தெளிவு பெறு ஓம்



ஒரு ஆலய நேர்த்திக்கடனை வேறொரு ஆலயத்தில் நிறைவேற்றுவது சரியா?

?பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் கூர்ச்சம், பவித்ரம் வாங்கி அமாவாசை தர்ப்பணம் செய்யலாமா? அதுபோல ஹோமத்திற்கான சமித்துகளை கடைகளில் வாங்கி உபயோகிக்கலாமா?
- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்-9.

பவித்ரம் என்பதை ஆச்சாரியனின் ஆசிர்வாத மந்திரத்தோடு பெற்றுக் கொள்ள வேண்டும். ஆச்சாரியன் இல்லாமல் அமாவாசை தர்ப்பணம் செய்வதை சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை. தர்ப்பணம் செய்து வைக்க வரும் சாஸ்திரிகள் கூர்ச்சம், பவித்ரம் ஆகியவற்றை செய்து தரப்போகிறார். கடையில் வாங்கி வைத்துக்கொண்டு மாதந்தோறும் உபயோகித்துக் கொள்வது என்பது தவறு. அதே நேரத்தில் உத்யோகத்தின் காரணமாக அந்நிய தேசங்களில் வசிப்பவர்கள், சாஸ்திரிகள் வர இயலாத பகுதிகளில் உள்ளவர்கள் என பலரும் இவ்வாறு கடைகளில் விற்கப்படும் பவித்ரங்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

கடைகளில் வாங்கி உபயோகப்படுத்துவதற்கு பதிலாக தங்கள் குடும்ப சாஸ்திரிகள் அல்லது புரோஹிதர்களை சந்தித்து அவர்களுக்கு உரிய தக்ஷிணை அளித்து, அவரது ஆசிர்வாதத்தோடு பவித்ரம் மற்றும் கூர்ச்சங்களைப் பெற்றுக் கொண்டு பிரதி மாதந்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யாமல் இருப்பதை விட இந்த முறை எவ்வளவோ மேலானது. தர்ப்பை என்பதே புனிதமான ஒன்று அதனால் தர்ப்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் மற்றும் பவித்ரத்திற்கு தோஷம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஹோமத்திற்கான சமித்துகளை கடையில் வாங்கி உபயோகிப்பதில் எந்தவித தவறும் இல்லை. நம் முன்னோர்கள் சமித்துகளைப் பற்றி அறிந்திருந்தார்கள். இன்றைய தலைமுறையினருக்கு சமித்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. அந்த நாட்களில் சமித்துக்களை அதற்குரிய மரம் மற்றும் செடிகளில் இருந்து நாமே நேரடியாக ஒடித்து எடுத்துக் கொள்ளும் வசதி இருந்தது. இந்நாட்களில் அவ்வாறு நாமே எடுத்து உபயோகிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. அதற்காக ஹோமங்களைச் செய்யாமல் இருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் சாஸ்திரம் பேசிக்கொண்டு எதையும் செய்யாமல் சும்மா இருப்பதை விட கடையில் வாங்கி ஹோமத்தினைச் செய்து முடிப்பதில் எவ்வித தவறும் இல்லை.

?ஜோதிடர்கள் ஜாதகங்களை கணிக்கும் முறைகளை எப்படி கையாள்கிறார்கள்? இவற்றில் தவறு ஏற்படும் பட்சத்தில் யார் பொறுப்பு?
- வா.ஹரிராம்-சிவராம், வந்தவாசி.

ஜாதகத்தை கணிப்பதில் தவறு ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. ஜோதிடருக்கு ஜோதிடர் கணிக்கும் முறை வேண்டுமானால் மாறுபடலாமே தவிர, அந்த ஜோதிடர் கணித்தது சரி, இவர் கணித்தது தவறு என்று மதிப்பிட இயலாது. ஜாதகங்களை கணிப்பதில் பல்வேறு முறைகள் உள்ளன. நமது இந்தியாவில் வாக்ய கணிதம், திருக்கணிதம் மற்றும் எபிமெரிஸ் ஆகிய முறைகளில் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகங்களை கணிக்கிறார்கள். அதிலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அயனாம்ச கணக்குகளைப் பயன்படுத்துவார்கள். ஒரு ஜோதிடர் எந்த முறையில் தனது அறிவினை வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ அல்லது எந்த முறையை அவர் தெளிவானது என்று நம்புகிறாரோ அந்த முறையில் அவர் ஜாதகத்தைக் கணித்து பலனுரைக்கிறார்.

