இருபத்திரெண்டு முறை ‘அரோகரா’ சொன்னேன்



விண்வெளிக்கும் திருநள்ளாறுக்கும் உள்ள தொடர்பு குறித்த கட்டுரையில் வெளியாகியிருந்த தகவல்கள் (சனிபெயர்ச்சி பக்தி ஸ்பெஷல்) பெரிதும் வியப்படைய வைத்தன. அதேசமயம் கிரகங்களின் இடப்பெயர்ச்சிகள் குறித்து அப்போதே கணித்திருந்த நமது முன்னோர்களது பேராற்றலை, எண்ணி அவர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்க மனம் விழைகிறது.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

சனிபெயர்ச்சியின் சந்தேகங்களை ஆன்மிகம் இதழ் வாசகர்களுக்கு மிகவும் தெள்ளத் தெளிவாகப் புரியும் விதமாக அளித்த  ஹரிபிரசாத் சர்மாவுக்கு நன்றி. இத்தனை நாள் என் மனதில் எழுந்த, இதுவரை தெளிவான விளக்கம் கிடைக்காத கேள்விகள் இப்போது அமைதியாக அடங்கிவிட்டன.
- கோவை ஜெயராமன், மீஞ்சூர்.

அருணையில் ஜோதி ஏற்றும் ராஜகுலம் வம்சாவழியினர் பற்றிய  கட்டுரை படங்களுடன், முழு தகவல்களையும் தெளிவாகக் கூறியது! இதுதான் இந்து மதத்தின் சிறப்பு! திருக்கோயிலூர் ஹரிபிரசாத்சர்மாவின், பீமரத சாந்தி விளக்கம் முழுநிறைவை தந்தது. மறக்கக் கூடாதவர்களை (வணக்கம் நலம்தானே) பொறுப்பாசிரியர் விளக்கிய விதம் வாழ்க்கை பாடமாகவே அமைந்தது. கற்றுத் தேர்ந்தோம்! நன்றி.
- ராஜி ராதா, பெங்களூர்-102.

வழிகாட்டும் கல்வெட்டு கோயில் கதைகள் பகுதியில் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ‘இலச்சிக்குடி’ கோயிலை பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறித்தும் சிறப்பாகக் கூறியுள்ளார். நடராஜரை வணங்கும் ராஜேந்திர சோழன் பற்றிய கூடுதல் தகவலையும் தந்தது சிறப்பு.
- அ.கோவிந்தன், சேலம்.

‘சனிபெயர்ச்சி’ சமயத்தில் சனிபெயர்ச்சி பலன்களை மட்டும் போட்டு விடாமல், “சனிபெயர்ச்சி என்கிற மனப்பயிற்சி’’ என்கிற தலைப்பில், அனைத்துவித ஆன்மிக ஐயங்களுக்கும் ஹரிபிரசாத் சர்மா கூறிய விளக்கங்களையும் வெளியிட்டுள்ள விதம் அற்புதம்! சனிபெயர்ச்சி பற்றிய முழுவிவரங்களை ஆன்மிக அன்பர்கள் அறிந்திடச் செய்திட்ட உயர்ந்த முயற்சி இது! நன்றி கலந்த பாராட்டுகள்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பல சந்தேகங்களுக்கு விளக்கமும் தந்து சனிபெயர்ச்சி பற்றி பன்னிரெண்டு ராசிக்கான பலன் களையும் நயமாகச் சொல்லி, ஆர்களை ஆற்றுப்படுத்தி, இதையே இன்னும் இரண்டரை வருடத்துக்கு பாதுகாத்து வைத்துக்கொள்ளுமளவு தந்தமைக்கு நன்றி.மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நேரத்தில் இங்கிருந்து பலரும் துதிக்கும் வகையில் தந்து பாடல் இதுவரை யாரும் தராதது இருபத்திரெண்டு முறை அண்ணாமலையருக்கு அரோகரா போட வைத்துள்ளீர்கள். பலே.- சிம்மவாஹினி (ஜோதிடர்),
வியாசர்பாடி, சென்னை -39.

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் மகாபாரதம் தொடர் படு விறுவிறுப்பு. எழுத்துச் சித்தரின் விரல்கள் காவியம் படைக்கட்டும். தி.பெருமாள் மலர்மதியின் தலவிருட்சங்கள் தரும் பலன்கள் தொடரில் ஆலமரத்தின் பயன்களைப் பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.
- எம்.மோகன்ராஜ், மல்லூர்.

அட்டைப்பட ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருவுருவப்படம் அற்புதம். பொறுப்பாசிரியரின் மறக்கக்கூடாதவர்கள் பற்றிய தலையங்கம் மறக்க முடியாதது. செய்நன்றி மறந்தோர்க்கு சரியான சாட்டையடி.

சனிபெயர்ச்சி சந்தேகங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை. ‘ஆலமரம்’ பற்றிய குறிப்புகள் அறியாத புதிரை விடுவிப்பதாக இருந்தது. ‘சனிபெயர்ச்சி பலன்கள்’ விரிவாக, எளிய பரிகாரங்களுடன் கூடிய டைஜஸ்டாக விளங்கியது.
-இரா.கல்யாணசுந்தரம், வேளச்சேரி, சென்னை - 42.

சனி என்றாலே பயந்து நடுங்கும் போக்கிற்கும், போதாக்குறைக்கு நடைபெற இருக்கும் சனிபெயர்ச்சி குறித்து அரண்டுபோயிருக்கும் பலருக்கு மன ஆறுதலைத் தந்திருந்தது, ‘சனி பெயர்ச்சி என்ற மனப்பயிற்சி!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மகாபாரதம், மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளை வெகு அழகாக எடுத்து இயம்புகிறது. பிரமாண்டமான அந்த இதிகாசத்தினுள் புகுந்தால் எளிதில் வெளியே வர முடியாத வியூகமாகத்தான் அமையும் என்றாலும், அதை எழுத்துச் சித்தர் பாலகுமாரன் கையாள்கிறார் என்பதால் அது மிகவும் எளிமையாகிவிடுகிறது; புரிபடுகிறது;

உள்ளத்துள் பதிகிறது என்பதுதான் உண்மை. பற்பல பயனுள்ள கருத்துகள், இன்றைய வாழ்க்கைக்கு உதவும் பல எடுத்துக்காட்டுகள், ஒவ்வொரு சொல்லிலும் பக்தி பரவசம். படிக்கப் படிக்க மனம் தெளிவு பெறுகிறது. எடுத்தாளப்பட்ட வார்த்தைகள் தெய்வீகமானவை. தர்மத்தை நயம்பட எடுத்துக்காட்டிய விதம் அருமை.

-ஏ.டி.சுந்தரம், ராக்கம்பாளையம், வி.வெள்ளோடு.