மர்ம தேசம்!



‘Navel of the world’ - இப்படித்தான் வர்ணிக்கப்படுகிறது அந்தத் தீவு. அதாவது, உலகின் மையப் பகுதி என்ற அர்த்தத்தில் அப்படி குறிப்பிடப்படுகிறது. ஆனால், சிலரோ அதிசய மர்மதேசம் என அதனை வியந்து விளிக்கின்றனர். 
அது ஏறக்குறைய உண்மையும்கூட. அது மர்மதேசம் மட்டுமல்ல; ஓர் ஆச்சரிய தேசமும்தான். தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் தொலைதூரமாக, உலக வரைபடத்தில் கண்களுக்குப் புலப்படாது காட்சியளிக்கும் அந்த ஆச்சரியத் தீவின் பெயர் ஈஸ்டர் ஐலேண்ட்!

ஓசியானியா கடற்பரப்பில் பாலினேசியன் முக்கோணத்திற்குள் அடங்கும் இந்தச் சிறிய தீவு உலகப் பாரம்பரிய சின்னத்திற்குப் பெயர் பெற்ற ஒன்று. காரணம், இங்குள்ள மோவாய் கற்சிலைகள்.
இந்தச் சிலைகள் பற்றியும், இங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் இப்போதும் ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதனாலேயே தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் அடிக்கடி படையெடுக்கும் இடமாக இருக்கிறது இந்த ஈஸ்டர் தீவு. அதென்ன மோவாய் கற்சிலைகள்? அதற்குமுன் இந்தத் தீவினைப் பற்றின அறிமுகம் ஒன்றைப் பார்த்துவிடலாம்.  

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலிக்குச் சொந்தமானது இந்தத் தீவு. ஆனால், சிலிக்கும் இந்தத் தீவிற்கும் உள்ள தொலைவு சுமார் 3 ஆயிரத்து 500 கிமீ. இதற்கு அருகில் மனிதர்கள் வசிக்கும் தீவு என்றால் அது பிட்கெய்ர்ன் தீவுதான். இந்தத் தீவும் ஈஸ்டர் தீவிலிருந்து சுமார் 2 ஆயிரம் கிமீ தொலைவில் உள்ளது. 22 கிமீ நீளமும், 11 கிமீ அகலமும் கொண்ட இந்தத் தீவில் 2017ம் ஆண்டின் கணக்குப்படி 7 ஆயிரத்து 750 பேர் வசிக்கின்றனர். இதனை நகராட்சி கவுன்சில் நிர்வகிக்கிறது. இதன் மேயராக சிலியைச் சேர்ந்த பெட்ரோஸ் எட்மண்டஸ் போவ் என்பவர் இருக்கிறார்.  

இதில் ஹங்கா ரோவா என்ற நகரே பெரியது. இங்குதான் துறைமுகம், ஹோட்டல்கள், மருத்துவமனை, விமானநிலையம் உள்ளிட்ட சகலமும் உள்ளன. கோழி வளர்த்தல், விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவற்றுடன் சுற்றுலாவும் இந்தத் தீவின் பெரிய பொருளாதாரமாக மிளிர்கின்றது. 

இந்தத் தீவு ஓர் எரிமலைத் தீவாகும். முக்கியமாக மூன்று அழிந்துபோன எரிமலைகளால் சூழ்ந்தது. வடக்கே தெரேவாகா எரிமலையும், கிழக்கே பொய்கே எரிமலையும், தெற்கே ரனோ காவ் எரிமலையும் இந்தத் தீவிற்கு ஒரு முக்கோண வடிவமைப்பைத் தருகின்றன.

இதுதவிர, எரிமலை அம்சங்களில் ஒன்றாக ரானா ரராக்கு பள்ளம், புனா பாவ் பள்ளம், லாவா டியூப் எனப்படும் எரிமலைக் குகைகளும் நிறைய இத்தீவில் உள்ளன.

