கோயில்களில் தேங்காய் நீரை வீணாக்கக் கூடாது!



தினம் தினம் குடிநீருக்காக நடக்கும் போராட்டங்களையும் குடுமிப்பிடி சண்டைகளையும் பார்த்திருப்போம். ஆனால், முதல்முறையாக தேங்காய் நீருக்காக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள், சென்னையின் பெசன்ட் நகரைச் சேர்ந்த சீனியர் சிட்டிசன்கள். ‘கோயில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்’ என்பதே அவர்களின் உரத்த கோரிக்கை!



‘‘இங்க எல்லா கோயில்லயும் தேங்காய் உடைக்கிறாங்க. குறிப்பா, தேர்வு நேரத்திலும் தேர்வு முடிவு வரும்போதும் விநாயகர் கோயில்கள்ல அதிகமா தேங்காய்கள் உடைக்கப்படுது. ஆடி மாதத்துல அம்மன் கோயில்கள்லயும், புரட்டாசியில பெருமாள் கோயிலிலும், பிரதோஷம் போன்ற தினங்கள்ல சிவன் கோயில்லயும் நிறைய தேங்காய்கள் உடைக்கப்படுது. புகழ்பெற்ற கோயில்கள்ல அர்ச்சனைக்காக தினம் தினம் எத்தனை தேங்காய்கள் உடைக்கப்படுதுன்னு எதுவும் கணக்கு இல்லை.

இறைவனுக்கு தேங்காய் உடைக்கற வழக்கத்தை நாங்க குறை சொல்லவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. ஆனா, அதிலிருந்து வர்ற நீரை அர்ச்சகரும் சரி... மக்களும் சரி... கீழேதான் கொட்டுறாங்க. அது, கழிவுநீரோட கலந்து வீணாப் போகுது. தேங்காய் நீர் எவ்வளவு ஆரோக்கியமானதுனு இங்க யாருக்கும் தெரியலை. அட்லீஸ்ட், ‘இதை மற்ற பக்தர்களுக்குப் பிரசாதமாகவாவது வழங்கலாமே’ன்னுதான் முதல்கட்டமா பெசன்ட் நகர்ல கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம்!’’ என துவங்குகிறார், ஓய்வுபெற்ற பேராசிரியர் சந்திரசேகர்.

‘‘எங்க குரூப் கடந்த பத்து வருஷமா ெசயல்பட்டு வருது. ஆனா, 2012ல இருந்துதான் ‘சீனியர் சிட்டிசன்ஸ் குரூப் ஆஃப் பெசன்ட் நகர்’னு ஃபார்மலா இயங்குறோம். வாக்கிங் போறப்போ இருந்த திருட்டு பயத்தை போலீஸ் உதவியோடு கட்டுப்படுத்தியிருக்கோம். ஏழை மாணவர்களுக்காக என் வீட்டிலேயே ஒரு லைப்ரரி அமைச்சிருக்கோம்.

மொத்தம் 50 பேர் உறுப்பினர்கள். ஓய்வுக்குப் பிறகு மக்களுக்கு எங்களால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கோம். மூத்த குடிமக்களின் நலனுக்கும் ஏழை மக்களுக்கும் உதவுறதுதான் எங்க நோக்கம்!’’ என்கிற சந்திரசேகர், இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி எம்.பி.ஏவுக்கு பார்ட் டைம் பேராசிரியராகவும் இருக்கிறார்.

‘‘வேண்டுதல் நிறைவேறணும்னு நூற்றி எட்டுல இருந்து ஆயிரம் வரை கூட மக்கள் தேங்காய் உடைக்கிறாங்க. அதில் இருக்குற தேங்காய் நீரை வேஸ்ட் பண்ணறது, இயற்கை கொடுத்த வரப்பிரசாதத்தை வீதியில வீசற விஷயம். தேங்காய் நீர் எந்தக் கலப்படமும் இல்லாதது. சுத்தமானது. நோய்களைத் தீர்க்க வல்லது. மருத்துவர்களும், டயட்டீஷியன்களும் தேங்காய் நீரின் அவசியத்தை அடிக்கடி வலியுறுத்திட்டு இருக்காங்க. ஒவ்வொரு கோயிலிலும் அந்த நீரை ஒரு பாத்திரத்தில சேகரிச்சு பொது மக்களுக்குக் கொடுக்கலாம். குடிநீர் பற்றாக்குறையா இருக்கிற இந்த வெயில் காலத்துக்கு அது தாகம் தீர்க்கறது மட்டுமில்லாம, ரொம்ப ஆரோக்கியமானதாவும் இருக்கும்.



இதைக் கோயில்ல போய் சொல்லிப் பார்த்தேன். ‘தேங்காய் நீர் பிடிக்க பாத்திரம் வேணும்னாலும் நாங்க வாங்கித் தர்றோம்’னு சொன்னேன். ஆனா, கோயில் நிர்வாகம் ஏத்துக்கலை. ‘இது கடவுளுக்குப் படைக்கிற புனித நீர்... குடிக்கக் கூடாது’னு சொன்னாங்க. ‘நீரைக் கீழே கொட்டிய பிறகு இந்தத் தேங்காயை என்ன பண்ணுவீங்க... கடவுளுக்குப் படைச்சதுனு தூக்கி எறிஞ்சிடுவீங்களா?’னு கேட்டேன். அவங்க, பதில் சொல்லலை.

உண்மையில, கோயிலில் உடைச்ச தேங்காயை சமையலுக்குத்தானே பயன்படுத்துறோம்? அப்புறம் ஏன் அதிலுள்ள நீரை மட்டும் வேஸ்ட் பண்ணணும்? இதுபத்தி நம்ம புனித நூல்கள்ல எதுவும் சொல்லப்படலை. ஆனாலும், பாரம்பரியமா செஞ்சிட்டு வர்ற வழக்கம். அதனால, தேங்காய் உடைக்கிற நீரை பிரசாதமா கொடுங்கனு சொல்றோம். கோயிலுக்கு வெளியில தேங்காய் உடைக்கிற மக்கள்கிட்ட பேசினோம். ‘நீங்க சொல்றது சரிதான்’னு பலரும் ஏத்துகிட்டாங்க.

முன்னாடி கற்பூரம் கொளுத்துறதை பக்தின்னு நினைச்சாங்க. அதுக்குத் தடை வந்தப்போ பிரச்னையாச்சு. அப்புறம், மக்கள் ஏத்துக்கிட்டாங்க. இப்போ, விளக்குகள்லதான் ஆராதனை நடக்குது. அது மாதிரி இந்த விஷயத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு வரணும். அதுக்காக எங்க குரூப் வழியா செயல்பட்டு வர்றோம்!’’ என்கிறார் அவர் நம்பிக்கையாக!

‘‘இதற்காக பொது மக்கள்கிட்ட கையெழுத்து வாங்கலாம்னு இருக்கோம். அதை, தேர்தல் முடிஞ்ச பிறகு முதல்வருக்கு அனுப்பப் போறோம். ஒருவேளை இதுக்கு நடவடிக்கை எடுக்கலைன்னா, அடுத்த கட்டமா உயர்நீதிமன்றத்துல பொதுநல வழக்கு போடப் போறோம். அப்போவாவது இந்த மருத்துவ நீர் மக்களுக்குப் பயன்படட்டும்’’ என்கிறார் சந்திரசேகர் நிறைவாக!

கோயிலில் உடைச்ச தேங்காயை சமையலுக்குத் தானே பயன்படுத்துறோம்? அப்புறம், ஏன் அதிலுள்ள நீரை மட்டும் வேஸ்ட் பண்ணணும்?

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்