மணிரத்னம் கதாநாயகி... தனுஷ் ஜோடி..!



‘நவரசா’ வெப் சீரிஸ் மூலம் திரை அறிமுகம், தொடர்ந்து ‘வித்தைக்காரன்’ படத்தில் சினாமிகா கேரக்டர். பக்கத்து வீட்டு பெண் போன்ற பளிச் முகம், ஹோம்லி, அதேசமயம் மாடர்ன் என பின்னிப்பிணைந்த கலவையாக பேசுகிறார் ‘ஃபைண்டர்’ பட நாயகி தாரணி. உங்களைப் பற்றி சொல்லுங்க!எனக்கு சொந்த ஊர் ஹைதராபாத். சென்னை வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிடுச்சு. நான் எட்டாவது படிக்கும் பொழுது இங்கே வந்தேன். இசிஇ படிப்பை தேர்வு செய்து இன்ஜினியரிங் முடிச்சேன்.

அப்பா ஹைதராபாத்தில் பிரபல மருத்துவமனையின் சிஇஓ. அம்மா ஹவுஸ் வைஃப். சின்ன வயதில் இருந்து சினிமா ஆர்வம் அதிகம். அதற்கான முயற்சியும் ஒரு பக்கம் செய்துகிட்டேதான் இருந்தேன். அதனுடைய விளைவா ‘நவரசா’ வெப் சீரிஸில் இயக்குநர் வஸந்த் சாருடைய ‘பாயாசம்’ எபிசோடில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதுதான் என்னுடைய முதல் திரை அறிமுகம். அப்பா, அம்மாவை பொருத்தவரை நான் சினிமாவை தேர்வு செய்தது அவங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக எல்லாம் இல்ல. காரணம் மாசா மாசம் ஏதாவது ஒரு கோல் நான் மாத்திக்கிட்டே இருப்பேன். அப்படிதான் சினிமாவும் ஒரு மாசம் இருக்கும்னு அப்பா நினைச்சார்.  

ஆனா, ‘நவரசா’ பார்த்துட்டு அப்பாவுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்து தொடர்ந்து சப்போர்ட் செய்ய ஆரம்பிச்சுட்டார்.

முதல் கேமரா அனுபவம் எப்படி இருந்தது?

கல்லூரியிலே இறுதி ஆண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன், அப்ப ஒரு காஸ்டிங் கால். மணிரத்தினம் சார் தயாரிப்புனு வந்திருந்தது. ஒரு சின்ன முயற்சி செய்து பார்ப்போமேனு என்னுடைய புகைப்படத்தை அனுப்பி வைத்தேன். நினைச்சுக் கூட பார்க்கல... முதல் திரை அனுபவமே வஸந்த் சார் இயக்கத்தில் மணிரத்தினம் சார் தயாரிப்பில் நடிப்பேன் என. கனவு மாதிரி இருந்தது.

கும்பகோணத்தில்தான் படப்பிடிப்பு நடந்துச்சு. உடன் டெல்லி கணேஷ் சார், அதிதி பாலன் மேம் உள்ளிட்ட எல்லோருமே தேர்ந்த நடிகர்கள். அவங்க கூட முதல் காட்சி.

சொன்னால் நம்ப மாட்டீங்க... முதல் காட்சி டேக் ஓகே அப்ப முடிவு செய்தேன் இதுதான் என்னுடைய வாழ்க்கை அப்படின்னு. அதனால் சீரியஸாகவே சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கிட்டேன்.

‘ஃபைண்டர்’ திரைப்படம் மற்றும் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்க?

என்னுடைய கேரக்டர் பேர் பல்லவி. படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் திரில்லர். அதில் இன்வெஸ்டிகேஷன் குழுவில் எனக்கு ஒரு முக்கியமான கேரக்டர். படப்பிடிப்பு நாளைக்கு ஆரம்பம் அப்படின்னா இன்னைக்குதான் நான் இந்தப் படத்தில் ஃபைனல் ஆனேன். அப்படி கடைசி நேரத்தில் இந்தக் கதையில் சேர்ந்தேன். இந்தப் படமும் ‘நவரசா’ மாதிரியே ஒரு வித்தியாசமான அனுபவம். சார்லி சார், நிழல்கள் ரவி சார், சென்ராயன்... இப்படி வித்தியாசமான அதே சமயம் அனுபவசாலி நடிகர்கள் கூட நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நிறையக் கத்துக்கிட்டேன். படத்தின் அசிஸ்டன்ட் இயக்குநர் மூலமாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. வினோத் ராஜேந்திரன் சார் இயக்கத்தில் படப்பிடிப்பு களமும் சரி படமும் சரி வித்தியாசமாக இருந்துச்சு.

உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?

சதீஷ் நடிச்ச ‘வித்தைக்காரன்’ படத்தில் நான் ஏற்கனவே நடித்திருந்தேன். அதில் வைரமுத்து சார் வரிகளில் எனக்கென ஒரு தனி பாடலும் கூட இருக்கும்... சினாமிக்கா அப்படின்னு.
இது தவிர்த்து நிறைய விளம்பரங்கள் நடிச்சிட்டு இருக்கேன். உடன் சில கதைகள் கேட்டுக்கிட்டு இருக்கேன். சில படங்கள் ஒப்பந்தமாகி இருக்கு. ஆனா, இப்போதைக்கு அதிகாரபூர்வமா சொல்ல முடியாத சூழல்.

சினிமாவுக்கு முன்... சினிமாவுக்கு பின்... உங்கள் பார்வை மாறி இருக்கிறதா?

நிச்சயமா மாறிருக்கு. சினிமாவுக்குள்ளே வருவதற்கு முன்னாடி வரையிலும் சினிமா நடிகர்கள், கலைஞர்கள் எல்லாம் ஜாலியா இருக்காங்க... நிறைய காசு சம்பாதிப்பாங்க, பந்தாவான ஹோட்டலில்தான் சாப்பிடுவாங்க... இப்படியெல்லாம் நினைச்சிருக்கேன். 

ஆனா, 30 செகண்ட் விளம்பரத்துக்கு கூட ரெண்டு நாட்களுக்கு மேல ஹார்ட் வொர்க் செய்தால்தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்னு அனுபவபூர்வமா உணர்ந்தேன். அத்தனை சினிமா கலைஞர்கள் மேலயும் ஒரு பெரிய மரியாதை இப்ப வந்துடுச்சு. சினிமா மீதான என்னுடைய மொத்த பார்வையும் மாறிடுச்சு. ஒரு சின்ன கமர்ஷியலுக்கு பின்னாடி கூட எத்தனை மக்கள் வேலை செய்யறாங்க... எவ்வளவு பணம் செலவாகுது... எத்தனை உழைப்பு இருக்குனு புரிஞ்சு
கிட்டேன்.

ட்ரீம் கதாபாத்திரம் ஏதேனும் உண்டா?

எனக்கு தனுஷ் சார் ஆக்டிங் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருக்கு ஜோடியா ஒரு படத்திலாவது நடிக்கணும் என்கிறதுதான் என்னுடைய கனவு. அதேபோல் கதாநாயகியா வருகிற அத்தனை நடிகைகளுக்கும் இருக்கக்கூடிய ஒரு கனவுதான் மணி சார் படத்தில் நாயகி மற்றும் கௌதம் மேனன் சார் இயக்கத்தில் ஒரு படம்.இந்தக் கனவெல்லாம் எனக்கும் இருக்கு. இதெல்லாம் நடந்துட்டா ஒரு முழுமையான திருப்தி கிடைக்கும்.

இது தவிர எப்போதுமே சினிமா குறித்த ஏதாவது ஒரு கனவில் இருந்துகிட்டேதான் இருப்பேன். ஒரு படம் பார்க்கும்பொழுது கூட இந்தக் கதையில் நான் நடிச்சிருந்தா எப்படி நடிப்பேன், இந்தக் கதாபாத்திரம் நான் நடிச்சா எப்படி இருக்கும்... இப்படி யோசிச்சுகிட்டே இருக்கிற ஆள் நான். அதனால் நல்ல கதை, நல்ல கேரக்டர் எதுவா இருந்தாலும் அதில் நடிக்கணும் என்பதுதான் ட்ரீம்.

ஷாலினி நியூட்டன்