என் மகள் சாதமே சாப்பிட மாட்டேனென்கிறாள்! ஏன்?



நான் எனது தாய்மாமன் மகனை காதலித்து, அவரின் நண்பர்கள் உதவியுடன் பெங்களூர் சிக்திருப்பதியில் திருமணம் செய்து கொண்டேன். இருவரின் குடும்பத்திலும் எங்கள் திருமணத்தை பெயருக்காக ஒப்புக் கொண்டனர். இருப்பினும் சுமுக உறவு இல்லை. தற்போது வாடகை வீட்டில் இருக்கிறோம். வீட்டின் தலைவாசல் வடகிழக்கில், வடக்கு பார்த்து உள்ளது. வீடு பாதுகாப்பாகத்தான் உள்ளது. ஆனால், இந்த வீட்டில் குடியேறிய பின்பு எனது கணவருக்கு சாலை விபத்து ஏற்பட்டது.

அதனின்று மீண்டு வந்தவுடன் சொந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளார். இவரால் உதவி பெற்ற நண்பர்கள் கைகழுவி விட்டு ஏளனம் செய்கின்றனர். கடனிலிருந்து மீண்டு வளமான வாழ்க்கை அமைய வழிகாட்டுங்கள். - வசந்த கோகிலம், பெங்களூர்.உங்கள் கணவரின் ஜாதகத்தை அகத்தியர் ஐநூறு என்ற பழைய நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். அவர் தனுசு லக்னம், கடக ராசியில் பிறந்திருக்கிறார். லக்னாதிபதியான குரு, ஜாதகத்தில் ஆட்சிபெற்று வலுவாக காணப்படுகிறார். ஆனாலும், கேந்திராதிபத்ய தோஷத்தையும் குரு அடைந்திருக்கிறார். பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 4ம் வீட்டில் அமர்ந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

தனுசு லக்னத்திற்கு பிரபல யோகாதிபதியாகவும், பாக்யாதிபதியாகவும் சூரியன் வருகிறார். அப்படிப்பட்ட சூரியன் பாதகாதிபதியான புதனுடன் சேர்ந்து காணப்படுவதால் பாக்யாதிபதிக்குரிய யோக பலன் கொஞ்சம் குறைகிறது. பிரபல யோகாதிபதியும் பணம், தனம் இவற்றையெல்லாம் தரக்கூடிய சூரியன், கேதுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்திருப்பதுடன், இருவரும் ஒரே நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், சூரியன் பலவீனமாக இருப்பதாலும்தான் உங்களுடைய கணவர் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு 5.11.2011 வரை சுக்கிர தசை நடைபெற்றது. ஆனால், சுக்கிரனைக் காட்டிலும் சூரியன்தான் யோகாதிபதி என்றாலும், சூரியன் பலவீனமாக இருப்பதால் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள், நஷ்டங்கள், பிரச்னைகள், பணப் பற்றாக்குறை இவையெல்லாம் அடுக்கடுக்காக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கிரக தோஷம் உள்ள தசை என்பதால்தான் விபத்தும் ஏற்பட்டது. ஆனால், அந்த வீட்டிற்கு போனபிறகுதான் விபத்து ஏற்பட்டது என்றெல்லாம் நினைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.

 வீட்டின் தலைவாசல் ஈசான்யம் என்று சொல்லக் கூடிய வடகிழக்கில் இருப்பதால் எந்தத் தவறும் இல்லை. அந்த வீடு நல்ல வீடுதான். ஆனால், கணவருக்கு தசா, புக்தி சரியில்லாததால்தான் அடுத்தடுத்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், உங்களுடைய ஜாதகத்தில் இப்போது தசா புக்தி நன்றாக இருக்கிறது; குரு தசைதான் நடைபெறுகிறது. குரு 8ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களுடைய ஜாதகம் உங்கள் கணவருக்கு உறுதுணையாக இருக்கிறது. உங்கள் ஜாதக அடிப்படையில், கணவருக்கு 19.8.2014லிருந்து நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.

