அறுபத்து மூவர் என்ற அற்புத உற்சவம்



சிவாலயங்களில் பக்தோற்சவம் எனும் பெயரில் அடியவர்களுக்கு விழா நடத்த வேண்டுமென்று ஆகம நூல்கள் கூறுகின்றன. பெருந்திருவிழாவில் கொடியிறங்கிய பின்னர் பக்தோற்சவம் எனப்படும் விழா நடைபெறுகின்றது.

சிவாலயங்களில் சண்டீசருக்கு மட்டுமே பக்தோற்சவம் நடத்தப்படுகிறது. சிவாகமங்களில் அறுபத்துமூவர் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆகமங்களின் காலம் நம்மால் ஆராய்ந்து அறிய முடியாத பழங்காலமாகும். அதனால் பின்னாளில் தோன்றிய அடியவர்கள் பற்றிய செய்திகளை அந்நூல்களில் காண முடிவதில்லை.

நாம் போற்றும் அடியவர்கள் எல்லோரும் ஏறத்தாழ 1,300 ஆண்டுகளுக்கு முன்பு மண் மேல் தோன்றி வாழ்ந்தவர்கள். எனவே, அவர்களைப் பற்றியோ அவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய விழாக்கள் பற்றியோ ஆகமங்கள் மற்றும் அதன்வழி நூல்களில் செய்திகளைக் காண முடிவது இல்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட பக்தி எழுச்சியால் ஆலயங்களில் பெரிய புராணத்துள் கூறப்பட்டுள்ள அடியவர்களின் திருவுருவங்களை எழுந்தருளி வைத்து வழிபடும் வழக்கம் வந்தது. அப்படி எழுந்தருளி வைக்கப்பட்ட திருவுருவங்களுக்கு நாள் வழிபாடுகளும், சிறப்பு வழிபாடுகளும் ஏற்படுத்தப்பட்டன.

பெரிய தலங்களில் அறுபத்துமூவர் எனப்படும் அடியவர் கூட்டத்திற்கு மூலத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டதுடன் உலாத் திருமேனிகளும் செய்து வைக்கப்பட்டன. திருவுலா திருமேனிகளுக்கு விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.இவ்விழாக்கள் யாவும் ஒரே மாதிரியாகவோ குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றியோ நடத்தப்படுவதில்லை. மக்களின் வசதி, பொருளாதாரம் முதலிய வாழ்வியல் சூழ்நிலைக்கேற்ப நடத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, இந்த விழா கொண்டாடப்படும் நாள் குறித்த வரையறை ஏதுமில்லை. திருக்கழுக்குன்றத்தில் மூன்றாம் திருநாளிலும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயம், பெருநகர் பிரம்மபுரீசர் ஆலயம் முதலியவற்றில் ஆறாம் நாளிலும், திருமயிலை கபாலீச்சரத்தில் எட்டாம் நாளிலும் நடத்தப்படுகின்றன. அதுபோல் திருவண்ணாமலையில் காலையிலும், திருவொற்றியூரில் மாலையிலுமாக இவ்விழா நடைபெறுகிறது. மயிலாப்பூரில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா காலை விழாவுக்கு உரியதே. என்றாலும் மக்களின் வசதி கருதியும் வெயிலின் கொடுமை கருதியும் இவ்விழா மாலையில் நடைபெறுகின்றது. இதனால் மாலையில் நடைபெற வேண்டிய குதிரை வாகன உற்சவம் இரவு பத்து மணிக்கும் இரவு நடைபெற வேண்டிய பஞ்சமூர்த்தி விழா நள்ளிரவு 12 மணிக்கும் நடைபெறுகின்றன.

இனி தென்னகச் சிவாலயங்களில்  சிறப்புடன் நடைபெற்று வரும் அறுபத்துமூவர் விழாக்கள் பற்றிய சிறப்புச் செய்திகளைக் கண்டு மகிழலாம்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்துமூவர் விழாஅறுபத்து மூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும்  தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும். இது பங்குனி மாதம் உத்திர நாளைக் கடைநாளாகக் கொண்டு ஆலயத்தில் நடத்தப்படும் பெருந்திருவிழாவின் போது எட்டாம் நாள் மாலையில் நடத்தப்படுகிறது.

 மாலையில் விநாயகர் முன்செல்ல, பெரிய வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும் விமானத்தில் பின்னால் கற்பகாம்பாளும் பவனிவர சிங்கார வேலவரான முருகனும், சண்டீசரும் தொடர்ந்து வர, விழா நடைபெறுகிறது. அடியவர்கள் அவரைப் பார்த்த வண்ணமே வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கேடயம் என்னும் சப்பரங்களில் ஒன்றிற்கு நால்வர் வீதம்18 சப்பரங்களில் அவர்கள் பவனி வருகின்றனர். இச்சப்பரங்களுடன் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித்தனியாகப் பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர்.

இத்தலத்து அடியவரான சிவநேசரும் அவரது மகளும் பாம்பு தீண்டி மாண்டு திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்டவளுமான அங்கம்பூம்பாவையாரும் தனித்தனியே  ஸ்ரீவிமானங்களில் பவனி வருகின்றனர். இவர்களுடன் முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், வாசகி உடனாய திருவள்ளுவர், திரௌபதி அம்மன் எனப் பல்வேறு தெய்வங்களும் பவனி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திருமுருகன் இவ்விழாவுக்கு எழுந்தருளி வீதி வலம் காண்கிறான்.

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் விழாவாக இது அமைகிறது. விழாவில் தண்ணீர்ப்பந்தல் என்னும் பெயரில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் மக்கள் நன்மைக்காக நீர், மோர், பானகம், ஐஸ்கிரீம், பிரிஞ்சி, புளிசாதம், பொங்கல் முதலான உணவுப் பொருட்கள் பிஸ்கட், சாக்லெட், மிட்டாய்கள் போன்ற தின்பண்டங்களை அவரவர் சக்திக்கேற்ப தானமாக வழங்குகின்றனர். குதூகலமான விழாவாக இது அமைகிறது.

இவ்விழா நாளின் காலையில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, எலும்பும்  சாம்பலுமாக எஞ்சியிருந்த பூம்பாவையை உயிர்ப்பிக்கும் ஐதீக விழா நடத்தப்படுகிறது. அங்கம் பூம்பாவை திருவுருவத்தை விமானத்தில் வைத்து அலங்கரித்துத் திருக்குளத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள வைத்து திரையிட்டு வைத்திருப்பர். சிவநேசன் செட்டியர் திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சியும் சம்பந்தர் அவ்விடம் வந்து மட்டிட்ட புன்னை எனக் தொடங்கும் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சியும்  நடைபெறும்.

ஓதுவார் அந்தப் பதிகத்தை முழுவதுமாகப் பாடுவார். அத்துடன் பெரிய புராணத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பாக உள்ள செய்யுள்களும் ஓதப்படும். பாடல்கள் முடிந்ததும், திரையை விலக்கி அங்கம்பூம்பாவைக்கு தீபாராதனை செய்யப்படும். அப்போது அங்கு மண் சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நாட்டுச்சர்க்கரையை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். பின்னர், அங்கம்பூம்பாவை, சிவநேசர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் வடக்குமாட வீதியாக வலம் வந்து திருக்கோபுர வாயிலில் நிற்பர்.பிற்பகல் இவர்களுக்கு கபாலீஸ்வரர் காட்சி கொடுக்கும் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்தே அறுபத்து மூவர் விழா கொண்டாடப்படுகிறது.

அறுபத்துமூவர் வரலாற்றுக்கு ஆதாரமானவைசைவம் போற்றும் அறுபத்து மூன்று அடியவர்களின் வரலாற்றுக்கு அடிப்படை நூல்களாக இருப்பவை மூன்றாகும். அவை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த திருத் தொண்டத்தொகை, திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் திருவந்தாதி. சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த பெரிய புராணம் என்பனவாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே அடியவர்களைப் போற்றும் வகையில் எண்ணற்ற நூல்கள் வெளியாகியுள்ளன.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் அடியவர்களின் பெயரை மட்டுமே வரிசைப்படுத்திக் கூறி, அவர்தம் அடியார்க்கும் அடியேன் என்று போற்றியுள்ளார். அவரை தொடர்ந்து வந்த நம்பியாண்டார் நம்பிகள் பொள்ளாப் பிள்ளையார் மூலமாக உணர்த்தப் பெற்று திருத்தொண்டத்தொகையில் இடம் பெற்றுள்ள அடியவர்களின் ஊர், மரபு, அருட்செயல் ஆகியவற்றைக் கூறும் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை அருளிச் செய்துள்ளார்.

சேக்கிழார் சுவாமிகள் சுந்தரரின் திருத்தொண்டத் தொகையையும் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டத் திருவந்தாதியையும் ஆதாரமாகக் கொண்டும், தன்னுடைய அளவற்ற ஆர்வத்தால் ஆராய்ந்து தெளிந்த செய்திகளைக் கொண்டும், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தைப் பாடி அருளினார். அதில் அறுபத்து மூன்று அடியவர்களின் வரலாறும் தொகையடியார்கள் இயல்பும் சிறப்புடன் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

அன்பர்கள் திருத்தொண்டர் தொகைப் பாசுரத்தைக் தொகைநூல் என்றும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியினை வகைநூல் என்றும், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை விரிநூல் என்றும் வழங்குகின்றனர்.கல்வெட்டு கூறும் அறுபத்துமூவர் பெற்ற பேறுமுன்னாளில் திருக்கோயில்களில் பூசைகள் தடையின்றிச் சிறப்பாக நடைபெறவும்,  திருவிளக்கேற்றவும், அமுது படைக்கவும் அன்பர்கள் நிலமாகவும், பொற்காசுகளாகவும், ஆடுமாடுகளாகவும் கொடைகளை வழங்கி நிபந்தனைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

தம்முடைய அரசனின் வெற்றிச் செய்திகளுடன் தாமளித்த அந்த தானத்தைப் பற்றிய விளக்கமான செய்திகளையும், ஆலயச் சுவர்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்தனர். அப்படி அளிக்கப்பட்ட தானச் செய்திகளின் முடிவில் இந்த தர்மத்தை, சூரிய சந்திரர் இருக்கும்வரை நடத்த வேண்டும் என்றும், அப்படிப் பாதுகாப்பவர் பெறும் புண்ணியங்கள் இவை இவை என்றும், தர்மத்தினை அழித்தவர்கள் அடையும் பாவம் இன்ன இன்னதென்றும் பட்டியலிட்டுக் குறித்து ஆணை வைத்துள்ளனர்.

சூரியசந்திரருள்ள வரை தர்மத்தை ரக்ஷிப்பவர்கள் பாதம் தன் தலை மேலானதென்றும், அவர்கள் பல செல்வங்களைப் பெற்று வாழ்வார்கள் என்றும், கோடி புண்ணியம் அடைவார்கள் என்றும் குறித்திருப்பதைக் காண்கிறோம். இதுபோல் அந்த தர்மத்தினை அழித்தவர்கள் நரகம் புகுவார்கள் என்றும், கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தைக் கொள்வரென்றும் பலவாறு சாபம் மொழிந்திருப்பதைக் காண்கிறோம்.

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம், கஞ்சப்பள்ளி என்னும் ஊரிலுள்ள தேனீசுவரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமி அம்மனுக்குத் திருவிளக்கு, அபிஷேகம், நைவேத்தியம் (நிவேதனம்) ஆகியவற்றிற்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தி அக்கோயிலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தப் பூசைகளை நடத்திச் சந்நதியைப் பரிபாலித்து வருபவர்கள் அறுபத்துமூவர் பெற்ற பேறு பெறுவார்கள் என்றும், தீமை விளைவிப்பவர் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்துடன், மாமா, பிதாவையும் புத்திரனையும் கழுத்தறுத்துக் கொன்ற தோஷத்தைப் பெறுவார்கள் என்ற சாபமும் மொழியப்பட்டுள்ளது.

இதில் இந்த தருமம் காப்பவர் அறுபத்துமூவர் பெற்ற பேறு பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. சிந்திக்கத்தக்கதாகும். செம் பொருளான சிவபெருமானின் திருவடிக்கீழ் வீற்றிருக்கும் இன்பமே பேரின்பம். அத்தகைய பேரின்பத்தை அடைந்து திளைத்துக் கொண்டிருப்பவர்களே அறுபத்துமூவர். அதனால் அவர்கள் பெற்ற பேறே பெறுதற்கரிய ஒப்பற்ற பேறாகும். அதனால் தான்  இந்த தர்மம் காப்பவர் அத்தகைய பேற்றைப் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. இது வேறெங்கும் பொறிக்கப்படாத அற்புத ஆணை மொழிகளாகும். இவை தன்னைப் பொறித்தவன் அறுபத்து மூவர் மீது கொண்டிருந்த பற்றை உலகிற்கு வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றன.

அறுபத்துமூவரின் பெயர்ப் பட்டியலான திருத்தொண்டத் தொகை பிறந்த வரலாறு சிவபெருமான் ஆதியந்தம் இல்லாதவராக இருப்பதைப் போலவே அவரது அடியவர்கள் போற்றிப் பின்பற்றிவரும் சைவ சமயமும் ஆதியந்தம் அற்றது. சைவ சமயத்தில் காலத்தால் கணக்கிட்டு அறிய முடியாத, எண்ணிக்கையில் அடங்காத அடியவர்கள் காலந்தோறும் தோன்றிச் சிவனடியையே சிந்தித்துச் சைவ சமயப் பணிகள் ஆற்றி, முக்திப்பேறு பெற்றுள்ளனர். அவர்களின் தியாகம், வீரம், பக்தி, அன்பு முதலிய பண்புகள் அளவிடப்பட முடியாதவை. அவை அனைத்தையும் நாம் அறிந்து போற்றி மகிழ்வது என்பது இயலாத காரியம்.

அதனால், திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமாள் சுந்தரரிடம் தானே அடியெடுத்துச் கொடுத்துச், சில அடியவர்களின் பெயரை வரிசைப்படுத்தி அவர்களுக்கு அடியவனாவேன் என்று பாடும்படிச் செய்தார். அந்தப் பெயர் பட்டியலைக் கொண்ட பாடலே திருத்தொண்டத்தொகையாகும். அதில் அறுபது தனியடியார்களின் பெயரையும் கூறி அவருக்கு அடிமையாவேன் என்று சுந்தரர் கூறியுள்ளார். அதில் இடம் பெற்றிருப்பவர்களையே நாம் அறுபத்து மூவர் என்று இந்நாளில் கொண்டாடி வருகிறோம். இனி தியாகேசப் பெருமாள் அருளால் திருத்தொண்டத் தொகை தோன்றிய வரலாற்றைக் காணலாம்.

திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மலர்மாலை தொடுத்தும், விபூதி மடல் தாங்கியும், திருப்பணி செய்து வந்த ஆலால சுந்தரர் சிவனது ஆணையால் மண்மீது வந்து திருநாவலூரில் அவதரித்தார். திருவெண்ணெய் நல்லூரில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அவர், தலங்கள் தோறும் சென்று சிவபெருமானைச் சொற்றமிழால் பாடிப்பரவும் வரம் பெற்றார்.
அவர் தென்னகமெங்கும் பயணித்துப் பல தலங்களைப் போற்றிப் பணிந்தவாறே திருவாரூர் சென்று தங்கினார். அங்கு எழுந்தருளியிருக்கும் ஆரூர்ப்பெருமானிடம் அடிமைத் திறம் பூண்டதுடன், அக்கோயிலில் ஆடல் பணிந்து வந்து பரவையாரைத் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வசித்து வந்தார். அவர்கள் சிவயோகராஜனான தியாகேசரைப் பணிந்த தவயோக நிலையில் நின்று இனிது வாழ்ந்து வந்தனர்.

திருவாரூர் ஆலயத்தில், வெளிப்பிராகாரமான பெரிய பிராகாரத்தின் வடகிழக்கு முனையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இதற்குத் தேவாசிரியன் என்பது பெயர். அது தியாகேசரை வணங்க வந்து கூடும் தேவர்கள் தமக்குரிய நேரம் வரும்வரை காத்திருக்குமிடமாகும். அதில் சிவனடியார்கள் வீற்றிருப்பர்.திருவாரூர் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த தேவாசிரிய மண்டபத்தை வலம் வந்து அதிலிருக்கும் அடியவர்களைப் பணிந்து வணங்கிய பின்னரே திருமூலட்டானநாதரையும், தியாகேசப்பெருமானையும் பணிந்து வணங்குவது வழக்கம். இதனை நாள்தோறும் வலம் வரும் வேளையில் சுந்தரர் சிவனருளைச் சிந்தித்திருக்கும் அந்த அடியவர்களுக்கு அடிமையாவது எந்நாளோ என்று எண்ணுவது வழக்கம்.

அதற்கான நாளும் வந்தது. ஒருநாள் தியாகேசரைத் தரிசிக்க வந்த சுந்தரமூர்த்தி பக்தியின் முதிர்ச்சியாலும், தியாகேசரை விரைந்து தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், கோயிலுக்குள் சென்றவர் தேவாசிரிய மண்டபத்தை வலம் செய்யாமலும், அதிலுள்ள அடியவர்களை வணங்காமலும், விரைந்து நேராகத் தியாகராஜர் சந்நதிக்குச் சென்றார்.

அந்நாளில் அம்மண்டபத்தில் இருந்த அடியார்களின் நடுவே விறள்மீண்ட நாயனார் என்பவர் இருந்தார். அவர் மலையாள நாட்டைச் சேர்ந்த செங்குன்றூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர். அவர் தேவாசிரியனை வலம் வராமலும், அதிலிருக்கும் அடியவர்களைத் தொழாமலும் செல்லும் சுந்தரரின் செய்கையைக் கண்டு கோபித்தார். அடியவர்கள் மதியாத இவரை இப்போதே சைவ நெறியிலிருந்து தள்ளி வைக்கின்றேன் என்றார்.

அங்கிருந்தவர்கள் ஐயனே! அவர் தியாகேசனின் அருள் பெற்றவர் என்றனர். அடியவர்களை மதிக்காதிருக்கும் இவருக்கு அருள்புரியும் சிவனும் நமக்குப் புறகு என்றார்.அதை அறிந்த சுந்தரர், வருந்தினார் சிவபெருமானிடம்  சென்று ஐயனே! அடியவர் தம் வருத்தம் தீருவதற்கென செய்வேன் என்றார்.தியாகேசர் அவரிடம் அன்பனே! அடியவர்கள் பெருமையால் என்னை ஒத்தவர்கள், தனியாக நின்று உலகை வெல்லும் ஆற்றல் பெற்றவர்கள். குற்றமில்லாதவர்கள். தமது அடிமைத் திறத்தாலேயே என்னைப் பெற்றவர்கள்.

அவர்களுடைய பெருமைகளை யாராலும் முழுவதுமாகச் சொல்ல முடியாது. அன்பால் நிறையப் பெற்றவர்கள். தொண்டினில் இன்பம் காண்பவர்கள் அவர்களை நீ பணிந்து போற்றுக. அதுவே சிறந்தது என்றார்.சுந்தரர் ஒப்பற்ற அடியவர்களுக்கு என் அடிமைத் திறத்தை விளக்கும்  வகையில் எப்படித் தொடங்கிப் பாடுவேன் என்று கேட்க, ஆரூர் அழகன் வேதங்கள் மொழிந்த திருவாயால், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்தார்.

சுந்தரர் மகிழ்வுடன் அதையே முதலாகக் கொண்டு திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.அதில் தனியடியார்களின் பெயரைக் கூறி, அவர்தம் அடியார்க்கும் அடியேன் என்று பாடியவாறே பெருமானை வலம் வந்து, தேவாசிரியனை வலம் வந்து அங்கிருந்த அடியவர்களை வணங்கி, அவர்களின் நடுவில் சென்று அமர்ந்தார். அந்த நிகழ்ச்சியைக் கண்டு அன்பர்களும் அடியவர்களும் மகிழ்ந்தனர்.

சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகைப் பதிகமே அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றுக்கு மூலநூலாக அமைந்த பதிகமாகும்.ஆரூர்ப்பெருமானின் அடிமையான தான் அடியவர்களுக்கு அடிமை என்று உவந்து கூறிய சுந்தரர் தாம் பாடிய இந்தப் பதிகத்தைக் கேட்டு மகிழ்பவர்கள் திருவாரூர்ப் பெருமானுக்கு அன்பராவார்கள் என்று மொழிந்துள்ளார்.இறைவன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடப்பட்டதால், இப்பதிகத்தின் பெயரான திருத்தொண்டத்தொகை என்பதே தெய்வீகச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.

அறுபத்துமூவர் வரலாற்றை விளக்கிக் கூறும் திருத்தொண்டர் புராணம் தோன்றிய வரலாறுதொண்டை வளநாட்டில் நலம் மிகுந்த மூதூராக விளங்குவது குன்றத்தூர். இதில் வளம்மிக்க வேளாளர் குலத்தில் சிறப்புமிக்க குடியாகச் சேக்கிழார் குடி விளங்கியது. அக்குடியில் தோன்றிய சகோதரர்கள் இருவர் இருந்தனர். மூத்தவருடைய பெயர் அருண்மொழித்தேவர். இளையவர் பாலறாவாயர். உயர்ந்த சிவபக்தி மிகுந்த குடும்பத்தில் தோன்றிய இவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர். நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களாக இருந்தனர். இவர்களது பெருமைகளைக் கேள்வியுற்ற அநபாய குலோத்துங்க சோழன் தலைநகருக்கு அழைத்து வந்து உயரிய பதவிகளை அளித்து, தன்னுடன் வைத்துக் கொண்டான்.

அருண்மொழித்தேவர் குடிப்பெருமை விளங்க வந்தவராதலின், குடிப்பெயரால் சேக்கிழார் என்றே அன்பர்களால் அழைக்கப்பட்டு வந்தார். சோழமன்னன் அவருக்கு உத்தம சோழப் பல்லவன் என்னும் பட்டப்பெயர் அளித்து முதன்மந்திரியாக நியமித்து அவரது ஆலோசனைகளைக் கேட்டு ஆட்சிபுரிந்து வந்தான். அவர் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள சோழ நாட்டுத் திருத்தலமான திருநாகேஸ்வரப் பெருமான் ஆலயத்திற்கு விரிவான திருப்பணிகளைச் செய்தார். அப்பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு, நாள்தோறும் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து வழிபாடு செய்து வந்தார். அங்குள்ள நடராஜர் சந்நதியும், சபா மண்டபமும் அவர் செய்த ஒப்பற்ற திருப்பணிகளாகும்.

அத்துடன் அவர் தாம் தோன்றிய தொண்டைநாட்டுக் குன்றத்தூரை ஒட்டி திருநாகேஸ்வரம் என்னும் ஊரை உருவாக்கி, அதில் குடந்தை திருநாகேஸ்வரத்திற்கு இணையானதாக நாகநாதசுவாமி ஆலயத்தையும் அமைத்தார். தம் செல்வமனைத்தையும் கொண்டு அக்கோயில் பூசைக்கு வேண்டிய நிபந்தங்களை ஏற்படுத்தினார்.அந்நாளில் சைவ சமயத்தின் பெருமைகளை விளக்கிக் கூறும் நெடுங்கதை நூல்கள் தமிழில் இல்லை. தமிழில் எல்லோரும் விரும்பிப் படிக்கும் காப்பியங்களாக இருந்தவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய நூல்களேயாகும். இதில் சிலப்பதிகாரமும் சிந்தாமணியும் சமணசமயக் காப்பியங்களாகும்.

சீவகசிந்தாமணி ஒன்பது திருமணங்களைப் பேசும் நூலாதலின் மணநூல் என்றே அழைக்கப்பட்டது. அந்நூல் காப்பியச் சுவைமிக்கதாக அமைந்திருந்தது. அந்நூல் சமண நூலாக இருந்தபோதிலும், அதன் காவியச் சுவை காரணமாக எல்லோருமே அதைப் படித்து மகிழ்ந்திருந்தனர். அரசனுக்கும் அந்நூலின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவன் அடிக்கடி தகுந்த புலவர்களிடம் அந்நூலைப் படித்து விளக்கிச் சொல்லும்படிச் செய்து அதைக் கேட்டுகேட்டு மகிழ்ந்து வந்தான்.

சேக்கிழார் மன்னனிடம், அரசே மாற்றுச் சமயக் கருத்துக்களைக் கூறுவதும், கற்பனைக் கதையும் ஆன அந்தக் காப்பியத்தைக் கேட்பதால் வாழ்வில் விளையப் போகும் பயன் என்ன? அதை விடுத்துச் சைவம் போற்றும் அருளாளர்களின் வரலாற்றைக் கேட்டாலாவது சிவபுண்ணியமாகிய பயன்விளையும் அல்லவா? என்று கேட்டார். அத்துடன் சைவம் போற்றும் அந்த அடியவர்களில் சிலரது வரலாற்றையும் கூறினார். அதைக்கேட்டு மகிழ்ந்த அரசன், அந்த அடியவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாடியருளும்படி வேண்டிக்கொண்டான்.

சேக்கிழார் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அடியவர்கள் வாழ்ந்த தலங்களுக்கு நேரில் சென்று அங்கு அவர்கள் பற்றி வழங்கி வந்த செய்திகளைச் சேகரித்தார். அவர்கள் தொடர்பான, கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை ஆராய்ந்தார். பலவாறு செய்திகளைச் சேகரித்து, சேர்த்த அந்தச் செய்திகளைச் செப்பம் செய்து கொண்டார். பலவிதங்களில் முயன்று சேர்த்த அந்தச் செய்திகளை ஆராய்ந்து தெளிந்தபின் சிதம்பரத்தை அடைந்தார்.

அங்கு ஒரு சித்திரைத் திருவாதிரை நன்னாளில் நடராஜப் பெருமானை வழிபட்டு நின்றார். அவ்வேளையில் நடராஜர், அடியவர்கள் வரலாற்றைப் புராணமாகப் பாட உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்தார். சேக்கிழார் பெருமான் அதையே முதலாகக் கொண்டு அடியவர்கள் வரலாற்றை விளக்கித் திருத்தொண்டர் மாக்கத்தை என்னும் திருத்தொண்டர் புராணத்தை இயற்றத் தொடங்கினார். 4286 பாடல்களைக் கொண்டதான அப்புராணம் அடுத்த திருவாதிரைக்கு முன்பாகவே நிறைவு பெற்றது.

புராணம் நிறைவு பெற்றதை அறிந்த அநபாய (குலோத்துங்க) சோழன் தில்லையம்பதிக்கு வந்தான். சித்திரைத் திருவாதிரை நாளில் அந்நூலை அரங்கேற்றம் செய்ய நிச்சயித்து மடாதிபதிகள், அதிகாரிகள், அன்பர்கள் எல்லோரையும் அழைத்து அறிஞர்கள் நிறைந்த பெரிய சபையைக் கூட்டினான். பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடினர். சேக்கிழார் நடராஜப் பெருமானை வணங்கி புராணத்தை அரங்கேற்றத் தொடங்கினார். அரங்கேற்றத்தைத் தொடர்ந்து ஓராண்டு காலம் புராண படனமும், அதன் விரிவுரையும் நடைபெற்றன. இந்த நாட்களில் நடராஜருக்குச் சிறப்பு வழிபாடுகளும் தீட்சிதர்களுக்குச் சிறப்பும் செய்யப்பட்டன. புராண விரிவுரையை நாள்தோறும் கூடியிருந்து கேட்டவர்கள்  எல்லோருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இறுதி நாளாக மன்னன் பெரிய புராணத்தைச் செப்பேடுகளில் பொறிக்கச் செய்து யானை மேல் ஏற்றினான்.

