அம்மனுக்குசாத்திய புடவையை வாங்கி உடுத்திக்கொள்ளலாமா?



தெளிவு பெறு ஓம்

?பார்வைக் குறைபாடு நீங்க எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
- தட்சிணாமூர்த்தி, பாண்டிச்சேரி.

முக்கண்ணன் என்று போற்றப்படும் ஈஸ்வரனை வணங்க வேண்டும். ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்களில் சூரியன் வலது கண்ணையும், சந்திரன் இடது கண்ணையும் குறிக்கின்ற கோள்கள். அது மட்டுமின்றி சுக்கிரன் நமது பார்வை தீட்சண்யத்தை (Vision Power) தனது கட்டுக்குள் கொண்டு வருகிறது.

 இது தவிர அவரவர் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் வலது கண்ணையும், 12ம் பாவகம் இடது கண்ணையும் குறிக்கும்.  இந்த இரண்டு பாவகங்களில் உள்ள கோள் சூரியன், சந்திரன், சுக்கிரன் இவர்களின் அமைவிடத்தை கொண்டு பார்வை குறைபாட்டை ஜோதிடர்கள் துல்லியமாக கணித்து பலன் உரைப்பர். சென்னை, செங்குன்றம் (ஸிமீபீ பிவீறீறீs) அருகே அமைந்துள்ள ஞாயிறு (ஊரின் பெயரே ஞாயிறுதான்.

செங்குன்றத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது) என்ற திருத்தலம் பார்வைக் குறைபாட்டை போக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. கண்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக இந்த தலத்திற்கு சென்று இங்கே எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனை வணங்கிய பின்னர், மூலவரின் சந்நதிக்கு எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

?அரசமரம், வேம்பு இரண்டையும் இணைத்து வைப்பதன் தத்துவம் என்ன?
- கமலா துரைசாமி, திருவெண்காடு.
சிவசக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடு அது.

அரசமரத்தை பரமேஸ்வரனாகவும், வேப்ப மரத்தினை அம்பிகையாகவும் பாவித்து வணங்குகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் யாரும் வேண்டுமென்றே அரசமரத்தையும், வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை. அவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன. எல்லா இடங்களிலும் அவ்வாறு ஒன்றிணைந்து
வளருவதும் கிடையாது. நதிக்கரைகள், சாந்நித்தியம் நிறைந்த இடங்களில் மட்டுமே அவை இரண்டும் ஒன்றிணைந்து வளர்கின்றன.

பொதுவாக அரசமரம் போன்ற மிகப்பெரிய மரங்கள் தனக்கு அருகில் வேறொரு மரத்தினை வளர விடுவதில்லை. இதற்கு விதிவிலக்காக வேப்ப மரம் அரச மரத்தின் வேரோடு ஒன்றாக இணைந்து வளர்கிறது. வேப்பம்பழத்தை விழுங்கி விட்டு அரசமரக் கிளைகளில் வந்து அமருகின்ற காகத்தின் எச்சத்திலிருந்து விழுகின்ற வேப்பங்கொட்டைகளில் இருந்து வேப்ப மரம் வளர்கிறது என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் காரணம் சொன்னாலும் மற்ற மரங்களில் சென்று அமர்கின்ற காகத்தின் எச்சத்திலிருந்து விழும் வேப்பங்கொட்டைகள் அவ்வாறு அந்த மரத்தின் வேரோடு இணைந்து வளருவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவேதான் அரசம், வேம்பு   ஆகிய இரு மரங்களும் இணைந்திருக்கின்ற அந்த குறிப்பிட்ட இடம் தெய்வ சாந்நித்தியம் நிறைந்ததாக விளங்குகிறது. இவை இரண்டிற்கும் திருக்கல்யாணம் செய்வித்து வழிபடுவோரும் உண்டு.

சிவசக்தி இணைவாக கருதப்படும் அம்மரங்களின் அடியில் அவர்களது பிள்ளையான பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். அதிகாலையில் ஸ்நானம் செய்து இவற்றை சுற்றி வருவோருக்கு புத்ரதோஷம் நீங்கி குழந்தை பிறக்கும் என்றும், தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும் என்றும், திருமணத் தடை காண்போருக்கு தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என்றும் கூறுவர்.

?சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்க விரும்புகிறேன். நல்லது தானா?
- பாலாஜி, விழுப்புரம்.

கூடாது. அது நல்லதல்ல. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்வது தவறு. சனைஸ்சரன் என்ற வார்த்தைதான் மருவி சனீஸ்வரன் என்றாகி விட்டது. சனைஸ்சரன் என்ற சொல்லுக்கு மெதுவாக நகர்பவன் என்று பொருள். நவகிரகங்களை கடவுளர்களாக பாவித்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் இட்ட பணியை சரிவரச் செய்யும் ஏவலாட்களே நவகிரகங்கள். ஆலயத்தில் கூட அவர்களை பரிவார தேவதைகளாகத்தான் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். சனி, இராகு, கேது மட்டுமல்ல குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. அது நல்லதல்ல. ஆலயத்தில்கூட முதலில் மூலவரை வணங்கிய பின்புதான் பரிவார தேவதைகளான நவகிரகங்களுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.

?சுபநிகழ்ச்சிகளில் எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தலாமா?
- கலாவதி செல்வகுமார், அம்பத்தூர்.
தாராளமாகப் பயன்படுத்தலாம். சுபநிகழ்ச்சிகளில் பழங்கள், புஷ்பங்கள், சீர்வரிசைகள் வைப்பதற்கு எந்தவித விதிவிலக்கும் கிடையாது. பூஜையின்போது எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தலாமா என்பதே உங்களது சந்தேகம் என்று எண்ணுகிறேன். பூஜையின்போது பழங்கள், புஷ்பங்களை அருகில் மொத்தமாக வைத்துக் கொள்வதற்கு பயன்படுத்தலாம். ஆனால், இறைவனுக்கு நைவேத்யம் வைக்கும்போதும், ஹோமம் முதலான யாகாதி கிரியைகளை செய்யும்போதும் எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பித்தளை, தாமிரம் அல்லது வெள்ளியினால் ஆன பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

?எனது வீடு தெருக்குத்தில் (தெருக்களின் சந்திப்பில் உள்ள வீடு) உள்ளதாகச் சொல்கிறார்கள். அதைச் சரிசெய்ய ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
- சீதாலட்சுமி, முடியனூர்.
வீட்டு வாயிலில் பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு நித்திய பூஜைகளைச் சரிவர செய்து வருவதால் எவ்வித தோஷமும் வீடுகளை அண்டுவதில்லை. சேலம், ஈரோடு பகுதிகளில் இவ்வாறான சந்திப்பில் உள்ள வீட்டு வாயிலில் பித்தளை அல்லது இரும்பினால் ஆன திரிசூலத்தை பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். ஒரு சிலர் வீட்டு வாயிலில் வேப்பமரம் நட்டு வைத்திருப்பார்கள். வீட்டு வாயிலில் தெய்வ சாந்நித்யம் நிறைந்திருந்தால் தீயசக்திகள் உட்புகுவதில்லை என்ற நம்பிக்கையே இவ்வாறான செயல்களின் உட்கருத்து. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வாசல் பெருக்கி, சாணம் கரைத்து தெளித்து கோலமிட்டு வாயிற்படியில் விளக்கேற்றி வைப்பதும், பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி, பூஜை செய்து வருவதுமே போதுமானது. வேறெந்த பரிகாரமும் அவசியமில்லை.

?தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், பிறந்தநாளில் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அணைப்பது ஏற்புடையதா?
- ஜெயந்தி மகேஷ், மயிலாடுதுறை.
நிச்சயமாக ஏற்புடையது அல்ல. எத்தனை வயது முடிந்திருக்கிறது என்பதை குறிப்பதற்காக அத்தனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து ஊதி அணைப்பது என்பதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அந்நியக் கலாசாரமாய் இருப்பினும், எந்த மதமும் விளக்கினை அணைக்கச் சொல்லவில்லை. தேவாலயங்களில் விளக்கினை ஏற்றி வைப்பதையே எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன

. மேலை நாடுகளில் கூட இது யாரோ ஒருவர் அறியாமையின் காரணமாக ஏற்படுத்தி வைத்த ஒரு பழக்கமே அன்றி தொன்றுதொட்டு வருவது அல்ல. நம் வீட்டுக் குழந்தைகளின் பிறந்தநாளில் அருகிலுள்ள ஆலயத்தில் விளக்குகளை ஏற்றி வையுங்கள். இறைவன் அவர்கள் வாழ்வினில் ஒளியேற்றி வைப்பார்.

?அம்மனுக்கு சாத்திய புடவையை ஏலத்தில் எடுத்து பெண்கள் வாங்கி உடுத்துவது சரியா?
- சம்பத்குமார், தஞ்சாவூர்.
சரியே. அம்மனுக்கு சாற்றிய புடவையை பெண்கள் வாங்கி உடுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. இந்த உலகில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என அத்தனையும் இறைவனால் படைக்கப்பட்டவையே. அம்பிகைக்கு நைவேத்யம் செய்த உணவினை பிரசாதமாக எண்ணி வரிசை யில் நின்று வாங்கி சாப்பிடும்போது, அம்மனுக்கு சாற்றிய புடவையை வாங்கி அணிந்து கொள்வது மட்டும் எவ்வாறு தவறாகும்..?

மனிதர்களாகிய நாம் அணிந்து பார்த்த வஸ்திரத்தை அது புதிதாய் இருந்தால் கூட அம்பிகைக்கு அர்ப்பணிக்கக் கூடாது. மாறாக அம்மன் வஸ்திரத்தை பெண்கள் வாங்கி உடுத்துவதால் நன்மையே உண்டாகும். மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற நாட்களில் பெண்கள் தாராளமாக அம்மனுக்குச் சாற்றிய புடவையை அணிந்து கொள்ளலாம். குறிப்பாக பூஜை செய்யும் நேரங்களில் உடுத்துவது மிகவும் நல்லது.

? விபூதியை எந்த விரலில் எடுத்துப் பூச வேண்டும்?
- ரமேஷ் சீனுவாசன், மங்களம்பேட்டை.
ஆள்காட்டிவிரல் (தர்ஜனீ), நடுவிரல் (மத்யமம்), மோதிரவிரல் (அநாமிகம்) ஆகிய மூன்று விரல்களிலும் விபூதியை எடுத்து கட்டை விரலால் (அங்குஷ்டம்) நன்றாகக் குழைத்து மூன்று பட்டைகளாக நெற்றியில் பூச வேண்டும். வலதுகையில் விபூதியை எடுத்துக்கொண்டு நெற்றியின் இடது ஓரத்தில் இருந்து வலது ஓரம் வரை முழுமையாக இடுதல் வேண்டும். நாகரிகம் என்ற பேரில் நகத்தளவிற்கு விபூதி இடுதல் கூடாது. மந்திரமாவது நீறு என்று தேவாரப் பதிகத்திற்கு ஏற்ப இவ்வாறு நெற்றி நிறைய திருநீறு பூசுபவர்களை எந்தவிதமான தொற்று வியாதியும் அவ்வளவு எளிதில் அண்டுவதில்லை. நெற்றியில் விபூதி இடும்போது,

‘த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத்’என்ற மந்திரத்தை உச்சரித்தல் நல்லது. இந்த மந்திரத்தைச் சரியாகச் சொல்லத் தெரியாதவர்கள் ‘ஓம் நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.

?ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
திருமணம் செய்து கொள்ளலாமா?
- லலிதா விஸ்வநாத், திருமயம்.

செய்துகொள்ளலாம். திருமணத்திற்கு நட்சத்திரப் பொருத்தம் என்பது முக்கியமில்லை. அதே நேரத்தில் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் பாத பேதம் காரணமாக அடுத்தடுத்த ராசிகளில் பிறந்திருக்கும் பட்சத்தில், முதல் ராசியில் பெண்ணும், இரண்டாவது ராசியில் ஆணும் பிறந்திருந்தால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதை விட ஜாதக ரீதியாக பொருத்தம் பார்ப்பதே திருமணத்திற்கு மிகவும் முக்கியம். குறிப்பாக லக்னம், 2, 4, 7, 8, 12 ஆகிய பாவகங்கள் இருவர் ஜாதகங்களிலும் ஒத்துப்போகின்றனவா என்பதை ஆராய்ந்த பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும். உங்களது குடும்ப ஜோதிடரை அணுகி அவரது அபிப்ராயத்தின் பேரில் திருமணத்தை முடிவு
செய்யுங்கள்.

? 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?
- ரங்கபாஷ்யம், நாச்சியார்கோவில்.
ஒரு மாமாங்கம் என்பது 12 ஆண்டுகளைக் குறிக்கும். தேவதா ஆராதனைக்கு குரு பகவானை பிரதானமாக கணக்கில் கொள்வார்கள். குரு பகவான் சராசரியாக ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார்.

 12 ராசிகளையும் முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு 12 ஆண்டுகள் காலம் ஆகும். நாம் வாழுகின்ற இந்த அண்டம்தான் 12 ராசி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக குருபகவான் இந்த அண்டத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாமாங்கம் என்பது தேவதைகளை ஆராதனை செய்வதற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளும் கால அளவாக வைத்துக் கொள்ளலாம்.

மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். ஆலயம் புதுப்பிக்கப்பட்டு செய்யப்படுகின்ற கும்பாபி ஷேகத்தினை புனருத்தாரணம் என்று அழைப்பர்.

பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பெரிய ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது என்பது மிகவும்விசேஷமானது.