சிரத்தையே நான் எதிர்பார்க்கும் கட்டணம்



- ஆதித்ய ஸ்ரௌதிகள்

‘‘இந்தியாவில் ஒரு ஜீவன் பிறக்க வேண்டுமானால் புண்ணியம் செய்திருக்க வேண்டும்’’ என்று கன்பூஷியஸ் ஒருமுறை கூறினார். ஒரு நாட்டை இன்னொரு நாட்டு அரசியல்வாதி புகழ்வதைப்போன்ற சாதாரண வார்த்தையல்ல இது. ஒரு தத்துவ ஞானியின் ஆழ்ந்த அனுபவத்திலிருந்து வெளிப்பட்ட சத்திய வாக்கியம். ‘‘எங்கள் நாட்டவர்கள் செய்யும் சிறிய சடங்குகளை உற்றுக் கவனித்தால் அதற்குப் பின்னால் வேதாந்தமே மறைந்திருக்கும்’’ என்று சுவாமி விவேகானந்தர் தமது சொற்பொழிவுகளில் குறிப்பிடுகிறார்.

பாரததேசம் ஆன்மிகம் என்கிற ஒரே அச்சில் சுழல்கிறது. அந்த முக்கிய அச்சை சுழலச் செய்வதே வேதங்கள்தான். வேதங்களை ‘‘அபௌருஷேயம்’’ என்பார்கள். மனிதனால் உருவாக்கப்படாதது என்று பொருள். அண்டத்திலிருக்கும் வேத சப்தங்களை ரிஷிகள் தங்களின் ஞானக் கண்களால் கிரகித்தார்கள்.

அதனாலேயே ரிஷி என்கிற பதத்திற்கு மந்திரங்களை நேரே பார்த்தவர் என்று பொருள். இப்படிப்பட்ட உன்னதமான வேதங்களையும், உபநிஷதங்களையும், சாஸ்திரங்களையும், ஆதிசங்கரர் இயற்றிய நூல்களையும், ராமாயணம், பாகவதம் மற்றும் சங்கீதத்தையும் சேர்த்து கற்றுக் கொடுத்தும், வேதநெறிப்படி வாழ்ந்தும் வருகிறார், அத்வைத ஜ்யோதிர் ஆதித்ய ஸ்ரௌதிகள்.

ஆச்சரியங்களால் சூழப்பட்ட அவரை சந்திக்கச் சென்றோம். மயிலாப்பூர் ரங்கா சாலையிலுள்ள சூத்ரம் குருகுலத்தில் நுழைந்தவுடனேயே வேத கோஷம் தெள்ளமுதாய் செவியை நிறைத்தது.

அந்த நீள் செவ்வக வடிவ அறையில் வேதம் தளும்பியிருந்தது. நம் அனுமதியற்று நமக்குள்ளும் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தது. கோஷம் ஓய்ந்த பின் நீண்ட மௌனம் நிலவியது. சமஸ்கிருதத்திலேயே அந்த மாணவர்களுக்கு மென்மையாக கட்டளைகள் பிறப்பித்துவிட்டு, வேதாக்னியான ஆதித்ய ஸ்ரௌதிகள் தீட்சண்யமாய் நம்மைப் பார்த்து தோழமையாய் புன்னகைத்தார். 

£தாங்களுக்கு வேதத்தின் மீது எப்படி ஈடுபாடு வந்தது? சனாதன தர்மமான நம்முடைய வேதங்களின் மீது புதியதாக ஈடுபாடு கொள்ள முடியாது.

அக்னியின் மீது சாம்பல் மூடிக் கிடக்கிறது. அதை ஊதி கனன்று கொண்டிருக்கும் தணலிலிருந்து தீயைப் பெரிதாக்க வேண்டும் அவ்வளவுதான். அது எப்போதும் நம் சொத்துதான். எல்லா சமூகத்திற்கும் உரியது. இதை எல்லாருக்கும் கொண்டு செல்லும் ஜாக்கிரதையும் பொறுப்பும் அந்தணர்களுக்கு இருக்கிறது. வேதத்தை வேதமாதா என்றுதானே நாம் சொல்கிறோம்! மதம் மற்றும் வேதங்கள் என்பது தனியாக இல்லை. அது ஒருவருக்குள் சென்று அவரின் வாழ்க்கையில் இயங்க வேண்டும்.

