இந்த ஃபயர் படமும் A படம்தான்!



‘ஆரோகணம்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘பரதேசி’, ‘மதயானை கூட்டம்’, ‘ரம்மி’... உள்ளிட்ட பல படங்களை தனது ‘ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரித்தவர் ஜேஎஸ்கே சதீஷ். விநியோகஸ்தராகவும், நடிகராகவும் வலம் வரும் சதீஷ் முதல்முறையாக ‘ஃபயர்’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் தனது அடுத்த பயணத்தை துவக்கவிருக்கிறார்.

நீங்களே இயக்குநர்... ஏன் இந்த திடீர் முடிவு?

விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் சுமார் 24 படங்களை இதுவரையிலும் ரிலீஸ் செய்திருக்கேன். ரிலீஸ் செய்ததுதான் 24 படங்கள்... ஆனால், வாங்குவதற்காகவும் அல்லது தயாரிப்பதற்காகவும் எத்தனையோ படங்களை பார்த்திருக்கேன் அல்லது கதை கேட்டு இருக்கேன். இதனாலேயே சினிமா பற்றிய புரிதல் தானாகவே வந்திருக்கு. எப்படி ஒரு கதையை தேர்வு செய்வதில் ஓர் இயக்குநருக்கு புரிதல் இருக்குமோ அதே அளவுக்கு புரிதல் தயாரிப்பாளரிடமும் இருந்தால்தான் படத்துக்கு வெற்றி கிடைக்கும்.

அந்தவகையில் அனுபவங்களின் வழியா சரியான கதையை தேர்வு செய்கிற அடிப்படை அறிவு எனக்கிருக்குனு நம்பறேன். மேலும் படத்தின் எடிட்டிங், தயாரிப்பு மேனேஜ்மென்ட், நடிகர்கள் தேர்வு, ப்ரொமோஷன்... எல்லாமே ஓரளவு கத்துக்கிட்டேன் என்பதால் நாமே ஒரு கதையை இயக்கலாம்னு தோணுச்சு. அப்படி உருவானது தான் ‘ஃபயர்’.

‘ஃபயர்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் வேறு... அந்த இந்திப் படம் உருவாக்கிய சர்ச்சையும் வேறு... இந்தப் படம் எப்படி?

அந்த நெருப்பு வேறு இந்த நெருப்பு வேறு. ஓர் ஆணும் பெண்ணும் தனியா இருக்கும் பொழுது அவர்களுக்குள்ள ஒரு நெருப்பு உருவாகும்... அதைச் சார்ந்த கதைதான் இந்த ‘ஃபயர்’.
தவிர பல மொழிகளுக்கு டப்பிங் செய்யும் பொழுது இந்த தலைப்பும் சரியா பொருந்தும். பான் இந்தியா திரைப்படம்னு சொல்ல மாட்டேன்... ஆனா, பன்மொழி படமாக இந்தப் படம் இருக்கும்.

படத்தின் க்ளிப்ஸ் பல கேள்விகளை எழுப்புகிறது... என்ன கதை?

செய்திகளில் படிக்கும் சம்பவம்தான் படத்துக்கு இன்ஸ்பிரேஷன். என்ன செய்தினு சொல்லிட்டா கதையை முழுமையா சொல்லிட்ட மாதிரி ஆகிடும். ஆனா, ஒன் லைனாக சொல்லணும்னா நான்கு பெண்களின் வாழ்க்கையில ஒரு சம்பவம் நடக்குது... அந்தச் சம்பவத்துக்கு காரணமாக ஓர் ஆண்... இது அத்தனையும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும் போது உண்டாகும் விளைவுகள்தான் கதை.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி சொல்லுங்க?

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு பெண்கள்தான். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதமாக இருக்கணும் என்கிறதாலேயே தேர்வு செய்து எடுத்தேன். ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி... இவங்கதான் படத்தின் ஆணிவேர்.ஒரு முரட்டு அதேசமயம் ஸ்மார்ட் ஆன மெயின் ஆண் கேரக்டர் கதைக்கு தேவைப்பட்டது. அதற்கு பாலாஜி முருகதாஸ் சரியா பொருந்தினார். இவர்கள் கூட சுரேஷ் சக்கரவர்த்தி, பத்மன், சிங்கம் புலினு அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இருக்காங்க. இவங்க எல்லாருக்குமே முக்கியமான ரோல்.

