மனிதனா? ரோபோவா?



உலகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற உணவகங்களில் சர்வர் வேலைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது ரொம்பவே பழைய செய்தி. அதனால் உணவகங்களில் ரோபோக்களை பார்த்தால் யாரும் பெரிதாக வியப்பதில்லை. 
இந்நிலையில் சீனாவில் உள்ள ஓர் உணவகத்தில் சர்வர் வேலைக்கு ஒரு ரோபோவை பயன்படுத்துகின்றனர். அச்சு அசல் ஒரு பெண்ணைப் போன்ற தோற்றம் கொண்ட ரோபோ அது. ரோபோ தொழில்நுட்பத்தில் உச்சம் என்று இதனைப் பாராட்டுகின்றனர்.

இது பெண் அல்ல; ரோபோ என்று சொன்னால் மட்டுமே மற்றவர்களுக்குத் தெரியும். அந்தளவுக்கு இந்த ரோபோவை பெண் போல வடிவமைத்திருக்கின்றனர். செயற்கை நுண்ணறிவின் துணையால் அந்த ரோபோவால் பெண்ணைப் போல பேசவும் முடிகிறது. அதன் உடை, நடை, பாவனைகள் எல்லாமே சீனப் பெண்ணை மாடலாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ அந்த உணவகத்துக்கு வருகை தரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் டிப்ஸ் கொடுக்காவிட்டாலும், கொடுத்தாலும் ஒரே மாதிரி நல்லவிதமாக இந்த ரோபோ நடந்துகொள்கிறது. இன்னும் பத்து வருடங்களில் உலகின் முக்கியமான உணவகங்களில் எல்லாம் இந்த ரோபோதான் சர்வராக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

த.சக்திவேல்