கலைஞர் தந்த இலவச உயர் கல்விதான் இந்த சாதனைக்கு காரணம்!



இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை முன்னெடுத்த அரசு மருத்துவர் இவர்தான்

பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது அதிக செலவு பிடிக்கும். குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ரொம்பவே செலவாகும். இதனை நடுத்தர, ஏழை மக்களால் தாக்குப்பிடிக்கவே முடியாது. இதனால் பலர் மரணத்தைத் தழுவும்நிலை ஏற்படும்.
இந்த வேதனையான விஷயமே அரசு மருத்துவரான ஆண்டன் யுரேஷ்குமாரை இலவச மாற்று அறுவை சிகிச்சையை நோக்கி உந்தியிருக்கிறது. சிறுநீரகவியல் துறை அறுவை சிகிச்சை நிபுணரான அவர், சமீபத்தில் ஏழை நோயாளி ஒருவருக்குத் தனியார் மருத்துவமனை ஒன்றில் இலவசமாகவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முடித்து சாதித்திருக்கிறார்.

அநேகமாக இந்தியாவில் இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவர் இவராகவே இருக்கும். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை சீனியர் மருத்துவராக பணியாற்றும் அவரைச் சந்தித்தோம். ‘‘இது என்னுடைய நீண்ட நாள் கனவு. அதுக்கான முன்னெடுப்பை இப்ப தொடங்கியிருக்கேன்...’’ ஆத்மார்த்தமாக பேசுகிறார் மருத்துவர் ஆண்டன்.   

‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்துல. அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். நான் எட்டாம் வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் படிச்சேன். பனிரெண்டாம் வகுப்புல மாவட்ட அளவுல ரெண்டாவது இடம் பிடிச்சேன். நுழைவுத்தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன்.அப்புறம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைச்சது. பிறகு, எம்.எஸ் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், எம்.சிஹெச் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியிலும் முடிச்சேன்.

யு.ஜியில் நான் கோல்டு மெடலிஸ்ட். அந்நேரம் என் சீனியர் ஒருவர் வெளிநாடு போகச் சொன்னார். அதனால், அமெரிக்காவில் படிக்க தேர்வு எழுதினேன். அதிலும் டாப்பராக வந்தேன். ஆனா, விசா ரிஜெக்ட் ஆகிடுச்சு. எனக்கு சர்ஜரினா பிடிக்கும். அதனால்தான் 2005ல் எம்.எஸ் ஸ்டான்லியில் படிச்சேன். அங்க படிக்கும்போதே வெளியில் லேப்ராஸ்கோபியும் கத்துக்கிட்டேன். பிறகு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன்.

இந்நேரம், நான் அமெரிக்கத் தேர்வுக்கு படிச்சப்ப கிடைச்ச அனுபவத்தை வச்சு KONCPT என்ற பெயர்ல ஒரு கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சேன். எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கிறது மட்டுமில்லாமல் மேற்படிப்பு தேர்வுக்கு அவங்களைத் தயார்படுத்தினேன்.அதனால், இன்னைக்கு அகில இந்திய அளவில் யூராலஜி பிரிவில் டாக்டர் ஆண்டன்னு சொன்னால் தெரியும். ஏன்னா, என்னிடம் யூராலஜியில் மட்டுமே ஆயிரம் மாணவர்கள் படிச்சிருப்பாங்க. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் வாங்கி
யிருக்காங்க.

எனக்கு பாடம் எடுத்த மருத்துவர் ஆண்டோ, ‘பணத்தை நோக்கி போகாதே. மனிதர்களை சம்பாதிச்சு வச்சுக்க. அதுதான் உதவும்’னு சொல்வார். அந்த எண்ணமே என்னுள் விதையாக வளர்ந்திடுச்சு.2012ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் யூராலஜி பிரிவில் எம்.சிஹெச் படிச்சேன். 2015ல் அங்கே உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தேன். அப்ப லேப்ராஸ்கோபி முறையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் தருபவரிடமிருந்து சிறுநீரகம் பெறும் சர்ஜரி செய்தேன். இந்தமுறையில் அறுவை சிகிச்சை செய்த இரண்டாவது அரசு மருத்துவர் என்ற பெயரைப் பெற்றேன்.   