அதற்கான Conductive (Conducive) atmosphere இங்கு நிலவுகிறது. அதிலும் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற திராவிட தேசங்களில் தட்பவெப்பச் சூழலும் சரியாக அமைந்து விடுகிறது. காலை பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்பே எழுந்து குளித்து விட்டு வேதங்களை வாசிக்கத் தொடங்கி விடலாம். வேட்டியும் மேல்துண்டுமான சிக்கன உடையலங்காரம் போதும்.

எங்கள் பூர்வீகம் ஆந்திர தேசம். விஜயநகரம். விசாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ளது. அந்நாளைய பொப்பிலி சமஸ்தானத்தில் எங்கள் மூதாதையர்கள் ராஜபுரோகிதர்களாக இருந்தனர். எங்கள் குடும்பம் வெலநாடு என்கிற பிரிவைச் சேர்ந்தது. எங்கள் வீட்டுப் பெயர் சாமவேதுல என்பதாகும். கோதாவரிக்கு அருகேயுள்ள சில பகுதிகளிலுள்ள அந்தணர்களை ‘வெலநாடு வைதீகளூ’ என்பார்கள். இதுபோன்ற விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, நமக்கென்று வேதிக் பயோடேட்டா உள்ளது.

அதை மறக்கக் கூடாது. இன்ன சூத்ரம் எனும்போது உங்களின் வித்யா பரம்பரை தெரிந்து போகும். இன்ன கோத்ரம் எனும்போது எந்த ரிஷியின் வழியாக வருகிறீர்கள் என்கிற வம்ச பரம்பரையும் தெரியும். அந்த ரிஷியோடு நேரடியான சம்பந்தமுள்ளவர்கள் நீங்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! என் தகப்பனார் ஜெயாதித்ய ஸ்ரௌதிகள். என்னுடைய ஆதித்யா என்கிற பெயர் பரம்பரையாக வருவதற்குக் காரணமே சூரிய உபாசனைதான். தாயார் பெயர் அதிதி. பி.எஸ்.எம்.எஸ். படித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவராக இருந்தார்.

பகவான் ஸ்ரீரமணரின் பிரதம சிஷ்யராக விளங்கிய ஸ்ரீகாவியகண்ட கணபதி சாஸ்திரிகள் வம்சத்தில் வந்தவரே எனது தாயார். பணத்தை விட சேவையைத்தான் அதிகம் விரும்பினார். என் மனதில் இது மிக ஆழமாகப் பதிந்தது. என் பாட்டனார் முற்றிலும் வைதீகராக திகழ்ந்தார். அவர் மூலம்தான் சாம வேதத்தை அத்யயணம் செய்ய முடிந்தது. எனது தாயார் நாட்டியம், சங்கீதம் போன்றவற்றை வீட்டிலேயே கற்றுக் கொடுத்தார்.

 என் தந்தை இந்தியாவெங்கிலும் பயணித்தபடி இருந்ததால் எல்லா மாநிலங்களிலும் என் படிப்பும் தொடர்ந்தது. வங்காள மொழியில்தான் முதல் அட்சராப்பியாசம் நடந்தது. பிறகு சண்டிகர், டேராடூன் என்று படிப்பும் தொடர்ந்தது. பன்னிரெண்டு வயதிலேயே பத்தாம் வகுப்பு எழுதினேன். நான் பள்ளிக்குச் சென்ற காலங்களைவிட வேதத்தை படித்ததுதான் அதிகம்.

*சாம வேதம் மட்டும்தான் பயின்றீர்களா?

இல்லை. பெங்களூருவிலுள்ள சாம்ராஜ்பேட்டை சிருங்கேரி பீடத்து சங்கர மடத்தில் சாம வேதம் பயின்று கொண்டிருக்கும்போதே, அருகேயுள்ள சுக்ல யஜூர் வேத பாடசாலையிலும் பயின்றேன். மேலும், பூரண பிரக்ஞா வித்யா பீடத்தில் ரிக்வேதமும், சாம்ராஜ் பேட்டையிலுள்ள பாட சாலையில் யஜூர் வேதத்தை ஸ்ரீ பிரகாச பட்டரின் மூலம் கற்றுக் கொண்டேன். அப்போது நேஷனல் ஓபன் ஸ்கூல் வழியாக படிப்பும் தொடர்ந்தது. தவிர இப்போது கர்நாடக சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா என்று அழைக்கப்படும் சிம்ம ராஜேந்திர சமஸ்கிருத மகாபாடசாலையிலும் படித்தேன்.

*ஒரே நேரத்தில் எப்படிப் பயில முடிந்தது?

ஆர்வம்தான் காரணம். சிறுவயதில் தாயாரால் இசை வாத்தியங்களையும், சங்கீதத்தையும் கற்றுக் கொண்டபிறகு வேதங்களை பயின்ற பிறகு ஏதேனும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டுமென்கிற தாகம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஏனெனில் சிறு வயதில் Grasping power அதிகமாக இருக்கும். thinking power குறைவாக இருக்கும். அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேதங்களில் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ முடித்து விடுவார்கள். பின்னொருநாள் அதன் பொருளும் அதன் பாதையும் புரிய வரும். 

*சிறு வயதிலேயே இவ்வளையும் படிப்பது என்பது திணிப்பது ஆகாதா?

ஆகாது. இந்தக் கேள்வியே மேற்கத்திய கலாசாரத்தால் நமக்குள் வந்ததுதான். அவர்களுடையது முற்றிலும் கட்டற்ற சுதந்திரம். ஆனால், நம்முடையதோ எதையுமே தடுத்தல். நெருப்பு சுடும் என்றறிய நீயே தீயில் வைவிட்டுக் கொண்டு தெரிந்து கொள் என்பதுதான் மேற்கத்திய கலாசாரம். ரணமான ஒருவனின் கதையை மென்மையாக சிறுவயதிலேயே சொல்லிக் கொடுப்பதுதான் நம்முடைய வழி.

இது கெட்டது என்பதை அடிமனதில் பாலபருவத்திலேயே சொல்லிக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நம்முடைய அறிவின் எல்லை என்பது மனதை நிக்ரகம் செய்வதுதான். மனமே இல்லாமல் செய்வது தான் வேத வேதாந்தத்தின் குறிக்கோள். அதனால்தான் மனதை வெளிமுகமாக விடாமல் உள்முகமாகவே கர்மாக்களை செய்வதன் மூலம் பழக்கப்படுத்துகிறோம். 

*இது எங்கு கொண்டு சேர்க்கும்?

நம்முடைய வேதங்களின் அடிப்படையே வேதாந்தத்தை நோக்கி ஒருவரை செலுத்துவதுதான். ஆனால், எல்லோராலும் சட்டென்று அதை எட்டிப் பிடிக்க முடியாது. சாலையின் வழியே செல்வது என்பது வேறு. ஆகாய மார்க்கமாக செல்வது என்பது வேறு. அதிபக்குவிகள் சட்டென்று வேதாந்தத்தை புரிந்து கொண்டு விடுவார்கள். இப்படியே வேத மரபின் வழியாக வரும் அனுஷ்டானங்கள்தான் இதற்கான பெரிய பாதை. அனுஷ்டானம் என்பது சத்தியத்திலும் தர்மத்திலும் கொண்டுபோய் சேர்க்கும்.

வேதம் விதிக்கும் கர்மாக்களை கர்ம த்வாரா என்கிற பாதையில் தொடர்ந்து செய்யும்போது சித்த சுத்தி ஏற்படுகிறது. மனதில் மாசு இல்லாத நிலைக்கு ஜீவனை மேலேற்றுகிறது. இதற்கடுத்து ஞான பிராப்தி யோக்யதையை அதாவது, ஞானத்தை அடைவதற்கான தகுதியைப் பெறுகிறான்.

ஞானம் என்பது அடைவது என்று கூட சொல்லக் கூடாது. இருக்கும் அஞ்ஞானத்தை இத்தனை கர்மாக்களை செய்து அழிப்பது என்றுதான் சொல்லவேண்டும். அதற்குப் பிறகு ஞானம் என்கிற மோட்சம்தான். அதாவது, வேதாந்த சிந்தனையை Organised vedhanthic வழியில்தான் கைக்கொள்ள வேண்டும். வேதாந்தம் என்கிற பெயரில் எந்த நியதியும் வேண்டாம், எதுவும் நம்மை கட்டுப்படுத்த முடியாது என்று Irregular ஆக இருக்கக் கூடாது.