இதில் இந்த முறைதான் சரியானது, மற்றவை தவறானவை என்று சொல்லக் கூடாது. எந்த முறை நமக்கு ஒத்துப்போகிறதோ அதைப் பின்பற்ற வேண்டும். அதற்காக நேரத்திற்குத் தக்கவாறும் நமது மனநிலைக்குத் தக்கவாறும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளக் கூடாது. உங்களுக்குப் புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால் வந்தவாசியில் இருந்து சென்னை வருவதற்கு உத்திரமேரூர், மாமண்டூர், செங்கல்பட்டு வழியைப் பயன்படுத்தலாம்.

அதே போன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி வழியாகவும் சென்னையை வந்து அடையலாம். அதனை விடுத்து வந்தவாசியில் இருந்து கிளம்பி உத்திரமேரூர் வழியில் பாதி தூரம் வந்த பிறகு இந்த ரோடு சரியில்லை, நாம காஞ்சிபுரம் வழியாகவே போகலாம் என்று பயணத்திட்டத்தை மாற்றி அமைத்து காஞ்சிபுரம் வழியாக பயணிக்கும்போது, சாலையில் வாகனங்களின் நெரிசல் அதிகமாக இருக்கிறது, பழைய வழியிலேயே செல்லலாம் என்று திரும்பிச் சென்றால் நம்மால் சரியான நேரத்திற்கு சென்னையைச் சென்று அடைய முடியாது. பாதி வழியிலேயே இரண்டும் கெட்டானாக நிற்க வேண்டியதுதான்.

நமது குறிக்கோள் சென்னையைச் சென்று அடைய வேண்டும் என்பதுதான். அதுபோல ஜாதகத்தைக் கொண்டு நமக்கு நடக்கும் பலன்களை அறிந்துகொள்வதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். ஜோதிடரும் எது சுலபமான முறை என்று அவர் எண்ணுகிறாரோ அந்த முறையில் மட்டும் தான் கணித்து பலன் சொல்ல வேண்டுமே தவிர அனைத்து முறைகளையும் கையில் எடுத்துக்கொண்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு ஏதேனும் ஒரு முறையில் மட்டும் ஜாதகப்பலன் அறியும் பட்சத்தில் தவறு உண்டாவதற்கான வாய்ப்பே இல்லை.

? பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் இவற்றில் எது சிறந்தது? எதைப் பின்பற்றினால் விரைவில் முக்தி அடையலாம்? தயவுசெய்து கூறுங்கள்.
- இளங்கோவன், வாழைப்பந்தல்.

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்கிறது குறள். பிரம்மச்சரியம் என்பது கல்வி கற்பதற்கான பருவம். வானப்பிரஸ்தம் என்பது இல்லற வாழ்வினில் இருந்துகொண்டே பற்றற்ற நிலையில் இருப்பது. எதையுமே தனக்காக சேர்த்து வைத்துக் கொள்ளாமல் வாழ்வதே சந்நியாசம் எனப்படுகின்ற துறவறம். பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன், துறவி இவர்கள் மூவரும் உயிர்வாழ கிரஹஸ்தன் என்று அழைக்கப்படும் இல்லறத்தானின் உதவி தேவை.

இதையே வள்ளுவப் பெருந்தகை “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”என்கிறார். அதாவது, இல்லற வாழ்வில் சிறப்புடையவன் மற்ற கல்வி, துறவி, மனத்துறவு போன்ற அறநிலைகளிலுள்ள மூவர்க்கும் வாழ்க்கை நெறியில் உறுதுணையாய் நிற்பான் என்பதே இதன் பொருள். இல்லற வாழ்வில் இருப்பவன் பிச்சையிட்டால்தான் மற்ற மூவரும் மானத்தோடு உயிர் வாழ இயலும்.

அதே நேரத்தில் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் வள்ளுவர். இல்வாழ்க்கையை அறவழியில் நடத்துபவன் மறுமை இன்பத்தை அதாவது முக்தியை நாடி முயல்பவரை விட சிறந்தவன் என்பதை “ இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்     என்பான் முயல்வாருள் எல்லாம் தலை ”என்ற குறளின் மூலம் தெளிவாக விளக்குகிறார். ஆக இல்லறமே மற்ற மூன்றையும் விட சிறந்தது என்பது மட்டுமல்ல எல்லோராலும் எளிதாகக் கடைபிடிக்க ஏதுவான வழியும் கூட என்பதில் ஐயமில்லை.

?ஒரு ஆலய நேர்த்திக்கடனை வேறொரு ஆலயத்தில் நிறைவேற்றுவது சரியா?
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி-7.

