முழுத் தேங்காய் நிவேதனம்



மயிலாடுதுறையில் இருந்து வடக்கே 19 கி.மீ. தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து தெற்கே 19 கி.மீ. தூரத்திலும் உள்ளது சீர்காழி. இங்குள்ள சட்டைநாதரை, தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட்டு வந்தால், வழக்குகள் வெற்றிபெறும். பீடை அகலும். கல்வியறிவில் மேம்படலாம் என்று கூறப்படுகிறது.

 ஒவ்வொரு அமாவாசை நடுநிசியிலும்,18 சித்தர்களும் கூடி சட்டைநாதரை இங்கு வழிபடுவதாக நம்பப்படுகிறது. 18 சித்தர்களும் கூடி ஈசனை ஆராதிக்கும் ஒரே ஆலயம் இதுதான்! சரபேஸ்வரரே இத்தல சட்டைநாதரை அஷ்டமியில் தொழுகிறாராம்! ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை மாலையில் அஷ்ட பைரவர்களுக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்பு அர்த்தஜாமம் முடிந்த பிறகு கீழே உள்ள (உட்பிராகாரத்திலுள்ள) பீடத்திற்கு இரவு10 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் சட்டைநாதருக்கு புனுகு சாத்தி, நெய்யில் செய்த வடை, பாசிப்பருப்பு பாயசம் ஆகியவற்றை நிவேதனம் செய்கிறார்கள். சட்டைநாதரை தரிசிக்க ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் தலையில் பூ வைக்காமலும் செல்ல வேண்டும்.

பைரவர்களின் தலைவரான சட்டைநாதரை பக்தி சிரத்தையோடு சத்தம் ஏதுமின்றி அமைதியாக வழிபட வேண்டும். தேங்காய் உடைக்கும் சத்தம் கூட கேட்கக்கூடாது என்பதற்காக, இறைவனுக்கு முழுத் தேங்காயே படைக்கப்படுகிறது.

திருமணம் கூட்டுவிக்கும் மன்மதன்

பொதுவாக பைரவர் சிவாலயங்களில் மட்டுமே வீற்றருள்வார். ஆனால், திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பில் அமைந்துள்ள சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொர்ணாகர்ஷண பைரவர் என்றழைக்கப்படும் தனம் தரும் பைரவர் இருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் இந்த பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள், வராத கடன்கள், பூர்வீக சொத்து வழக்குகள் குறித்து பிரார்த்தித்து கொண்டால் குறைகள் நிவர்த்தியாகின்றன. இந்த ஆலயத்திலுள்ள மன்மதன் சிலைக்கு திருமணம் ஆகாதவர்கள் மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

மனக்குறைகள் தீர்க்கும் மாகாளீஸ்வரர்

புதுவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இரும்பை மாகாளீஸ்வரர் ஆலயம். புதுவை-திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவு.

இங்கு வழிபட்டால் மனக்குறைகள் அனைத்தும் நீங்குகின்றன என்கிறார்கள். குடும்ப விருத்திக்கும், ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற ஆலயம் இது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு மாகாள மகரிஷியால் கட்டப்பட்டு அவரால் பூஜிக்கப்பட்டு வந்தது. இதனாலேயே இங்குள்ள இறைவன் மாகாளீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். மாகாள மகரிஷி இதுபோல உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய ஆலயங்களையும் நிறுவியுள்ளார். திருஞான சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் ஆகியோர் இந்த ஆலயத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

ஆலயத்தைச் சுற்றி இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த பகுதி இலுப்பை என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இரும்பை என மாறியிருப்பதாக கூறுகிறார்கள். ஆலய கருவறையில் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளந்து பின்னர் ஒன்றாக சேர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த சிலை பிளந்ததற்கான அடையாளங்கள் இப்போதும் காணப்படுகின்றன.

என்ன சொல்லுது எதிர்காலம் அடுத்த இதழில்...