பிறகு, 2021ல் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை பார்த்தேன். அங்க நானும் என்னுடன் பணியாற்றிய பலராமன் சாரும் சேர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை குழந்தைகளுக்கு ஆரம்பிச்சோம். அங்கேயும் முதல்முறையாக குழந்தைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன். பொதுவாக குழந்தைகளுக்குச் சிறுநீரக பிரச்னை மரபணு குறைபாடுகளால் வந்திடும். அப்ப மாற்று அறுவை சிகிச்சை செய்யணும்.

குழந்தைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெரியவர்களைவிட நல்ல சக்சஸ்ஃபுல்லாக இருந்தது. இது எங்களுக்கு சந்தோஷத்தைத் தந்தது. இப்ப கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணி செய்றேன்.இதுக்கிடையில் 2015ல் எம்.சிஹெச் முடிச்சதுமே ‘மெட்ராஸ் கிட்னி ஃபவுன்டேஷன்’ உருவாக்கி அதன்வழியாக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்திட்டு வந்தேன்...’’ என்கிறவர் இந்த இலவச அறுவை சிகிச்சைக்கான காரணத்தைப் பகிர்ந்தார்.

‘‘நான் 1998ல் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பிளஸ் டூவுல டப்பராக வந்தப்ப தமிழகத்துல கலைஞர் ஆட்சி நடந்தது. அவர் ஆட்சியில் மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வி முழுவதும் இலவசம்னு கொண்டு வந்தார். புத்தகம், டியூசன் ஃபீஸ், மெஸ் ஃபீஸ், அறை வாடகைனு எல்லாமே இலவசம்.

இதற்காக நாம் கட்டும் பில்லை எடுத்திட்டுபோய் கொடுத்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கலாம். இதனால், 2004ல் எம்பிபிஎஸ் முடிக்கிறப்ப என்னிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கையில் இருந்தது. இந்தப் பணத்தை வச்சுதான் நான் அமெரிக்காவில் படிப்பதற்கான தேர்வு எழுதினேன்.

அந்தக் கோச்சிங் படிச்ச அனுபவம்தான் என்னை கோச்சிங் சென்டர் நடத்தவும் வழிகாட்டியது. அப்ப அந்த பணம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அதுக்குக் காரணம் இலவசமாக படிச்சதுதான்.அதை இந்தச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சேன். அதனால், என் உயர்கல்வியை இலவசமாக்கிய கலைஞர் நினைவாக கலைஞரின் நூற்றாண்டு நேரத்துல இந்தப் பணியை முன்னெடுத்தேன்.  

இன்னைக்கு தமிழ்நாட்டின் புள்ளி விவரப்படி 6 ஆயிரத்து 322 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புல இருக்காங்க. சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு ஐந்து அல்லது எட்டு வரைதான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்குது.ஆண்டுக்கு நூறுனு வைச்சாலும் நாம் 6 ஆயிரத்தை நெருங்குவது சிரமம். தவிர, ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் செய்யும். இதெல்லாமே என்னை மாற்று அறுவை சிகிச்சையைத் துரிதப்படுத்த வச்சது. இதில் தனியார் பங்கும் மிக அவசியம்.

அதனால், உடனே நான் வானொலி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்னு விளம்பரம் செய்தேன். அப்படியாக பனிரெண்டு பேர் வரை வந்தாங்க. இதுல நாகர்கோவிலைச் சேர்ந்த டேவிட்சன் மட்டுமே முழு உடல்தகுதி பெற்றார். அவருக்கு அவங்க அப்பா டேவிட் ஆபிரகாம் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். இதனால், அட்மிஷன் டூ டிஸ்சார்ஜ் வரை அனைத்தும் இலவசமாகவே ஒரு தனியார் மருத்துவமனையில் செய்தோம்.