தவறு. எந்த கோயிலுக்கு நேர்ந்துகொண்டோ மோ அந்த ஆலயத்தில்தான் அதற்கான நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திருப்பதிக்கு நேர்ந்துகொண்டு திருநெல்வேலியிலேயே நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு எதற்காக திருப்பதிக்கு வருவதாக நேர்ந்துகொள்ள வேண்டும்? துன்பம் சூழும் நேரத்தில் மனதிற்கு பட்டதை நேர்ந்து கொண்டுவிடுகிறோம். வேண்டுதல் நிறைவேறிய பின்பு அதனை செலுத்துவதற்கு மட்டும் ஆயிரத்தெட்டு விதிவிலக்குகளை எதிர்பார்க்கிறோம். பிரார்த்தனை செய்யும்போதே நம்மால் எதனைச் செய்ய இயலுமோ அதனை மட்டுமே நேர்ந்துகொள்ள வேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்ந்துகொண்டதை சரிவர செய்துவிட வேண்டும். ஒரு ஆலய நேர்த்தியை மற்றொரு ஆலயத்தில் நிறைவேற்றுவது என்பது முற்றிலும் தவறு.

?எனது மைத்துனியின் மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் கடலில் குளிக்கும்போது காணாமல் போய்விட்டான். ஒரு வார காலத்திற்கு கடற்கரையில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. கடற்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. அவர் இறந்துவிட்டார் என்று கருதி இதுவரை நாங்கள் எந்தச் சடங்கும் செய்யவில்லை. காணாமல் போன இவருக்கு ஜாதகம் ஏதும் எழுதி வைக்கவில்லை. இவர் உயிரோடு இருக்கிறாரா, வீடு திரும்பி வருவாரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
- கே.ஜி.எஸ். மணி, கருணாகரவிளாகம்.

காணாமல் போன நபருக்கு ஜாதகம் ஏதும் எழுதிவைக்கவில்லை என்கிறீர்கள். கேரள பாரம்பரிய முறைப்படி பிரச்னம் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். காணாமல் போன நபருக்கு நேரடியாக ரத்த சம்பந்தம் உள்ளவர்களான பெற்றோர்அல்லது உடன்பிறந்த சகோதரன் ஆகியோர் சென்று பிரச்னம் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். அறிவியல் ஜோதிட முறையில் பிரச்னம் பார்ப்பதற்கு கே.பி.சிஸ்டம் என்ற முறை ஒன்று உள்ளது. கே.பி.முறையை நன்கு கற்றறிந்த ஜோதிடர்களை அணுகியும் தெரிந்துகொள்ள இயலும். சாஸ்திரப்படி தொடர்ச்சியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு நபரைப் பற்றிய தகவல் ஏதும் தெரியாவிடில் அவர் இறந்தவராகக் கருதப்படுவார்.

அவ்வாறு 12 ஆண்டுகள் வரை காணாமல் போனவரைப் பற்றிய செய்தி ஏதும் நம் காதுகளுக்கு எட்டாத பட்சத்தில் அவருக்கு உரிய இறுதிச் சடங்குகளை செய்து முடிப்பது அவசியம்.
?சில ஆலயங்களில் மேல்சட்டை அணியாமல் சென்று வழிபடும் ஐதீகம் எதனால் ஏற்பட்டது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சில ஆலயங்கள் மட்டுமல்ல, அனைத்து ஆலயங்களிலும் மேல்சட்டை அணியாமல் சென்று வழிபடுவதே நல்லது. மேல்சட்டை அணியும் பழக்கம் நமக்கு அந்நியனிடம் இருந்து தொற்றிக் கொண்ட ஒன்று. மேலே போர்த்திக் கொண்டிருக்கும் அங்கவஸ்திரத்தைக் கூட எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டுதான் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும். இது நமது பண்பாடு மட்டுமல்ல, பணிவு மற்றும் பக்தியின் அடையாளம். இறைவனுக்கு முன்னால் அனைவரும் சமம் என்ற உணர்வினை நமக்குள் தோற்றுவிக்கும்.

 கேரளாவில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் இன்றளவும் ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் நமது பாரம்பரிய உடைகளையும் மட்டுமே அணிந்து உள்ளே நுழைய வேண்டும் என்பதை கடுமையான விதியாக வகுத்திருக்கிறார்கள். மேல்சட்டை அணியாமல் இடுப்பில் சுற்றிக்கொண்டு செல்லும்போது நமக்குள் ஒருவித பயத்துடன் கூடிய பக்தி சிரத்தை உண்டாவதை அனுபவ பூர்வமாக உணர இயலும்.

தான் என்ற அகந்தை கூடாது என்பதற்காக உருவான பழக்கமாக இருந்தாலும் இறைவனின் பார்வை திரை ஏதுமின்றி நமது நெஞ்சின் மீது விழும்போது நமது இதயத்திற்குள் குடியிருக்கும் அவனது அம்சமான பரமாத்மாவின் வலிமை அதிகரிக்கும். நமக்குள் இருக்கும் இறையுணர்வு கூடும். மனதினில் இறையுணர்வு கூடுவதால் காம, குரோத, லோப, மோக, மதமாத்சயர்ங்கள் காணாமல் போகும், நமது வாழ்வும் வளம் பெறும் என்பதே இதன் முக்கியமான நோக்கம்.

?காலையில் ஸ்நானம் செய்துவிட்டு ஈரத்துணியுடன் சூரிய நமஸ்காரம் செய்து வருகிறேன். அது தவறு, அப்படி செய்யக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். சரியா, தவறா என்று விளக்கவும்.
- கு.கி.மனோகரன், மதுரை - 5.

ஈரத்துணியுடன் இறைவழிபாடு செய்வது என்பது தவறுதான். குளித்து முடித்து, உலர்ந்த துணியை உடுத்திக்கொண்டு வழிபடுவதே நல்லது. பித்ரு காரியங்களுக்கு மட்டுமே ஈரத்துணியுடன் கர்மாக்களை செய்ய வேண்டும். அதிலும் ஈமக்கிரியை எனப்படும் அந்திமச் சடங்கு மற்றும் கரும காரியத்தினை மட்டுமே ஈரத்துணியுடன் செய்ய வேண்டும். மற்றபடி வருடந்தோறும் செய்யும் திவசம், அமாவாசை தர்ப்பணம் ஆகியவற்றைக் கூட மடியுடன் துணிகளை உலர்த்தி, அவ்வாறு உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டுதான் செய்ய வேண்டும்.

 ஆனாலும் ஒரு சில இடங்களில் இதற்கு விதிவிலக்கும் உண்டு. ஆறு, குளம், ஏரி, சமுத்திரம் என்று நீர் நிலைகளில் ஸ்நானம் செய்து சூரிய நமஸ்காரம் செய்யும்போது ஈரத்துணியுடன் இருந்தால் தவறில்லை. அதாவது, இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு சூரிய நமஸ்காரம் செய்யும்போது மட்டும் ஈரத்துணியுடன் செய்யலாம். மாறாக கரைக்கு வந்துவிட்டால் உலர்ந்த ஆடையை உடுத்திக் கொண்டுதான் வழிபட வேண்டும்.

?அன்னதானம் செய்வதன் சிறப்பு என்ன?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இந்த உலகத்தில் எத்தனை விலை உயர்ந்த பொருளை தானமாகக் கொடுத்தாலும், அதைப் பெறுபவனின் மனம் இன்னமும் இதனை சிறப்பாகக் கொடுத்திருக்கலாம் என்றும், இன்னமும் வேண்டும் என்றே ஆசை கொள்ளும். உதாரணத்திற்கு ஒரு வெள்ளி சொம்பு தானம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதைப் பெறுபவரின் மனம் இவனுக்கென்ன குறை, இன்னமும் விலைஉயர்ந்ததாக சற்று பெரிய அளவில் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்று நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வயிறு ஒன்றுதான் ‘போதும்’ என்று சொல்லக்கூடியது. ஒரு மனிதன் எவ்வளவு தான் சாப்பிடமுடியும்?

வயிறு நிறைந்துவிட்டால் மனமும் நிறைந்துவிடும், போதும் என்ற எண்ணமும் உண்டாகும், வயிறு நிறைந்தால் மனமும் குளிரும். அன்னதானம் செய்தவனை மனமார வாழ்த்திச் செல்வர். தானத்தைக் கொடுப்பவனும் சரி, பெறுபவனும் சரி மனம் நிறைவது அன்னதானத்தில் மட்டுமே. அதனால்தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள்.

