ஒரு நூற்றாண்டுக்கு முன் காஞ்சிக் கோயில்கள்



காஞ்சி மண்ணில் காலடி எடுத்து வைத்து நிமிர்ந்தால் நம் கண்களில் கோபுரங்கள் தென்பட்டு நம்மை சிலிர்க்க வைக்கும். காஞ்சி மாநகருக்குள் எங்கே இருந்தாலும், நம் மேல் நோக்கிய பார்வையில் ஏதேனும் ஒரு கோயிலின் கோபுரம் நம் விழிகளை சந்திக்கும். அந்த அளவுக்கு கோயில்கள் நிறைந்த அற்புத ஆன்மிகத் தலம் அது.‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’, என்பார்கள்.

காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை கோயிலில்லா தெருவில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு எண்ணிலடங்கா சைவ, வைணவ, அம்மன் கோயில்கள் இங்கே நிறைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களைச் சுற்றிப் பார்க்கும்போது அவற்றின் பரிமாணம் நம்மை பெரு வியப்புக்குள்ளாக்கும். அவற்றின் சிற்ப அம்சங்கள் நமக்குப் பேரதிசயங்களாக விளங்கும்.

‘அடேயப்பா! அந்த நாட்களில் இந்தக் கோயில்கள் எப்படி காட்சியளித்திருக்கும், மக்களெல்லாம் எப்படிப் போற்றிப் பாடியிருப்பார்கள்!’ என்ற காலப் பரிமாண ஆராய்ச்சியில் மனம் லயிக்கும்.
குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் அவை எப்படி இருந்திருக்கும் என்ற நம் ஆவலைப் பூர்த்திச் செய்யும் வகையில் காஞ்சியின் சில கோயில்களின் தொன்மையைச் சொல்லும் புராதன புகைப்படங்கள் சமீபத்தில் அங்கே கண்காட்சியாக வைத்திருந்தார்கள். ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் தொகுத்தளித்தப் புகைப்படங்களை வைத்து காஞ்சி பட்டு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி இது. அதிலிருந்து சில காட்சிகள்: