ஆன்மிகப் பங்கை தரணிக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்



எழுத்துச் சித்தர் பாலகுமாரன் வழங்கும் மகாபாரதம் வருகிறதா... வாவ்! மகா... அற்புதம்! ஆன்மிகம் பலன் மாதமிருமுறையா? மறுபடியும் வாவ்! மறுபடியும் மகா அற்புதம்!  ரெண்டு லட்டு தின்ன யாருக்குத்தான் ஆசையிருக்காது? பலே... பலே...
- கே.முத்தூஸ், தொண்டி.

தமிழும் தாம்பூல எச்சிலும் என்ற ஆன்மிக ரசம் பருகியபோது, என் நெஞ்சிலும் நாவிலும் தேனாய் இனித்தது. கோடி நன்றிகள்! ஆன்மிகம் பலன் மாதம் இரண்டு என்ற அறிவிப்பும் தேன்தான் போங்க..! இரு கரம் கூப்பி வரவேற்க காத்திருக்கோம்ல...
- மு.சுகாரா, ராமநாதபுரம்.

தல விருட்சங்கள் தரும் பலன்கள் பகுதியில், பனை மரத்தின் பயன்கள் பல நூறு என்பதனையும், பனை மரம் முழு வளர்ச்சியடைய பத்து வருடங்கள் ஆகும் என்பதையும் தெரிந்துகொண்டோம்.

திருவோத்தூர் திருத்தலத்தின் சிறப்பையும், அது சூரியனே வழிபட்ட தலம் என்ற பெருமையையும், சாபத்தால் தான் பெற்ற மான் உருவம் மகாலட்சுமி யிடமிருந்து விலக்கிய திருத்தலம் என்ற செய்தியையும் தெரிவித்தது. வேங்கடவன் அட்டைப்படம் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.
- அ.கிருஷ்ணகுமார், ஈரோடு.

கடந்த இதழ் வேங்கடவன் பக்தி ஸ்பெஷலில் அட்டவணைப்படுத்தியிருந்த வெங்கடாஜலபதி
ஆலயங்கள் குறித்த தகவல்கள் பயனுள்ள ஆன்மிகத் தகவல் பெட்டகம். (குணசீலம் கோயிலைப் பற்றி இரண்டு முறை குறிப்பிட்டுவிட்டீர்கள். அந்தத் தலத்தின் பெருமை அப்படி!)
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.

வேங்கடவன் பக்தி ஸ்பெஷலின் முகப்பினை அலங்கரித்திருந்த ஏழுமலையானின் அரிய புகைப்படம் கண்கொள்ளாக் காட்சி. அதே போன்று நடுப்பக்கங்களில் வெளியாகி இருந்த வேங்கடேச மங்களாஷ்டகம்  என்ற அபூர்வ ஸ்லோகம் உள்ளங்குளிர வைத்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆனந்தமளிக்கும் ஆன்மிகத் தகவல்கள் அனைத்தும் அற்புதம்! புதிய, புதிய செய்திகளுடன் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தன. தெளிவு பெறுஓம் பகுதி மன இருளை நீக்கி, புது உற்சாகம் கொள்ள வைக்கிறது. சந்தேகங்கள் ஏற்படுவது சுலபம்; ஆனால், அதற்கு விளக்கம் கொடுப்பது எத்தனை கடினம் என்பதை இந்தப் பகுதி மறைமுகமாக உணர்த்துகிறது. 
- பொ.உமாதேவி, பு.புளியம்பட்டி.

புரட்டாசியின் முக்கியத்துவத்தை விளக்கும் வேங்கடவனின் அட்டைப்படம் அழகோ அழகு. அந்த வேங்கடாஜலபதி கொலுவிருக்கும் திருக்கோயில்கள் பற்றிய குறிப்புகள் வெறும் பட்டியலாகவோ, புள்ளி விவரமாகவோ இல்லாமல், மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. அத்தலங்களுக்கு நேரில் செல்ல அவாவினை ஏற்படுத்தியது. மாதம் இருமுறை நம் ஆன்மிகம் பலன் வரவிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. விலையேற்றம் ஓர் பொருட்டல்ல; தெய்வீகத் தொண்டிற்கு இது பெரும் சுமையுமல்ல.

- இரா.கல்யாணசுந்தரம், வேளச்சேரி.

திருப்பதி பிரம்மோற்சவத்தை தரிசிக்க இயலாதவர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வேங்கடாஜலபதி கோயில்களுக்குச் சென்று புண்ணியம் பெற 27 நட்சத்திர அந்தஸ்து பெற்ற தலங்களை வெளியிட்டது பெரும் வரப்பிரசாதம். ஆயுத பூஜைக்குத் தயாரான போது விஜயதசமிக்கு பரிசாக பாலகுமாரனின் மகாபாரதம் தொடங்கும் அறிவிப்போடு தீபாவளி போனஸாக ஆன்மிகம் பலன் மாதமிரு முறை என்ற நற்செய்தியும் இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். ‘தமிழும் தாம்பூல எச்சிலும்’, ‘செந்தமிழ் இயல்
பனைத்தையும் உரைத்த செவ்வேள்’ கட்டுரைகள், நம் தாய் மொழியின் ஆன்மிகப் பங்கையும் தரணிக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்.