ஏன் சின்னத்திரை பிரபலங்கள் என நீங்க கேட்கலாம். இவங்க எல்லாருக்கும் மெனக்கெட்டு ப்ரொமோஷன் செய்ய வேண்டிய தேவை இருக்காது.  ஏற்கனவே வீடுகள் வரை சென்று அறிமுகமான ஆர்டிஸ்ட்கள் இவங்க. அறிமுக இசையமைப்பாளர் டி கே இசையமைச்சிருக்கார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியிருக்கார். எடிட்டிங் சி எஸ் பிரேம் குமார், ஆர்ட் இயக்கத்தை சுரேஷ் கல்லேரி, பாடல் வரிகளை மதுரகவியும், ராவும் எழுதியிருக்காங்க.

ஒரு தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா?

நல்ல கதை கொடுத்தால் சினிமா பார்ப்பதற்கு அத்தனை பொதுமக்களும் தயாரா இருக்காங்க. நல்ல படங்களுக்கான மரியாதையும் வசூலும் மக்கள் கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க. மொழி தாண்டி கூட நல்ல கதைகளை ரசிக்கக்கூடிய மனப்போக்கு மக்கள்கிட்ட இருக்கு. இதற்கு சமீபத்திய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தை உதாரணமாக சொல்லலாம். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பயம் வரத்தான் செய்யும். விசிடி, டிவிடி காலத்தில் சினிமா அழிஞ்சிடும்னு சொன்னாங்க. அப்படி எதுவும் நடக்கலை. ஓடிடி வந்தப்ப மொத்தமா திரையரங்கு சினிமாவுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போகும்னு சொன்னாங்க. ஆனா, ஓடிடிக்கு பிறகுதான் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் மழை கொட்டிய படங்கள் நிறைய வெளியானது.

ஒரு விஷயத்தை இங்கே சொல்லி ஆகணும். தயாரிப்பாளர் என்கிறதுக்கு ஒரு வரைமுறை வேணும்னு நினைக்கறேன். 3 லட்சம் ரூபாயில் படம் எடுப்பவரும் தயாரிப்பாளர்தான்... ரூ.300 கோடியில் படம் எடுப்பவரும் தயாரிப்பாளர்தான் என்கையில் சில தவறான வழிகளை தேர்வு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகரிச்சுகிட்டே வராங்க. சமீபத்தில் மட்டும் அப்படி நிறைய உப்புமா படங்கள் தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்தை கெடுத்திருக்கு. அதனால் தயாரிப்பாளர் என்பதற்கு இங்கே ஒரு வரைமுறை வேணும்னு நினைக்கிறேன்.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

நடிகராக ‘தரமணி’, ‘பேரன்பு’ துவங்கி பல படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்கள் முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் வரை நடிச்சிருக்கேன். இப்ப இந்த ‘ஃபயர்’ படத்திலும் ஒரு காவல் அதிகாரியாக ஒரு கேரக்டர் செய்திருக்கேன். அப்புறம் மாரி செல்வராஜுடன் ‘வாழை’ படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டர். ‘சேவியர்’ மற்றும் ‘சம்பவம்’ உள்ளிட்ட படங்களும் அடுத்தடுத்து என் நடிப்பில் வெளியாக இருக்கு.

என்னுடைய ரைட்டர் ஜீவா  எழுத்தில் ஒரு கதையில் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் இயக்குநர் ஆர் டி எம் கதையில் ஒரு படத்தை
தயாரிக்கறேன்.எனக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த ‘தங்க மீன்கள்’ படத்தின் 2ம் பாகத்திற்கான கதையை எழுதி இருக்கேன். 

அதை நான் இயக்க மறுபடியும் ராம் அந்தப் படத்தில் நடிக்கணும். இதற்கான வேலைகளும் பேச்சுவார்த்தையும் போய்க்கிட்டு இருக்கு. நீண்ட நாட்களாக காத்திருந்த ‘அண்டாவைக் காணோம்’ படத்தின் பிரச்னைகள் முடிந்து அந்தப் படமும் வெளியாக இருக்கு.

‘ஃபயர்’ எப்படிப்பட்ட படம்?

நிச்சயமா இந்தப் படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்தான். அதை நான் இப்போதே உறுதியா சொல்லிடறேன். ஒரு சில விஷயங்களை கருத்தாகவோ அல்லது அறிவுரையாகவோ சொல்வதற்கு முன்னாடி அதற்கான விளைவுகளையும் பிரச்னைகளையும் பேசித்தான் தீர வேண்டி இருக்கு. அப்படி பேசும்போது அந்தப் படம் அடல்ட் என்கிற கான்செப்ட்டாகதான் போகும் என்கிற பட்சத்தில் இந்த படம் ‘ஏ’ சர்டிபிகேட் படம்தான். அதே சமயம் பொதுமக்களுக்கு ஒரு நல்ல அலர்ட் ஆகவும் இருக்கும்.  

ஷாலினி நியூட்டன்