புலி சந்நதிக்கே முதல் வழிபாடு!



கர்நாடக மாநிலம், நீலாவரா

பார்வதி தேவி துர்க்கா, மஹாகாளி, சாமுண்டி, மஹிஷாசுர மர்த்தனி என்ற பல திரு நாமங்களில் எழுந்தருளியிருக்கின்ற தலங்கள் நமது நாட்டில் ஏராளமாக இருக்கின்றன. இந்த வகையில் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் துர்க்கா தேவி, மஹிஷாசுர மர்த்தனியாக எழுந்தருளியிருக்கிறாள்.

உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் மிகப் பிரபலமானது. இங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது நீலாவரா என்ற கிராமம். இங்கு சீதா நதிக்கரையில், தேவி மஹிஷாசுர மர்த்தனியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மிகப் புராதனமான ஆலயம். இப்பகுதி மக்கள் நீலாவரா தேவியை மைசம்ம குடி தேவதை என்று தங்கள் குல தேவதையாக வழிபட்டு வருகின்றனர்.

 நீலாவரா மஹிஷாசுர மர்த்தனி ஆலயக் கருவறையில் தேவி இடதுகாலை மடக்கி, வலதுகாலை தொங்கவிட்டு நான்கு கரங்களோடு காட்சி தருகிறாள். பின் வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் உள்ளன. முன் கரங்களில் பிடித்துள்ள சூலாயுதத்தால் மஹிஷனின் தலையை கீழே அழுத்திக் காட்சி தரும் இந்த துர்க்கை, அலங்காரத்தில் சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்.

தேவியின் கருவறை முன்பாக தேவியின் வாகனமான சிங்கத்தின் சிலை உள்ளது. மஹிஷாசுர மர்த்தனி ஆலய வளாகத்தில் பைரவருக்கு தனி சந்நதி உள்ளது. இதில் பைரவர் நான்கு கரங்களோடும், முறுக்கிய மீசையோடும் காட்சி தருகிறார். முன் வலக்கையில் வாள், முன் இடக்கையில் கேடயம், பின் வலக்கையில் திரிசூலம், பின் இடக்கையில் டமருகம் ஆகியவற்றோடு ஸ்ரீ பைரவர் அருள்பாலிக்கிறார். நின்ற கோலத்தில் உள்ள விநாயகருக்கும், புலிக்கும் தனிச் சந்நதி அமைக்கப்பட்டுள்ளன. பரிவார தேவதைகளுக்கு பூஜைகள் செய்யப்படும்போது புலியின் சந்நதி யிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்தப் பரிவார தேவதைகளுக்கு தீபாராதனை முடிந்த பின்னரே தேவிக்கு ஆரத்தி, வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இந்த நீலாவரா மஹிஷாசுர மர்த்தனி ஆலயத்தில் சிராவண (ஆவணி) மாதம் நடைபெறும் சிறப்பு உற்சவமான ஜாத்ராவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். சீதா நதிக்கரையில் அமைந்துள்ள முக்கியமான தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான இத்தலத்தில் புனித நீராடி பக்கதர்கள் தேவியை வழிபடுகின்றனர். நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பு நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் அருகில் உள்ள சீதா நதியின் பஞ்சமி தீர்த்தக் கட்டத்தில் ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன. நாகசான்னித்யம் அதிகமாகக் காணப்படும் இந்தச் சந்நதியில் நாகர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சர்ப்ப தோஷம் விலக பக்தர்கள் இங்கு சிறப்பு வழிபாடுகளை செய்கின்றனர்.

பஞ்சமி தீர்த்தக் கட்டத்தில் கார்த்திகை மாதம் பக்தர்கள் ஸ்நானம் செய்து தேவியை வழிபட்டுச் செல்கின்றனர். ஆவணி மாதம் நடைபெறும் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.கர்நாடக மாநிலத்திற்குரிய யட்சகானம் என்ற சிறப்பு நிகழ்ச்சி அடிக்கடி நீலாவரா தேவி ஆலயத்தில் நடைபெறுகிறது. இந்த ஊரையொட்டிய பல கிராமங்களில் யட்ச கானக் கலைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

நீலாவரா கிராமத்திற்கு அருகிலுள்ள யெல்லம்பள்ளி கிராமத்தில் ஒரு காலத்தில் யாக யக்ஞங்கள் நடைபெற்றுள்ளன. எனவே யக்ஞம்பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் பெயர் தற்போது யெல்லம் பள்ளியாக மருவியிருக்கிறது. அக்காலத்தில் யாகங்கள் நடத்தும் பொருட்டு அமைக்கப்பட்ட யாக குண்டங்கள் தற்போதும் இங்கு பார்க்கலாம். இந்தக் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான மகாலிங்கேஸ்வரர் சிவாலயம் உள்ளது. சீதா நதியில் புனித நீராடி காலவ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் சிவபிரானைத் தொழ பாவங்கள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. சிராவண மாதத்தில் புனிதநீராட இந்த தீர்த்த ஸ்நானம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது

 விஜயலட்சுமி சுப்பிரமணியம்