இங்குள்ளவர்கள் தென்கிழக்கு பாலினேசியர்கள் எனக் கருதப்படுகின்றனர். கிபி 300 முதல் கிபி 1200 வரை ரபா நுயி மக்கள் இங்கு செட்டிலானதாகக் கருதப்படுகிறது. இதில் மாறுபட்ட கருத்துகளையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். இந்த மக்கள் பேசிய ெமாழி ரபா நுயி எனப்படுகிறது. இன்றும் அங்கே ஸ்பானிஷ் மொழியுடன் ரபா நுயியும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. இந்தத் தீவினை 1722ம் ஆண்டு டச்சுக்காரர் ஜேக்கப் ரோக்வீன் என்பவர் பசிபிக் பெருங்கடலில் டேவிஸ் நிலப்பகுதியைத் தேடி அலைந்தபோது பார்த்துள்ளார். அவர் ஈஸ்டர் ஞாயிறு அன்று அத்தீவினை பார்த்ததால் இதற்கு ஈஸ்டர் ஐலேண்ட் எனப் பெயரிட்டுள்ளார்.

மோவாய் கற்சிலைகள்…

ரபா நுயி மக்கள் கற்கால கலாசாரத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் இந்த மோவாய் கற்சிலைகளை கிபி 1250 முதல் 1500க்குள் செதுக்கியதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். எரிமலைகள் சூழ்ந்த தீவு என்பதால் அதிலிருந்து வெளிவரும் சாம்பல்பாறைகளாக மாறுவதால் அதனைக் கொண்டு இந்த மோவாய் கற்சிலைகளைச் செதுக்கியுள்ளனர். புனா பாவ் எரிமலையிலிருந்து வெளியான வெளிர் சிவப்பு நிற பாறைகளைக் கொண்டு சில மோவாய் சிலைகளின் மேல் புகோவ் எனப்படும் தொப்பி போன்ற அமைப்பையும் அந்த மக்கள் உருவாக்கி உள்ளனர்.

இந்தச் சிலைகள் செவ்வக வடிவ முக அமைப்பில் நீண்ட காதுகளையும், நீளமான மூக்கினையும், கண்களையும் உதட்டையும் கொண்டு காணப்படுகின்றன. இப்படியாக 887 மோவாய் கற்சிலைகள் இந்தத் தீவு முழுவதும் உள்ளன.இவை அதிகபட்சமாக 32 அடி வரை உயரம் கொண்டவையாக இருக்கின்றன. அதன் எடை மட்டும் 82 டன்கள். அதாவது 74 ஆயிரத்து 500 கிலோ. இதை பெரிய ஆச்சரியமாகப் பார்க்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏனெனில், இந்தச் சிலைகளை அஹூ எனப்படும் கல் மேடைகளில் நிறுத்தியுள்ளனர். அவை இந்தத் தீவு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் அதனை எப்படி நகர்த்தியிருப்பார்கள், எப்படி நிறுத்தியிருப்பார்கள் என்பது அவர்களுக்கு இன்னும் புதிராய் உள்ளது. இதுகுறித்தும் ஆய்வுகள் நடந்துகொண்டே உள்ளன. 

ஆனால், இதுவரை பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை இந்த மோவாய் கற்சிலைகள் ரபா நுயி மக்களின் பழைய அரசர்களை நினைவூட்ட எழுப்பப்பட்டிருக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். ஒவ்வொரு  அரசரும் இறக்கும்போது எரிமலையிலிருந்து கிடைக்கும் பாறைகளைக் கொண்டு அவர்களுக்குச் சிலைகள் செதுக்கி அதனை அஹூவில் நிறுத்தியதாகக் குறிப்பிடுகின்றனர்.

அஹூவையும் அந்தப் பகுதியையும் புனிதமாக அந்தக் கிராம மக்கள் கருதியுள்ளனர். கிராமத்தைப் பார்த்தபடி மோவாய் நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கிராமத்தைக் கண்காணித்தபடி பாதுகாத்தனர் என்றும் சில செய்திகள் உள்ளன.

பெரும்பாலான கிராம மக்கள் அந்த அஹூவை ஒட்டியே வாழ்ந்ததாகவும் அதற்குமுன்னுள்ள பெரிய இடத்தில் சடங்குகள் நடத்தியதாகவும் குறிப்புகளில் சொல்லப்படுகிறது. இந்த ேமாவாய் கற்சிலைகளைக் காணவேண்டி சிலியிலிருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

பேராச்சி கண்ணன்