?நான் தர்மநெறிப்படி சரியாக வாழ்ந்து வருபவன். எனது குறிக்கோள் மீண்டும் பிறவாநிலை எய்த வேண்டும் என்பதே. நான் இறந்த பின் எனது வாரிசுகள் செய்யும் கர்மாக்களினால்தான் எனக்கு நற்கதி கிடைக்குமாமே! இறப்புக்குப் பின் என் சூக்ஷ்ம ரூபம் வாரிசுகளை நம்பி அவர்களின் செயல்களால் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்? வாரிசுகளின் செயல்பாடுகளால் அல்லாது என் சுய கர்மவினைகள் மட்டுமே என் நற்கதிக்குப் போதாதா? இறப்பிற்குப் பின் வாரிசுகளின் தொடர்பிற்கு அவசியம் என்ன?
- கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி - 17.

‘என் சுய கர்மவினைகள் மட்டுமே என் நற்கதிக்குப் போதாதா? இறப்பிற்கு பின் வாரிசுகளின் தொடர்பிற்கு அவசியமென்ன?’ என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழுந்துள்ளது. வாரிசுகள் என்பவர்களே நீங்கள் செய்த வினையால் உருவானவர்கள்தானே! உங்களது கர்மவினைப் பயன்தானே வாரிசுகள்!

அப்படியிருக்க அவர்களை எப்படி உங்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியும்? எப்பொழுது இந்தப் பூவுலகில் உங்கள் வாரிசுகளை விட்டுச் செல்கிறீர்களோ அப்போதே உங்களுக்கும் இந்த உலகிற்குமான உறவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நற்கதிக்கு துணை நிற்பது நீங்கள் இறந்தபின் அவர்கள் செய்ய உள்ள கர்மாக்களே ஆகும். புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால் நற்கதி என்பது சொர்க்க லோகம் என்று வைத்துக் கொள்வோம்.

 அந்த சொர்க்க லோகத்திற்கு செல்வதற்கான தகுதியை நீங்கள் செய்த நற்காரியங்கள் பெற்றுத் தருகிறது. ஆனால் அங்கு செல்வதற்கான நுழைவுச்சீட்டு உங்கள் வாரிசுகள் செய்யும் கர்மாக்களால் மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல, உங்கள் சூக்ஷ்ம ரூபமானது பித்ரு லோகத்தில் நீண்ட காலம் தங்கியிருக்கும். உங்கள் எள்ளுப்பேரன் (நான்காம் தலைமுறையில் பிறக்கும் பிள்ளை) அவன் தந்தைக்கு செய்யும் கர்மாவின்போதுதான் பித்ரு லோகத்தில் இருந்து நீங்கள் சொர்க்க லோகத்திற்கு சென்றடைய முடியும்.

அதுவரை பித்ரு லோகத்தில் வாசம் செய்யும் உங்களுக்கு தேவையான ஆகாரத்தை அளிப்பதற்குத் தான் பிரதி வருடம் சிராத்தம், அமாவாசை தர்ப்பணம் முதலான கிரியைகள் செய்யப்படுகின்றன. ‘என் குறிக்கோள் மீண்டும் பிறவா நிலை எய்த வேண்டும் என்பதே’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இளம் பிராயத்தில் இருந்தே சந்நியாசம் மேற்கொண்டு தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாது துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே அடுத்த பிறவி என்பது அமையாது. மாறாக இவ்வுலக சுகம் அனைத்தையும் அனுபவித்துவிட்டு அந்திம காலத்தில் மட்டும் நான் எனது கர்மானுஷ்டானங்களைச் சரிவர செய்து வருகிறேன், எனக்கு பிறவா நிலை கிடைக்கும் என்பதெல்லாம் உங்களது வெளிமனதின் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், நிஜத்தில் அது சாத்தியப்படாது. முதலில் நான், எனது என்ற வார்த்தைகளே உங்கள் உள்மனதின் உண்மை நிலையைத் தெரிவிக்கிறது.

இவ்வுலக பந்தம் என்பது அத்தனை எளிதில் விடுபட்டுவிடாது. மனதினைப் பக்குவப்படுத்தப் பழகுங்கள். நித்ய கர்மானுஷ்டானங்களை அடுத்தவர்கள் சரிவர செய்வதில்லை என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். அவர்களைப் பற்றிய கவலை உங்களுக்கு எதற்கு? நீங்கள் உங்கள் கடமையைச் சரிவர செய்து வாருங்கள். நாம் யார் என்பதை முதலில் உணருங்கள். மற்றவை தன்னால் புரிய வரும். இறைவனின் திருநாமத்தை தவறாமல் உச்சரித்து வாருங்கள். அவனருளால் உங்களுக்கு நற்கதிக்கான வழி நிச்சயம் கிடைக்கும்.

திருக்கோவிலூர்
ரி.ஙி.ஹரிபிரசாத் சர்மா