உங்கள் மூத்த மகளின் ஜாதகம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக தகப்பனார் ஸ்தானம் வலுவாக உள்ளது. எனவே, உங்கள் முதல் மகளின் ஜாதகப்படியும் உங்கள் கணவருக்கு முன்னேற்றம் உண்டு. இரண்டாவது மகளின் ஜாதகமும் அருமையாக இருக்கிறது. குரு சந்திர யோகத்தில் இரண்டாவது மகள் பிறந்திருக்கிறாள். இவளுக்கு கேது தசை முடிந்து தற்சமயம் சுக்கிர தசை ஆரம்பமாகியிருக்கிறது. இவள் ஜாதகப்படி 14.12.2014 முதல் தந்தையாருக்கு திடீர் யோகமும், பணவரவும், தொழிலில் முன்னேற்றமும் உண்டாகும். உங்கள் குடும்பத்தின் மொத்த  ஜாதகங்களை ஆராய்ந்து பார்க்கும்போது வருங்காலம் மிகச் சிறப்பாக இருப்பது தெரிகிறது.

கணவரின் தசா புக்திதான் மிகவும் பலவீனமாக இருக்கிறது. சூரிய பலத்தை அதிகப்படுத்த தினசரி சூரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிப்பது நல்லது. கோதுமை உணவுகளை சாப்பிடுவதும் அவற்றை தானம் தருவதும் நல்லது. கணவர் ஒருமுறையேனும் திருவண்ணாமலை சென்று, வில்வார்ச்சனை செய்து வருவாரானால் சூரிய பலம் மேலும் அதிகரிக்கும்; நற்பலன்கள் அதிகரிக்கும். கோச்சார கிரகங்களையும், கணவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்தால் 24.8.2015 முதல் கணவருக்கு பிரமாத மான நல்ல நேரம் தொடங்குகிறது. ஆனால், உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் ஜாதகங்களின்படி அதற்கான முன்னோட்டமாக இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலே நல்ல பலன்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

?எனது மகளின் பெரிய குறைபாடு, அன்ன துவேஷம்தான். அவள் சாப்பிடுவது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இத்துடன் சர்க்கரை அல்லது மிக்ஸர் போன்றவற்றைதான். இதுவரை சாதம், குழம்பு, ரசம், மோர், பொரியல் என்று சாப்பிட்டதில்லை. நாங்கள் எத்தனையோ வைத்தியம், பரிகாரம் செய்தும் பலன் கிட்டவில்லை. இருபத்தி நான்கு வயதாகும் என் மகளுக்கு எப்போது
திருமண வாழ்க்கை அமையும்? இயல்பான சாப்பாட்டை எப்போது உண்ண ஆரம்பிப்பாள்?        
- க.முனுசாமி, ராணிப்பேட்டை

மகளின் ஜாதகத்தை காக்கையர் நாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். குரு உச்சமாகி நிற்கிறார். லக்னத்தையும் பார்க்கிறார் அது ஒரு நல்ல அம்சமாகும். ஆனால், லக்னத்தில் சனியும், ராகுவும் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்கள். மகர லக்னத்தில் பிறந்த மகளுக்கு சனி லக்னாதிபதியாக இருக்கிறார். லக்னாதிபதி சனி லக்னத்தில் இருப்பது நல்லது தான். ஆனால், ராகுவுடன் சேர்ந்து சனி அமரக் கூடாது. மேலும் இரண்டு கிரகங்களும் ஐந்து பாகைக்குள் நெருங்கியிருப்பதாலும் அஷ்டமாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் லக்னாதிபதியான சனி அமர்ந்திருந்தாலே இதுபோன்ற அதாவது, மிகையான உணவு

உண்ணக்கூடிய குணம் இருக்கும். ராகு நொறுக்குத் தீனிகளுக்குரிய கிரகமாகும். அன்னத்திற்குரிய கிரகமான சந்திரன் உங்களுடைய மகள் ஜாதகத்தில் 6ல் மறைந்து பலவீனமாக இருக்கிறது. அதனால்தான் அன்ன சுவை அவளுக்கு பிடிக்காமல் போகிறது; சாதம் சாப்பிடாமலேயே இருக்கிறார். ராகு நவாம்சத்திலும் நவாம்ச லக்னாதிபதியுடன் சேர்ந்து காணப்படுகிறார். அதனால்தான் தொடர்ந்து இதுபோன்ற உணவுப் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். தற்சமயம் அவளுக்கு குரு மகாதசையில் புதன் புக்தி 29.2.2016 வரை நடைபெறுகிறது. இந்த புதன் புக்தி முடிவதற்குள் உங்களுடைய மகளின் உணவுப் பழக்கம் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

வழக்கம்போல் மற்ற பிள்ளைகளைபோல் சாதம், சாம்பார், கூட்டு, ரசம், காய்கறி என்று சாப்பிடக் கூடிய அமைப்பு 1.9.2014 முதல் உருவாகும். கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்குவார். 2015 ஜனவரி முதல் இன்னும் கொஞ்சம் மாறுவார். நீங்கள் ஒருமுறை மகளை குருவாயூர் அழைத்துச் சென்று வாழைப்பழ துலாபாரம் போடுங்கள். அதோடு குருவாயூரப்பன் சந்நதியில் தரப்படும் பால் பாயச பிரசாதத்தையும் அருந்தக் கொடுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். மகளின் மாங்கல்ய ஸ்தானத்தை பார்த்ததில் 7ம் வீட்டில் கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் இருப்பது தெரிகிறது. செவ்வாய் தோஷமும் இருப்பதால் இந்த இரண்டு தோஷத்திற்கும் தகுந்தாற்போல் 19.8.2014 முதல் வரன் தேடத் தொடங்கலாம். அடுத்த வருடம், நல்ல விதத்தில் திருமணம் முடிய வாய்ப்புள்ளது.

?எனக்கும் என் கணவருக்கும் ராகு-கேது தோஷம் உள்ளது. திருமணப் பொருத்தம் பார்த்தபோது இருவருக்குமே 2ல் ராகு இருக்கிறதா என்று பார்த்துதான், திருமணம் நடந்தது. அதுதான் தோஷ பரிகாரம் என்று ஜோதிடர்கள் கூறினார்கள். எங்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்யம் இல்லை. சென்ற வருடம் எனக்கு கரு உருவாகி 3 மாதத்தில் கலைந்து விட்டது. எங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும்? எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்? தற்சமயம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?

- வாணி மரகதம், சென்னை.உங்கள் கணவரின் ஜாதகத்தை சுகர் நாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். அவர் சிம்ம லக்னம், மேஷ ராசியில் பிறந்திருக்கிறார். லக்னத்தில் சனி அமர்ந்திருப்பதால் அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. 7ம் இடத்தில் சூரியன், சுக்கிரன் இருப்பது நல்ல யோக அமைப்பாகும். அவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியான குரு, லாப வீட்டில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த குருவுடன் செவ்வாயும் சேர்ந்து அமர்ந்திருப்பதும் நல்ல யோகமான அமைப்பாகும். குரு தனியாக இல்லாமல் மற்றொரு பிரபல யோகாதிபதியான செவ்வாயுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதால் சற்றே தாமதமாக குழந்தை பாக்கிய வாய்ப்பு உருவாகிறது.

தற்சமயம் உங்கள் கணவருக்கு செவ்வாய் தசை 11.11.2013 முதல் 11.11.2020 வரை நடைபெறுகிறது. தற்சமயம் நடைபெறும் ராகு புக்தி 25.4.2015 வரை நீடிக்கும். 26.4.2015 முதல் குரு புக்தி தொடங்குகிறது. அந்த குரு புக்தி தொடங்கியவுடன் குழந்தை பாக்யத்தை எதிர்பார்க்கலாம். உங்களுடைய ஜாதகப்படி நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் வலுவாக இருக்கிறார். புத்திரகாரகன் குருவும் உங்களுடைய ஜாதகத்தில் வலுவாக இருக்கிறார். உங்களுடைய ஜாதகத்தில் தற்சமயம் குரு மகாதசை தொடங்கியிருக்கிறது. குரு மகாதசையில் குரு புக்தி தற்சமயம் நடைபெறுகிறது.