இந்த அழகான பாதையையும், இதற்குரிய தகுதியை ஒரு ஜீவனுக்கு கொடுக்கும் ஒரே தேசம் நமது பாரத தேசம். ஏனெனில், கிரேக்க கடவுள்கள் நமது வேதத்தில் வரும் தேவதைகளைப் போலவே இருப்பார்கள். ஆனால், இன்று கிரேக்க மரபு, அவர்களின் ஆன்மிகம் என்பது அவர்களின் மியூசியத்தில் இருக்கிறது. ஆனால், இங்கோ வேதங்களை படித்து வேதநெறியில் வாழும் நம்மிடத்தில் தழைத்தோங்குகிறது. இன்றுதான் நமக்கு காகிதமெல்லாம், அந்நாளில் நாக்கு நுனியில் சகல வேத சாஸ்திரங்களும் தங்கியிருந்தன.

*நிச்சயம் இந்த கர்மாக்கள் அவசியமா?

வேறு வழியேயில்லை. அவரவர்க்குரிய கர்மாக்களை நிச்சயம் செய்யத்தான் வேண்டும். we are in condition. We are not free. ஞானம் பெற்ற ரிஷிகளை கணக்கில் கொண்டு எல்லாவற்றையும் விட்டுவிடுதல் கூடாது. ஞானமே உருவாக பொலிந்த காஞ்சி மகாபெரியவர் எப்படி தன் கர்மானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தானே? இதுவொரு விசேஷ நியமம்.

*உங்கள் படிப்பைக் குறித்து மேலும் சொல்லுங்களேன்?

பெங்களூருவிலிருந்து இரண்டாயிரமாவது வருஷத்தில் திருப்பதிக்கு வந்து பாடசாலை மாணவர்களுக்கு வேதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கற்றுக் கொடுக்கும்போதே கற்றலும் கைவந்தது. மிகவும் ஆதி பாஷையான தேவநாகரி யின் எழுத்துகளை சமஸ்கிருதமும் ஹிந்தியும் எப்படி கையாண்டன, எப்படி உபயோகப்படுத்திக் கொண்டன என்பதைக் குறித்த ஆராய்ச்சி எப்போதும் இருந்தது.

இது தவிர மராட்டி, சிந்தி, பாலி, மாஹேதி, அர்த்த மாஹேதி போன்ற மொழிகளையும் தெரிந்து கொண்டு சமஸ்கிருதத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். இதைத் தாண்டி க்ரந்த எழுத்துகளை குறித்தும், தெலுங்கு எப்படி சமஸ்கிருத உச்சரிப்பிற்கு ஏற்றவாறு தன்னுடைய மொழியின் வரிவடிவத்தை மாற்றிக் கொண்டது என்பது குறித்தும் ஆராய்வேன். வேதங்களோடு சேர்ந்த மொழியறிவை ஆர்வத்தின் காரணமாக வளர்த்துக் கொண்டே வந்தேன்.

*பாலி என்பது புத்தர் பேசியதல்லவா?

ஆமாம், அது அப்போதைய வட்டார மொழியில் இருந்ததால் அதன் எளிமைக்காக தேர்ந்தெடுத்தார். சமஸ்கிருதத்தை தவிர்த்து எல்லோருடனும் பாலியிலேயே பேசினார். ‘தம்ம பதம்‘ என்பதில் தம்மம் என்பது சமஸ்கிருதத்தில் தர்மம் ஆகும்.

*இசைத்துறையில் எப்படி ஈடுபாடு கொண்டீர்கள்?

தாயாரால் இசையும் இன்னொரு பக்கம் வளர்ந்து கொண்டேயிருந்தது. வீணையும், மிருதங்கமும் வாசிப்பேன். சந்தூர் என்கிற இசைக் கருவியை வாசிப்பது மிகவும் பிடிக்கும். இதுவொரு vedic instrument. இதில் நூறு தந்திகள் இருந்ததால் ஸத தந்தி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தொண்ணூறாக குறைத்து விட்டார்கள். இதை காஷ்மீரத்தில் ஹிந்துஸ்தானி இசைக்காக வாசிப்பார்கள்.