அத்துடன் சேக்கிழாரையும் யானைமீது அமர்த்தி, தானே அவருக்கு வெண் கவரி வீசினான். அவருக்கு ஞான முடிசூட்டி தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டமும் அளித்தான். அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்து நகரை வலம் வரச் செய்து மகிழ்ந்தான். அக்காட்சியைக் கண்டு மக்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். பெரிய புராணத்தைச் சேக்கிழார் நடராஜர் திருவடியில் வைத்து வணங்கினார். மன்னன் அடியவர் புராணத்தைப் பன்னிரண்டாம் திருமுறையாக ஏற்றுவித்தான்.

பதினொன்றாகத் தொகுக்கப்பட்டிருந்த தமிழ் வேதத்துடன் அடியவர்களின் வரலாறான பெரிய புராணம் சேர்க்கப்பட்டது. அதுமுதல் அது பன்னிரண்டாம் திருமுறையாக விளங்கி வருகின்றது.
சேக்கிழார் மன்னனிடம் இனி வாழ்நாள் முழுவதும் தில்லையில் தங்கியிருந்து அம்பலவாணரைத் தரிசித்துக் கொண்டிருக்கும் பேற்றை விரும்புவதாகக் கூறினார். மன்னன் அவரது பக்தியின் முதிர்ச்சியைக் கண்டு வியந்து அப்படியே ஆகட்டும் என்றதுடன், அவருடைய வாழ்வுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தான்.

அவருடைய தம்பி பாலறாவாயனாரை அழைத்துத் தொண்டைமான் என்ற பட்டமளித்து நாட்டிற்கு மந்திரியாக நியமித்துக் கொண்டான்.சேக்கிழார் தில்லையிலேயே தங்கியிருந்து நடராஜப் பெருமானை வழிபட்டு வந்தார். ஒரு வைகாசிப் பூ¬ஐ நாளில் நடராஜரின் திருவடியை அடைந்தார். தில்லையில் சேக்கிழார் சுவாமிகள் வீடுபேறு பெற்ற வைகாசி பூசத்தில் அவர் நடராசப் பெருமான் திருவடியை அடையும் ஐதீகமும் அறுபத்து மூவர் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றது.

அறுபத்துமூவர் விழாத் தலங்கள் திருக்கழுக்குன்றம்

அதிசயமான இரண்டு கழுகுகள் பல யுகங்களாகத் தொடங்கி நாள்தோறும் வந்து வழிபட்டதால், கழுகுதொழு வேதகிரி என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருத்தலம்  திருக்கழுக்குன்றம். இது நால்வர் பெருமக்களாலும் பாடப்பட்ட பழம்பதி. நான்கு வேதங்களுமே மாமலையாக இருக்க அதன்மீது சிவபெருமான் வேதகிரீசுவராக எழுந்தருளியுள்ளார். இம்மலையின் அடிவாரத்தில் பக்தவத்சலேசுவரர் என்னும் சிவாலயம் உள்ளது. இதனை மக்கள் தாழக்கோயில் என்று அழைக்கின்றனர். இதனுள் கதலி வசந்தர், பொன்னிட்ட நாதர் முதலிய பெயர்களால் அழைக்கப்படும் பக்தவத்சலர் எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலில்  சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளை கடை நாளாகக் கொண்டு பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதில் மூன்றாம் நாள் காலையில் நடைபெறும் அதிகார நந்தி சேவையுடன் அறுபத்து மூவர் விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆலயத்தின் வடக்கு வாசல் வழியாகச் சிவபெருமான் அதிகார நந்தியில் எழுந்தருளி மலையை வலம் வந்து பின்னர் ஊரை வலம் வந்து ஆலயத்தை அடைகிறார். அவருடன் அறுபத்து மூவரும் மலையை வளம் வருவது அற்புதக் காட்சியாகும்.

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளிக் குன்றில் சிவபெருமான் தாயுமானவ சுவாமியாக வீற்றிருக்கின்றார்.  இவர் ரத்தினாவதி என்னும் செட்டிப் பெண்ணுக்கு அவளுடைய தாய் வடிவில் வந்து உடனிருந்து பிரசவம் பார்த்து அருள்புரிந்ததால் தாயுமானவர் என்று அழைக்கப்படுகின்றார். இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாள் காலையில் செட்டிப் பெண் ரத்தினாவதிக்குப் பெருமாள் தாயுமானவனாக வந்து பிரசவம் பார்த்து குழந்தை பெறவைத்து பேணிக்காத்த ஐதீக விழாவும் மாலையில் பெருமான் இடபாரூடராகக் காட்சியளிக்கும் வைபவமும் அதனோடு அறுபத்துமூவர் விழாவும் நடைபெறுகின்றன. இங்கும் அறுபத்துமூவர் பெருமானுடன் மலையை வலம் வருகின்றனர்.