5.6.2015 முதல் குரு மகாதசையில் யோகாதிபதியான சனி புக்தி தொடங்கும். 5.6.2015 முதல் உங்களுடைய ஜாதகப்படி குழந்தை பாக்யத்தை எதிர்பார்க்கலாம். இருவருடைய ஜாதகங்களின்படி நிச்சயமாக குழந்தை பாக்யம் உண்டு, கவலைப்படாதீர்கள். நீங்கள் இருவரும் ஒரு சஷ்டி திதியில் திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபடுங்கள். முடிந்தால் சஷ்டி விரதம் அனுசரியுங்கள். சகல சௌபாக்யங்களோடு குழந்தை பாக்யமும் உண்டு.
     
?எனது மகளின் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு மாப்பிள்ளை சாலை விபத்தில் இறந்துவிட்டார். இனி திருமணமே வேண்டாம் என்று தனியே சொந்த வீட்டில் அவள் வாழ்ந்து வருகிறாள். நான் மிகவும் மனம் நொந்துபோய் என் தாயாருடன் வசித்து வருகிறேன். அவளுக்கு கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், களத்திர தோஷம், தெய்வ சாமம் மற்றும் பல தோஷங்கள் இருப்பதாகச்
சொன்னதால் எல்லாவற்றிற்கும் பரிகாரம் செய்துவிட்டேன். அவளுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உண்டா, ஆயுள் காலம் எவ்வாறு உள்ளது என்று கூறுங்கள்.

அவளுக்காக பல கோயில்களுக் குச் சென்று பரிகாரங்களும் செய்து விட்டேன். அவளுடைய தம்பிக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. என் காலத்திற்கு பிறகு யார் அவளை கவனித்துக் கொள்வார்கள்? என்னை தவிர அக்கம்-பக்கத்தில் யாரோடும் பேச மாட்டாள். மொத்தத்தில் என்னையும் விரோதியாகவே பார்க்கிறாள்.  ஒரு வாசகி. உங்கள் மகளின் ஜாதகத்தை நந்தி வாக்யம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். கடக லக்னம், மகர ராசியில் பிறந்திருக்கிறார்.

ஜாதகத்தில் முக்கிய கிரகங்கள் வலுவாக இருக்கின்றன. ஆனால், மாங்கல்ய ஸ்தானாதிபதியான அதாவது 7, 8வது வீட்டிற்குரிய கிரகமான சனி, வக்கிரம் பெற்று கேதுவுடன் சேர்ந்து காணப்படுவதால் மாங்கல்ய பலம் உங்கள் மகளுக்கு குறைவாகத்தான் இருக்கிறது. அதோடு சனிபகவான், கேதுவுடன் சேர்ந்து 12ம் வீடான விரய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் நல்ல அமைப்பு கிடையாது. என்றாலும், ஜாதகத்தில் களத்திரக்காரகனான சுக்கிரன் வலுவாக இருக்கிறார்.

தற்சமயம் நடைபெறும் தசா புக்திகளின்படி 24.7.2013 முதல் அவளுக்கு சனி மகாதசை தொடங்கி யிருக்கிறது. சனி 12ல் கேதுவுடன் மறைந்திருந்தாலும் சனிபகவானின் ராசியில் அவள் பிறந்திருப்பதால் சனி தசை ஓரளவு நன்மை தரும். 27.7.2016 வரை சனி தசையில் சனி புக்தி நடைபெறும். அதற்குப் பின்னர் வாழ்க்கைத் துணை அமைய வாய்ப்பிருக்கிறது. தசா புக்தி பிராகாரம் கொஞ்சம் தாமதமானாலும், கோச்சார கிரகங்களின்படி தற்சமயம் குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

4.7.2015 வரை குரு மாங்கல்ய ஸ்தானமான 7ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பார். இந்த ஒரு வருட காலத்தில் உங்கள் மகளுக்கு திருமணம் நிகழ வாய்ப்பிருக்கிறது. நீங்கள் மறவாமல் ஒருமுறை உங்கள் மகளை திருநள்ளாறு அழைத்துச் சென்று வாருங்கள். உங்கள் மகளுக்கு எத்தனை வயதாகிறதோ அத்தனை எள் விளக்கேற்றி வணங்குவது நல்லது. அதன்மூலமாக உங்கள் மகளுக்கு திருமணம் நிகழ வாய்ப்பிருக்கிறது. நல்ல வாழ்க்கைத் துணை அமைவார். உங்கள் மகள் இறுதிவரை தனித்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை. திருமணம் முடித்து அமோகமாக வாழ்வாள்.