 ஆனால், ஈரானிய நாடுகளால் மிகவும் பிரபலமடைந்தது. அவர்களுக்கான வாத்தியமாகவே மாறிப்போனது. அதற்குப்பிறகு காஞ்சி சங்கரமடத்தில் இரண்டு வருடங்கள் இருந்தேன். பிறகு சண்டிகருக்குச் சென்றேன். அப்போதுதான்....(ஆதித்யாவின் கண்களில் நீர் திரண்டது. மௌனமாக தரையை நோக்கினார். இலக்கற்று ஜன்னலைத் தாண்டி பார்த்தபடி இருந்தார்.)

*என்ன ஆயிற்று?

என் தாய், தந்தை இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது எனக்கு இருபது வயது. அவர்களுக்கு நான் ஒரே மகன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானேன். அன்று நான் எப்படியிருந்தேன் என்பதை என்னால் விளக்க முடியாது. ஆனால், ஒன்று. ஒரு சக்தி என்னை சிறுவயதிலிருந்தே இயக்கிக் கொண்டு வருவதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.

என்னை அது என்னமோ செய்யவிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். மெதுவாக என்னை நானே தேற்றிக்கொண்டு மீண்டும் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படிக்கத் தொடங்கினேன். எம்.ஏ. சமஸ்கிருதமும், Samaveda and its relation with hindustani and carnatic music என்கிற தலைப்பில் றிலீ.ஞி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு தற்போதுதான் முடித்தேன்.

*வேதங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்படி வந்தது?

நான் கற்கும்போதே பல சமயங்களில் கற்றுக்கொடுக்கவும் செய்தேன். ஹரிராம ஆத்ரேய எனும் சென்னையைச் சேர்ந்த அன்பர் எனக்கு நண்பராக பரிச்சயமானார். அவர்தான் என்னை ஆதம்பாக்கத்தில் தங்க இடம் கொடுத்து அப்போது பார்த்துக் கொண்டார். நான் சங்கீதத்தையும், வேதங்களையும் மெல்ல ஆங்காங்கு ஓரிருவருக்கு சொல்லிக் கொடுத்தபோது மிகவும் உற்சாகமூட்டி ஆதரவு கொடுத்தார். இன்றுவரை என்னுடைய சிறந்த நண்பராக இருக்கிறார்.

2010ம் ஆண்டில் ஜீணீக்ஷீணீனீஜீணீக்ஷீணீ.வீஸீ என்கிற ட்ரஸ்ட்டை தொடங்கி என்னையும் முக்கிய அங்கம் வகிக்கச் செய்தார். ஹரிராம ஆத்ரேய அவர்கள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தில்லையம்பூர் அக்ரஹாரத்தில் வேதபாடசாலையை நிர்மாணித்து நடத்திக் கொண்டு வருகிறார். முத்து வேலாயுதம் என்கிற நண்பரும் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார். 2011ம் ஆண்டு முதல் நான் இந்த குருகுலத்தில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறேன்.

*இங்கு மட்டும்தான் கற்றுத் தருவீர்களா?

இல்லை. என்னுடைய தினசரி வாழ்க்கையைச் சொன்னால்தான் அது புரியும். காலை இரண்டே முக்கால் மணிக்கு எழுந்து விடுவேன். மூன்றரைக்குள் குளித்து விட்டு தயாராகிவிடுவேன். காலை ஐந்து மணிக்கு மேல் (skype) ஸ்கைப்பிலேயே கிருஷ்ண யஜூர் வேத பாஷ்யத்தை (வேதத்தின் பொருள்) பலருக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். அதை இங்குள்ள குழந்தைகளும் கிரகித்துக் கொள்ளும். ஆறரை மணிக்கு மேல் என்னுடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வேதக் குழந்தைகளுக்கான பாடங்களைத் தொடங்கி விடுவேன்.

 ஏழரைக்கு மேல் சாம வேதத்தை கற்றுக் கொடுப்பேன். பிறகு காலை உணவை முடித்துக் கொண்டு 10:30 மணிக்கு மேல் ஆதம்பாக்கத்தில் சம்பூரண ராமாயணத்தை ஐம்பது பேருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இதற்கெல்லாம் நடுவே தி.நகரில் சாம வேத வகுப்பை புதன், வியாழக்கிழமைகளில் எடுக்கிறேன். மாலையில் மயிலை நரசிம்மபுரத்தில் சமஸ்கிருத வகுப்பும் நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று காலை 5 மணிக்கு ஸஹஸ்ர காயத்ரீ ஹோமம் செய்கிறோம். 

