந்தந்த மொழியில் இருக்கும் நல்ல கலைஞர்கள், நல்ல தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்திய அளவில் பிரபலம் அடைய வேண்டும்... 

மொழிகள் கடந்து இந்திய திரைப்படங்கள் உருவாக வேண்டும் என்பதுதான். அதை நோக்கிய பயணத்தில் மற்ற மொழி திரைப்படங்கள் என்றோ இணைந்து விட்டன. அந்த கமர்ஷியல் மார்க்கெட்தான் இதுவரையிலும் மலையாள சினிமாவிற்கு கிடைக்காமல் இருந்தது, அதுவும் தற்சமயம் கிடைக்கத் துவங்கியிருக்கிறது.

இதற்கு ஓடிடி தளங்களும் ஒரு காரணம். மொழிகள் கடந்து யாரும் எங்கிருந்தும் சினிமா பார்க்கலாம் என்னும் நிலையே மொழி தாண்டிய ரசிகர்கள் உருவாகக் காரணம்.
அதேபோல் இங்கே இருக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் சொல்லும் கதையிலோ கதாபாத்திரங்களிலோ எந்த தலையீடும் செய்வதில்லை. யாருக்காகவும் திரைக்கதையில் மாற்றங்கள் செய்வதில்லை.  

புதிய கதைகள் வேண்டுமானால் புதிய படைப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் பெரிய நடிகர்களானாலும் சரி பெரும் தயாரிப்பாளர்கள் ஆனாலும் சரி அந்தக் கதையை நம்பி களம் இறங்கி தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்பது மட்டுமே மலையாள சினிமா உணர்த்தி யிருக்கும் சமீபத்திய பாடம்...’’ என்கிறார் ராகுல் ரிஜி நாயர்.

கதாநாயகிகள் இல்லாத மலையாள சினிமா!

இந்தியத் திரைப்படத்துறையில் மலையாள சினிமாவுக்கு என்று தனியான ஓர் இடம் உண்டு. இன்றும் கூட வணிக சினிமாவுக்கு மத்தியில் கலை நயம் மிக்க படங்கள் கேரளாவிலிருந்துதான் அதிகமாக வெளிவருகின்றன. அத்துடன் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களைக் கொடுத்து வருபவர்களும் மலையாள இயக்குநர்கள்தான். 

கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ற நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்குகின்றனர். இப்போது  கதாநாயகிகள் கூட இல்லாமல் மலையாள சினிமாக்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதை கேரள ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழக ரசிகர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆம்; கதாநாயகிகள் இல்லாத அந்த சினிமாக்கள் தமிழ்நாட்டிலும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு, இந்த வருடத்தில் வெளியான ‘பிரம்மயுகம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘ஆவேசம்’ போன்ற படங்களில் கதாநாயகிகளே கிடையாது; தமிழ்நாட்டிலும் இப்படங்கள் சக்கைப்போடு போட்டன; போடுகின்றன. 

 இப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் எப்போதாவது தலையைக் காட்டினாலும், கதையின் தேவைக்கு மீறி பெண்களை அவர்கள் பயன்படுத்தவில்லை. மட்டுமல்ல, கதையின் ஓட்டத்தில் இப்படத்தில் கதாநாயகியே இல்லை என்பது கூட ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவதில்லை. இந்தப் போக்கு ஆரோக்கியமானதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

- த.சக்திவேல்

ஷாலினி நியூட்டன்