திருவானைக்காவல் 

திருச்சியை அடுத்துள்ள காவிரித் தென்கரைத் திருத்தலம் திருஆனைக்கா என்று தேவாரம்  போற்றும் திருவானைக்கோயில். இது அம்பிகையும், யானையும், சிலந்தியும் சிவபெருமானைப் பூசித்துப் பெற பேறுபெற்ற தலம். சிவனை வழிபட்ட சிலந்தியே பின்னாளில்  கோட்செங்கட் சோழனாகப் பிறந்து பல சிவாலயங்களைப் புதிதாகக் கட்டி திருப்பணிகள் செய்து மேன்மைபெற்று நாயன்மாராக விளங்கினார். இத்தலத்தில் முன்னாளில், மார்கழித் திருவாதிரைத் திருநாளில் நடராஜருடன் அறுபத்து மூவர் விழா நடைபெற்று வந்துள்ளது. இடைக்காலத்தில் சில ஆண்டுகள் அது நின்றுபோய் உள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவ்விழாவை ஏற்றுக்கொண்ட பன்னிரு திருமுறை வாரவழிபாட்டுக் கழகத்தினர் தம்முடைய ஆண்டுவிழாவை ஒட்டிச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இக்கோயிலில் சித்திரை மாதம் (ஏப்ரல், மே) நடைபெறும் மண்டல விழாவான பெருந்திருவிழாவில் இறுதி நாளான பஞ்சப்பிரகார விழா - (ஏப்ரல், மே) வைத் தொடர்ந்து வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இக்கழகம் தனது ஆண்டு விழாவைப் பன்னிருதிருமுறை விழாவாகக் கொண்டாடி வருகிறது. இவ்விழாவின் மூன்றாம்நாள் காலையில் அறுபத்து மூவருக்குச் சிறப்பு அபிஷேகமும், மாலையில் புஷ்பப் பந்தலின் அறுபத்து மூவர் வீதியுலாவும் நடத்தப்படுகின்றன. இங்கு அறுபத்து மூவருடன் திருநந்திதேவரும் உலா வருவதைக் காண்கிறோம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதக் கிருத்திகையன்று கார்த்திகை தீபவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தினைப் பத்தாம் நாளாகக் கொண்டு நடைபெறும் பெருந்திருவிழாவின் ஆறாம் நாளில் காலை வேளையில்  வெள்ளியானை வாகனத்தில் அண்ணாமலையார் பவனி வருகிறார். அவருடன் தனித்தனி சப்பரங்களில் அறுபத்து மூவர் இரண்டு வரிசையில் வருகின்றனர். இது கயிலாயக் காட்சியாக விளங்குகிறது.

சேலம் சுகவனேசுவரர் ஆலயத்தில் சேலம் சகவனேசுவர சுவாமி ஆலயத்தில் திருவெம்பாவைப் பெருவிழா கழக அறக்கட்டளையினர் 2001ல் (சித்திரை புனர்பூச நட்சத்திரம்) அறுபத்து மூவர் வரிசையில் விடுபட்டிருந்த திருவுருவங்களை எழுந்தருளுவித்து, முழுவதிற்குமாக குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைச் சிறப்பாக நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஆண்டுதோறும் சித்திரைப் புனர்பூச நாளில் வருஷாபிஷேகமும் அறுபத்துமூவர் விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்விழாவில் வெள்ளி ரிஷபத்தில் சுகவனேசுவரர் பெரிய மலர் அலங்காரத்துடன் பவனி வர, அடியவர்கள் (ஒரு சப்பரத்திற்கு நால்வர் வீதம்) பவனி வருகின்றனர். இவ்வரிசையின் இறுதியில் திருமுறைநாதரும், (திருமுறை நூல்கள் எழுந்தருளும் திருமுறைக்கோயில்) சேக்கிழாரும் தனி விமானத்தில் வருகின்றனர். வண்ண விளக்குகள் ஒளிர அறுபத்து மூவர் அணிவகுத்துச் செல்லும் காட்சி அற்புதமானதாகும்.

மதுரையில் சைவ சமயத்தின் தலைமைத் தானங்களில் ஒன்றாக இருப்பது மதுரை. புராணங்களில் ஆலவாய் என்று போற்றப்படும் மதுரையில் சிவபெருமான் மீனாட்சி தேவியுடன் சோமசுந்தரராகக் கோயில் கொண்டுள்ளார். அறுபத்து மூவரில் ஒருவரான நின்றசீர் நெடுமாறன் ஆட்சிபுரிந்த தலம். அவரது தேவியாரான மங்கையர்க்கரசியாரும் மந்திரி குலச்சிறையாரும் அறுபத்துமூன்று நாயன்மார்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படுகின்றனர். மூர்த்தியார் என்ற நாயன்மாரும் இந்நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்துள்ளார்.

இத்தலத்தில் அறுபத்துமூவர் மூலவராகவும், உற்சவராகவும் எழுந்தருளியுள்ளனர். இத்தலத்தில் வைகாசி மூலநாளில் திருஞான சம்பந்தர் விழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திருஞான சம்பந்தர் ஆவணி மூல வீதியிலுள்ள திருஞான சம்பந்தர் திருமடத்திற்கு எழுந்தருளுகின்றார். அவ்வேளையில் வைகாசி மூலத்தன்று திருஞானசம்பந்தருடன் அறுபத்து மூவரும் எழுந்தருளுகின்றனர். திருமடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

நெல்லையில் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச் சீமையின் தலைமைச் தானமாக விளங்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அறுபத்து மூவர் தனிச்சிறப்புடன் போற்றப்படுகின்றனர்.  ஆண்டிற்கு மூன்றுமுறை அறுபத்துமூவர் வீதியுலா காண்பதும் இத்தலத்தில் மட்டுமேயாகும். ஆனிப்பெருந்திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நடக்கும் பெரிய ரிஷபவாகனக் காட்சியோடும், சுந்தரர் குருபூஜை விழாவிலும், தை அமாவாசையில் கொண்டாடப்படும் பத்ரதீப விழா எனப்படும் லட்சதீபக் காட்சியிலும் அறுபத்து மூவர் பெருமானுடன் வலம் வருகின்றனர்.
மேலும், திருவாதிரைப் பெருநாளில் பெருமான் தாமிரசபையின் முன்பு நடனமாடும் வேளையில் அறுபத்துமூவர் இரண்டு பக்கங்களிலும் நின்று அந்த அற்புதக் கூத்தை தரிசிக்கும் காட்சியும் நடத்தப்படுகிறது.