*இவற்றை கற்றுக் கொள்வதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

கற்றுக் கொள்பவரின் சிரத்தையைத் தவிர வேறெந்த கட்டணத்தையும் நான் எதிர்பார்ப்பதில்லை. என்னிடம் கற்றுக் கொள்பவர்கள் அவர்களுக்குள்ளாக வசூலித்து என்னிடம் ஏதாவது கொடுப்பார்கள். அவ்வளவுதான். ஐயாயிரம் கொடுத்தவர் யார்? ஐந்து ரூபாய் கொடுத்தவர் யார்? என்று நான் பார்ப்பதில்லை. இவர் ஒன்றுமே கொடுக்கவில்லையா என்றும் கேட்பதில்லை. முதல் நாள் அறுபது பேர் இருப்பார்கள். அடுத்தநாள் இருபது பேர்தான் இருப்பார்கள்.

ஆனால், நான் கவலைப் படாமல் ராமாயணத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பேன். என்னுடைய வேலை வேதங்களையும், சாஸ்திரங்களை யும், வேதாந்தங்களை யும், ஆசார்யாள் சங்கர பகவத் பாதர்அனுக்கிரகித்த நூல்களையும், பாகவதம், நாராயணீயம் உள்ளிட்ட அனைத்து பக்தி நூல்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். கற்றலும் கற்பித்தலும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்க வேண்டும். இதற்கு நடுவே பணத்தை கொண்டு வந்தாலோ அல்லது அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தாலோ எல்லாமே நின்று போகும்.

பணம் தேவை. அதைவிட நான் ஏற்றுக் கொண்டிருக்கும் இந்த கற்பித்தல் மிகமிக முக்கியம். ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சொல்லிக் கொடுப்பதைத் தவிர வேறெந்த வேலையும் எனக்கு இல்லை என்று தீர்மானமாக உள்ளேன். என்னுடைய ஒட்டுமொத்த சந்தோஷமும் அதில்தான் உள்ளது. யாருக்கேனும் கற்றுக் கொள்ள விருப்பமிருப்பின் என்னை samaganam@gmail.com, மற்றும் 9176236964 (இரவு 8 மணிக்கு மேல்) என்கிற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

*நாத்திகம்?

இப்போதைய நாத்திகர்களைவிட தீவிரமானவர்களையெல்லாம்  நம் ரிஷிகளும், முன்னோர்களும் பார்த்திருக்கின்றனர். புத்தருடைய நாத்திகத்தில் ஒரு லாஜிக் இருந்தது.
மெய்யறிவு, பூரண நிர்வாணம் என்றெல்லாமும் பேசினார்.

*எதிர்காலத்தில் வேதங்களின் நிலை?

இதுகுறித்து நாம் எதுவும் கவலைப்பட வேண்டாம். அதுவே தன்னை பார்த்துக் கொள்ளும். எவ்வளவோ கடினமான சூழல் களை வேதம் சந்தித்துள்ளது. அது வெறும் புத்தகமல்ல.
ஈசனின் மூச்சுக்காற்று.

*நீங்கள் பெரிய அமைப்பை ஏதேனும் உருவாக்குவீர்களா?

அப்படிச் செய்தால் கற்றுக் கொடுப்பது என்பது நின்று போய்விடும். எனவே, இந்த ஒன்றை மட்டும் சரியாகச் செய்தால் போதும்.

*பிரம்மச்சாரியாகவே இருக்கப் போகிறீர்களா? இல்லறத்தை ஏற்றுக் கொள்வீர்களா?

வேதம் இல்லற தர்மத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் எல்லோருக்கும் கட்டளையிடுகிறது. இல்லறத்தையும்
தர்மத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும். இல்லற தர்மத்தை ஏற்றுக் கொள்வேன்.

*வந்து...உங்கள் வயது...?

இருபத்தொன்பது.

படங்கள்: கிஷோர்ராஜ்

நேர்காணல்: கிருஷ்ணா