ஸ்ரீராம நவமி கோயில்கள்



பிரிந்தோரை சேர்த்து வைக்கும் பெருமான்அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடலி கருப்பூரில் ஸ்ரீராம நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் மூன்றுநிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது.

உள்ளே நுழைந்ததும் விசாலமான பிராகாரம். நடுவே பீடம். அதை அடுத்து கொடிமரம். பக்கத்தில் கருடாழ்வார் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் வலதுபுறம் ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை தொடர்ந்து உள்ள கருவறையில் ஸ்ரீராமபிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் சேவை சாதிக்கிறார். ராமர் புன்னகை தவழும் இன்முகத்துடன் உயரமான வில் மற்றும் அம்புகளைக் கரத்தில் தாங்கியுள்ளார்.

மேற்கு பிராகாரத்தில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனிச் சந்நதியில் சேவை சாதிக்கிறார். இங்கு புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி ஆகிய நாட்களில் மூலவருக்கும், தேவியர்களுக்கும், ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.திருமணத்தடையை விலக்குவதிலும், விரைந்து திருமணம் நடைபெற அருள்புரிவதிலும் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர். ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதப் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்து மகிழ்கின்றனர்.

மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதிகள் இங்கு வந்து ஸ்ரீராமபிரானையும், சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழும் தம்பதிகளாய் அவர்கள் வாழத் தொடங்குவது கண்கூடாக காணும் உண்மை என்கின்றனர் பக்தர்கள்.இப்படி மீண்டும் மனம் ஒன்றிப்போகும் தம்பதிகள் இங்கு வந்து ஸ்ரீராமபிரானுக்கும், சீதாதேவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், கூடி நிற்கும் பக்தர்களுக்கு விதம் விதமான பிரசாத வகைகளை விநியோகம் செய்வது அடிக்கடி காணும் நிகழ்ச்சியாகும்.

சொத்துப் பிரச்னையால் பிரிந்து வாழும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்க, சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து அவர்கள் ஒரு சுமுக முடிவுக்கு வருவது ராமபிரானின் அருளால்தான் என்றும் பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.இந்த தலம் கும்பகோணம் - அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

குடும்ப ஒற்றுமை காக்கும் காவலன்திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு சக்கரமின்றி, சீதை, லட்சுமணர் இல்லாமல் தனிமையாக சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.ராமபிரானை இங்கு தரிசித்த கருடாழ்வாரின் மனம் சங்கடப்பட்டது. சீதாப்பிராட்டி இல்லாமல் ராமரை தரிசனம் செய்ததில் அவர் மன நிறைவு கொள்ளவில்லை. அவரை சீதாப்பிராட்டியுடன் இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தனது ஆவலை கயிலாசநாதரிடம் தெரிவித்தார் அவர்.

கயிலாசநாதர் அவரை முள்ளங்குடிக்குச் சென்று தியானம் செய்யும்படி பணித்தார். அதன்படி முள்ளங்குடி வந்த கருடாழ்வார் ராமபிரானை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அவர் தியானம் செய்வதைக் கண்டு இறங்கிய ராமபிரான் சங்கு சக்கரத்துடன் சீதா பிராட்டியை மடியில் அமர்த்திக் கொண்டு தரிசனம் தந்தார்.கருடாழ்வார் மெய்மறந்து ராமபிரானை தரிசித்தார். புள்ளாகிய கருடனுக்கு அவர் விரும்பிய அமர்ந்த கோலத்தில், தன் மடிமீது சீதா தேவியை அமர்த்தி அணைத்தபடி ராமபிரான் காட்சி தந்ததால் இந்த ஊர் புள்ளங்குடி என்ற பெயர் பெற்றது. பின் திரிந்து, முள்ளங்குடி என்றாயிற்று.

இங்கே பல நூற்றாண்டுகளைக் கண்ட, அரிய, பழமையான கோதண்டராம ஆலயம் இங்குள்ளது.ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழை வாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சந்நதி. அர்த்த மண்டப நுலைவாயிலின் முன் இடதுபுறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.கருவறையில் கோதண்டராமர் மடியில் சீதாப்பிராட்டியை அமர்த்திக்கொண்டு சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இங்குள்ள கருடாழ் வாருக்கு வியாழன் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பிள்ளைப்பேறு, திருமணம் நடைபெற வேண்டுவோர் இங்குள்ள ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்ய அவர்கள் பிரார்த்தனை பலிப்பது நிஜம் என்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி புளி சாதம், எள்ளு சாதம், நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து தங்கள் நன்றிக்கடனை நிறைவேற்றி கொள்கின்றனர். ஆஞ்சநேயர் தலையில் கிரீடம் இல்லாமல் இரு கரங்களையும் கூப்பி கண்களை மூடி தியான நிலையில் காட்சி தருகிறார். கருடன் இங்கே தவத்தில் ஆழ்ந்தபோது அனுமனும் தியானம் செய்து ராமனையும் சீதையையும் தம்பதி சமேதராக தரிசனம் பெற்றார்.

இங்குள்ள ராமபிரானை பிரார்த்தனை செய்வதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகின்றன. ராமபிரான் சீதாதேவி தன் மடிமீது அமர்த்திய கோலத்தில் அபூர்வமாக சேவை சாதிப்பதால் குடும்ப ஒற்றுமை, இல்லற மகிழ்ச்சி, தாம்பத்ய உறவு ஆகியவற்றை நிறைவாக அருளும் திவ்ய தலம் இது! சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளங்குடி.

நற்கதி அளிக்கும் நாயகன்

ராவணன் சீதாதேவியை சிறையெடுத்து சென்றபோது அவனை தடுத்து நிறுத்தி அவனுடன் போரிட்டார் ஜடாயு. பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய ஜடாயு, ராவணன் சீதையை சிறையெடுத்துச் சென்ற விவரத்தை ராமரிடம் கூறிவிட்டு உயிர் நீத்தார்.அப்போது ராமபிரான் ஜடாயுவுக்கு பிரம்மேத ஸம்ஸ்காரம் செய்து மோட்சம் அளித்தார். ஜடாயுவுக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் வைத்தியநாதசுவாமியும் அருள் பாலித்தார்.

இன்றும் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் தென்பாகத்தில் ஜடாயு சமாதி உள்ளது. இந்த இடத்தில் ஜடாயு குண்டம் ஒன்றில் விபூதி (சாம்பல்?) நிறைந்துள்ளது.இந்த குண்டத்திற்கு எதிரே ராமர், லட்சுமணர், ஜடாயு, அகத்தியர், வாமதேவ மகரிஷி, வைத்தியநாத சுவாமி ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.ராமர், ஜடாயுவுக்கு அருள்பாலித்த தலம் வைத்தீஸ்வரன் கோயில். எனவே, இங்கு ராமருக்கு தனியாக ஸ்ரீவிஜய கோதண்டராமன் ஆலயம் உள்ளது. இந்த ராமரை தரிசித்தாலேயே நம் மூலமாக நம் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என்கிறார்கள்.

அழகிய இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் ஸ்ரீராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் அருள்பாலிக்கிறார். ராமரின் பாதத்தின் அருகே பக்த ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது.இங்கு ராமபிரான் விஜய கோதண்டராமர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இடது கரத்தில் கோதண்டம் தாங்கியிருக்கிறார்.வழக்கமாக ராமரின் இடதுபுறம் காட்சி தரும் சீதாதேவி, இங்கு வலதுபுறம் காட்சி தருகிறாள்.

ஆலயப் பிராகாரத்தின் தென்திசையில் பிரமாண்டமாக 13 அடி உயரத்தில் வண்ண கலவையில் ஆஞ்சநேயரின் திருமேனி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது கண்களில் அவ்வளவு கருணை, சாந்தம், அழகு!

மேற்கு திருச்சுற்றில் ஆதி ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது. சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனாலேயே விஜய கோதண்ட ராமர் ஆலயம் என்ற பெயர் கொண்ட இந்த ஆலயத்தை பக்தர்கள், ராம பக்தனான ஆஞ்சநேயர் ஆலயம் என்றே பொதுவாக அழைக்கின்றனர்.சீர்காழி-மயிலாடுதுறை பேருந்து தடத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது இந்த ஆலயம்.

ஜெயவண்ணன்