பாளையங்கோட்டை திரிபுராந்தகர் ஆலயத்தில் நெல்லையில் துணைநகரமான பாளையங்கோட்டையிலுள்ள திரிபுராந்தகேசுவரர் ஆலயத்திலும், அறுபத்துமூவர் விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் நடைபெறும் பெருந்திருவிழாவில் ஆறாம்நாள் காலையில் அறுபத்துமூவர் பெருமானுடன் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் பெரும் பொருட்செலவில் தீட்டப்பட்டதும், இந்த நூற்றாண்டில் கலைவளத்தைக் காட்டுவதுமான அறுபத்து மூவர் வண்ண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

தில்லையில் சேக்கிழார் வீற்றிருந்து அறுபத்துமூவர் வரலாற்றைப் பாடி அரங்கேற்றிய திருத்தலம் சைவர்களால் கோயில் என்று கொண்டாடப்படும் சிதம்பரம். இங்கு திருமூலட்டானரைச் சுற்றி அமைந்த திருமாளிகை பத்தியில் மேற்கிலும் வடக்கிலுமாக அறுபத்துமூவர் தொகையடியார்களுடன்  (மூலவத் திருமேனிகளாக) எழுந்தருளியுள்ளனர். இதற்கிணையாக இவர்களுடைய உலாத்திருமேனிகள் தேவசபையில் வைக்கப்பட்டுள்ளன. சேக்கிழார் முக்தி பெற்ற வைகாசிப் பூசநாளில் சேக்கிழார் விழா கொண்டாடப்படுகின்றது.

அன்று மாலை இரண்டாம் காலத்திற்குப் பிறகு அறுபத்துமூவர் விழா நடைபெறுகின்றது. சோமாஸ்கந்தர் வெள்ளி இடப வாகனத்தில் வீதியுலா காண்கிறார். அவரைத் தரிசித்தவாறே அறுபத்துமூவர் முன்னே செல்கின்றனர். சோமாஸ்கந்தரைத் தொடர்ந்து சிவகாமி, விநாயகர், முருகன், சண்டீசர் ஆகியோர் பவனி வருகின்றனர். இவ்விழாவில் சேக்கிழார் முக்தி பெறும் ஐதீகக் காட்சி நடத்தப்படுகிறது.

திருவொற்றியூரில் திருவொற்றியூர் பழம்பெருமை வாய்ந்த சைவத் திருத்தலம். இத்தலத்தில் சோழர்கள் பெரும் பணி புரிந்துள்ளனர். காளாமுகம் பாசுபதம் முதலிய சைவ மதங்கள், திருமங்கள் சைப்பணி செய்து வந்துள்ளன.

இத்தலத்தில் சிவபெருமான் மகிழமரத்தின் கீழ் இருந்து ஸ்ரீநம்பி புராணமாகிய பெரிய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்ததாக கல்வெட்டுச் செய்தியொன்று கூறுகிறது. இந்நாளில் பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளன்று மகிழமரத்தின் கீழுள்ள மண்டபத்திற்கு திருவொற்றியூர் பெரு மான் கல்யாண சுந்தரராக எழுந்தருள்வதும், சுந்தரரும் சங்கிலி நாச்சியாரும் உடன் வந்து காட்சியளிப்பதும், தொடர்ந்து அறுபத்துமூவர் விழா நடப்பதும் இனிய திருவிழாவாக நடத்தப்படுகிறது.

இத்தலத்தில் தனித்தனியே சப்பரங்களில் அறுபத்து மூவர் பவனி வருகின்றனர்.காஞ்சிபுரத்தில் முக்தி தரும் தலங்கள் ஏழில் முதன்மை பெற்றது காஞ்சிபுரம். மாமன்னராக அரசாண்டு துறவு பூண்ட ஐயடிகள் காடவர்கோன், காடவர்கோன் கழற்சிங்கன். திருக்குறிப்புத் தொண்டர், மறவாது கல்லெறிந்து வீடுபேறு பெற்ற சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் வாழ்ந்த திருப்பதி. இத்தலத்திலுள்ள, சிவப்பதிகளுக்குத் தலைத்தானமாக இருக்கும். கச்சி ஏகாம்பரநாதர் ஆலயத்திலும், ஜோதிர்லிங்கத் தலமான கச்சபேஸ்வரர் ஆலயத்திலும் அறுபத்துமூவர் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன.

கச்சபேஸ்வரர் ஆலயத்தில் அறுபத்துமூவருக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் நாளில் பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.ஏகாம்பரநாதர் ஆலயத்தில் மூலவராகவும், உற்சவமூர்த்திகளாகவும் அறுபத்துமூவர் எழுந்தருளியுள்ளனர். பங்குனி உத்திர பெருந்திருவிழாவின்போது ஆறாம் நாள் காலையில் அறுபத்துமூவர் வீதியுலா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏகாம்பரநாதர் கண்ணாடி விமானத்திலும், நாயன்மார்கள் சப்பரங்களிலும் பவனி வருகின்றனர்.

பூசை. ச.அருணவசந்தன்