படிப்புக்கு மவுசு...வேலைக்கு ரவுசு!



வேலையில்லா ஐஐடி மாணவர்கள்

இந்தியா முழுக்க 23 ஐஐடி-கள் உண்டு. ப்ளஸ் டூ முடித்த மாணவர்கள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எஞ்சினியரிங் காலேஜ்களைத் தாண்டி ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி-களில் படிக்கவே விரும்புகின்றனர். 
ஆனால், ஐஐடிகளில் நுழைவது என்பது ஒட்டகத்தின் காதில் நுழைவது மாதிரி. இருந்தாலும் கஜினி முகமது மாதிரி ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் முட்டி மோதி சேர்ந்துவிடுகின்றனர். காரணம், ஐஐடி படித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற ஒரு செல்வாக்கு அந்த படிப்புக்கு இருப்பதுதான்.

ஆனால், 2024ம் ஆண்டுக்காக பல ஐஐடிகளில் நடத்திய கேம்பஸ் வேலைவாய்ப்பு முகாம்களில் சுமார் 15லிருந்து 30 சதவீதம் விண்ணப்பித்த ஐஐடி மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்னும் செய்திகள் அந்த மாணவர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. 

அதுவும் பிரபல ஐஐடிகளில் கிடைத்த வேலையின்மை புள்ளிவிபரங்கள் திகிலூட்டுகின்றன.மும்பை ஐஐடியில் 30 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. கான்பூர் ஐஐடியில் 21 சதவீத மாணவர்களுக்கு வேலை இல்லை. சென்னை ஐஐடியில் 45 சதவீத மாணவர்களுக்கு வேலை இல்லை. கரக்பூர் ஐஐடியில் 55 சதவீதத்துக்கும் மேல் வேலை இல்லை.

பொதுவாக ஐஐடிகளில் வருடத்துக்கு இருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடக்கும். ஒன்று டிசம்பர் மாதம். அடுத்து ஜனவரி முதல் ஜூன் வரை. நடப்பு வருடமான 2024க்கான வேலைவாய்ப்பு முகாம் (கேம்பஸ் இண்டர்வியூ) கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த மாதத்தில் நடைபெற்ற முகாம்களில்தான் நம் ஐஐடி மாணவர்களின் கனவு மேற்படி உடைந்துபோயிருக்கிறது.

2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் மிகக் குறைந்திருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். உலகளவிலான பொருளாதார மந்தநிலை, உக்ரைன் - ரஷிய போர், இஸ்ரேல் - பாலஸ்தீன வன்முறை போன்றவைதான் இந்த வேலைவாய்ப்பு நெருக்கடிக்கு காரணமாக பலர் கைகாட்டினாலும் காசையும் கனவையும் தொலைத்த நம் ஐஐடி மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கு என்னமாதிரியான ஆறுதலைத் தரமுடியும் எனும் ரீதியில் இது தொடர்பான ஆர்வலரைப் பிடித்து விசாரித்தோம்.

‘‘இது ஒரு நார்மலான பிரச்னைதான். உலகப் பொருளாதாரம் வளர்ந்தால் வேலைவாய்ப்பு பெருகும். மந்தமாக இருந்தால் வேலைவாய்ப்பு குறையும். இதுதான் இந்த வேலைவாய்ப்பின் தாரகமந்திரம்...’’ என்று ஆரம்பிக்கும் கார்த்தி ஒரு முன்னாள் ஐடி ஊழியர். ‘டீம் எவரஸ்ட்’ எனும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் இப்பொழுது சேவை செய்துவருகிறார்.

‘‘பொதுவாவாக நல்ல நிலையில் ஒரு கம்பெனி இருந்தால் வேலைவாய்ப்பு பெருகும். மந்த நிலை இருந்தால் வேலைவாய்ப்பு குறையும். கோவிட் காலத்தில் ஆட்குறைப்பு நடந்தது. கோவிட் முடிந்ததும் ஆட்களை எடுத்தார்கள்.

கோவிட்டுக்கு பின்பு எடுக்கப்பட்ட ஆட்களே இன்றைய நிலையில் போதுமானவையாக இருக்கும்போது கம்பெனிகள் மேலும் ஆட்களை எடுத்து ஏன் கையை சுட்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த முறை ஆட்களை அதிகம் எடுக்காமல் விட்டிருக்கலாம். அதுவும் இந்திய தேர்தல் வேறு நடைபெறுகிறது.

தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கம்பெனிகள் கொஞ்சம் கால அவகாசம் எடுத்திருக்கலாம்...’’ என்று சொல்லும் கார்த்தியிடம், ஒருவேளை இந்திய மாணவர்கள் இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் பின் தங்கியிருக்கிறார்களா... அப்படி
யிருப்பது ஒருவேளை வேலையின்மைக்குக் காரணமாக இருக்குமா என்று கேட்டோம்.

‘‘இல்லை. தகவல் தொழில்நுட்பம் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) எனும் ஒரு துறை வளர்ந்தபோது மேற்குலக பணக்கார நாடுகளின் முதல் குறி இந்தியாவாகத்தான் இருந்தது. காரணம், இந்தியர்கள்தான் உலக மொழியான ஆங்கிலத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருந்தார்கள். சீனா இந்தியாவைவிட மக்கள்தொகையில் அதிகம் இருந்தாலும் சீனா உற்பத்தித் துறையில்தான் முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இதனால்தான் சீனா உற்பத்தித் துறையிலும் இந்தியா சேவைத் துறையான தொழிநுட்பத் துறையிலும் முன்னணியில் இருந்தன; இருக்கின்றன. இந்திய மாணவர்கள் மட்டும் அல்ல... பொதுவாக கல்வி வளாக படிப்புக்கும் நிஜத்துக்கும் எல்லா நாடுகளிலுமே ஒரு சிறிய இடைவெளி இருக்கத்தான் செய்யும். 

இதை ஐடி கம்பெனிகள் சுலபமாகக் கடந்துவிடும். டிரெயினிங் எல்லாம் கொடுத்துத்தான் ஒரு மாணவனை ஒரு கம்பெனி தன்னுடன் வைத்துக்கொள்ளும். ஆகவே, இன்று இல்லாவிட்டாலும் தேர்தலுக்குப் பிறகு இந்த நிலை மாறும் என்றுதான் தோன்றுகிறது...’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் கார்த்தி.

டி.ரஞ்சித்