இதுல மருந்துசெலவு, மருத்துவமனைக் கட்டணம் மட்டும் 3 லட்சம் ரூபாய் வரை வந்தது. அதைமட்டும் நான் என் கையிலிருந்து கொடுத்தேன். மற்றபடி இதுல ஒன்பது டாக்டர்கள் கலந்துக்கிட்டாங்க. அவங்க யாரும் பணம் வாங்கல...’’ என்கிறவர், இதனை சாத்தியப்படுத்தும் வழிகள் பற்றிக் குறிப்பிட்டார். ‘‘அரசு மருத்துவமனைகள்ல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஏழரை லட்சம் ரூபாய். தனியார்ல இதைவிட ஐந்து லட்சம் அதிகமாகும். இதுவே கார்ப்பரேட்ல 15 லட்ச ரூபாய்க்கும் கூடுதலாக வரும்.

எனக்கு மற்ற மருத்துவர்களும் உதவ முன்வந்ததால் இலவசமாக செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இருந்தும் மருந்துச்செலவும், மருத்துவமனை செலவும் இருக்கு. முதல் நோயாளிக்கு என் காசைப் போட்டேன். இப்ப அடுத்ததாக நான்குபேர் ரொம்ப கஷ்டப்பட்டவங்க இருக்காங்க. அவங்களுக்கு விரைவில் செய்யப் போறோம். 

இதுல சிலர் இன்சூரன்ஸ் நோயாளிகளும் இருக்காங்க. அந்த இன்சூரன்ஸ் பணத்துல எனக்கு அறுவை சிகிச்சைக்கென ஒரு தொகை வரும். அந்தத் தொகையை அப்படியே ஏழை நோயாளிகளுக்குப் போட்டு பண்ண திட்டம் வச்சிருக்கேன்.

இதுதவிர, நான் ஒரு மருத்துவமனைக்கு விசிட்டிங் மருத்துவராக போவேன். அவங்ககிட்ட ஒரு அறுவை சிகிச்சையை ஃப்ரீயாகப் பண்ணித் தரணும்னு கோரிக்கை வச்சிருக்கேன்.அதாவது மருந்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதை நாம் மேனேஜ் செய்துக்கலாம். ஆபரேஷன் தியேட்டர் வேணும் இல்லையா? அதுக்கான கோரிக்கை. மிடில் கிளாஸ், ஏழை நோயாளிகள் எங்களை www.madraskidneyfoundation.com வழியாக தொடர்புகொள்ளலாம்...’’ என்கிறவர் சிறுநீரக செயலிழப்புக்கான காரணத்தை விவரித்தார்.  

‘‘சின்ன குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழக்கக் காரணம் மரபணுக் குறைபாடு. பெரியவங்களுக்கு வரக் காரணம் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும். அப்புறம், குழந்தைகளுக்கு வர்ற சாதாரண வைரஸ் காய்ச்சல்கூட சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யலாம். அது பின்னாட்களில் தெரிய வரும்.

இதை Ig A Nephropathyனு சொல்வோம். இப்ப அந்த 18 வயசு பையனுக்கு சிறுநீரகம் செயலிழக்கக் காரணம் சிறுவயதில் அவருக்கு வந்த வைரஸ் காய்ச்சல்தான். இதனால் சிறுநீரகம் சுருங்கிடும். அப்ப மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.

சிறுநீரகத்தை பாதுகாக்க தண்ணீர் நிறைய குடிக்கணும். சிறுநீர் மஞ்சளாக இல்லாமல் வெளிர் நிறமாக போகணும். அவ்வளவுதான். ரொம்ப முக்கியம் உப்பைக் குறைக்கணும்.அடுத்து மனஅழுத்தம் ஆகாதீங்க. தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. 

குறிப்பாக சைக்கிளிங் பண்ணுங்க. இதனால், சிறுநீரகப் பிரச்னை வராது...’’ என்கிற மருத்துவர் ஆண்டன் யுரேஷ்குமார், ‘‘என்னுடைய இலக்கு மிடில் கிளாஸ், ஏழை மக்கள் எளிதாக பயன்பெறுகிற மாதிரி ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி யூனிட்டை தமிழகத்துல உருவாக்கணும் என்பதுதான்...’’ என நம்பிக்கை மிளிர சொல்கிறார்.

பேராச்சி கண்ணன்