- மல்லிகா அன்பழகன், சென்னை.

புரட்டாசி எனும் புண்ணிய மாதத்தில் பெருமாள் ஆலயம் சென்று வணங்குவது பெரும் புண்ணியமாகும். புரட்டாசியில் தரிசிக்க வேண்டிய 27 வெங்கடாஜலபதி திருக்கோயில்களைப் பற்றிய சிறப்புகளைக் கூறிய தொகுப்பு கட்டுரை பெருமாள் பக்தர்களுக்கு ஆன்மிகம் அளித்த தெய்வீகப் பொக்கிஷமாகும். பகவான் கிருஷ்ணருக்கு அவல் தந்து ஆனந்தப்படுத்திய  குசேலரின் மகத்துவம் கூறுகிற மகத்தான  ஆலயம் போர்பந்தரில் இருக்கிற அற்புதத் தகவலும் அந்த ஆலயம் குறித்த கட்டுரையும் சுவையான அவல் சாப்பிட்ட மகிழ்வை ஏற்படுத்தி விட்டது.

- அயன்புரம் சத்தியநாராயணன்.

வாஸ்து பகுதியில் வீட்டில் வளர்க்க வேண்டிய வேண்டாத மரங்கள் பற்றி பாஸ்கர் அவர்கள்
விளக்கிய விதம் அருமை.

- எஸ்.கே.நரசிம்மன், கேளம்பாக்கம்.

துளசி மாடம் எங்கு, எப்படி அமைக்க வேண்டும், மதில் சுவரை எப்படி நிர்மாணிக்க வேண்டும் போன்ற வாஸ்து தகவல்களை வாஸ்து பாஸ்கர் வெகு நுட்பமாகப் பதிவு செய்திருப்பது  மிகவும் உபயோகமாக இருந்தது

- புனிதவதி ஸ்யாம், கோவை.

பழநி கோயிலோடு சம்பந்தப்பட்ட மன்னர்கள், அவ்வாலயம் தோன்றிய காலம், பழநி முருகனைப் பாடிய பாவலர்கள், இயற்கை எழில் சூழ்ந்த அந்நாளையும், அருள்மழை பொழியும் கருணை வேந்தன் பழநி முருகனின் மகத்துவத்தையும், சித்ரா மூர்த்தி உயிர்ப்புடன் கூறி எங்களை பழநி மலைக்கு முருகனைத் தரிசிக்க விரட்டுகிறார் என்று சொன்னால் மிகையில்லை.

- பிரபா லிங்கேஷ்,

மேலக்கிருஷ்ணன் புதூர்.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் கைவண்ணத்தில் ஒளிரப்போகும் மகாபாரதத்தை ஆவலுடன் எதிர்கொள்ள இப்போதிலிருந்தே தயாராகிவிட்டோம்.

- பெ.தருமன், திருவொற்றியூர்.

அக்டோபர் மாதம் முதல் ஆன்மிகம் பலன் மாதம் இருமுறை என்ற தகவல் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரிப் பொழிந்ததைப் போலிருந்தது. தீபாவளி பரிசு போலவும், இனிப்புகள் போலவும் ஆன்மிகம் பலன் ஜொலிக்கப்போவது உறுதி.

- ஆர்.ராஜேஸ்வரி, எரகுடி.

பக்தித் தமிழ் ஆன்மிகம் பலன் என்ற கிரீடத்தில் ஒளிவீசும் வைரங்களில் ஒன்று என்பது உண்மை. இத்தனை விஷயங்களை எப்படித் தேடி எடுக்கிறார் சொக்கன் என்ற வியப்பைத் தருகிறது. வெறும் பாட்டு, அதற்கு விளக்கம் என்றில்லாமல், வர்ணனையும், நயங்களும் நல்ல இலக்கிய ஆன்மிகக் கட்டுரையைப் படித்த திருப்தியைத் தருகின்றன.

 ஜி.வி.கோபாலகிருஷ்ணன், திருவாருர்.

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் அவர்கள் தன்னுடைய ‘என்ன சொல்லுது எதிர்காலம்?’ பக்கங்களின் மூலமாக துயருற்றிருந்த பலர் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கிறார். இன்னும் கூடுதல் பக்கங்கள் ஒதுக்கினால் மேலும் பல வாசகர்களுக்கு இந்தப் பகுதியால் விடிவுகாலம் பிறக்குமே என்று நான் பல நாட்கள் ஆதங்கப்பட்ட துண்டு. ஆனால், இனி கவலை இல்லை, இனிமேல் ஆன்மிகம் பலன்தான் மாதத்திற்கு இரண்டாயிற்றே!

- சந்தியா வீரமணி, நாகூர்.